top of page

துளிரும்... துளிர் இல்லமும்...

அறிவியலறிஞர் த.வி.வெங்கடேஸ்வரனுடன்  நேர்காணல்

சந்திப்பு : சாலைசெல்வம்



1987-ம் ஆண்டு நவம்பரில், சி.வி.ராமன் பிறந்த நாளில், 'துளிர்' என்ற சிறார் இதழ் துவங்கப்பட்டது. தமிழகத்தில் அன்று நிலவிய சிறார் இலக்கியப் போக்குக்கு மாறாக, குழந்தைகளை 'அடக்க வேண்டியவர்கள்' என்று பார்க்காமல், 'தானே விரியும் மலர்மொட்டுகள்' எனப் பார்க்கத் தூண்டியது துளிர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வளர்ச்சியின் ஒரு கட்டமாக உருவான இந்த இதழ், இன்று சுமார் 30,000 பிரதிகள் விற்பனையாகும் ஒரு முக்கிய சிறார் இதழாக வளர்ந்துள்ளது.


அதே பார்வையின் நீட்சியாகவே, 'துளிர் இல்லம்' எனும் முறைசாரா சிறார் அமைப்பு (Informal Children's Organisation) உருவானது. இந்த இல்லங்கள் பத்து, பதினைந்து குழந்தைகள் சேர்ந்து, தங்கள் பகுதியிலோ அல்லது பள்ளியிலோ இயங்கும் ஒரு தன்னார்வ அமைப்பாகும். இந்த இரண்டின் உருவாக்கத்திலும், அமைப்பிலும், செயல்பாட்டிலும் த. வி. வெங்கடேஸ்வரன் அவர்களுக்குப் பங்கு உண்டு. அவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.


கேள்வி 1:

துளிர் இதழ் துவங்கப்பட்ட சூழல் என்ன? 1980களின் இறுதியில் தமிழகத்தில் சிறார் இலக்கியத்துக்கான தேவை எப்படி இருந்தது?


பதில்:

நான் சொல்வதற்கு முன்னர், அந்தக் காலத்தில் குழந்தைகளை எவ்வாறு பார்த்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுது 'குழந்தைகள் அளவில் சிறிய பெரியவர்கள்' என்றும், 'பண்பின்றிப் பிறக்கிறவர்கள்' என்றும், 'அவர்களை அடி உதையால்தான் பக்குவப்படுத்த வேண்டும்' என்றும் ஒரு கருத்து நிலவியது. ஆனால் நாங்கள் அதை ஏற்கவில்லை. குழந்தைகள் பிறக்கும்போதே அறிய ஆர்வம் கொண்டவர்கள், தம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்ள முயல்பவர்கள், இயல்பாகவே பகிர்ந்துகொள்பவர்கள் - இதுவே எங்கள் பார்வை. இப்படிப்பட்ட குழந்தைமை பார்வைதான் துளிரின் அடித்தளம்.


1987-க்கு முன்னர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சென்னையில் மட்டும் செயல்பட்டு வந்த இயக்கமாக இருந்தது. 1986-ல் மாநிலம் தழுவிய அறிவியல் கலைப் பயணத்தை நடத்தியது. அதன் பின்னர் தமிழ்நாடு முழுவதும் கிளைகளை விரிவாக்கியது. 1987-ல் அகில இந்திய அறிவியல் கலைப் பயணமும் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாகவே நாங்கள் துளிரைத் துவக்கினோம். எங்கள் எதிர்பார்ப்பைவிடச் சிறந்த வரவேற்பு கிடைத்தது. 30,000 பிரதிகள் விற்பனையாகின்றன என்றால், அதன் பின்னணியில் ஒரு தேவை இருந்தது என்பதை இது காட்டுகிறது.


கேள்வி 2:

'துளிர் இல்லம்' எதற்காக உருவாக்கப்பட்டது? அதன் செயல்பாடுகள் என்ன?


பதில்:

துளிர் இதழ் மட்டும் போதாது என்று நாங்கள் கருதினோம். படிப்பதோடு நின்றுவிடாமல், விவாதிப்பதும், செய்து பார்ப்பதுமே உண்மையான கற்றல் என்று நாங்கள் நம்பினோம். அதனால்தான் 'துளிர் இல்லம்' உருவாக்கப்பட்டது. இது ஒரு முறைசாரா சிறார் அமைப்பு. அதாவது, அதிகாரபூர்வமான கட்டமைப்பு இல்லாமல், 10-15 குழந்தைகள் ஒரு பகுதியில் சேர்ந்து இயங்குவது.


