வாண்டுகளின் மேஜிக்

இயல் மின்னிதழில் வெளியான எழுத்தாளர் ராஜலட்சுமி நாராயணசாமி அவர்களின் வாண்டுகளின் நூலகம் கதையைப் படித்தவுடனேயே மிகவும் பிடித்துப் போனது.
கதையின் மாணவச் செல்வங்கள் செம்மொழி சம்ஸ், லிசா பெயர்த் தெரிவுகள் அற்புதமாக இருந்தது.
செம்மொழியின் அம்மா பெயர் தமிழ்.
அடடா! திரும்பத் திரும்பப் படிக்கும்போதும் அருமையாக இருந்தது.
குழந்தைகளுக்கும் இக்கதையைச் சொல்லியாயிற்று. அவர்களும் பெற்றோர்களுக்கும் நண்பர்களுக்கும் இக்கதையை சொல்லிவிட்டார்கள்.
ஆனாலும் இதையும் தாண்டி இக்கதையைச் சமூகத்திடம் எடுத்துச் சொல்லவேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருந்தது.
ஏப்ரல் 23 உலகப் புத்தக தினத்தில் மாலையில் தங்களிடம் உள்ள புத்தகங்களை வைத்து வீட்டில் சிறிய நூலகம் ஒன்றை தொடங்குங்கள் என்று தெரிவித்தோம்.
கையிருப்பு புத்தகங்கள் சிலவற்றை பரிசாக வழங்கினோம்.
அந்நூலகங்களுக்கு வாண்டுகளின் நூலகம் என்று பெயர் சூட்டலாம் என்று சேர்ந்து பேசி முடிவு செய்யப்பட்டது.
6 குழந்தைகள் தங்கள் வீடுகளில் வாண்டுகளின் நூலகங்கள் தொடங்கினார்கள்.
இதில் குழந்தை சாஷினி உருவாக்கிய கிராமத்தில் உள்ள வாண்டுகளின் நூலகத்தில் குழந்தைகள் கோடை விடுமுறையில் ஆர்வமுடன் வந்து முதல்நாளில் இருந்து இப்போது வரை உற்சாகமாக வாசித்துவருவது மிகவும் மகிழ்ச்சியாக உணர வைத்தது.
இதனைக் கண்ட குழந்தை சாஷினியின் உறவினர் தனது பகுதியிலும் இதுபோல் ஒரு நூலகம் அமைக்க முடிவு செய்திருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
எழுத்தாளர் ராஜலட்சுமி நாராயணசாமி அவர்கள் தனது கதையை புத்தகமாக வடிவமைப்புச் செய்து அளித்தார்கள்.
கலர் பிரிண்ட் செய்து ஸ்பைரல் போட்டு வாண்டுகளின் நூலகம் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.
வாண்டு மாமா எழுதிய புத்தகம் மற்றும் அவர் பற்றிய செய்தித்தாளில் வெளியான கட்டுரையும் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுகிறது.
பெரியதாழை ஆசிரியர் ஜொரோசி அவர்கள் வாண்டுகளின் நூலகம் புத்தகம் பிரிண்ட் செய்து வழங்க முன்வந்தார்.
மொத்தத்தில் வாண்டுகளின் மேஜிக் நூலகங்கள் அற்புதமாக வேலை செய்கிறது .

சிறார் வாசிப்பு இயக்க செயல்பாட்டாளர்.
25 சமூக நூலகங்கள் மற்றும் 6 வாண்டுகளின் நூலகங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாளர்.
தமுஎகச மற்றும் தசிஎகச சீர் வாசகர் வட்டத்தின் புத்தகத் தூதுவர் திட்டம் ஆகிய அமைப்புகளில் செயல்பட்டு வருபவர்.






நெகிழ்ச்சியான பதிவு தோழர்