பெர்லின் சுவர் (ஜெர்மனி)
- எழில் சின்னத்தம்பி

- 6 days ago
- 6 min read

நான் பத்தாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது (1989) பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது. செய்தித்தாள்களில் வண்ண வண்ணப் படங்கள் வெளிவந்தன. சுவரின் அருகே நிற்கும் காவலாளிக்குப் பெண் ஒருவர் பூச்செண்டு கொடுப்பது போல் ஒரு படமும் சுவரின் மீது ஏறி சிலர் இடித்துக் கொண்டிருந்த இன்னொரு படமும் இன்னும் என் நினைவில் நிற்கின்றன. அப்போதைக்கு இரண்டு ஜெர்மனிகளும் இணைகின்றன; இரு நாடுகளையும் பிரித்து வைத்த சுவர் உடைக்கப்பட்டது என்ற அளவிலேயே என் புரிந்துகொள்ளுதல் இருந்தது.
பெர்லின் சுவர் இருந்த இடங்களைப் பார்த்துவிடுவேன் என்று கனவில் கூட நான் எண்ணியதில்லை. 2003ஆம் ஆண்டின் இறுதியில் ஜெர்மனி வாசம் முடிந்து ஸ்வீடனுக்குக் குடியேற (குடியேற்ற உரிமை பெற) பெர்லினில் இருந்த ஸ்வீடன் தூதரகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. அந்த வேலை முடிந்ததும் மூன்று நாட்கள் பெர்லினையும் சுற்றிவரத் (நானும் எனது மனைவியும்) தீர்மானித்தோம்.பெர்லின் சுவர் இருந்த சுவடு தெரியாமல் முற்றிலும் மறைந்து விட்டாலும் சுவரின் மிச்சங்கள் இன்றும் ஓரிரு இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காகவும் நினைவுச் சின்னமாகவும் பாதுகாக்கப் பட்டுள்ளன. இது பற்றிய ஒரு அருங்காட்சியகமும் உண்டு.
இவற்றையெல்லாம் காணும் முன் வரலாற்றைச் சற்றே புரட்டிப் பார்த்துவிட்டு வரலாம், வாருங்கள்.
இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் அழிவுக்குப்பின் ஜெர்மனியில் புதிய மாறுதல்கள் ஏற்பட்டன. கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி என்று இரு புதிய நாடுகள் உதயமாயின. அன்றிலிருந்து பெர்லின் நகரம் பிரச்சனைக்குரிய பகுதியானது. அன்றைய பெர்லின் நகரம் நான்கு பகுதிகளாய்ப் பிரிக்கப்பட்டு அதன் நிர்வாகம் நேச நாடுகளான அமெரிக்கா, பிரிட்டிஷ், பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவிடம் பகிர்ந்தளிக்கப்பட்டது. ரஷ்யா வசம் இருந்த கிழக்கு பெர்லின் கிழக்கு ஜெர்மனியின் தலைநகராகவும் ஆனது. முதலில் இரு நாடுகளுக்குமிடையே எல்லை கடந்து செல்வது பிரச்சினையாக இல்லை. நாளடைவில் "மேற்கு பெர்லினில் இருக்கும் நேச நாடுகள் விலகிக் கொண்டு மேற்கு பெர்லினை சுதந்திரப்பகுதியாக்க வேண்டும்" என்ற கிழக்கு ஜெர்மனியின் வாதம் கேட்க ஆரம்பித்தது. அமெரிக்க , பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் அரசுகள் இதற்கு உடன்படவில்லை. மேற்கு பெர்லினின் சுதந்திரத்தைத் தாங்கள் பாதுகாத்துக் கொள்ள அங்கே தொடர்ந்து இருப்பதாகக் கூறிவிட்டார்கள்.

படம்: பெர்லின் நகர் - 1961 ஆம் வருடத்தில், நான்கு கட்டுப்பாட்டுப்பகுதிகளுடன். மஞ்சள் வண்ணப் பட்டை - பெர்லின் சுவர் கட்டப்பட்ட பகுதி.
