அறமதியின் கதை -7 : சமூக நீதி என்னும் ஆணிவேர்
- சுகன்யா ராமநாதன்

- 1 day ago
- 4 min read

அன்பினியும் அறமதியும் இப்போது மேகத்தில் அமர்ந்து ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தனர். அறமதி தன் கால் சிலம்பு சலசலக்க, காற்றை எத்தி மேகத்தை ஆட்டிக் கொண்டிருந்தாள். இதமான குளிர் காற்று அவர்களின் மேல் மோதியது. பரந்து விரிந்த இந்திய தேசத்தை பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக இருந்தது. மழைக்காடுகளும், அருவிகளும், பனி மலைகளும், பாலைவனமும், ஆறுகளும், நகரங்களும், கிராமங்களும், பசுமையான விளைநிலங்களும் பூரிப்பைத் தந்தன.
மக்கள்.. எங்கும் மக்கள். உழைக்கும் மக்கள் நாடெங்கும் தெரிந்தார்கள்.
“நம்ம நாட்டோட மிகப் பெரிய சொத்து மக்கள் தான்.. இல்ல அறமதி” என்றாள் அன்பினி.
“ஆமா. ஒரு நாடு என்றாலே அது மக்களைத் தானே குறிக்கிறது. உனக்குப் பிடித்த நகரத்தைச் சொல்லு, நம்ம அங்க போகலாம்.” என்றாள் அறமதி.
“நான் உன்னை ஒரு கேள்வி கேட்டேனே. அத மறந்துட்டியா?” என்றாள் அன்பினி.
“மறக்கல... பதில் தேடித்தான் போக போறோம். சொல்லு” என்றாள் அறமதி.
“ஹம்.. எனக்கு நிறைய நகரங்கள் புடிக்குமே.. எல்லாத்துக்கும் கூட்டிட்டுப் போறியா? மும்பை, சென்னை, புவனேஸ்வர், ஹைதராபாத் , அகமதாபாத்...” விளையாட்டாகக் கேட்ட அன்பினி சிரித்தாள்.
அடுத்த நொடி அறமதி சிலம்பை அசைக்க, அவர்கள் ஒரு குப்பை லாரியில், மும்பையின் ஜூகு பீச் ரோட்டில் போய்க் கொண்டிருந்தார்கள். அன்பினி தன்னோடு ஒரு சிறுவன் நின்றுகொண்டு இருப்பதை பார்த்தாள். அவளால் துர்நாற்றம் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஆனால் அந்தச் சிறுவன் சாதாரணமாக நின்றுகொண்டிருந்தான். அவன் அப்பாதான் ஓட்டுநர். பள்ளிக்கு நேரமாகி விட்டதை அவருக்கு நினைவுபடுத்தினான். “இந்தப் பையனும் உன்னுடைய வகுப்பு தான்.” என்றாள் அறமதி. அன்பினி அவனின் கிழிந்த புத்தகப் பை, லாரியின் ஒரு ஓரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்தாள். அவன் பள்ளி சீருடையில், குப்பை மூட்டைகளின் மேல் அமர்ந்து கொண்டிருந்தான்.
அந்த லாரி ரோட்டோரமாக நின்றது. பையை மாட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். இந்த சந்தர்ப்பத்தில், இருவரும் குதித்து இறங்கிக்கொண்டனர். இப்போது தான் மூச்சு விட முடிவதைப் போல இருந்தது.
அறமதி இன்னொரு கேள்வியைக் கேட்டாள், “அந்த பையனுக்கும் உன்னப் போலவே வக்கீல் ஆகணும் என்று ஆசை. ரெண்டு பேருக்கும் ஒரே பரீட்சை வச்சு, முதல் மதிப்பெண் எடுக்குறவங்களுக்கு மட்டும் தான் வக்கீலுக்குப் படிக்க வாய்ப்பு என்று சொன்னால் சரியா?”.
“அது எப்படி சரி? நான் ஸ்கூலுக்கு ஆட்டோவில் போறேன், படிக்கிறதத் தவிர எனக்கு பெரிசா எந்த வேலையும் இல்ல. ஆனா, இந்தப் பையன் அவங்க அப்பாவோட சேர்ந்து வேலை பாக்குறான், ஸ்கூலுக்கு நடந்து போறான். அவன் ரொம்ப கஷ்டப்படுறான். அவனுக்கு ஏதாவது உதவி கிடைக்கணுமே.”
“இதுதான் சமூக நீதி. பலமானவர்களையும் பலம் இல்லாதவர்களையும், ஒரு நாளும் சமமாக நடத்தக் கூடாது. கல்வியிலும், அரசு வேலை வாய்ப்புகளிலும், அரசியல் அதிகாரத்திலும் சமூகத்தில் இருக்குற எல்லோருக்கும் சமபங்கு தர வேண்டும். இத ஒரு வகையில தருவதுதான் இட ஒதுக்கீடு.” என்று விளக்கினாள் அறமதி.
