அறமதியின் கதை - 8
மதச்சார்பின்மை – வானவில்லின் வண்ணங்கள்

வானவில்லின் பச்சை நிறப் பாதையில் நடந்த அன்பினியை, அந்தப் பாலம் ஒரு அடர்ந்த காட்டின் நடுவே கொண்டு சேர்த்தது. சால மரத் தோப்பில் பழங்குடி ஆண்களும் பெண்களும் நடமாடிக்கொண்டிருந்தனர்.
ஒரு குட்டிப் பெண் தந்த புல்லாங்குழல் போன்ற கருவியை அன்பினி ஊதினாள்.
அன்பினி ஒரு விசில் ஊதுவதைப் போல ஊதினாள். ஆனால் அதிலிருந்து வெளிவந்த அற்புதமான ஓசை மற்ற இசைக்கருவிகளின் ஓசையோடு கலந்து இசைக் கச்சேரியானது.
அந்த தாளத்தில் லயித்து சால மரத் தோப்பே ஆடியது. காடும் ஆடியது. பாய்ந்தோடிய நதியும் ஆடியது.
அங்கே பச்சை நிற உடையில் பழங்குடிப் பெண்ணைப் போல அணிகலன்கள் அணிந்து ஆடிக் கொண்டிருந்த அறமதியைக் கண்டாள் அன்பினி.
ஆட்டம் முடிந்ததும், “நாம எங்கே இருக்கோம்?” எனக் கேட்டாள்.
“ஜார்க்கண்டில் உள்ள ஒரு காட்டின் நடுவே.”
“இப்படி ஒரு நடனத்தை நான் பார்த்ததில்லை! இது வழிபாட்டு நடனம் எனப் புரிகிறது. ஆனால் கோவிலும் இல்லை, சிலையும் இல்லையே?”
“இவர்கள் சர்னா சமய மரபைப் பின்பற்றி இயற்கையை வழிபடுபவர்கள். நீர், காடு, நிலம் எனும் ‘ஜல், ஜங்கல், ஜமீன்’ மூன்றையும் போற்றுபவர்கள்.”
“ஆச்சரியமாக இருக்கிறது! இப்படியும் ஒரு மதம் உண்டா?”
“கற்பனைக்கு எட்டாத அதிசயங்கள் நிறைந்த நாடு இந்தியா. இங்குள்ள பண்பாடுகள், சமயங்கள், மொழிகள் எல்லாமே எண்ணற்ற நிறங்கள் கொண்ட வானவில் போலத்தான்!”
“வானவில்லில் ஏழு நிறங்கள் தானே இருக்கும்?”
“வா, போய்ப் பார்க்கலாம்.”
இப்போது அன்பினி வானவில் பாலத்தின் நீல நிறத்தில் நடந்து போனாள். அடர் நீல நிறத்திற்கும் பச்சை நிறத்திற்கும் இடையில் இருந்த நீலம் எண்ணற்ற வண்ண வார்ப்புகளாகப் பிரிந்தும் கலந்தும் இருந்தது. சொல்லப்போனால், பச்சை எங்கே முடிந்து, நீலம் எங்கே தொடங்குகிறது என்று கூடத் துல்லியமாக அவளால் சொல்ல முடியவில்லை.
யோசித்தபடியே அவர்கள் வந்து சேர்ந்த இடம் போத் கயா.
“புத்தர் ஞானம் பெற்ற புனித ஸ்தலம் தானே இது?” என உற்சாகமானாள் அன்பினி.
“ஆமாம், உலக பௌத்தர்களின் புனித இடம்.”
“வா, விகாரைக்குள் போவோம்.”
அமைதியின் உருவமாக இருந்தது புத்தர் சிலை. அந்த அமைதி அன்பினியின் மனதிலும் நிறைந்தது. லேசான ஓர் இறகைப் போல அவள் மிதந்து போய்க்கொண்டிருந்தாள், வானவில்லின் மஞ்சள் நிறத்தின் மேல்.
அணையாத நெருப்பை நடுவில் கொண்ட நெருப்புக் கோவிலுக்கு வந்து சேர்ந்தாள்.
“இங்கே எப்படி நெருப்பு அணையாமல் இருக்கிறது?”
“இது ஜோராஷ்ட்ரிய மதக் கோவில். நெருப்பு இவர்களுக்கு மிகவும் புனிதமானது. தூய்மையையும் ஒளியையும் குறிக்கிறது. அதனால் நெருப்பை எப்போதும் அணையாமல் பாதுகாக்கிறார்கள். பாரசீகத்தில் தோன்றிய மதம் இது. பல நூற்றாண்டுகளாக இவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள்.”