இதனால் வெறுப்படைந்த கிழக்கு ஜெர்மனி அரசு, மேற்கு ஜெர்மனியிலிருந்து எல்லை கடந்து வருவதற்குப் பல கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்தது. இரு பகுதிகளையும் இணைக்கும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
அப்போதைய ரஷ்ய அதிபராயிருந்த குருஷேவ், மேற்கு பெர்லினில் இருந்து நேச நாட்டுப்படைகள், ஒரு குறித்த நாளுக்குள் வெளியேற வேண்டும் என்று கெடு விதித்தார். இதற்கு நேச நாடுகள் மறுத்துவிட்ட நிலையில் இரு பகுதிகளுக்குள்ள ராஜ்ஜிய உறவு மேலும் சீர்கெட்டது. அமெரிக்க அதிபர் கென்னடிக்கும் குருஷேவிற்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளும் பயனின்றிப் போய்விட்டன.
கிழக்கு ஜெர்மனி அரசு அதன் பின்னர் எல்லை கடந்து செல்வதற்குத் தடை விதித்தது. தடை விதிக்கப்பட்ட அத்தினத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கிழக்கு ஜெர்மனியிலிருந்து வெளியேறி மேற்கு ஜெர்மனியில் அடைக்கலமாயினராம். இதைத் தடுக்க இரு நாடுகளையும் பிரிக்கும் சுவர் ஒன்றைக் கட்ட அரசு திட்டமிட்டது. 1961-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 ஆம் நாள், இரவு இரண்டு மணிக்கு காவல்படை இரு பகுதிகளையும் பிரிக்கும் இடத்தில் அணிவகுத்தது. வேலிகள் இடப்பட்டன. இரு பகுதிகளுக்கும் பேருந்துப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அன்று காலையில் இதைக்கண்ட கிழக்கு பெர்லின் மக்கள் ஆத்திரமடைந்தனர்.
அரசை எதிர்த்துப் பல கிளர்ச்சிகள் நடைபெற்றன. காவலர்கள் அறியா வண்ணம் மேற்கு பெர்லினுக்குப் பலர் தப்பித்துச் சென்றனர்.வேலிக்கு அருகே அதனைத் தொடர்ந்து அகழிகள் தோண்டப்பட்டன. சுவர் நெடுநெடுவெனக் கட்டப்பட்டு வளர்ந்தது. எல்லை நெடுகிலும் கண்காணிப்புக் கோட்டைகள் கட்டப்பட்டன. அரசிடமிருந்து அனுமதி (விசா) பெறாமல் எல்லை கடப்பது சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டது.சுமார் நூற்றி ஐம்பத்தைந்து கிலோமீட்டர்கள் நீளமுள்ளது இச்சுவர். சுவரின் தடிமன் முப்பது சென்டிமீட்டர். பதிமூன்றே நாட்களில் இப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கிழக்கு பெர்லின் மேற்குப் பகுதியிலிருந்து முற்றிலுமாய்த் துண்டிக்கப்பட்டது.
இரண்டு பகுதிகளும் துண்டிக்கப்பட்டதால் மக்கள் மிகுந்த இன்னலுற்றனர். உறவினர்களையும் நண்பர்களையும் சந்திக்க இயலாது அவதியுற்றனர். பலர் கிழக்கு ஜெர்மனியிலிருந்து மேற்கு ஜெர்மனிக்குத் தப்பிச் செல்ல முயன்றனர். தப்பிச் செல்ல இயலா வண்ணம் காவல் பலமாயிருந்தது. இருப்பினும் இம்முயற்சியில் பலர் வெற்றி பெற்றனர். இவ்வாறு தப்ப முயற்சிப்பவர்களை எச்சரித்துத் திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்றே காவல் துறைக்கு ஆணையிடப்பட்டிருந்ததாம். ஆயினும் இறுதி நடவடிக்கையாக, தப்ப முயற்சிப்பவர்கள் எச்சரிக்கையை மீறினால் சுடலாம் என்று எல்லைப்படைக்கு அறிவுறுத்தப் பட்டிருந்தது. எச்சரிக்கையை மீறி எல்லை கடப்பவர்களைத் திரும்பச் சொல்லி வானை நோக்கி ஒருமுறை சுடுவார்களாம். அதனையும் மீறிச் சென்ற நூற்றுக் கணக்கான மக்கள் சுடப்பட்டு இறந்தனர். எவ்வளவு பேர் இறந்தனர் என்ற உண்மையான விவரம் அரசால் மறைக்கப்பட்டது.
