top of page

அறமதியின் கதை - 9


எல்லோரும் இந்நாட்டின் மன்னர்கள் – மக்களாட்சி


சிவப்புக் கம்பளம் விரித்த நடைபாதையில் மேள தாள வாத்தியங்கள் முழங்கின. ஆரவாரத்துடன் ஒரு மூதாட்டியை பல்லக்கில் தூக்கிக்கொண்டு இளைஞர்கள் போனார்கள். அந்தப் பாட்டியும் பொக்கை வாயைத் திறந்து சிரித்துக்கொண்டு இருந்தார்.


ஆப்பிள் மரத்தடியில் நின்று வேடிக்கைப் பார்த்த அன்பினி கேட்டாள், “அங்கே என்ன நடக்கிறது?”


“அந்தப் பாட்டி ஓட்டு போடப் போய்க்கொண்டிருக்கிறார்.” என்று அறமதி

சொன்னாள். அவள் அணிந்திருந்த பழுப்பு நிறத் தொப்பியில் பச்சை வெல்வெட் அலங்காரமும் வெள்ளைப் பூச்சரமும் இருந்தன. பின்னால் தங்கம் போல இமயமலை ஜொலித்தது.


“இது எந்த ஊர்?” என்று கேட்டாள் அன்பினி.

“இது கல்பா கிராமம், ஹிமாச்சலப் பிரதேசம்.” என்றாள் அறமதி.

“நாம் ஏன் இங்கே வந்திருக்கிறோம்?”

“அந்தப் பல்லக்கில் சென்ற பாட்டியைப் பார்க்கப் போகிறோம்.” என்றாள் அறமதி.


இருவரும் பேசிக்கொண்டே பாட்டி வீட்டை வந்தடைந்தனர்.


வீட்டு வாசலில் பாட்டி உட்கார்ந்திருந்தார்.


“வா .. அன்பினி.. வா, வா.. உனக்காகத்தான் காத்திருக்கிறேன்” என்று அன்போடு வரவேற்றார்.

‘கூடவே வந்த அறமதி எங்கே?’ என்று அன்பினி தேட, அறமதி பாட்டியின் மகளாக மாறி உள்ளே நின்று கண்சிமிட்டினாள்.


“ஓட்டு போட்டாச்சா பாட்டி..?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே சென்றாள்

அன்பினி.


“போட்டாச்சு..” என்று சொன்னார் பாட்டி.


“எதற்காக அவ்வளவு கொண்டாட்டம் நடந்தது?” என்று கேட்டாள் அன்பினி.


“அதுவா.. இரு இதோ வருகிறேன்..” என்று சொல்லி, தன் கைத்தடியை ஊன்றி

வீட்டுக்குள் சென்றார்.


திரும்பி வந்த பாட்டி ஒரு பெரிய ஆல்பத்தை அன்பினியிடம் நீட்டினார். அதில்

புகைப்படங்களும் செய்தித்தாள் கத்தரிப்புகளும் இருந்தன.


“இதோ, இந்தப் படத்தை பாரு.. நம்ம நாட்டில் நடந்த முதல் பொதுத்தேர்தல்.. முதலில் வாக்குப்பதிவு தொடங்கிய இடம் சின்னி. இப்போது கின்னார் என்று அழைக்கப்படும் பகுதி... இங்கேதான் நான் என்னுடைய முதல் வாக்கை பதிவு செய்தேன்..” என்று பாட்டி சொன்னார்.


“நீங்க தான் முதல் தேர்தலில் முதலில் ஓட்டு போட்டவரா?” என்று கண்கள் விரிய கேட்டாள் அன்பினி.


“அப்படி வாக்களித்தவர்களில் நானும் ஒருத்தி.. அன்று முதல் இன்று வரை எல்லாத் தேர்தல்களிலும் நான் வாக்களித்திருக்கிறேன். இந்த ஊரின் மூத்த வாக்காளர் நான் தான். அதனால் தான் இந்தக் கொண்டாட்டம்.” என்றார்.


அப்போது வீட்டுக்குள்ளிருந்து அறமதி கோப்பைகளில் தேனீருடன் வந்தாள்.

“வா மகளே.. வா.. அன்பினிக்கு நம் பாரம்பரிய தேநீர் கொடு..” என்று பாட்டி

சொன்னார்.


