ஒரு லட்சம் கோழிக்குஞ்சுகள்!
- பூவண்ணன்

- 3 days ago
- 3 min read

'அதிசயங்கள் தற்காலத்தில் நடைபெறுவதில்லை என்று பெர்னாட் ஷா சொன்னதாகப் படித்திருந் தான் பழனி என்னும் பழனியப்பன். ஆனால் அவன் கண்முன்னே நடந்த அதிசயத்தை அவன் பார்த்தானே! அவன் மட்டுமா? டவுன்ஹால் அருகே அன்றிருந்த நூற்றுக்கணக்கானோர் பார்த்தார்களே! அப்படிப்பட்ட அதிசயத்தை அதற்குமுன் யாரும் பார்த்ததில்லை என்றார்களே!
அப்படி என்ன அதிசயம் என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்.
பழனி டவுன்ஹால் அருகே சாலையைக் கடப்ப தற்காக நின்றிருந்தான். அதைக் கடந்து ராஜவீதியின் நடுவே உள்ள தேர்முட்டிக்குச் செல்லவேண்டும். அங்கேதான் அவன் வீடு.
போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் வேகமாக - வேகமாகக்கூட இல்லை - மெதுவாகக் கூட இயங்க முடியாமல் நின்றுவிட்டன.
பழனி வாகனங்களைப் பார்த்தான். அவனுக் கருகே ஒரு லாரியில் முட்டைகள் ! முட்டைகள் வைக்கும் அட்டைகளில் அடுக்கப்பட்ட தூய வெள்ளை முட்டைகள்! முட்டைகள் அடுக்கிய அட்டைகள் பதினைந்தோ, இருபதோ ஒன்றுக்குமேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருந்தன! அப்படிப்பட்ட அடுக்குகள் ஐம்பது அறுபதுக்கு மேலே! ஒரு அட்டைக்கு ஒரு நூறு முட்டைகள்! கண்ணாலேயே எண்ணிப் பார்த்தான்! மொத்தம் ஒரு லட்சத்துக்கு மேலே இருக்கலாம்! பழனி
வண்டிகள், நெரிசல் சீர் செய்யப்பட்டு ஒடத் தொடங்கும் நேரம்! திடீரென்று 'சிக் சிக் சிக் சிக் என்ற சத்தம்! பெருஞ் சத்தம்! முட்டை லாரியிலிருந்த எல்லா முட்டைகளும் ஒரே சமயம் கோழிக்குஞ்சு களாக- வெள்ளை வெளேர் குஞ்சுகளாக மாறிக் கத்தின! அட்டையிலிருந்து நழுவி லாரியிலும், லாரி யிலிருந்து நழுவிச் சாலையிலும் விழுந்து சிதறின! கைப்பிடியளவில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வெள்ளைக் கோலிக்குண்டுகளை நடுச்சாலையில் கொட்டியதைப் போன்ற கண்கொள்ளாத காட்சி!
நெரிசல் சரியானாலும் சாலையில் குட்டிக் குட்டி வெண்பஞ்சு மேகங்கள் போன்ற கோழிக்குஞ்சுகள் நிறைந்துவிட்டதால் எந்த வண்டியும் அசையவில்லை! முட்டை லாரிக்காரன் கேபினிலிருந்து எட்டிப் பார்த்தான்! அடுக்கிய அட்டைகளைத் தள்ளிக் கொண்டு குஞ்சுகள் கீழே விழுந்து. சாலையை நிறைத்துக் கொண்டிருந்தன. லாரி - கார் - ஸ்கூட்டர்-என்று எல்லா வாகனங்களின் முன்னும் பின்னும் அடியிலும் கோழிக்குஞ்சுகள்! கோழிக்குஞ்சுகள் வெள்ளமாய் ஓட அதன் நடுவே வாகனங்கள் மிதப்பது போன்ற தோற்றம்!
பார்த்தவர்கள் பிரமித்தார்கள்!
லட்சக்கணக்கான கோழிக்குஞ்சுகள் ஏதோ ஒரு கோரிக்கைக்காகச் சாலை மறியலில் ஈடுபட்டது போன்ற காட்சி! அவசரமாகப் போக வேண்டியதை மறந்து எல்லோரும் இந்தக் காட்சியைக் கண்டு ரசிக்க - வியக்க, போலீஸார் கோழிக்குஞ்சுகளை அப்புறப்படுத்த முயல்... அட்டா, உலக அதிசயங்கள் ஒன்று சேர்ந்தாலும் இப்படி ஒரு அதிசயத்தை உண்டாக்கியிருக்க முடியுமா!