வெளியே வந்ததும், மசூதியின் ஒலிபெருக்கியிலிருந்து தொழுகை அழைப்பு ஒலித்தது. ஊரைப் பார்த்ததும் அன்பினிக்கு அடையாளம் புரிந்தது.
“ஐ! ஹைதராபாத். எனக்குப் பிடிச்ச ஊர்! காரணம் தெரியுமா?”
“பிரியாணிதானே?”
“அதுவும் தான். ஆனால் வேறொரு முக்கிய காரணமும் இருக்கு. போன வருடம் டூர் வந்தப்போ சார்மினாரில் கூட்டத்தில் தொலைந்துவிட்டேன்.
பயந்தே போயிட்டேன். அப்போ அங்க ரோட்டுல கடை போட்டிருந்த அப்துல் அண்ணாதான் உதவி செஞ்சாரு. கடைய அப்படியே விட்டுட்டு என் கூடவே அலைஞ்சு திரிஞ்சு, ஒரு வழியா எங்க டீச்சர் கிட்ட கொண்டு சேர்த்தார். வளையல் வித்த பாத்திமா அக்காவும் எனக்கு ஆறுதல் சொன்னாங்க. அதை மறக்கவே முடியாது.”
“நல்ல மனிதர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள், இல்லையா அன்பினி?”
அப்போது இளஞ்சிவப்பு நிறப் பாலம் அவர்களுக்காகப் பாதை விரித்து காத்துக்கொண்டிருந்தது.
“நாம் பார்த்த ஒவ்வொரு இடத்திலும் அப்படியே தங்கிவிடலாம் போலிருக்கிறது அறமதி!”
“ஒவ்வொன்றிலும் ஒரு சிறப்பு உண்டு. ஆனால் இந்தியாவின் சிறப்பே தனி! வா, சொல்கிறேன்.”
அவர்கள் நடக்கத் தொடங்கினர்.
“கிறிஸ்துவம் தோன்றிய காலத்திலேயே இயேசுவின் சீடரான ‘புனித தாமஸ்’ அதை கேரளாவுக்குக் கொண்டுவந்தார்.”
“கேரளா என்றதும் ஞாபகம் வருது! கொச்சின் SJSF கேம்ப் போனப்போ யூதர்களின் பழமையான வழிபாட்டிடம் - சினகாக் பார்த்தோம். அப்போதான் யூதர்களை ஹிட்லர் கொன்றது பற்றித் தெரிஞ்சது. ஆன் பிராங்கின் நாட்குறிப்பு புத்தகத்தை லைப்ரரியிலிருந்து எடுத்து படிச்சேன். அந்தப் பொண்ணும் என்னை மாதிரி ஒரு சின்னப் பொண்ணுதானே. குழந்தைகளைக்கூட மதத்தின் பெயரால் எப்படி கொல்ல முடியும்? ஹிட்லர் அப்படிச் செஞ்சா, மற்ற எல்லாரும் ஏன் அமைதியா இருந்தாங்கன்னு கோவம் வந்துச்சு.”
“வரலாற்றில் நடந்த ஒரு பெரும் கொடூரம் அது. சரியான கேள்வியை நீ கேட்டிருக்க, அன்பினி. ஒரு குற்றம் நடக்கும்போது, அதைப் பார்த்துக்கிட்டு அமைதியாக இருப்பது எப்படி சரியாக இருக்கும்?”
“ஆனால் இந்தியாவில் இருந்த யூதர்கள் அதே காலத்தில் பத்திரமாக இருந்ததாக அவர்களே சொன்னார்கள்.”
பேசியபடியே ஒரு குருத்வாராவை அடைந்தனர்.
“பசிக்கிறது, சாப்பிட்டு வரலாம்” என்றாள் அறமதி.
லங்கார் அன்னதானத்தில் சப்பாத்தி, சப்ஜி, சாம்பார் சாதம், தயிர் சாதம் வயிறாரச் சாப்பிட்டனர். அங்கே இருந்த ஒரு பலகையை அன்பினி கவனித்தாள். இந்தியா–பாகிஸ்தான் பிரிவினை வன்முறையால் பாதிக்கப்பட்டு பஞ்சாபிலிருந்து தமிழ்நாட்டிற்கு அடைக்கலம் வந்த சீக்கியர்கள் தமிழர்களுக்கு நன்றி சொல்லி எழுதியிருந்தார்கள்.
