top of page

அறமதியின் கதை - 6 : எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் – சோசியலிசம்


கடுங்குளிர் காற்று வீசியது. அன்பினியின் காத்திரமான கேள்விகள் மோதித் தீப்பொறிகளை உருவாக்கின. அவற்றிலிருந்து கருகிய காகிதத் துணுக்குகள் காற்றில் பறந்தன. அப்போது அன்பினியின் கைகளில் ஒரு காகிதத் துண்டு வந்து விழுந்தது. அவள் அதை உற்று நோக்கினாள்.

“இந்தக் கையெழுத்து... நான் இதைப் பார்த்திருக்கேன்...” என்று குழப்பத்துடன் சொன்னாள் அன்பினி.


அப்போது அறமதி இடுப்பில் அணிந்திருந்த மணிமேகலையிலிருந்து ஒரு ஒளி, அலையாய்ப் பனிமலை எங்கும் பரவியது. அந்த ஒளி அவர்களை ஓர் இருண்ட அறைக்குள் கொண்டு சேர்த்தது.

அந்த இருண்ட சிறைச்சாலையின் சுவரில் செதுக்கப்பட்டிருந்த ஒரு வாசகத்தை அன்பினி பார்த்தாள். 


“ஒவ்வொரு துளி சாம்பலும் என் வெப்பத்தால் இயங்குகிறது. சிறையிலும் சுதந்திரமாய் இருக்கும் பைத்தியக்காரன் நான்!”

 

அரை இருளில் ஓர் இளைஞன் எழுதிக் கொண்டிருந்த காட்சி தோன்றி மறைந்தது.


“பகத் சிங்!", அன்பினி உற்சாகமாகச் சொன்னாள். 


அறமதியின் கைகளில் நான்கு கையெழுத்துப் பிரதி நூல்கள் இருந்தன.


“இந்த நூல்கள் பகத் சிங் எழுதியவை. இந்த நூல்களோட சாம்பலைத்தான் நாம் அங்கே பார்த்தோம்,” என்றாள் அறமதி.“நான் இவர் எழுதிய 'ஏன் நாத்திகன் ஆனேன்' நூலைப் படிச்சிருக்கேன்... எங்க பள்ளி மாணவர் எல்லாருக்கும் சிவசுப்ரமணியம் எழுதிய 'பகத் சிங் ஏன் நாத்திகரானார்?' என்கிற ஒரு குட்டிப் புத்தகம் கொடுத்தாங்க. அதைப் படிச்சதில் இருந்து எனக்கு பகத் சிங் மேல் ஒரு பெரிய ஈர்ப்பு வந்துச்சு...”


“பகத் சிங் ஒரு புரட்சியாளர் மட்டுமல்ல, ஒரு சிறந்த அறிவுஜீவியும்கூட. நிறைய புத்தகங்கள் படித்தார். அவர் ஜெயிலில் இருந்த காலத்தில் எழுதின இந்த நான்கு நூல்களையும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குப் பயந்து அழித்துவிட்டார்கள். உன்னோட கேள்விகளுக்கான பதில் இதோ இதில் இருக்கு,” என்றபடி அறமதி அந்த நூல்களை நீட்டினாள். அன்பினி அந்த நூல்களை வாங்கிக்கொண்டு ஒருமுறை தடவிப் பார்த்தாள். அதிலிருந்த எழுத்துகள் தீப்பொறிகளாகி, அங்கே பகத் சிங்கின் வடிவத்தைப் பெற்றன. “நான் பகத் சிங் பேசுகிறேன்... நமது இந்தியா சுதந்திரம் அடைய வேண்டியது வெறும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் இருந்து மட்டுமல்ல; ஜாதி, மதம் போன்ற மக்கள் நலனுக்கு எதிரான அடிமைத்தனங்களில் இருந்தும் தான்.

இந்த நாட்டை உருவாக்கும் உழைக்கும் மக்களும் விவசாயிகளும் வறுமையில் இருந்து விடுதலை பெற வேண்டும். கல்வி, மருத்துவம் மாதிரியான அத்தியாவசியமான வசதிகள் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும். இங்கு எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது வெறும் அரசியல் லட்சியம் இல்லை, அது நம் அறக்கடமை. அதிகப்படியான சொகுசுகளை இங்கு ஒருசிலர் அனுபவிக்கிறார்கள். பல மனிதர்கள் உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு மிஞ்சுவது என்ன? பசி, பட்டினி, சுரண்டல்... அதைப் பார்த்துக்கொண்டு நமது வேலையை மட்டும் நாம் பார்த்துக்கொண்டிருப்பது அறம் தவறுவதாகும். இங்கு வாழும் ஒவ்வொரு மனிதரும் சக மனிதர்கள் கஷ்டப்படுவதைப் பார்த்து அவர்களுக்காகப் போராட வேண்டும். அந்த நாள் தான் உண்மையிலேயே நமக்கு விடுதலை கிடைக்கும் நாள். ஒரு சோசியலிச நாடாக நமது நாடு மாற, நான் என் உயிரைத் தியாகம் செய்யச் சந்தோஷப்படுகிறேன்.”


“அந்த மாவீரன் தூக்கில் போடப்பட்டபோது அவருக்கு வயது வெறும் 23 தான்” உணர்ச்சி மேலிட சொன்னாள் அறமதி.


“எவ்வளவு சரியா சொன்னார் இல்ல... சோசியலிச நாடாக நம்ம நாடு மாறணும்... அப்படி ஒரு நாடு தான் எனக்கு வேணும்.” என்றாள் அன்பினி.