படம்: ப்ரான்டன்பர்க் நுழைவாயிலும் அதைச் சுற்றியிருந்த பெர்லின் சுவரும் (1969-ல்)சுவர் கட்டிய முதலாம் ஆண்டு நிறைவில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளர்ச்சி நடைபெற்றது.

பின்னர் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டில் கிழக்கு ஜெர்மனிக்கு மேற்கு ஜெர்மனியிலிருந்து மக்கள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சட்டங்கள் சற்றே தளர்த்தப்பட்டு உறவினர் திருமணம், பிறப்பு, இறப்பு போன்ற நிகழ்வுகளின் போது அனுமதி தரப்பட்டது. 1968 ஆம் ஆண்டு முதல், மேற்கு ஜெர்மனியிலிருந்து கிழக்கே வருபவர்கள் பாஸ்போர்ட் மற்றும் விசா இருந்தால் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
பெர்லினின் மேற்குப்பகுதியிலிருந்து கிழக்கே நுழைய நுழைவுச் சாவடிகள் உண்டு. அமெரிக்கக் கட்டுப்பாட்டுப்பகுதிலிருந்து கிழக்கு பெர்லின் நுழைய அமைந்த ஒரு சாவடி ப்ரைடுரிஹ்ஸ்ட்ராசே (Friedrichstrasse) எனும் இடத்தில் அமைந்திருந்தது. செக்பாயிண்ட் சார்லி (Check point Charlie) எனப்பெயரிடப்பட்ட இச்சாவடியில் இருந்து கிழக்கு பெர்லின் நுழைவதற்கு ஏராளமானோர் தினந்தோறும் வரிசையில் நிற்பது பல வருடங்களுக்கு வழக்கமாயிருந்தது. "அமெரிக்கக் கட்டுப்பாட்டுப்பகுதியிலிருந்து நீங்கள் வெளியேறுகிறீர்கள்" என அறிவுறுத்தும் பலகை (ஆங்கில, ஜெர்மன்,ரஷ்ய மற்றும் பிரெஞ்சு மொழிகளில்) அங்கு வைக்கப்பட்டு இருந்தது.செக்பாயிண்ட் சார்லி தற்போது சுவர் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு பெர்லின் சுவரின் பல்வேறு நிகழ்வுகளை இன்னும் சுமந்து கொண்டிருக்கிறது. அது குறித்துப் பின்னர் காண்போம்.இருபது ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்த போராட்டம் நாளாக நாளாக வலுத்ததேயன்றிக் குறையவில்லை. கிழக்கு ஜெர்மனியிலும் அரசாங்கத்திற்குப் பல்வேறு நெருக்கடிகளும் குழப்பங்களும் ஏற்பட்டன. 1987-ல் அமெரிக்க ஜனாதிபதியாயிருந்த ரொனால்ட் ரீகன் ஜெர்மனிக்கு விஜயம் செய்தார். பெர்லின் நகரின் புகழ் பெற்ற பிரான்டன்பர்க் வாயில் முன் நிகழ்த்திய உரையில் சுவரைத் தரைமட்டமாக்குங்கள் என்று ரஷ்ய அதிபர் கார்பஷேவிடம் கேட்டுக்கொண்டார்.