“ஆனா, நம்ம அரசியல் அமைப்பு சட்டம் சமத்துவமா நடத்தணும்னு சொல்லுதே..?” என்று கேட்டாள் அன்பினி
“ஆர்டிகில் 14, சட்டத்தின் முன் சமத்துவம் (Equality before the law) மற்றும் சட்டங்கள் அளிக்கும் பாதுகாப்பில் சமத்துவம் (Equal protection of the laws) என்று தெளிவாக விளக்குகிறது” என்றாள் அறமதி.
“எங்க விளக்குது, கன்பியூஸ் இல்ல பண்ணுது” என்றாள் அன்பினி.
“சொல்றேன் கேளு. சட்டத்தின் பார்வையில எல்லோரும் சமம். அதாவது அதிகாரம், பணம், புகழ் இருக்குற ஆளாக இருந்தாலும் சரி, ஒரு சாதாரண எளிமையான ஆளாக இருந்தாலும் சரி, ரெண்டு பேருக்கும் ஒரே சட்டம்தான். யார் தப்பு செய்தாலும் ஒரே தண்டனைதான். இதுதான் சட்டத்தின் முன் சமத்துவம்.
“அப்போ. சட்டங்கள் அளிக்கும் பாதுகாப்பில் சமத்துவம் என்றால் என்ன?” என்று கேட்டாள் அன்பினி.
“ஒரு சின்ன உதாரணத்தோட சொல்லுறேன். ஒரு திருட்டு நடந்திருக்கு. குற்றம் செய்தவாராக சொல்லப் படுபவர் வசதி இல்லாதவர். இந்த மாதிரி சூழ்நிலையில, அரசே அவருக்காக ஒரு வக்கீலை வழங்கணும். ஏன்?” என்று கேட்டாள் அறமதி.
“அப்போ தானே அவரு என்ன சொல்லவருகிறார் என்று தெரியும்.” என்றாள் அன்பினி.
“சரி. ஒரு வசதி படைத்தவர், அவருக்கான வக்கீலை பணம் கொடுத்து அவருக்காக வாதாட வைக்க முடியும். அந்த வாய்ப்பு இல்லாதவர, அப்படியே கொண்டு போய், சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்று சொல்லி, விட்டுவிட முடியாது இல்லையா? இரண்டு நபர்களுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் கிடைக்கணும் என்றாலே இங்கே அரசின் நேர்மறையான குறுக்கீடு தேவைப்படுகிறது. அதனால்தான் சட்டம் எல்லோரையும் ஒரே மாதிரி நடத்துவது மட்டும் போதாது. சட்டங்கள் அளிக்கும் பாதுகாப்பில் எல்லோரும் சமம் என்று சொல்லி, சமத்துவம் இல்லாத சூழ்நிலைகளில் அரசு, குடிமக்களுக்கு இது மாதிரியான பாதுகாப்பு செய்து கொடுக்க அரசியல் அமைப்பில் வழி செய்தார்கள்.”
“எனக்கு இப்போ புரியுது அறமதி. நம்ம நாட்டோட ஒவ்வொரு குடிமக்களுக்கும் நீதி கிடைக்கணும் என்று எவ்வளவு யோசிச்சு இதெல்லாம் செய்திருக்காங்க இல்ல.” என்று வியந்து கேட்டாள் அன்பினி.
“ஆம். இப்போ இதுக்கு பதில் சொல்லு. ஒரு தனி மனிதருக்கு சட்ட உதவி தேவைப்படுற மாதிரி, சில சமூகங்களுக்கும் பல நூற்றாண்டுகளாக பின்தங்கிய நிலை ஏற்படுத்தப்பட்டு இருக்கே! அதற்கு என்ன செய்யலாம்?” என்றாள் அறமதி.
“அவங்க முன்னேறவும் அரசு ஏதாவது செய்யணும்.”
“சரியா சொன்ன. கல்வி மறுக்கப் பட்டு, ஜாதி பாகுபாட்டினால பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு வழி செய்ய, இட ஒதுக்கீடு போன்ற திட்டங்களை வகுக்க, அரசிற்கு நம்ம அரசியல் அமைப்பு வகை செய்கிறது.” என்றாள் அறமதி.
