நிதானமும் மகிழ்ச்சியே
- ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன்

- Apr 15
- 2 min read

மகிழ்ச்சியூர் என்ற கிராமத்தில் பத்து நாள் திருவிழா தொடங்கியிருந்தது. திருவிழாவிற்காக விதவிதமான இராட்டினங்கள் அந்த ஊருக்கு வந்திருந்தது. அங்குள்ள குழந்தைகள் அனைவரும் இராட்டினத்தின் வருகையால் மகிழ்ச்சியாக இருந்தனர்.
சுழலும் இராட்டினம், பம்பரம் போல் சுற்றும் இராட்டினம், ஊஞ்சல் போல் மேலும் கீழும் சென்றுவரும் இராட்டினம், காப்பி கப் போன்ற வடிவத்தில் இராட்டினம் இப்படி பல வகையான இராட்டினங்கள் அங்கு வந்திருந்தது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் இராட்சத இராட்டினமும் வந்திருந்தது.
திருவிழா கூட்டத்தைவிட அந்த இராட்சத ராட்டினத்தினை பார்க்க மக்கள் கூட்டம் அதிகமாக வந்திருந்தது.
தன்னை பார்க்க வரும் மக்களைக் கண்டு பெருமிதம் கொண்டது இராட்சத ராட்டினம் . அது பிற இராட்டினங்களை எப்போதும் கேலி செய்து கொண்டே இருந்தது.
ஒரு நாள் வழக்கம் போல இராட்சத இராட்டினம் ஓடிக்கொண்டு இருக்கும் போது மின்சாரக் கோளாறால் தடைப்பட்டு போனது. அவ்வளவு தான் இராட்டினத்தில் இருந்த அனைவரும் கூச்சலிடத்தொடங்கினர். தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு இராட்டினத்தில் இருந்தவர்கள் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர்.
திருவிழாவிற்கு இராட்டினம் ஆட ஆவலோடு வந்தவர்கள் . பழுதான இராட்டினத்தைக் கண்டு ஏமாற்றம் அடைந்தனர். தாத்தவோடு இராட்டினம் ஆடும் ஆசையில் வந்த கிரிஷ் இராட்டினம் பழுதான செய்தி கேட்டு வருத்தப்பட்டான். தாத்தாவோ மற்ற இராட்டினங்களில் ஆடுமாறு கூறினார்.
கிரிஷ் மறுத்துவிட்டான். ஆடினால் இராட்சத இராட்டினம் தான் ஆடுவேன் என்று அடம்பிடித்தான். இல்லையென்றால் வீட்டுக்கு போகலாம் என்றான் .
தாத்தாவும் அவனை சமாளிக்க வேறு வழி தெரியாது வீட்டுக்கு போகலாம் என்று முடிவு எடுத்தார். கிளம்பி போகும் போது எதிரில் வந்தவரை தாத்தா கூர்ந்து பார்த்துவிட்டு " டேய் சோமு நீயா " என்றார்.
" ஆமா, நீங்க யாரு " என்று கேட்டார் பெரியவர் . "என்னைத் தெரியலையா நான் தான் நான் தான்டா உங்கூட அஞ்சாப்பு வரை ஒன்னா படிச்ச கணபதி" என்றார் தாத்தா.
" டேய் நீயா , அடையாளமே தெரியலடா " என்ற படி தாத்தாவை கட்டியணைத்தார்.
"திருவிழாவுக்கு வந்தியா, இது யாரு உன் பேரனா" என்றார் சோமு தாத்தா.
" ஆமா டா , இவன் என் பேரன் தான் . இராட்டினம் ஆடனும்னு சொன்னான் கூட்டுவந்தேன். ஆனா அது ரிப்பேரா இருக்குனு சொல்லிட்டாங்க அதான் வீட்டுக்கு போறோம்" என்றார் தாத்தா.
" அட அதான் என்னோட இராட்டினம் இருக்குல வா அதுல ஆடலாம்" என்றார் சோமு தாத்தா .
"எங்க உன்னுடைய இராட்டினம்" என்ற கணபதி தாத்தா கேட்கவும்
"அதோ பார் " என்று கை காட்டினார் சோமு தாத்தா.
