top of page

அறமதியின் கதை

அன்பினியும் அறமதியும்



நாளை நிகழப்போகும் அந்தச் சிறப்புமிக்க சந்திப்பிற்காக, அன்பினி பையை அடுக்கிக் கொண்டிருந்தாள். ஆனால், அவளது எண்ணங்கள் டெல்லியின் கடமைப் பாதையில் (Kartavya Path) துள்ளிக் குதித்தன. ஜன்னல் வழி புகுந்த கடும் குளிர்க்காற்று, மெல்லிய ஊசியாய் அவள் மேனியில் தைத்தது.


திடீரென எதையோ நினைவுகூர்ந்தவள், தன் குறிப்பேட்டை எடுத்தாள். பொத்தானை அழுத்தியதும் 'கிளிக்' எனத் திறந்தது அது. அதில் அன்பினியின் ஆசைகள், கேள்விகள், கோபங்கள், சோகங்கள், அனுபவங்கள், ஓவியங்கள், கிறுக்கல்கள் என்று எல்லாமே இருந்தது. அன்று நடந்த ஒவ்வொரு நிகழ்வையும் ஒன்று விடாமல் எழுதிவிட்டதாக நிம்மதி அடைந்து ஐந்து நிமிடம் தான் ஆகியிருக்கும். அதற்குள் வண்ணங்களால் நிறைக்கப்பட்ட வானத்தைப் பற்றி எழுதத் தவறிவிட்டோமோ என்று அவளுக்குத் தோன்றிவிட்டது.


அவள் தங்கியிருந்த 'ராஷ்ட்ரிய ரங்ஷாலா' முகாம் ஒரு குட்டி இந்தியா. ரோஜாவின் அழகுடன் மல்லியின் வாசனை சேர்ந்தது போல, தேங்காய் எண்ணெய் வாசம் வீசும் கேரளத்து அவியலுடன், பஞ்சாபி பரத்தாவின் நெய் மணம் சங்கமித்து அவளது சுவாசத்தில் இழைந்தோடியது. வெவ்வேறு மாநிலங்களின் வண்ணவண்ண உடைகளும், புரியாத மொழிகளின் கொஞ்சல்களும், வண்ண விளக்குகளின் ஒப்பனையில் ஆர்க்கெஸ்ட்ரா இசைக்கு நடனமாடும் நீரூற்றைப் (Fountain) போல அங்கே ஒன்றிணைந்திருந்தன.


வெவ்வேறு கலாச்சாரங்கள், மொழிகள், மதங்கள், இனங்கள், நம்பிக்கைகள் மற்றும் கலைகள் என அந்த முகாம் ஒரு பலவகைப் பூக்களால் ஆன நந்தவனத்தைப் போலத் திகழ்ந்தது. அந்த நந்தவனத்தில் அன்பின் மணம் வண்ணமயமாக வீசியது. சைகைகளாலும், புன்னகையாலும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முயன்றபோது, இதயங்களைப் பிணைக்க மொழியை விட 'அன்பு' ஒன்றே போதுமானது என்பதை அந்த நாட்கள் அவளுக்குக் கற்றுக்கொடுத்திருந்தன.


இந்த இருபத்தைந்து நாட்களில் அவள் கண்ட அந்தப் பன்முகத்தன்மைதான், இன்று அவள் கடமைப் பாதையில் கண்ட காட்சியின் நிஜமான அர்த்தம் என்பதை அவள் உணர்ந்தாள். இன்று காலை, 21 குண்டுகள் முழங்க இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டபோது அன்பினியின் கால்கள் அதிர்ந்தன. ஒட்டுமொத்த கூட்டமும் ஒன்றாக, ஒரே மூச்சில் 'இந்தியர்' என்ற உணர்வோடு, உணர்வுகள் உச்சிக்கு எழுந்த அந்தத் தருணம். அன்பினிக்குச் சிலிர்ப்பு ஏற்பட்டது.


கம்பீரமாகத் தமிழ்நாட்டின் ஊர்தி வந்துகொண்டிருந்தது. நான்கு பக்கங்களிலும் பிரம்மாண்டமான எல்.இ.டி (LED) சுவர்களால் கட்டமைக்கப்பட்ட ஊர்தி அது. பக்கவாட்டில் பறை இசைக்கலைஞர்கள், பறை அதிர வாசித்துக் கொண்டே ஆடி வந்தார்கள். ஊர்தியின் மேலே மிகப்பெரிய எல்.இ.டி திரைகளாலான இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை (Preamble), சிலை வடிவமாக ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி ஒளிர்ந்து கொண்டிருந்தது. அதற்கு முன்புறமாக ஐந்து பிரம்மாண்டமான, அதிநவீன தானாக ஒன்றிணையும் உருமாறும் ரோபோக்கள் நின்றிருக்க, நடுவே தமிழணங்காக அன்பினி கம்பீரமாக நின்றிருந்தாள்.