“இட ஒதுக்கீடு பத்தி எங்க SJSF (Social Justice Students Force) சார் ஒரு கதை சொன்னாரு. ஒரு பள்ளியில ஒரு ஓட்டப்பந்தயம் நடத்தினாங்கலாம். ஆனா சில மாணவர்களை பந்தயம் ஆரம்பிக்கும் கோட்டிலிருந்து 50 மீட்டர் பின்னாடி நிறுத்தி, பந்தயம் ஆரம்பம் என்று சொன்னாங்களாம். இலக்குக் கோட்டுக்கு யாரு முதல்ல வருகிறார்களோ, அவுங்கதான் வெற்றி பெற்றவங்க என்று சொன்னால், அது எப்படி சரி ஆகும்? பின்னாடி நிற்குறவங்க முதல்ல ஆரம்பக் கோட்டை அடையணும். அதுக்குத்தான் ரிசர்வேஷன் என்று சொன்னாரு.” என்றாள் அன்பினி
“ஒரு குட்டி கதையில அழகா சொல்லிட்டியே. ஆயிரம் ஆண்டுகளா கல்வி மற்றும் வேலை வாய்ப்பு மறுக்கப் பட்ட மக்கள், இன்னமும் பாரபட்சமா நடத்தப்படுறாங்க. அவர்கள் முன்னேற கொடுக்கப்படுகிற ஒரு கருவி தான் இட ஒதுக்கீடு.”
“அம்பேத்கர் சொன்ன மாதிரி முரண்பாடான சமூகமா நம்ம நாடு இன்னமும் இருக்கு இல்ல அறமதி.” என்றாள் அன்பினி.
“நம்ம சமத்துவம் பத்தி பேசின போது சொன்னதச் சரியா ஞாபகம் வச்சிருக்கிறியே, அன்பினி. நம்ம நாடு எல்லோருக்கும் வாக்கு உரிமையை கொடுத்து அரசியல் சமத்துவத்தை அடைந்திருக்கிறது. மேலோட்டமா பாத்தா அது ஒரு அழகான மாளிகை. ஆனா, சமூக பொருளாதார நிலையில ஏற்றத்தாழ்வுகள் இருக்கு.”
“அரசியல் சமத்துவம் போதாதா?” என்று கேட்டாள் அன்பினி.
“போதாது”
“ஏன்?”
"அடித்தளம் பலவீனமா இருந்தா மாளிகை நிற்குமா?"
"நிற்காது.”
“இதத் தான் அம்பேத்கர் சொன்னாரு. நம்ம நாட்டுல அரசியல் மக்களாட்சி நிலைக்கணும் என்றால் சமூக மக்களாட்சி வரணும். இல்லை என்றால் மொத்த அமைப்பும் சிதைந்து விடும் ஆபத்து இருக்கு என்று எச்சரிக்கை கொடுத்தார்.”
“அப்போ சமத்துவம் கொண்டு வரவே இங்க சமூக நீதி தேவைப்படுது சரியா?” என்றாள் அன்பினி.
“ஆமா. சமூக நீதிதான் ஆணிவேர். நம்ம நாட்டில் பல கணக்கெடுப்புகள் என்ன காட்டுதுன்னா, சமூக ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட பல சமூகங்கள் பொருளாதாரத்திலும் தொடர்ந்து பின்தங்கியே இருக்கின்றன.”
“அப்போ, ஜாதி அழிந்தால்தான் நம்ம நாடு உண்மையிலேயே சுதந்திரம் அடையும். இல்ல” என்றாள் அன்பினி.
“நிச்சயமாக. ஜாதி ஒழிந்தால்தான் நம்ம நாடு ஒரு உண்மையான நாடாகவே மாறும், ஒரே நாட்டு மக்கள் என்ற உணர்வை இங்க தடுக்கிறது ஜாதி என்று அம்பேத்கர் சொன்னாரு. சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்ற மூன்றும் ஒவ்வொருவரின் வாழ்க்கைமுறையாக மாறணும்.”
“ஆமா. நான் நிச்சயம் அப்படித்தான் வாழ்வேன். என் நண்பர்களுக்கும் சொல்லுவேன். எங்கள மாதிரி குழந்தைகள் நினைச்சா இங்க எல்லாமே எளிமையா மாறிடும். இல்ல அறமதி”
“கண்டிப்பாக மாறும்”
“நம்ம பார்த்த அந்த பையன் ஒரு நாள் வக்கீலா ஆகணும்.” என்றாள் அன்பினி.
அப்போது ஒரு மேகத்திலிருந்து வந்த காற்றில் அறமதியின் பொன்னிற சேலை ஆடியது. சூரிய ஒளி ஒரு பனித் துளியின் மீது பட்டு உருவான வானவில், அவள் சேலையின் மீது படர்ந்தது.
(அறிவோம் தெளிவோம்)

எழுத்தாளர், கதைசொல்லி.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறம் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட முகிழ் சிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தற்போது துபாயில் வசிக்கிறார்.





Comments