முதல் படியாக, அவர்கள் துளிர் இதழைக் கூட்டாகப் படிக்க வேண்டும். பல குழந்தைகளுக்குத் தனியாக வாசிக்கும் திறன் குறைவு. கூட்டாகப் படிக்கும்போது, அது மெல்ல மெல்ல வளர்ச்சியடையும். அதன்பின் படித்ததை வைத்து விவாதம் நடைபெறும். அப்பொழுதுதான் ஒரு கட்டுரையின் கருத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். அடுத்ததாக, 'செய்துபார்' பகுதியில் உள்ள பரிசோதனைகளைச் செய்து பார்ப்பது. தனியாகச் செய்யும்போது, தோல்வி ஏற்பட்டால் சோர்வு ஏற்படலாம். ஆனால் கூட்டாகச் செய்யும்பொழுது, ஒருவரின் தடுமாற்றத்தை இன்னொருவர் சரிசெய்வார். இவ்வாறு வாசிப்பு, விவாதம், செய்முறை, தேடல் - இந்த நான்கு பழக்கங்களையும் வளர்ப்பதற்கே துளிர் இல்லம் முயற்சிக்கிறது. எல்லாக் கட்டங்களிலும் வெற்றி பெற்றுவிட்டோம் என்று கூற முடியாது, ஆனால் முயற்சி தொடர்கிறது.


கேள்வி 3:

துளிரின் உள்ளடக்கக் கொள்கை என்ன? சிறார் இதழ் என்பதால் நன்னெறி போதிப்பதை முக்கியமாகக் கொண்டீர்களா?


பதில்:

இல்லவே இல்லை. அதனையே தொடக்கம் முதலே நாங்கள் முற்றாகத் தவிர்த்தோம். ஏனெனில், மனிதர்கள் எல்லோருமே நல்லவர்கள்தான். பிறருக்கு உதவ வேண்டும் என்று நினைப்பவர்கள்தான். ஆனால் நமது சமூகமும், வாழ்க்கைச் சூழலுமே நமக்குச் சுயநலத்தைக் கற்றுக்கொடுக்கின்றன என்று நாங்கள் கருதுகிறோம். அதனால், பெரியவர்களான நாங்கள்தான் அறம் படைத்தவர்கள், குழந்தைகளை நாங்கள்தான் பண்படுத்த வேண்டும் என்ற சிந்தனை முறையை நாங்கள் ஏற்கவில்லை. மாறாக, சுய சிந்தனை வளர்ப்பு மூலமே உண்மையான மனிதநேயம் சாத்தியமாகும் என்பது எங்கள் நம்பிக்கை.


அதுபோலவே, மனப்பாடக் கல்வியை நாங்கள் கடுமையாக விமர்சித்தோம். எனவே புரிதலுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம். மேலும், மதத்தை ஓதுவது போலவோ, ஜபிப்பது போலவோ அறிவியலைக் கற்பிப்பதும் கற்றுக்கொள்வதும் அறிவியல் பார்வையை உருவாக்க உதவாது. இதற்கு என்ன ஆதாரம், அந்த ஆதாரத்தின் அடிப்படையில் என்ன முடிவுக்கு வர முடியும் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும். அதனால்தான் 'செய்துபார்' பகுதிக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்தோம். அன்று இத்தகைய பரிசோதனைகள் பள்ளிப் பாடத்திட்டத்தில் இருந்ததே இல்லை. Joy of Learning போன்ற இயக்கங்கள் மூலமே இந்தப் பார்வை வளர்ச்சியடைந்தது. இதன் விளைவே இப்பொழுது அவை பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.


கேள்வி 4:

அறிவியல் பார்வைக்கும் சமூக நீதிக்கும் உள்ள தொடர்பைத் துளிர் எவ்வாறு கையாள்கிறது?


பதில்:

இதுவே மிக முக்கியமான கேள்வி. பரிணாம வளர்ச்சி நமக்குச் சொல்வது என்ன? நாம் எல்லோருமே ஆப்பிரிக்காவிலிருந்து வந்த ஒரே மனித இனத்தின் வழித்தோன்றல்களாவோம். இன்னும் பின்னோக்கிச் சென்றால், எல்லா உயிரினங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. அவ்வாறிருக்கும்பொழுது, சாதி போன்ற பாகுபாடுகள் எல்லாம் பொய்யானவை, நமது கற்பிதமே ஆகும். இதனையே அறிவியல் காட்டுகிறது.


ஆனால் பலருக்கும், குறிப்பாகப் பிற்போக்குப் பார்வை உள்ளவர்களுக்கு, இந்த உண்மைகளை ஏற்பதில் தயக்கம் உள்ளது. சிங்காரவேலர் போன்றவர்கள் தொடங்கி வைத்த பார்வையின் நீட்சியாகவே நாங்கள் இதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று கருதினோம். அதனால்தான் தமிழ்செல்வனின் 'நாம் எல்லாம் குரங்குச் சாதி' போன்ற கட்டுரைகளை வெளியிட்டோம். இந்தக் கட்டுரைகள் பின்னர் 'இருட்டு எனக்குப் பிடிக்கும்' என்ற தலைப்பில் சிறு நூலாக வெளிவந்தன.


