top of page

அறமதியின் கதை - 4

சகோதரத்துவம் - அன்பென்னும் அடித்தளம்



அறமதியின் முதல் வளையலிலிருந்து பாய்ந்த ஒளிக்கீற்றில் அன்பினி பயணித்தாள். ஒளி திடமாகி ஒரு திரவம் போல மாறியது. அன்பினி இப்போது நீந்திக் கொண்டிருந்தாள். 

அன்பினி இப்போது எங்கே இருக்கிறாள் தெரியுமா? 


அவள் உடம்பில் இருக்கிற ஒரு சின்ன இரத்த நாளத்தில். பாய்ந்தோடிய இரத்தம் அவளை ஒரு சவ்வுப் பெட்டிக்குள் தள்ளியது. படபடப்போடு அன்பினி அங்கே பார்த்த போது, அறமதி அமைதியாக ஒரு கோளம் மீது அமர்ந்திருந்தாள்.


"நம்ம எங்க இருக்கோம்?" அன்பினி கேட்டாள்.


"உன் உடம்புக்குள்ள இருக்குற ஒரு செல்லுக்குள்ள..." என்றாள் அறமதி.


அப்போதுதான் கவனித்தாள் அன்பினி. அவள் மிதந்து கொண்டிருந்த ஜெல்லி போன்ற திரவம் சைட்டோபிளாசம் (Cytoplasm). திரவத்தின் மேல் வண்ண வண்ணப் பொருட்கள் மிதந்து கொண்டிருந்தன. அவளை முந்தித் தள்ளிவிட்டு மின்மினிப் பூச்சி போல ஒரு மைட்டோகாண்ட்ரியா மிதந்து சென்றது.


"அறமதி, நீ உட்கார்ந்திருக்கிறது நியூக்ளியஸ் தானே... இதுதானே இந்தச் செல்லோட கட்டுப்பாட்டு மையம்..." என்று உற்சாகமாக சொன்னாள் அன்பினி.


"ஆமா, சரியா சொன்ன. இந்தச் செல்லுக்குத் தன்னிச்சையாக இயங்க முழு சுதந்திரம் இருக்கு." என்றாள் அறமதி. 


"ஆமா. நான் படிச்சிருக்கேன். ஒரு செல் தானே தன்னோட முடிவுகளை எடுக்கும்னு. தனக்கு ஒரு ஆபத்துன்னா தற்காத்துக்கும். உணவுத் தேவை, கழிவு நீக்கம் இப்படிப் பல வேலைகளைச் சுயமா செய்யுமாம்... படிச்சதை நேர்ல பார்க்க ஆச்சரியமா இருக்கு அறமதி" என்றாள் அன்பினி.


"ஆனா, ஒரு சின்னக் கேள்வி... இந்தச் செல்லை உன் உடம்பிலிருந்து பிரிச்சுத் தனியா வச்சா என்ன ஆகும்?"


"அது இறந்துடுமே! மத்த செல்களோட சேர்ந்து இருக்கும்போதுதானே அது உயிர்வாழ முடியும்?"

"சரியான பதில்... கோடிக்கணக்கான செல்கள் ஒன்ன ஒன்னு அழிச்சுக்காம, உன் உடம்புல சேர்ந்து இயங்குறதுக்கு காரணம் என்ன தெரியுமா?”  


கொஞ்சம் யோசித்த அன்பினி, “DNA” என்றாள். 


“கரெக்ட்,  உன் உடம்புதான் நம் இந்திய நாடு. இங்க இருக்கிற ஒவ்வொரு செல்லும், இந்தியக் குடிமக்கள். இந்தச் செல்கள் எப்படி இயங்கணும்னு சொல்லுற தகவல்கள் DNA-ல இருக்குது. அதே மாதிரி, நம்ம நாடு எப்படி இயங்கணும்னு வழிகாட்டுறது அரசியல் அமைப்புச் சட்டம். எல்லா குடிமக்களுக்கும் சுதந்திரம் இருக்கு — சிந்திக்க, செயல்பட, வழிபட! மூளை செல்லோ இல்ல தோல் செல்லோ..  எல்லாமே சமம் தான்.  அதே மாதிரி தான் நம்ம நாட்டுல எல்லா மக்களும் சமம். எந்த செல்லும் இங்கே தனித்து வாழ முடியாது. அது அர்த்தமுள்ளதா இருக்காது. அது போல தானே மக்களும்?" 


அன்பினி யோசித்தாள்.


அறமதி தொடர்ந்தாள், "தனிமனித கண்ணியத்தையும், நாட்டின் ஒற்றுமையையும் இணைக்கிற அந்தப் பாலம்தான் 'சகோதரத்துவம்'. நம்ம ஒருத்தரை ஒருத்தர் ஒரு உடன்பிறப்பைப் போல பார்த்தா மட்டும் தான் இங்கே எல்லோரும் சமம் அப்படிங்கிறதை ஏத்துக்க முடியும். நமக்கு கிடைச்ச இந்த சுதந்திரத்தைப் பயன்படுத்தணும். ஒவ்வொருத்தரும் அவங்க திறமையை நம்ம நாட்டோட, அதாவது எல்லா மக்களோட நலனுக்காகப் பயன்படுத்தணும்."


"இப்போ புரிஞ்சது நீ ஏன் என்னை இங்க கூட்டிட்டு வந்தேனு”, அன்பினி சொன்னாள். 

சட்டென்று ஒரு கேள்வி அன்பினிக்குத் தோன்றியது. "நீ சொல்றது என் உடம்புல என்னவோ ஈஸியா நடக்குது... ஆனா ஒரு சமூகத்துல நடக்குறது சாத்தியமா...?" கேட்டாள் அன்பினி.