“மதத்தின் பெயரால் வன்முறை ஒரு பக்கம். இன்னொரு பக்கம் மத வித்தியாசம் பார்க்காமல் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்கிறார்கள்” என்று அன்பினி சொல்லும்போதே அவள் முகம் வாடிப் போய்விட்டது.
அறமதி அவளை குருத்வாராவிற்குள் அழைத்துச் சென்றாள். தலையில் துணி கட்டிக்கொண்டு உள்ளே நுழைந்தனர்.
“அல்லா… ராம்… வாஹே குரு…” என்ற பாடல் ஒலித்தது. அந்த இனிமையான பாடலைக் கேட்டுக்கொண்டே அன்பினி குருத்வாராவைச் சுற்றி வந்தாள். வெளியே வரும்போது அவள் மனம் அமைதியடைந்திருந்தது.
சாலையின் முடிவில் இருந்த அரச மரத்தடி நிழலில் அமர்ந்தனர். எதிரே சர்ச், அமர்ந்த மரத்தைச் சுற்றி முருகன் கோவில், இடதுபுறம் மசூதி.
“நீ இந்தியாவின் சிறப்பை சொல்லுறேன்னு சொன்னாயே.” என கேட்டாள் அன்பினி.
“அது என்னவென்று நீயே பார்த்து உணர்ந்து விட்டாயே.”
“நம்ம நாட்டுலதான் இத்தனை மதங்கள் இருக்கு. ஒன்றாகச் சேர்ந்து இருக்கு. இங்க யாரு வேண்டுமானாலும் எந்த மதத்தை வேண்டுமானாலும் ஃபாலோ பண்ணலாம். சரியா?”
“மிகவும் சரி. அந்தச் சுதந்திரத்தை அரசியல் அமைப்புச் சட்டம் எல்லோருக்கும் தந்திருக்கு. எந்த மத நம்பிக்கையும், கடவுள் நம்பிக்கையும் இல்லாமல் வாழவும் உரிமை உண்டு.”
“இத்தனை மதங்கள் இங்கு இருக்கு. உன்னோட மதம் என்ன? உனக்கு எந்த மதம் ரொம்பப் பிடிக்கும்?”
அறமதி சிரித்தாள்.
“நான் எந்த மதத்தையும் சார்ந்தவள் இல்லை. ஏனென்றால் நான் இந்திய அரசியல் அமைப்பு. இந்தியா ஒரு ‘மதச்சார்பற்ற மக்களாட்சி’ நாடு. இந்திய அரசுக்கு தனியாக எந்த மதமும் கிடையாது.”
“அப்போ அரசாங்கத்துக்கும் மதத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையா?” என்று கேட்டாள் அன்பினி.
“இல்லை. எல்லா மக்களையும் எந்தப் பாகுபாடும் இல்லாமல் நடத்தணும். ஒருவருடைய நம்பிக்கையை மதிப்பது முக்கியம். ஆனால் அந்த நம்பிக்கையின் பெயரில் இன்னொருவருடைய சமத்துவத்தையோ, மனித மாண்பையோ, உரிமைகளையோ பறிக்க முடியாது. அந்த மாதிரி வழக்கங்களை அரசு தடுக்கலாம்.”
“கணவன் இறந்ததும், மனைவியும் நெருப்பில் விழுந்து சாகும் ‘சதி’ என்ற கொடுமையைத் தடுத்து நிறுத்தினார்களே, அது மாதிரியா?”
“ஆமா. ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் கோவிலுக்குள் செல்லக் கூடாது என்றோ, பெண்கள் போகக் கூடாது என்றோ சொல்லக் கூடாது. இது போன்ற சீர்திருத்தங்களை அரசு தலையிட்டு செய்ய, அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடமிருக்கு.”
“அப்போ ஒருத்தருடைய மத சுதந்திரத்தையும் காப்பாத்தணும்; அதே நேரம் அந்த மதத்தின் பெயரில் இன்னொருத்தருக்கு அநியாயம் நடக்க விடக்கூடாது?” என்றாள் அன்பினி.
“அதேதான்” என்றாள் அறமதி.
அப்போது அவர்கள் முன் சிவப்பு கம்பளம் விரித்ததைப் போல வானவில் ஒளிர்ந்தது. ஒரு திருவிழாவின் கோலாகலம் இன்னொரு பக்கம் இருந்ததைப் பார்க்க முடிந்தது.
அது என்ன திருவிழா?
(அறிவோம் தெளிவோம்)

எழுத்தாளர், கதைசொல்லி.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறம் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட முகிழ் சிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தற்போது துபாயில் வசிக்கிறார்.






Comments