பக்கத்திலிருந்த மாலை முரசு புகைப்படக்காரர் கேமராவோடு வந்துவிட்டார்! உள்ளூர் தொலைக் காட்சியினர் கூடிவிட்டனர்! நிருபர்கள் கூடி விட்டனர்!
அவர்களைப் போலவே, கோழிக்குஞ்சுகளை அகற்ற வந்தவர்களும் அதிசயக் காட்சியில் லயித்துப் போனார்களே தவிர, தமது வேலையில் முழுமையாக ஈடுபடவில்லை.
சுமார் மூன்று மணி நேரம் டவுன்ஹால் பகுதியில் கோழிக்குஞ்சுகளின் நீடித்தது! ஆக்ரமிப்பு நீடித்தது.
பழனி, அவ்வளவு நேரமும் அங்கே நின்று இந்த அதிசயத்தைக் கண்டு ரசித்தான்!
முட்டைகள் எப்படித் திடீரென்று குஞ்சு களாயின! சில முட்டைகள் இப்படி மாறலாம். லட்சக் கணக்கான முட்டைகள் ஒரே சமயத்தில் எப்படிக் குஞ்சுகளாயின! குஞ்சாக மாறாத ஒரே ஒரு முட்டை கூட இல்லையே! ஏன்?
பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் கேள்விகள் கேட்டன! ஆனால் யாருக்கும் சரியான-பொருத்தமான பதில் தெரியவில்லை!
உண்மையான பதில் பழனிக்குத் தெரியும்! ஆனால் அவன் யாருக்கும் சொல்லவில்லை.
"என்ன பதில்? எப்படி எல்லா முட்டைகளும் ஒரு நொடியில் குஞ்சுகளாயின! கொஞ்சம் சொல்லுங்கள்?" என்று கேட்கிறீர்களா?
சொல்கிறேன்! உங்களுக்கு மட்டும் சொல்கிறேன்!
மூன்று நாளுக்கு முன்னே பள்ளி மாணவர் களோடு பழனி ஊட்டிக்குப் பயணமானான். குன்னூர் நெருங்கும்போது பயணம் தடைப்பட்டது. இரண்டு நாளுக்கு முன்னே பெய்த பெருமழையில் மண் சரிவு இருந்தது; பழனி புறப்பட்ட அன்று அதிகாலை, பேரளவில் ஒரு நிலச்சரிவு! குடிசை களோடு கூடிய ஒரு பகுதி பெயர்ந்து சரிந்து மலைப் பாதையில் நிறைந்து விட்டது.
மாணவர்கள் ஊட்டிக்குச் செல்ல முடிய வில்லை! ஆனால் சரிவுக்கு முன்னாலே ஒரு சிற்றருவி! அங்கே பஸ்ஸை நிறுத்தவும், மாணவர்கள் ஓய்வு கொள்ளவும் போதுமான இடம் இருந்தது! அதனால் அங்கே தங்கி, மதிய உணவு உண்ட பிறகு புறப்பட்டனர்!
நீர் பழனி அங்கே தங்கிய போது, சிற்றருவியிலே முகம் கழுவச் சென்றான். அப்போது மலைச்சரிவி லிருந்து பெயர்ந்து அருவி விழும் இடத்தில் ஒரு மண்கட்டி விழுந்திருப்பதைப் பார்த்தான். விழவிழ, அதில் ஏதோ மின்னுவது போலத் தெரிந்தது. பழனி அதை எடுத்தான். எலுமிச்சைப் பழ அளவில் ஒரு கண்ணாடி உருண்டை! பெரிய கோலி என்றும் சொல்லலாம்! அதைத் தண்ணீரில் கழுவி, கால்சட்டைப் பையில் போட்டுக்கொண்டான்.
அன்று அவர்கள் சாப்பிட உட்கார்ந்தார்கள்; அதுவும் ஒரு பலா மரத்தடியிலே! மரத்தில் பழங்கள்! பழனி ஏறிட்டுப் பார்த்தபடி, "ஒரு நல்ல பழம் விழுந்தா, மாணவர்கள் மேலே விழாம கொஞ்சம் தள்ளி விழுந்தா எவ்வளவு நல்லது!" என்று நினைத்தான்.
