top of page

அறமதியின் கதை - 5 : உரிமையும் கடமையும்


"தலைநகர் டெல்லியில் காற்று மாசு கடந்த சில நாட்களாக உச்சத்தைத் தொட்டது. குழந்தைகள், கர்ப்பிணிகள் இதனால் அதிகமாகப் பாதிக்கப்பட்டார்கள். டெல்லியின் மருத்துவமனைகளில் வழக்கத்தை விட அதிகமாக நுரையீரல் கோளாறுகள் மற்றும் மூச்சுத் திணறல் உள்ள நோயாளிகள் சேர்க்கப்படுகிறார்கள்." என்று தலைப்பு செய்திகள் பின்னணி இசையுடன் டிவியில் அதிர்ந்தன.

'POLLUTION REFUGEE... அதாவது சொந்த மண்ணை காற்று மாசு காரணமாக விட்டுட்டு, வேறு இடத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட டெல்லி மக்கள் தங்களுக்குத் தாங்களே சூட்டிக்கொண்ட பெயர் இது. ' என்று இன்னொரு டிவி சேனலில் பேசிக்கொண்டிருந்தார்கள்.

'மூச்சு விட உரிமை உண்டு... உரிமை உண்டு... விடுதலை விடுதலை... காற்று மாசிலிருந்து விடுதலை... ஜிந்தாபாத்... ' என்று கோஷங்கள் ஒரு பக்க டிவி சேனலில்...


அன்பினி நெபுலைசர் பொருத்தப்பட்டு மருத்துவமனை பெட்டில் படுத்திருந்தாள். ட்ரிப்ஸ் ஏறிய அரை மயக்கத்தில் சுற்றிப் பார்த்தாள்.


பக்கத்து பெட்டில் ஒரு ஐந்து வயதுக் குழந்தையின் அம்மா அழுது கொண்டிருந்தார். "இரண்டு வருஷமா கஷ்டப்பட்டான்.. பகல்லயே கொரட்டை விடுற மாதிரி தான் மூச்சு விடுவான்... இப்போ... இப்போ இந்த பச்சை குழந்தைக்கு ஆபரேஷன் பண்ணி இருக்காங்க... எல்லாம் இந்த பாழாப்போன ஏர் பொல்யூஷன்னால (Air pollution) தான்..."


அந்த மருத்துவமனை முழுக்க நோயாளிகள். அன்பினியின் முன்னாடி கண்ணாடி ஜன்னல் இருந்தது. அதன் வழியே பார்த்தபோது, ஒரு பெரிய அழுக்குக் கைக்குட்டை வானத்தையே மூடி இருப்பது போலப் புகைமூட்டமாகத் தெரிந்தது.


தலை சுற்றுவது போல இருந்தது அன்பினிக்கு. ஒரு மயக்கம் கலந்த தூக்கத்திற்குப் போனாள். அன்பினியின் நெற்றியைத் தடவிக் கொடுத்தாள் அறமதி.


"நீ எங்கே போன... எனக்கு மூச்சு விடவே முடியல... கண்ணெல்லாம் எரியுது... உடம்பெல்லாம் வலிக்குது..." தடுமாறிச் சொன்னாள் அன்பினி.


"கொஞ்சம் வெதுவெதுப்பா தண்ணி குடிக்கிறியா?" அறமதி அன்போடு கேட்டாள்.


"இல்ல... எனக்கு வேணாம்... என்னை இங்கே இருந்து கூட்டிட்டு போ.... எங்கையாச்சும் கூட்டிட்டு போ... மூச்சு விட முடியுற ஒரு நிம்மதியான இடத்துக்குக் கூட்டிட்டு போயேன்...." அன்பினி கெஞ்சுவது போலச் சொன்னாள்.


அறமதி தலையசைத்தாள். அதில் அவள் காதில் போட்டிருந்த குண்டலங்கள் அசைந்தன. ஒன்று உரிமை என்றும் ஒன்று கடமை என்றும் ஒளிர்ந்தது. அந்த நொடி ஒரு மாயாஜாலம் நிகழ்ந்தது!

