லூகா (LUCA)
- ஞா.கலையரசி
- Apr 5
- 2 min read
Updated: Apr 6

லூகா 2021 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க அனிமேஷன் திரைப்படம். இத்தாலியின் ஓர் அழகான கடலோரப் பகுதி கதையின் களம்.
இத்தாலியின் நாட்டுப்புறக் கதைகளில், டிராகன், பாம்பு போலப் பல உருவங்களில் கடல் ராட்சதர்கள் இடம் பெற்று உள்ளார்கள். இந்தப் படத்தின் முக்கிய கதாநாயகர்களும், அந்தக் கடல் இராட்சத இனத்தைச் சேர்ந்த சிறுவர்களே.
லூகா என்ற கடல் ராட்சத சிறுவன் கரைக்குப் போக ஆசைப்படுகிறான். ஆனால் மக்களால் அவன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் போகக் கூடாது என்கிறார் லூகாவின் அம்மா.
லூகா ஒரு நாள் தன் இனத்தைச் சேர்ந்த ஆல்பர்டோ என்ற சிறுவனைச் சந்திக்கிறான். அவன் கரையில் ஒரு கட்டடத்தில் தனியாக வசிக்கிறான். அவன் லூகாவையும் வரச் சொல்லிக் கூப்பிடுகிறான்.
எனவே ஒரு நாள் லூகா அம்மாவிடம் சொல்லாமல் கடலை விட்டு வெளியேறுகிறான். அவன் தண்ணீரை விட்டு வெளியே வந்தவுடன் அவன் வாலும் பச்சை நிறமும் மறைகிறது. மனிதனாக உருமாறி விடுகிறான்.
லூகாவும், ஆல்பர்டும் நண்பர்கள் ஆகிறார்கள். அவர்கள் ஒரு வெஸ்பா பைக் வாங்கி, உலகைச் சுற்றி வரக் கனவு காண்கின்றனர்.
அந்த ஊரில் ‘டிரையத்லான்’ (TRIATHLON) என்று சொல்லப்படும் போட்டி நடக்க இருக்கின்றது. முதலில் கடலில் நீந்த வேண்டும்; பிறகு பாஸ்தா சாப்பிட வேண்டும். அடுத்து பைக் ஓட்ட வேண்டும். இந்த மூன்றையும் தொடர்ச்சியாகச் செய்து முதலில் முடிப்பவரே வெற்றியாளர்! போட்டியில் வென்றால் பணம் கிடைக்கும்; அதைக் கொண்டு வெஸ்பா வாங்கலாம் எனச் சிறுவர்கள் நினைக்கின்றார்கள். ஜூலியா என்ற பெண்ணுடன் சேர்ந்து, போட்டியில் பங்கு பெற முடிவு செய்கிறார்கள்.
எர்கோல் விஸ்கோந்தி என்பவன், அந்தப் போட்டியில் 5 முறை வென்றவன். அவன் சிறுவர்களை அடிக்கடி மிரட்டித் துரத்துகிறான். ஜூலியா நண்பர்கள் இருவரையும் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று தங்க வைக்கிறாள்.
அந்தப் போட்டி துவங்குகிறது. முதல் இரண்டு போட்டிகளை வெற்றிகரமாக முடித்து விடுகிறார்கள். கடைசியாக லூகா பைக் ஓட்டுகிறான். ஆனால் எதிர்பாராத விதமாக மழை பெய்யத் துவங்குகிறது. மழைத் தண்ணீர் பட்டு லூகாவின் உடம்பு பச்சையாக மாற ஆரம்பிக்கிறது. லூகாவுக்கு உதவ, ஆல்பர்டோ ஒரு குடையை எடுத்துக் கொண்டு ஓடி வருகிறான்.
அவனை வில்லன் எர்கோல் தடுத்துக் கீழே தள்ளுகிறான். கீழேயிருந்த ஈரம் பட்டு, அவன் உருவமும் பச்சையாக மாறுகிறது. சிறுவர்கள் இருவரும் கடல் இராட்சதர்கள் என்று தெரிந்து எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றார்கள்.
இருவரும் கொட்டும் மழையில் பைக்கை வேகமாக ஓட்டிப் போகிறார்கள். ஒருவழியாக மிகவும் கஷ்டப்பட்டு, லூகா அணி எல்லைக்கோட்டைத் தொடுகின்றது. “அவர்கள் மனிதர்கள் இல்லை; அதனால் அவர்கள் வென்றது செல்லாது” என்று எர்கோல் வாதாடுகிறான். ஆனால் போட்டியின் நடுவர், லூகா அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கிறார்.
அந்த ஊர் மக்கள் கடல் இராட்சதர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று ஏற்றுக் கொள்கிறார்கள், நண்பர்கள் ஆசைப்பட்டபடி, பரிசுப் பணத்தில் ஒரு வெஸ்பா வாங்குகிறார்கள். ஜூலியா போல் தானும் பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று லூகா விரும்புகிறான். எனவே ஆல்பர்டோ வெஸ்பாவை விற்றுவிட்டு, லூகா பள்ளியில் சேர ரயில் டிக்கெட் வாங்கிக் கொடுக்கிறான். லூகா ரயிலில் ஜூலியாவுடன் கிளம்புகிறான். ஆல்பர்டோவைக் கட்டித் தழுவிப் பிரியாவிடை கொடுக்கிறான்.
சிறுவர்களுக்கு நட்பின் மகத்துவத்தை உணர்த்தும் படமிது. மேலும் விறுவிறுப்பும், சுவாரசியமும் நிறைந்து, அவர்கள் ரசிக்கும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது.
Comments