அந்தத் தருணத்தில் அன்பினி முழுமையாகத் தமிழணங்காகவே மாறி இருந்தாள். அவள் தலையில் சிந்தாமணி அதிகாரத்தின் சின்னமாக மின்னியது. 'ழகரம்' தாங்கிய வேலை ஏந்தியிருந்த கைகளில் வளையாபதி ஒளி வீசியது. மனிதாபிமானம் என்னும் உயரிய அறத்தைப் போதிக்கும் மணிமேகலை, அவளது இடுப்பை அலங்கரித்திருந்தது. காதுகளில் குண்டலகேசி குண்டலங்களாக ஒளிர, கால்களில் சிலப்பதிகாரத்தின் சிலம்பு சுடர் போலப் பிரகாசித்தது.


ஒவ்வொரு ரோபோவும் தமிழின் ஐம்பெருங்காப்பியங்களின் குறியீடாக நின்றிருந்தது. ஒரு கணம் அது அந்தக் காப்பியத்தின் முக்கியக் கதாபாத்திரமாகவும், அடுத்த கணம் 'லெகோ' (Lego) கட்டமைப்புச் செங்கற்களைப் போல, தானே உருமாறி ஒரு புத்தகத்தின் உருவம் எடுத்து, அந்த காப்பியப் பெயரையும் அது கூறும் அறத்தையும் காட்டியது.


குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் முக்கிய விருந்தினர்கள் அமர்ந்திருந்த இடத்தை அந்த ஊர்தி நெருங்கியபோது, அந்த ஐந்து ரோபோக்களும் ஊர்தியின் தரையில் தகர்ந்து, நடுவே ஊர்ந்து வந்து தமிழணங்கைத் தூக்கி நிறுத்தின. அவை ஒரு பீடம் போல உருமாறியிருந்தன. அந்த நொடி, அவற்றின் திரைகளிலிருந்து வெளிவந்த ஒளிக்கீற்றுகள் 'அறம்' என்று முப்பரிமாண ஒளிப்படமாக (3D Hologram) காற்றில் மிதந்தன. கூடியிருந்த அனைவரும் செம்மைத் தமிழின் அறத்தையும், குடியரசு இந்தியா மக்களுக்கு வழங்கிய அதிகாரத்தின் அறத்தையும் ஒன்றிணைத்த அந்தப் பொன்னான கணத்தில் பூரித்துப் போய் நின்றிருந்தனர்.


இவையனைத்தையும் மிகத் துல்லியமாக தனது குறிப்பேட்டில் படம் பிடித்திருந்தாள் அன்பினி. தனது எழுத்துக்களுக்கு ஆங்காங்கே ஓவியங்களும் அழகு சேர்த்திருந்தன. "மூவண்ணப் பலூன்கள் வானத்தில் வண்ண நட்சத்திரங்களைப் போல இருந்தன; மூவண்ணப் புகையோ குட்டி வண்ண மேகங்களைப் போல மிதந்தன" என எழுதியவள், அதன் அருகில் ஒரு குட்டி டூடுல் (Doodle) வரைந்தாள். பின்பு, முழுத் திருப்தியோடு தனது குறிப்பேட்டை மூடி வைத்துவிட்டுத் தூங்கச் சென்றாள்.


நாளை குடியரசுத் தலைவரைச் சந்திக்கப்போவதும், அதைத் தொடர்ந்து நாடாளுமன்றச் சுற்றலாவின் ஒரு பகுதியாக நூலகத்தைப் பார்க்கப்போவதும் அவள் மனம் முழுவதையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. உடலும் மனமும் ஒரு கட்டத்தில் அயர்ந்து தூக்கத்தைத் தழுவியது.

அன்பினி படுத்திருந்த அந்தக் காட்சி, நீரில் மிதந்த பிரதிபலிப்புச் சிற்றலைகளில் ஆடுவதைப் போல மெல்லக் கலைந்தது.