“சோசியலிசம் அதாவது சமநிலைச் சமுதாயம் என்பது நம்ம அரசியல் அமைப்புச் சட்டத்தோட அடிப்படை. ‘இந்த உலகத்துல சோசியலிசம் தான் இயற்கையானது. பொருளாதாரச் சமத்துவம், அதாவது எல்லா மக்களும் பொருளாதார அடிப்படையில சமமா இருக்கிறது தான் இதோட அடிப்படைன்னு’ காந்தி வலியுறுத்தினார்.”


“அப்படியா... அப்போ காந்தி சொன்னதையும் பகத் சிங் சொன்னதையும் சேர்த்தாங்களா?” அன்பினி கேட்டாள்.

"நிச்சயமா! இதைப் பத்தி அம்பேத்கர் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா? ‘நம்ம நாட்டுல சோசியலிசம் உருவாகப் பெரிய தடையா இருக்கிறதே ஜாதி தான். ஜாதி ஒழியாமல் பொருளாதார சமத்துவமும் முழுமையடையாது’ என்று அவர் நினைத்தார். இந்தியா சோசியலிஸ நாடா மாறத் தேவையான வழிகாட்டுதலை அரசியல் அமைப்புச் சட்டத்துல சேர்த்தார். மக்கள் நலனை உறுதி செய்வது நம்ம அரசோட கடமை. இந்த அடிப்படையில தான் நம்ம அரசுகள் சட்டம் கொண்டு வரணும், மக்கள் நலத் திட்டங்கள் வகுக்கணும்.” 


அன்பினி கவனமாகக் கேட்டாள். அறமதி தொடர்ந்தாள்.“இதப் பத்தி இந்தியாவோட முதல் பிரதம மந்திரி நேரு என்ன சொன்னார் என்று சொல்லுறேன் கேளு. ‘இந்த உலகமே சோசியலிஸத்தை நோக்கித் தான் நகரும் என்று நம்புகிறேன். நம்ம இந்திய நாடு ஒரு சோசியலிஸ்ட் நாடாக இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். இந்தியா நிச்சயம் அதை நோக்கி நகரும்’ அபடீன்னு சொன்னார்.”


“அவருதானே பதவியில இருந்தாரு... அப்போ அதுக்காக என்ன செஞ்சாரு?”


“நல்ல கேள்வி... இப்படித்தான் கேள்விகள் கேட்கணும். பதவிகள்ல இருக்கிறவங்களுக்குப் பதில் சொல்லுற பொறுப்பு இருக்குது. இப்போ நான் உனக்கு நேரு இதுக்கு என்ன பதில் சொன்னாருன்னு சொல்லுறேன்.” என்று சொல்லித் தொடர்ந்தாள் அறமதி.

“இந்தியாவில் முக்கியமான நிறுவனங்கள், உதாரணமா ரயில்வே, பெட்ரோலிய நிறுவனங்கள் மாதிரியான முக்கியமான நிறுவனங்கள நாட்டுடைமை ஆக்குனாங்க. அதே சமயம் தனியார் நிறுவனங்கள் செயல்படவும் அனுமதிச்சாங்க. ஆனா, இந்திய மக்களோட நலனைக் கருத்தில் கொண்டு அந்த நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் கொண்டு வந்தாங்க.

கூட்டுறவு முறையில விவசாயம் செய்யத் திட்டங்கள் வகுத்தாங்க. இது எல்லாமே ஒரு அளவு பலன் தந்தது. அதேபோல, 'மனித முயற்சிகள் தவறுகள் அற்றதா இருக்காது' என்றும் சொல்லுறார்.”


“அப்போ இதையெல்லாம் எப்படித்தான் சரி செய்யுறது?” என்று அன்பினி கேட்டாள்.


“அதையும் அவரே சொல்லியிருக்காரு... சுதந்திரம் கிடைக்கும்போது நம்ம மக்களுக்குப் படிப்பறிவு இல்லை; ஜாதியிலேயும் பொருளாதாரத்திலேயும் மேல, கீழன்னு பிரிஞ்சு கிடந்தோம். ஆனா... விவசாயிகளோட, செருப்பு தைப்பவரோட, கசாப்புக்காரரோட பொண்ணும் பையனும் படிச்சிருக்கிற ஒரு புதிய சமுதாயமா நம்ம மாறியிருக்கிறோம். இந்த படித்த தலைமுறை, உங்களை மாதிரி படிக்கிற குழந்தைகள், நாட்டுக்காகப் பாடுபடும் என்று அவர் நம்பினார்.”


“அப்போ என்னை மாதிரி குழந்தைகள் நம்ம நாட்டை மாத்த முடியும்னு சொல்லுறாரா?”


“நிச்சயமா... முடியும்.”


“புரிஞ்சுது.. இங்கே எல்லாமே மாறியிருக்கு, முன்னேறியிருக்கோம்.” என்றாள் அன்பினி.  


“அதேசமயம்.. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க.. ஒரு சோசியலிஸ நாடா நம்ம மாற.. இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு.” அறமதி சொன்னாள்.  


இதைக் கேட்ட அன்பினி யோசித்தாள்.


“நம்ம போக வேண்டிய இடம் இப்போ தெளிவா புரியுது; ஆனா எப்படிப் போறது? இங்க நிறைய தடைகள் இருக்கே? ஜாதி... மதம்... பணம்...” என்று கேட்டாள் அன்பினி. 


(அறிவோம் தெளிவோம்)


சுகன்யா ராமநாதன்
சுகன்யா ராமநாதன்

எழுத்தாளர், கதைசொல்லி.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறம் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட முகிழ் சிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தற்போது துபாயில் வசிக்கிறார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page