அன்பினி இப்போது தலை முதல் கால் வரை பனிக் குளிர் தாங்கும் உடைகள் அணிந்திருந்தாள். கூடவே அறமதியும் இருந்தாள். அவர்கள் அந்தப் பனிமலையில் ட்ரெக்கிங் (Trekking) செய்துகொண்டிருந்தார்கள்.


"முடியல... இன்னும் எவ்வளவு தூரம் இந்த பனியில போகணும்... நம்ம எங்க போறோம்..." அன்பினி மூச்சிரைக்கக் கேட்டாள்.


"வந்துட்டோம்... இன்னும் கொஞ்ச தூரம் தான்..." அறமதி ஒரு அழகான கட்டிடத்தைக் காட்டி சொன்னாள்.


அன்பினி அந்தப் பள்ளி வளாகத்தைச் சுற்றிப் பார்த்தாள். அவர்கள் வெளியில் பார்த்த நடுங்கும் குளிர் கொஞ்சமும் இங்கே இல்லை! இயற்கையான சூரிய வெப்பத்தை அப்படியே உள்ளே தக்கவைத்துக் கொள்ளும் எளிய கட்டடக்கலை மூலமாக அந்தப் பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டிருந்தது.


"என்னது! இங்க அட்மிஷன் கிடைக்கணும்னா எக்ஸாம்ல ஃபெயில் ஆகி இருக்கணுமா..." ஆச்சரியம் தாங்காமல் கேட்டாள் அன்பினி.


"ஆமா... அதுமட்டும் இல்ல... இங்கேயே தங்கி, எல்லா வேலைகளையும் செஞ்சு பார்த்து பாடம் கத்துக்கணும். உள்ளூர் மொழி, அதாவது லடாக்கி மொழி கட்டாயமா தெரியணும். இங்கிலீஷ் தெரியலனா கூடப் பரவாயில்ல. நிர்வாகம், தோட்டம், ஆடு மாடுகளைக் கவனிப்பது, இங்க இருக்குற கருவிகள், டூல்ஸ் எல்லாம் மெயின்டைன் பண்ணுறது... ஏன், புதுசு புதுசா கண்டுபிடிக்கிறது கூட இங்க இருக்குற ஸ்டூடண்ட்ஸ் தான்!"


"அட... இது என்னோட கனவு பள்ளி மாதிரி இல்ல இருக்கு!"


"ஹ்ம்ம்.... நீ உன்னோட டைரில எழுதி வச்சிருந்தியே..." கண் அடித்தாள் அறமதி.


கண்டுபிடிப்பாளர் சோனம் வாங்சூக் உருவாக்கிய SECMOL (லடாக் மாணவர்களின் கல்வி மற்றும் கலாச்சார இயக்கம்) பள்ளி தான் அது. அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த பிரசுரங்களை இருவரும் ஆர்வமாகப் பார்வையிட்டார்கள்.


"ராணுவ வீரர்கள் குளிர்ல கஷ்டப்படுறாங்கனு சோலார் டென்ட் கண்டுபிடிச்சிருக்கார்.. இங்கே பாரேன்..." வியப்போடு காட்டினாள் அன்பினி.


"ஐஸ் ஸ்தூபா (Ice Stupa)... இவ்வளவு ஐஸ் இருந்தும், இங்க தண்ணீ பிரச்சனைனா ஆச்சரியமா இருக்கு... எப்படி அறமதி?"


"இங்கே பெரிய பிரச்சனையே அது தான் அன்பினி! இது ஒரு ஐஸ் பாலைவனம். குளிர் காலத்துல பனி கொட்டி தீர்க்கும். ஆனா வெயில் காலத்துல பூமி வெப்பமாகுறதால, ஐஸ் எல்லாம் சீக்கிரமே உருகி ஓடிடும். அப்புறம் சில மாதங்களிலேயே குடிக்கக் கூடத் தண்ணீ இல்லாம வறண்டு போயிடும். அதுக்குத் தீர்வா தான் இந்த 'ஐஸ் ஸ்தூபா'வை அவரு கண்டுபிடிச்சாரு. லடாக்கி மக்களோட முன்னோர்கள் குகைகள்ல ஐஸைச் சேமிச்சு வைப்பாங்களாம். அதையே நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, கோடை காலத்துல விவசாயம் செய்யுற அளவுக்குப் பெரிய பயன் தரும் விஷயமா மாத்தியிருக்காரு."