இதுதான் பழனியின் பழக்கம். அடிக்கடி 'இப்படி இருந்தா, இப்படி நடந்தா எவ்வளவு நல்லாயிருக்கும் என்று நினைப்பது வழக்கம். நினைப்பான். ஆனால் நினைத்தபடி நடக்காது! இப்போது அவன் நினைத்ததும்,தொப்பென்று ஒரு பழம் மாணவர் அருகே விழுந்தது!
பழனி திகைத்து விட்டான்! அவன் நினைத்தது நடந்து விட்டதே! எப்படி? தற்செயலாய் நடந்ததா?
ஒருவேளை அருவியில் கண்டெடுத்து, தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்ட கண்ணாடி உருண்டை இப்படிச் செய்ததா?
பழனி எழுந்து நடந்தான். மாணவரை விட்டு விலகி நடந்தான். தன்னிடமிருந்த கண்ணாடி உருண்டையை எடுத்து ஒரு மரத்தடியில் வைத்தான். பிறகு தள்ளி நின்று "இங்கே இருக்கும் பலா மரத்தி லிருந்து ஒரு பழம் விழுந்தா சாப்பிடலாமே!" என்று நினைத்தான். பழம் விழவில்லை! மீண்டும் நினைத் தான். அப்போதும் பழம் விழவில்லை!
அவன் கீழே வைத்த கண்ணாடி உருண்டையை எடுத்துச் சட்டைப்பையில் வைத்துக் கொண்டான். பிறகு ஒரு பழம் விழுந்தா சாப்பிடலாமே' என்று நினைத்தான்.உடனே ஒரு பழம் விழுந்தது.
பழனிக்குக் கண்ணாடி உருண்டை ஏதோ மந்திரப் பொருள் என்பது புரிந்தது. அது நிலத்தடியிலிருந்து. நிலச்சரிவால் வெளிப்பட்டது போலும்.
பழனி இனி எது நினைத்தாலும் நடக்கும்! இதை உணர்ந்ததும், அவன் பயந்தான்.
குன்னூரிலிருந்து திரும்பிய பிறகு பழனி தன் இயல்புக்கு மாறாக எதையும் நினைக்கவில்லை.
இன்று முட்டை லாரியைப் பார்த்ததும், தன்னை யறியாமல் "எல்லா முட்டைகளும் குஞ்சாக வேண்டும்" என்று நினைத்து விட்டான்.
"இப்படி வேறு ஏதாவது தவறாக நினைத்து அது நடந்துவிட்டால் என்ன செய்வது?"
பழனி பயந்தான்.
உடனே கண்ணாடி உருண்டையைக் கையில் எடுத்துப் பார்த்தான்! இதை வீசியெறியலாமா? யாராவது அயோக்கியனிடம் கிடைத்தால் என்ன ஆகும்? அப்படி கிடைக்காமல் இருக்க என்ன செய்வது?
பழனி இன்னும் டவுன்ஹால் அருகே, கையில் அந்தக் கண்ணாடி உருண்டையோடு நின்று யோசித்துக் கொண்டிருந்தான்.
திடீரென்று யாரோ ஒருவன் அவன்மீது மோதிக் கொள்ள, அவன் கையிலிருந்த கண்ணாடி உருண்டை கீழே விழுந்து சாலையில் உருண்டது. அதேசமயம் அங்கே வந்து கொண்டிருந்த ரோடுரோலர் முன்னே சென்றது. ஒரு நொடிக்குள். 'கடகட' சத்தத்துடன் அந்த ரோடுரோலர் கண்ணாடி உருண்டையைப் பொடியாய் நசுக்கிவிட்டு நகர்ந்தது.
மாயக் கண்ணாடி தார்ச்சாலையில் பொடியாகி மின்னியது.
பழனி அதைப் பார்த்து மகிழ்ந்தான்.
நினைத்ததை நடக்கச் செய்யும் கண்ணாடி உருண்டை இனி யாருக்கும் பயன்படாதல்லவா! நிம்மதியோடு வீடு நோக்கி நடந்தான், பழனி. ஆனால், "லட்சக்கணக்கில் கோழிமுட்டைகள் திடீரென்று குஞ்சுகளானது எப்படி?' என்பதைப்பற்றி கோவை நகரம் இன்னும் விவாதம் செய்து கொண்டிருக்கிறது!
( காலப்பெட்டகம் )




Comments