தேநீர் கோப்பையைப் பற்றிக்கொள்வதே குளிருக்கு அத்தனை இதமாக இருந்தது. பாலின் இனிப்புடன் உப்பு சேர்த்திருந்த அந்த தேநீர் தொண்டையில் இதமாகஇறங்கியது.


பாட்டி நினைவுகளில் மூழ்கி பேசத் தொடங்கினார்.


“நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு, ஒரு நாள்.. என் கணவர், ‘எல்லோருக்கும் ஓட்டு உரிமை தரப் போகிறார்கள்’ என்று செய்தித்தாளில் படித்துச் சொன்னார்.


எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்போதெல்லாம் பெண்களை வீட்டை விட்டு

வெளியே அனுப்பமாட்டார்கள். வீட்டு முடிவுகளைக்கூட ஆண்கள் தான்

எடுப்பார்கள்.. அப்படியிருக்க நாட்டை ஆள்பவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை பெண்களுக்கும் கொடுத்தது எனக்கு வியப்பாக இருந்தது.”


“இந்தப் போட்டோவில் இருப்பது நீங்கள் தானே?” என்று எதையோ

கண்டுபிடித்துவிட்ட உற்சாகத்தில் கேட்டாள் அன்பினி.


“ஆமா. சரியா கண்டுபிடிச்சுட்டியே! அப்போ எனக்கு 21 வயது. இரண்டாவது குழந்தை வயிற்றில் நிறைமாதம். வெகுதூரம் நடந்து வந்த களைப்பும் இருந்தது. ஆனால் வாக்களிக்கப் போகிறேன் என்ற எண்ணம் எல்லா சோர்வையும் போக்கிவிட்டது.


எழுதப் படிக்கத் தெரியாவிட்டாலும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன்.” என்றார் பாட்டி.


“அப்போது 83% பேருக்கு மேல் எழுதப் படிக்கத் தெரியாது. ஏராளமான

ஏற்றத்தாழ்வுகளும், புவியியல் சவால்களும் இருந்தன. இருந்தாலும் வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவதில் தலைவர்கள் உறுதியாக இருந்தார்கள்.”என்று சொன்னாள் அறமதி.


“ஆமாம். எங்கள் பண்ணையில் வேலை செய்த பெண்ணும், எங்கள் ஊரைச் சுத்தம் செய்தவரும் என்னோடு அதே வரிசையில் நின்றார்கள். அப்படியொரு நாளை யாரும் கனவிலும் நினைத்திருக்கவில்லை.” என்றார் பாட்டி.


“1951 அக்டோபர் 25 முதல் 1952 பிப்ரவரி 21 வரை முதல் தேர்தல் நடந்ததா?

இவ்வளவு நாளா?” என்று ஒரு செய்தியைப் பார்த்து கேட்டாள் அன்பினி.

“நாடு முழுவதும் 17 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வாக்களிக்க வேண்டியிருந்தது.


இவ்வளவு பெரிய தேர்தலை நடத்துவது எவ்வளவு சவாலாக இருந்திருக்கும்!” என்றாள் அறமதி.


“அடேயப்பா.. பிறகு என்ன செய்தார்கள்?” என்று கேட்டாள் அன்பினி.

“சுகுமார் சென். சுதந்திர இந்தியாவின் முதல் தலைமைத் தேர்தல் ஆணையர். பல தடைகளைத் தாண்டி அவர்தான் முதல் தேர்தலை நடத்தினார். எழுத்தறிவு

இல்லாதவர்களும் வாக்களிக்கும்படி வேட்பாளர்களுக்குத் தனித்தனி சின்னங்கள் வழங்கப்பட்டன.” என்றாள் அறமதி.


“அட ஆமா. இந்தப் படத்தில் ஒவ்வொரு சின்னத்திற்கும் ஒரு வாக்காளர் பெட்டி வைத்திருக்கிறார்களே!” என்று சொன்னாள் அன்பினி. “அந்தப் பெட்டிகளை வாக்குச்சாவடிகளுக்குக் கொண்டுபோன விதத்தைப் பாரு!”

என்று பாட்டி ஆல்பத்தின் பக்கங்களைப் புரட்டினார்.


“யானை.. குதிரை.. போனி.. ஒட்டகம்.. கழுதை.. அட.. இங்கே மனிதர்கள் கூட தூக்கிச் செல்கிறார்களே..” அன்பினி ஒவ்வொரு படமாகப் பார்த்துச் சொன்னாள்.