ஒரு செய்தித்தாள் கட்டிங்கைப் பார்த்து அன்பினி கேட்டாள், "இதுல ஏன் சோனம் வாங்சுக் மற்றும் நிறைய மக்கள் போராடுறாங்க?"


அறமதி ஒரு டிவி ஸ்விட்ச் போடுவதைப் போல அந்தச் செய்தித்தாள் பகுதியைத் தொட்டாள். அடுத்த நொடி, அந்தச் செய்தி ஒரு காட்சியாக அவர்கள் கண்முன்னே விரிந்தது!


அதில் சோனம் வாங்சுக் பேசிக் கொண்டிருந்தார்: "இந்த இமயமலைகள் நம்ம நாட்டு மக்களோட சொத்து. இந்த மலைகளை நம்ம பாதுகாத்தா தான் நமக்கு சுவாசிக்கச் சுத்தமான காற்று இருக்கும், குடிக்கச் சுத்தமான தண்ணி இருக்கும். ஒரு சில கம்பெனிகளோட லாபத்துக்காக நம்ம எல்லாரோட வாழ்வாதாரத்தையும் இழக்க முடியாது!


இங்க நான் உங்களுக்கு அரசியலமைப்போட ஆர்ட்டிகிள் 21 (Article 21) ஞாபகப்படுத்துறேன். அடிப்படை உரிமையா நம்ம எல்லாருக்கும் ஆரோக்கியமா உயிர் வாழுற உரிமையை அது தருது. அதுமட்டும் இல்ல, இங்க நாம எல்லாரும் ஒன்னா கூடி அமைதியா குரல் கொடுக்குறோமே... இதுக்கு நம்ம அரசியலமைப்போட ஆர்ட்டிகிள் 19 (Article 19) தான் நமக்கு உரிமை தருது. தப்பு நடக்கும்போது அதை எதிர்த்துப் பேசவும், அமைதியான முறையில போராடவும் அது நமக்கு முழு சுதந்திரம் அளிக்குது.


காடு, ஏரி, ஆறு, காட்டு உயிர்கள் எல்லாத்தையும் பாதுகாத்து அதுங்க மேல அன்பு காட்டுறது இந்திய குடிமக்களாகிய நம்மளோட அடிப்படை கடமை (Fundamental Duty). அதைத் தான் நம்ம இப்போ இங்க செஞ்சுகிட்டு இருக்கிறோம். நமக்கான உரிமைகளைக் கேட்டுப் போராடுற அதே நேரத்துல, இயற்கையைக் காக்க வேண்டிய நம்ம கடமையையும் நாம மறக்கக் கூடாது!"

டிவி காட்சி மறைந்தது. அன்பினி யோசனையில் ஆழ்ந்தாள்.


"இயற்கையை ஏன் அழிக்கணும்? இயற்கை இருந்தா தானே மனிதர்கள் இருக்க முடியும்? அந்த ஆஸ்பத்திரியில நான் பொறந்த குழந்தைங்க மூச்சு விட முடியாம கஷ்டப்படுறத கண்ணாரப் பார்த்தேன். ஏன் ஒரு சிலரோட லாபத்துக்காக எல்லாரும் கஷ்டப்படணும்? எனக்குக் கோவம் கோவமா வருது அறமதி..."


அன்பினியின் கேள்விகள், பெரும் சத்தத்தோடு அந்தப் இமயமலை மீது மோதி எதிரொலித்தன... (அறிவோம் தெளிவோம் )


சுகன்யா ராமநாதன்
சுகன்யா ராமநாதன்

எழுத்தாளர், கதைசொல்லி.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறம் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட முகிழ் சிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தற்போது துபாயில் வசிக்கிறார்.


1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Venkateshwari v
18 hours ago
Rated 5 out of 5 stars.

அறமதியின் கதைகள் அருமை. குழந்தைகள் வாசிக்க என குட்டி குட்டியாக தேவையான விசயங்களை கொடுக்கிறீர்கள். வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள். நன்றி

Like
bottom of page