ரஷ்ய அதிபரும் தனது திட்டமான பெர்ஸ்த்ரோய்கா - வை (Perestroika) அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின்படி சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டில் இருந்த பல நாடுகளுக்கு அரசியல், பொருளாதார மற்றும் சமூக வாழ்வில் மாற்றம் ஏற்படும்படி சுதந்திர உரிமை வழங்கப்படும் என்று அறிவித்தார். எண்பதுகளின் இறுதியில் ஐரோப்பாவில் ஏகாதிபத்யம் வீழ்வுற்று ஜனநாயகப்பாதையில் சில நாடுகள் அடியெடுத்து வைத்தன. கிழக்கு ஜெர்மனியிலும் போராட்டங்கள் தொடர்ந்தன. 1989-ல் ஹங்கேரி தனது எல்லைகளைக் கிழக்கு ஜெர்மனியிலிருந்து வரும் அகதிகளுக்குத் திறந்துவிட்டு அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது. இறுதியாக வேறு வழியின்றி 1989 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்பதாம் நாள், கிழக்கு ஜெர்மனியிலிருந்து மேற்கு ஜெர்மனி செல்ல இனி எந்தக் கட்டுப்பாடும் தேவையில்லை என்று அரசு அறிவித்தது. மறுநாள் முதல் சுவரின் கதவுகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் மக்களுக்கு அதுவரை காத்திருக்கப் பொறுமை இல்லை. அன்றிரவே ஆயிரக்கணக்கான மக்கள் சுவரின் இருமருங்கும் கூடினர். கிழக்கு ஜெர்மன் காவலாளிகளுக்கு வாசலைத் திறந்து விடுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. சந்தோஷ ஆர்ப்பரிப்பில் மக்கள் மேலும் திரண்டனர். சுவர்கள் மீது ஏறினர். சுவரை உடைத்தனர். சுவர் இருந்த சுவடு சில நாட்களில் மறைந்தது. இரு நாடுகளும் இணைந்தன. உலகம் வாழ்த்தியது.
நெய்டர்கிர்ஹ்னெர் ஸ்ட்ராசே (Niederkirchner Strasse) என்னும் தெருவில் பெர்லின் சுவரின் மிச்சங்கள் இருக்கும் விவரத்தை பெர்லின் சுற்றுலாத்தகவல் மையத்தில் கேட்டறிந்து அவ்விடத்திற்குப் புறப்பட்டோம். பெர்லின் சுவர் முற்றிலுமாக நகர மக்களின் பார்வையிலிருந்து மறைந்து விட்டாலும் ஒரு சில இடங்களில் இன்னும் நினைவுச் சின்னமாகப் பாதுகாப்பதைப் பாராட்டியே ஆகவேண்டும். நான் மேலே குறிப்பிட்ட தெருவை (எங்கே, அந்தப் பெயரை இன்னும் ஒருமுறை உச்சரியுங்கள் பார்ப்போம்) அடைந்து சுவரைத் தேடி நடந்தோம். சுவரைக் காணவில்லை. தவறுதலாய் வேறு இடத்திற்கு வந்து விட்டோமா என்று ஐயுற்று, தெருப்பெயரைச் சரிபார்த்ததால், அந்தத் தெருதான். அவ்வழி சென்ற ஒருவரைப் பார்த்து சுவர் எங்கே என்று விசாரித்தால் சற்றுத் தள்ளியிருந்த ஒரு குட்டிச் சுவரைக் காண்பித்தார். அருகில் சென்றபிறகுதான் அது குட்டிச் சுவரல்ல, வரலாற்றுச் சிறப்புமிக்க பெர்லின் சுவர் என்று தெரிந்தது. சுமார் இருநூறு மீட்டர் நீளம் மட்டும் தற்போது எஞ்சியுள்ளது.