இந்தக் கேள்வி அறமதியை உறைய வைத்தது. பழைய நினைவுகளுக்குள் கூட்டிச் சென்றது. துக்கம் அறமதியின் கண்களில் கண்ணீராய் நின்றது. அன்பினி அதிர்ந்து போனாள். “நீ ஏன் கலங்கி இருக்குற..? நான் உன்னை இப்படி பாத்ததே இல்லையே..”


அறமதியின் துக்கம் அலையலையாய்க் காலத்தை நகர்த்தியது. எந்த அர்த்தமும் இல்லாமல் சிந்தப்பட்ட இரத்தம்... துடிதுடித்து இறந்த மனிதர்கள். துயரம் சுமந்த குழந்தைகள். அறமதியின் முகத்தில் இருந்த அந்தப் பெரிய வடுவிலிருந்து இரத்தம் கசிந்தது.


“அந்த வடுவை நினைச்சா அழுகை வருது அன்பினி. மனிதர் வரலாற்றிலேயே இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை விடக் கொடுமையான ஒரு பெரிய இடப்பெயர்வு (Mass migration) வேறு எதுவும் இல்லை. பத்து லட்சம் பேர் கொல்லப்பட்டாங்க. ஒன்றரை கோடி பேர் அகதிகளா ஆனாங்க. யாரோ வரைஞ்ச ஒரு கோட்டுக்காக, சொந்த மண்ணை விட்டு விரட்டப்பட்டாங்க. எல்லாம் மதத்தின் பெயரால...”


அன்பினி நடுங்கிப் போனாள். அறமதி சொன்ன எண்கள் அன்பினியின் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. "ஒண்ணா சுதந்திரத்துக்காகப் போராடுனாங்க... அப்புறம் ஏன் இப்படி மாறினாங்க?"


" 'நம்ம' - 'அவங்க' அப்படின்னு எப்பப் பிரிச்சுப் பார்க்கிறோமோ, அப்பவே வெறுப்புங்கிற நெருப்பு பத்திக்கிது. பிரிட்டிஷ்காரங்களை எதிர்த்த வரைக்கும் அவங்க 'இந்தியர்களா' இருந்தாங்க. ஆனா, ஒருத்தரை ஒருத்தர் மதத்தின் வழியா மட்டும் பார்க்க ஆரம்பிச்சப்போ, வெறுப்பு அவங்களைப் பிரிச்சுட்டது."


அன்பினியின் கண்களுக்கு முன்னால் அந்த வண்ணமயமான நுண்ணுயிரி உலகம் மங்கத் தொடங்கியது. குளிரும் இருளும் நிறைந்த வேறொரு நிலப்பரப்பு அவளைச் சூழ்ந்தது. 


"வெறுப்பு மனிதர்களை மிருகங்களா மாத்தின அந்த நேரத்துலதான், ஒரு வயசான மனிதர் மனிதாபிமானத்தை மீட்கப் புறப்பட்டார்." கண்களை துடைத்துக்கொண்டு பேசினாள் அறமதி. 

"யார் அவர்?" - ஆர்வத்துடன் கேட்டாள் அன்பினி. 


"மகாத்மா காந்திஜி!" பெருமையோடு சொன்னாள் அறமதி. 


அன்பினியும் அறமதியும் இப்போது நவகாளியில் இருந்தார்கள். கடும் குளிர். கால்களில் காலணிகள் இல்லை. பாதையெங்கும் குப்பை, மலம், கூர்மையான கற்கள். அந்த முட்கள் நிறைந்த பாதையில் அவர் அமைதியாக நடந்தார். அமைதிக்காக நடந்தார். ஏழு வாரங்கள்... நாற்பத்தேழு இருண்ட கிராமங்கள்... எங்கே தீ பற்றி எரியுதோ அங்கே அன்பையே மருந்தாகத் தந்தார்.


"அவருக்குப் பயமா இல்லையா... கலவரம் நடக்கும் போது எப்படித் தைரியமா இங்க வந்தாரு..." என்று அன்பினி கிசுகிசுத்தாள்.


"அவர் உண்மையையும் அகிம்சையையும் நம்பி இங்கே வந்தாரு. எதிரிகளாக இருந்த மக்கள் மத்தியில் தங்கினாரு. எல்லா மனிதர்களும் சகோதர சகோதரிகளுன்னு சொன்னாரு. அன்பு தான் கடவுள்னு புரிய வச்சாரு. எந்த ஆயுதமோ, பாதுகாப்போ இல்லாத ஒரு வயசான மனிதர் முன்னாடி வெறுப்பு தோத்துப் போச்சு."


“அன்பு ஜெயிச்சிருச்சு...” அங்கிருந்த நூற்றுக்கணக்கான குழந்தைகள் முகத்தில் நம்பிக்கை ஒளி வீசியது. அன்பினியும் அவர்களுள் ஒருவராக இருந்தாள்.


“அமைதி திரும்பிருச்சு.. அன்பு ஜெயிச்சிருச்சு..” என்று மீண்டும் மீண்டும் தூக்கத்தில் சொல்லிக்கொண்டிருந்தாள் அன்பினி. ஆனால், வார்த்தைகள் வெளிவரவில்லை. கழுத்தை யாரோ நெரிப்பது போல உணர்ந்தாள். மூச்சு விட முடியவில்லை. இதயம் வேகமாக துடித்தது. (அறிவோம் தெளிவோம் )


சுகன்யா ராமநாதன்
சுகன்யா ராமநாதன்

எழுத்தாளர்,

 கதைசொல்லி.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறம் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட முகிழ் சிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தற்போது துபாயில் வசிக்கிறார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page