“நாட்டின் பரந்த நிலப்பரப்பு பெரிய சவாலாக இருந்தது. இப்போதும் சில தொலைதூர இடங்களுக்கு விலங்குகள், பரிசல்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் வாக்குச்சாவடியை அடைய வேண்டியிருக்கிறது. யாரும் விடுபடக் கூடாதுதானே!” என்றார் பாட்டி.


“யாரும் விடுபட்டு விடக் கூடாது என்பதே முக்கியம். அப்போது இந்தியா–பாகிஸ்தான் பிரிவினை நடந்து சில ஆண்டுகளே ஆகியிருந்தன. மக்களிடம் ஆவணங்கள்கூட சரிவர இல்லை. ஆனாலும் சுதந்திர இந்தியாவில் எல்லா குடிமக்களும் நாட்டின் ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக, வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. அதுதான் இந்தியாவை உலகிலேயே மிகப் பெரிய மக்களாட்சி நாடாக மாற்றியது.” என்று அறமதி விளக்கினாள்.


“எங்க அண்ணா அக்கா எல்லாம் இந்தத் தேர்தலில் ஓட்டு போட மொபைல்ல தேடித் தேடிப் பார்த்துக் கத்துக்கிட்டாங்க. என்ன எடுத்துக்கிட்டுப் போகணும், எப்படி வாக்கைப் பதிவு செய்யணும் எல்லாமே!.. அன்னைக்கு நீங்க எப்படி தெரிஞ்சுக்கிட்டீங்க?” அன்பினி கேட்டாள்.


“அன்றைக்கு டிவி இன்டர்நெட் எல்லாம் கிடையாது. ரேடியோதான் முக்கியமான தகவல் தொடர்பு சாதனம், எங்கள் வீட்டில் இருந்த ரேடியோவில் வந்த செய்திகளை கவனமாகக் கேட்பேன். அதன் மூலம் தேர்தலுக்கான வழிகாட்டுதல் தந்தார்கள். கைவிரலில் அழியாத மை வைப்பார்கள் என்று கேட்டபோது நான் பயந்தது இப்போதும் நினைவிருக்கிறது.” என்று சொல்லி பாட்டி வெட்கப்பட்டு சிரித்தார்.


“ஒருமுறைக்கு மேல் வாக்களிக்காமல் இருக்கத்தானே அப்படி செய்தார்கள்?

இன்னமும் அழியாத மை வைக்கிறார்கள்.. என் அக்கா, அண்ணா எல்லாம் முதல் முறை ஓட்டு போட்டுவிட்டு விரலில் மையோடு செல்ஃபி எடுத்து பேஸ்புக்கில் போட்டார்கள்.” என்று அன்பினி சொன்னாள்.


“தலைமுறைகள் கடந்தும் வாக்களிப்பதில் இருக்கும் முனைப்பு குறையவில்லை..


பார்த்தாயா..” என்றாள் அறமதி


“அன்று வாக்களித்துவிட்டு என் அண்ணன் சொன்னார், ‘நாம் தேர்ந்தெடுக்கிறவர்கள் நமக்காக வேலை செய்யப் போகிறவர்கள். அவர்கள் சரியா வேலை செய்யவில்லை என்றால், அவர்களைக் கேள்வி கேட்கும் உரிமை நமக்கு இருக்கு.’


அதற்கு அப்பா கூட விளையாட்டாகச் சொன்னார், ‘இவனைப் பார்.. இந்த நாட்டின் மன்னன் போல பேசுகிறான்!’


அதற்கு அண்ணன், ‘ஆமா அப்பா, நம்ம எல்லோரும் தான் இந்நாட்டின் மன்னர்கள்’ என்றான்.


நாங்கள் எல்லோரும் சிரித்தோம்.. ஆனால் அந்த வார்த்தை மட்டும் எனக்கு மனதில் நின்றுவிட்டது. என் வயதைக் கணக்குப் போட்டுப் பார்த்தேன்.

இன்னும் ஐந்து ஆண்டுகளில்… நானும் ஓட்டு போடப் போகிறேன்!” என்று

பெருமிதத்தோடு சொன்னாள் அன்பினி.


எழுத்தாளர், கதைசொல்லி.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறம் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட முகிழ் சிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தற்போது துபாயில் வசிக்கிறார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page