எனது மேலாளராக மியூனிக்-கில் பணிபுரிந்தவர் எரிக் எனும் அமெரிக்கர். அவரது மனைவி ஜெர்மானியர். இருவரையும் நாங்கள் பெர்லினில் சந்தித்தோம் (அப்போது அவர் அங்குதான் பணிபுரிந்தார்). பெர்லின் சுவர் கண்டு வந்ததைப் பற்றி அவரிடம் சொன்னபோது 1989-ல் சுவர் இடிப்பதற்கு சில நாட்கள் முன் அவர்கள் இருவரும் பெர்லின் சுவரைக் காண வந்ததை நினைவு கூர்ந்தார். ஏராளமான காவலாளிகள் இருபுறமும் வரிசை கோர்த்திருக்க, பெர்லின் சுவர் நகரை இரண்டாகப் பிரித்திருந்த காட்சிகள் இன்னும் நினைவில் ஓடுவதாய்க் குறிப்பிட்டார்கள். அவர்கள் வந்து சென்ற சில நாட்களில் சுவர் தரைமட்டமாகியதில் மகிழ்ச்சியடைந்ததாய்க் கூறினார்கள்
முந்தைய மேற்குப்பகுதியிலிருந்து தற்போது சுவரைப் பார்த்தால் அதன் முக்கியத்துவம் ஒன்றும் புலப்படவில்லை. மிகவும் சாதாரணமான சற்றுப் பாழடைந்த சுவர் என்று மட்டுமே எண்ணம் வரும். ஆனால் கிழக்குப் பகுதியிலிருந்து பார்க்கையில் மற்றுமொரு நினைவிடமும் சுவரை ஒட்டிக் காணப்பட்டது. பயங்கரவாதப் புவியமைவு (Topography of Terror) எனப்பெயரிடப்பட்டிருக்கும் இந்தக் கண்காட்சியின் நோக்கம் ஹிட்லர் காலத்துத் தீவிரவாதத்தை இன்றைய தலைமுறைக்கு உணர்த்தி இத்தகு போக்கை விட்டு அமைதிக்கும் சமாதானத்திற்கும் செல்லும் பாதையினைக் காட்டுவதற்குத்தான்.1935-க்குப்பின் ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் புகைப்படங்களாக இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. அப்பாவி மக்களை ஹிட்லரின் படையினர் ஈவிரக்கமின்றிச் சுடும் காட்சிகள் மனதை உலுக்கும். ஹிட்லரின் முதன்மைக் காவல் அதிகாரி ஹிம்லெரின் அலுவலகம் மற்றும் ஹிட்லரின் சோஷலிச அரசின் முக்கிய அலுவலகங்கள் இந்த இடத்தில் அமைந்திருந்தனவாம்.
அரசியல் எதிரிகளையும் யூதர்களையும் கொன்றுகுவிக்கத் திட்டங்கள் தீட்டப்பட்டதும் இங்குதான். இக்கட்டடங்கள் அனைத்தும் இரண்டாம் உலகப்போருக்குப்பின் மண்ணோடு மண்ணாயின.
1970-க்குப்பின், மறைந்த இச்சின்னங்களைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு மக்களறியும் வண்ணம் அருங்காட்சியகங்களாகவும், கண்காட்சிப் புகைப்படக் கூடமாகவும் மாற்றப்பட்டன. இந்நிகழ்வுகளைப்பற்றிய ஆய்வுகள் இன்றும் தொடர்கின்றன.இது தவிர கிழக்குப்பக்க ஓவியக்காட்சி (East Side Gallery) ஒன்றும் உண்டு. கிழக்கு பெர்லினின் பகுதியிலிருந்த சுமார் 1.3 கிலோமீட்டர் நீளச் சுவரில் உலகின் பல்வேறு பகுதியிலிருந்து வந்த ஓவியர்களால் சுவர்ச் சித்திரங்கள் தீட்டப்பட்டன.வன்முறையையும் அடக்குமுறையையும் எதிர்த்துக்குரல் கொடுத்து அன்புக்கும் அமைதிக்கும் ஆதரவாக மௌனமொழி பேசுகின்றன இவ்வோவியங்கள்.
1990-ல் தீட்டப்பட்ட இவை பத்தாண்டுக்குப்பின் மீண்டும் புதுப்பிக்கப்பட்டன.செக் பாயிண்ட் சார்லி - கிழக்கு ஜெர்மனியிலிருந்து மேற்கு ஜெர்மனிக்குள் நுழைய அனுமதி பெறும் இடம். இங்கு சுவர் அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. சுவர் கட்டப்பட்ட பின்னும் அங்கிருந்து தப்பித்தவர்களைப்பற்றிய பல குறிப்புகளும் தப்ப உதவிய பொருட்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. சுமார் ஐயாயிரம் பேர் கிழக்கு ஜெர்மனி காவலாளிகளின் கண்களில் மண்தூவித் தப்பித்தனர். தப்பிய கதைகளையும் தப்புவதற்குதவிய பொருட்களையும் சேகரித்து அருங்காட்சியகமாக வைக்கும் வேலைகள் 1960-களின் இறுதியிலேயே ஆரம்பித்துவிட்டனவாம்.