நாடாளுமன்ற நூலகத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலப்பிரதி பாதுகாக்கப்பட்ட அந்தப் பெட்டியின் அருகில் நின்றிருந்தாள் அன்பினி. அவளது கைகள் அந்தப் பெட்டியில் பட்டதும், 'பட்' என்ற சத்தத்துடன் அந்த கண்ணாடி மூடி திறந்தது. 'ஹிஸ்' என்று ஹீலியம் வாயு வெளியேறிய அந்தத் தருணம், ஒரு மெல்லிய மினுமினுப்புடன், தங்க நிறத்தில் 'Constitution of India' என்று பொறிக்கப்பட்ட அட்டை தெளிவாகத் தெரிந்தது. ஒரு குழந்தை தன் அம்மாவைப் பிஞ்சு விரல்களால் தழுவுவதைப் போல, அவள் அந்தப் புத்தகத்தைப் திறந்தாள்.


'வாய்மையே வெல்லும்' என்ற வாசகத்திற்கு மேலே கம்பீரமாக மூன்று சிங்கங்கள் நின்றிருக்க, துள்ளும் குதிரைக்கும் நிமிர்ந்த காளைக்கும் நடுவே அசோகச் சக்கரம் பந்தமாக அமைந்திருந்தது. "இந்தியர்கள் அமைதி, பண்பாடு மற்றும் நற்பெயரின் தூதுவர்கள்" என்று ஜவஹர்லால் நேருவின் குரல் அன்பினியின் காதுகளில் அசரீரி போல ஒலித்தது.


தன்னையறியாமல் அன்பினி அடுத்த பக்கத்தைப் புரட்டினாள். அந்தப் பக்கத்திலிருந்த ஓவியங்கள் காகிதங்களிலிருந்து மின்னல் வேகத்தில் முப்பரிமாணமாக முளைத்தன. இலைகளும் தழைகளும் நீண்டு விரிந்து படர்ந்தன. கொடிகள் ராட்சதக் கொடிகளாக உருமாறின. தாமரை மொட்டுகளும் மலர்களும் வான் உயரத்திற்கு வளர்ந்தன. சட்டென்று தங்க நிற மயில் ஓவியங்கள், வண்ணமயமான உயிருள்ள மயில்களாக அகவித் திரிந்தன. பிளிறும் யானையும், திமிறும் காளையும், துள்ளும் குதிரையும், பாயும் சிங்கமும் நான்கு மூலைகளிலிருந்தும் தாவி ஓடின.


அன்பினியின் உடல் மொத்தமும் நடுங்கியது; அவளது சுவாசம் புயலைப் போல வேகமெடுத்தது. அவள் அங்கிருந்து ஓடிவிட எத்தனித்தபோது, அந்த எட்டு சட்டக (Geometric) ஓவியங்களும் ஒன்று சேர்ந்து ஒரு மாயக் கம்பளம் போல அவள் கால்களுக்குக் கீழே விரிந்தது. மெல்ல மேலெழுந்த கம்பளத்தில் அவள் 'தொப்பென்று' அமர்ந்தாள். வெல்வெட் (மூதாய்) பூச்சியின் மேனியைப் போல அது மென்மையாய் இருந்தது.


அன்பினி திரும்பிப்பார்த்தாள். அவளுக்கு அருகில் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். என்ன நடக்கிறது? யார் அந்தப் பெண்?  

மெல்லப்புன்னைகைத்த அந்தப் பெண்ணின் முகத்திலிருந்த கருணை அன்பினியின் பயத்தை ஒளியைப் போல நீக்கியது. 


அந்த அழகு நிரம்பிய, அன்பின் உருவமான தங்கத் தாரகை, அன்பினியின் கைபிடித்துக் கொண்டாள். அவளுடைய தொட்டவுடன் மாயக்கம்பளம் பறக்கத் தொடங்கியது. அன்பினிக்கு இப்போது பயமில்லை. பலகாலம் ஒன்றாகப் பழகிய ஒரு தோழியின் அருகில் இருப்பதைப் போல உணர்ந்தாள்.


யார் இவங்க? இவங்க பேர் என்ன? எனக்கு ஏன் இவங்களப் பார்த்தா ரொம்ப நல்லா தெரிஞ்சவங்க மாதிரி இருக்கு?” என்று அன்பினி மனதில் கேள்விகள் எழுந்தன.


புன்னகைத்த அந்தப் பெண், "நான் ஓர் அணங்கு. என் பெயர் அறமதி" என்றாள். 


‘அறம்’ ‘மதி’ இந்த சொற்கள் அன்பினியின் உடலில் ஒரு சிறு அதிர்வை ஏற்படுத்தியது. 


” யார் இந்த அறமதி ? 


 ( அறிவோம் தெளிவோம் )


சுகன்யா ராமநாதன்
சுகன்யா ராமநாதன்

எழுத்தாளர்,

கதைசொல்லி.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறம் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட முகிழ் சிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தற்போது துபாயில் வசிக்கிறார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page