அவர் கைகாட்டிய திசையை ஆவலோடு பார்த கிரிஷின் முகம் வாடி போனது.தாத்தா கை காட்டிய இடத்தில் ஒரு குடை இராட்டினம் நின்றது. பல வண்ண நிறங்களில் குடைபோன்ற அமைப்பைக் கொண்ட அதில் வெள்ளை நிற குதிரை, சாம்பல் நிற மான், வெள்ளையும் கருப்பும் வரிவரியாக கலந்த வரிக்குதிரை,தலையின் முன் பகுதியில் கொம்பு வைத்த யூனிக்கான் குதிரை என பல மிருகங்களின் உருவ பொம்மைகளோடு இருந்தது அந்த இராட்டினம்.
மற்ற இராட்டினங்களைப் போல மின் இயக்கியால் இயங்காததால் கைகளால் இயக்கப்படும் அது மிக மெதுவாக இயங்கியது.
" ஐய்யே இதுல்லாம் நான் ஆடமாட்டேன் பா " என்று முகத்தை சுழித்தான் கிரிஷ்
கிரிஷ் இப்படி சொல்லவும் சோமு தாத்தா முகம் வாடியது. அதுக்கண்ட கணபதி தாத்தா "அப்படிலாம் சொல்லக்கூடாது கிரிஷ் " என்று கண்டித்தார். " பரவாயில்லை விடுப்பா, உன் பேரன் மட்டும் இல்ல இங்க வர்ர பசங்க யாருக்குமே என்னோட இராட்டினம் பிடிக்க மாட்டுக்கு . மற்ற இராட்டினம் மாதிரி வேக போகாதுனு யாருமே இங்க வரமாட்டாங்க தெரியுமா " என்று வருத்தப்பட்டார் சோமு தாத்தா.
சோமு தாத்தா வருந்துவதைக் கண்ட கணபதி தாத்தா கிரிஷ்யிடம் "எனக்காக ஒரு முறை இதில் ஆடிபாரு. பிறகு உனக்கு பிடிக்கவில்லை என்றால் நீ இறங்கிவிடலாம் " என்றார்.
தாத்தா சொன்னது போல கிரிஷ்ம் குடைராட்டினம் ஆட ஒத்துக்கொண்டான். ராட்டினத்தில் உள்ள யூனிக்கான் குதிரையில் அவனை அமரவைத்தார் தாத்தா. இராட்டினம் முதலில் மெதுவாக சுற்றத் தொடங்கியது. கிரிஷ்கு இப்படி மெதுவாக சுற்றுவது பிடிக்கவில்லை . ஆனாலும் தன் தாத்தாவிற்காக அதில் இருந்தான். சிறிது நேரத்திலேயே அந்த இராட்டினத்தின் அருகில் மற்றொரு குழந்தையும் வந்தான். வெள்ளை நிற குதிரையில் ஆட வேண்டும் என்று கூறினான். உடனே அவனையும் அந்த குதிரையில் ஏற்றிவிட்டார் தாத்தா. இரு குழந்தைகள் தன் மேல் ஏறிய மகிழ்வில் இராட்டினம் சீரான வேகத்தில் சுற்றத்தொடங்கியது.
கொஞ்ச நேரத்தில் இன்னும் சில குழந்தைகள் வந்துசேர இப்போது இராட்டினம் முழுவதும் குழந்தைகளால் நிறைந்தது. ஒவ்வொரு குழந்தைகளும் தங்களுக்கு பிடித்தமான பொம்மையில் அமர்ந்து கொள்ள அந்த பொம்மையை உண்மையான குதிரை,மான் போல் எண்ணி அதை ஓட்டுவது போல சைகைகள் செய்து மகிழ்ந்தனர். அதனைக்கண்டு உற்சாகமான இராட்டினம் நீண்ட நாட்களுக்கு பிறகு மகிழ்ச்சியாக சுற்றியது. வேகமாக சுழலும் இராட்டினத்தை விட நிதனாமாக இயங்கும் இராட்டினம் அதிக மகிழ்ச்சி அளிப்பதை புரிந்து கொண்டான் கிரிஷ்.

சிறுகதை , கவிதை எழுதிவருகிறார். சிறார்களுக்கான நீரோடை மற்றும் கதைசொல்லப்போறோம் குழுக்களில் கதைசொல்லியாக இருக்கிறார்.
முதல் நூல் நீலனின் பொங்குமாங்கடல் சிறார்களுக்கான நாவல் வெளியாகியிருக்கிறது.





பழமை போற்றும் நல்ல கதை.. அருமை.. குடை ராட்டினத்தில் சுற்றில் மிருகப் பொம்மைகள் தவிர்த்து உள் பக்கம் இருக்கைகள் கொண்ட பெட்டிகளும் இருக்கும்.