செக் பாயிண்ட் சார்லி அருங்காட்சியகம். உள்ளே நுழைந்தவுடன் வண்ண வண்ண பாஸ்போர்ட்கள் வரவேற்றன. இவையனைத்தும் போலி பாஸ்போர்ட்டுகளாம். கிழக்கு ஜெர்மனியிலிருந்து தப்பித்து மேற்கு ஜெர்மனி வருவதற்கு போலியாகப் பல பாஸ்போர்ட்டுகள் தயாரித்து காவலாளிகளை ஏமாற்றினராம். அவர்கள் பயன்படுத்திய பாஸ்போர்ட்டுக்கள் அனைத்தையும் சேகரித்து வைத்துள்ளனர்.
அருங்காட்சியகம் முழுவதும் பெரிய பெரிய கருப்பு வெள்ளைப்புகைப்படங்களும் அவற்றுக்கருகே அப்புகைப்படங்கள் பற்றிய குறிப்புக்களும் நிறைந்துகிடக்கின்றன. ஜெர்மன், ஆங்கிலம், ரஷ்ய மற்றும் பிரஞ்சு மொழிகளில் குறிப்புக்கள் எழுதப்பட்டுள்ளன..ஒரு பழைய கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. இஸெட்டா (Isetta) என்னும் சிறிய ரகக்கார் அது. அந்த வண்டியின் பெட்ரோல் நிரப்பும் டேன்க்-கை ஒருவர் ஒளிந்துகொள்ளும் வகையில் மாற்றி அமைத்தார் அந்தக் காரின் சொந்தக்காரரான ப்ரீஸ்டோபர் என்பவர். இதை மாற்றி அமைக்க இரண்டு மாத காலமானதாம். தபால் எடுத்துச் செல்லும் வேலை செய்துகொண்டிருந்த இவர் இக்காரில் ஒன்பது பேரை கிழக்கு ஜெர்மனியிலிருந்து மீட்டு மேற்கே அழைத்து வந்தார். பத்தாவது முறை மாட்டிக்கொண்டாராம்.
1964 ஆம் வருடத்து மாடலான இந்தக்கார் இன்னும் பார்வைக்காக இங்கு வைக்கப்பட்டுள்ளது.லாரிகளை வேகமாக ஓட்டி வந்து சுவர்களை இடிக்கும் முயற்சியும் பலமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்முயற்சிகளைத் தடுக்கும் வண்ணம் சுவரின் அருகே அகழிகள் தோண்டப்பட்டு வேலி அமைத்துக் காவல் பலப்படுத்தப்பட்டது.
துணிகள் தைக்கும் தையல்காரர் ஒருவர் தினமும் மேற்கு ஜெர்மனியிலிருந்து கிழக்கே செல்வது வழக்கம். தையல் எந்திரத்தை ஒரு பெரிய மர டப்பாவினுள் எடுத்துச் செல்வாராம். கிழக்கு பெர்லினைச் சேர்ந்த ஒரு பெண் தப்பிக்க உதவும்படி கேட்டுக்கொள்ளவே அந்த மர டப்பாவினுள் தையல் எந்திரத்துக்குப்பதில் அப்பெண்ணை அடைத்துத் தனது சைக்கிளில் ஏறி ஓட்டிக்கொண்டே எல்லை கடந்தாராம். தினசரி அவர் செல்கையில் சோதனை செய்யும் காவலர்கள் சில நாட்களில் சோதிக்காமலே விட்டுவிடுவது வழக்கம். அன்றும் அதிர்ஷ்டம் அவருக்குக் கை கொடுத்தது. அப்பெண்ணும் தப்பித்தாள்.
சில நாட்கள் கழித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனராம்சுவரின் கீழ்வழியாக சுரங்கம் தோண்டித் தப்பித்த கதைகளும் உண்டு. கிழக்கு பெர்லினில் இருந்த சில மாணவர்கள் ஒரு வீட்டின் குளியலறையிலிருந்து சுரங்கம் தோண்ட ஆரம்பித்தனர். நூற்றி நாற்பத்தைந்து மீட்டர் நீளமான இச்சுரங்கம் மேற்கு பெர்லினில் ஒரு பேக்கரியில் முடிவடைந்தது. இச்சுரங்கம் வழியாக ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் தப்பித்தனர். ஆனால் இச்சுரங்கம் சில நாட்களிலேயே கிழக்கு பெர்லின் காவலாளிகளால் கண்டு பிடிக்கப்பட்டு மூடப்பட்டது. இதே போல் கிழக்கு பெர்லினில் மற்றொரு சுரங்கமும் தோண்டப்பட்டதாம். கல்லறையினருகே தொடங்கிய இச்சுரங்கத்தைப் பயன்படுத்தியும் பலர் தப்பித்தனர்.
பெரிய ராட்சத பலூன்களில் காற்று நிரப்பி அதில் மிதந்தபடி வனவீதியின் வழியே தப்பிய ஒரு சம்பவமும் உண்டு. மற்றுமொருவர் ஒரு சிறிய க்ளைடர் விமானத்தை உருவாக்கி அதில் பறந்து தப்பினாராம். ரஷ்ய நாட்டு ராணுவ வீரர்கள் போல் சீருடை அணிந்த சிலர் எல்லை கடந்து செல்கையில், அவர்கள் உண்மையிலேயே ரஷ்ய வீரர்கள் என எண்ணிய கிழக்கு பெர்லின் காவலாளிகள் விரைப்பான சல்யூட் அடித்தனரம். மரியாதையை ஏற்றுக்கொண்டே அவர்கள் மேற்கு பெர்லினில் தஞ்சமானார்களாம்.
சுவரை ஒட்டியிருந்த வீடுகளும் தப்பிக்க உதவியிருக்கின்றன. மேற்குப் பகுதியிலிருந்த ஒரு அடுக்குமாடிக் கட்டடத்தின் ஜன்னலில் கட்டப்பட்ட கயிறு ஒன்றைப்பிடித்து கிழக்குப்பகுதியிலிருந்து சுவர் ஏறித் தப்பித்த நிகழ்வுகளும் உண்டு.
சுமார் ஐயாயிரம் பேருக்கு மேல் தப்பித்த நிகழ்ச்சிகள் வரலாறு ஆகியுள்ளன. இது தவிர கிழக்கு ஜெர்மனி ராணுவத்தைச் சேர்ந்த எழுநூற்றுக்கும் மேற்பட்டவர்களும் தப்பித்து மேற்கு பெர்லினில் அடைக்கலமாயினர்.
பெர்லின் சுவர் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை விளக்கும் பல ஒளி-ஒலிக் காட்சிகள் சிறு சிறு அறைகளில் காட்டப்படுகின்றன. அஹிம்சை வழிப்போராட்டம்- காந்தி முதல் வலசா (போலந்து நாட்டு அமைதிப்புரட்சியாளர்) வரை என்ற ஒரு விவரணப்படமும் அவ்வப்போது ஏற்பாடு செய்யப்பட்டுக் காட்டப்படுகிறது. பெர்லின் சுவர் பற்றிய நினைவுப் பொருட்கள் வாங்கும் சிறு கடையில் உடைந்த சுவரின் துண்டுகள் தற்போது விலைக்குக் கிடைக்கின்றன.
ஏராளமான நினைவுகளைச் சுமந்து கொண்டு அருங்காட்சியகத்தை விட்டு வெளியேறினோம்.

இயற்பெயர்: எழில் மயில் வாகனன்.
தந்தை பெயருடன் இணைத்து, எழுதுவதற்காக வைத்துக்கொண்ட பெயர்: எழில் சின்னதம்பி. சொந்த ஊர்: தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியத்திலுள்ள சென்னம்பட்டி எனும் சிற்றூர். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியலில் இளநிலைப் பட்டம். அயல்நாடுகளில் அலுவலகப் பணி. ஜெர்மனி, சுவீடனில் பணிபுரிந்து தற்போது அமெரிக்காவின் சாண் டியாகோ நகரில் வசிப்பு - சிற்றிதழ்களில் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும், கவிதைகளும், கலைத்துறைக் கட்டுரைகள் பலவும் வெளிவந்துள்ளன. ‘சிறுகதை’ காலாண்டிதழிலும் 'தடாரி' மின்னிதழிலும் தொடர்ந்து மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் வெளியாகின்றன.
வெளியான நூல்கள் ‘கடைசி வருகை’
‘கடலோடியின் மனைவி’, ‘வரவிருக்கும் நூல் சிலந்தி





Comments