உதாரணத்திற்கு, தீபாவளி சிறப்பிதழில் பட்டாசு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பது பற்றி எழுதும்பொழுது, டாக்டர் சுந்தரராமன் அவர்கள் ஒரு கேள்வியை எழுப்பினார்: "பட்டாசில் என்ன வேதிப்பொருட்கள் உள்ளன என்பதை மட்டும் எழுதினால் போதுமா? அதனைத் தயாரிக்கும் தொழிலாளர் சிறுமிகளைப் பற்றி ஏன் பேசக்கூடாது?" அதனால்தான் நாங்கள் பட்டாசுத் தொழிற்சாலையில் சுரண்டப்படும் ஒரு சிறுமியின் பார்வையில் அந்தக் கட்டுரையை எழுதினோம். அவ்வாறே உப்புப் பற்றிய கட்டுரை எழுதும்பொழுது, உப்புச் சத்தியாகிரகத்தையும் இணைத்தோம். அறிவியல் பார்வைக்கும் சமூக நீதிக்கும் உள்ள இந்தத் தொடர்பையே துளிர் முழுமையாக முன்னிறுத்த முயல்கிறது. இன்னும் நிறையச் செய்ய வேண்டும்.


கேள்வி 5:

துளிர் இல்லத்தை முதுகெலும்பாகக் கொண்டு இயங்கிய சமூகப் பிரிவு எது?


பதில்:

முதற்கட்டத்தில், நகர்ப்புறங்களில் பல்வேறு சிறு தொழில்களில் ஈடுபட்டிருந்த குறைந்த வருமானம் கொண்ட நடுத்தரக் குடும்பங்களே துளிரின் முதுகெலும்பாக இருந்தன. அவர்களே 'துளிர் இல்ல'ச் செயல்பாடுகளை அதிகமாக ஏற்று நடத்தினர். அவர்களுடைய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, ஒன்றாகச் சேர்ந்து படிப்பதற்கும், புதிய புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்வதற்கும் ஒரு ஆர்வம் இருந்தது. துளிர் இல்லம் அந்தத் தேவையை நிறைவு செய்தது.


கேள்வி 6:

1990களில் கல்வியறிவு மற்றும் நகரமயமாக்கல் காரணமாகப் புதிய 'கீழ்-நடுத்தர வர்க்கம்' உருவானது. துளிரின் வளர்ச்சியிலும் நிலைத்தன்மையிலும் அது என்ன பங்கு வகித்தது?


பதில்:

மிக முக்கியமான கேள்வி இது. காலப்போக்கில் தமிழகத்தில் கல்வி விரிவாக்கம் பெற்றது. தமிழ்நாட்டில் எழுத்தறிவு நிலை 1951-ல் மெட்ராஸ் மாநிலத்தில் 20.9% ஆக இருந்தது, 1991-க்குள் அது 62.7% ஆக உயர்ந்தது. இது நாற்பது ஆண்டுகளில் 40 சதவீதப் புள்ளிகளுக்கும் மேலான வளர்ச்சி ஆகும்.


ஒவ்வொரு பத்தாண்டு கணக்கெடுப்பிலும், ஆண்களின் எழுத்தறிவு பெண்களைவிட அதிகமாகவே இருந்தது. உதாரணமாக, தமிழ்நாட்டில் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 1961-ல் 51.6% ஆகவும், 1991-ல் 73.7% ஆகவும் உயர்ந்தது. பெண்களின் எழுத்தறிவு விகிதம் 1961-ல் 21.1% ஆகவும், 1991-ல் 51.3% ஆகவும் அதிகரித்தது.


இரு பாலரும் முன்னேற்றம் அடைந்தாலும், பெண்களின் எழுத்தறிவில் முழுமையான முன்னேற்றம் அதிகமாக இருந்தது. இதனால் பாலின இடைவெளி காலப்போக்கில் குறைந்தது. சாதி அடிப்படையிலான வேறுபாடுகள் ஆரம்பத்தில் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தன. ஆனால் காலப்போக்கில் அவை குறைந்துவிட்டன.


மேலும் சிறு குடும்ப முறை உருவாகியிருந்தது. இருவர் அல்லது மூன்று குழந்தைகள் கொண்ட குடும்பம் பெருகியது. இந்தச் சூழலில் 'குழந்தைமை' குறித்த பார்வையும் தமிழகத்தில் மாற்றம் அடைந்தது.


1990களின் முற்பகுதியில் அறிவொளி இயக்கம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இளம்பெண்கள் எழுத்தறிவு பெற்றதும், அவர்களுக்குத் தங்கள் குழந்தைகளின் கல்வியில் ஒரு புதிய அக்கறை ஏற்பட்டது. அதே நேரத்தில் நகரங்கள் விரிவடைந்தன. சிறு சிறு ஊர்களிலிருந்து மக்கள் வேலை தேடி நகரங்களுக்கு வந்தனர். அவர்கள் பெரும்பாலும் கூலி வேலை, சிறு வியாபாரம், ஓட்டுநர், கட்டடத் தொழிலாளி போன்ற வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். இவர்களே 'கீழ்-நடுத்தர வர்க்கம்' என அழைக்கப்படுபவர்கள்.


இதன் பொருள் 1980களின் இறுதியில் புதிய சமூகப் பிரிவுகள் கல்வி பெற்ற பிரிவுகளாக மாறின; இவர்களுக்குப் படிப்பின் மதிப்பு நன்கு தெரியும். ஆனால் அவர்களால் தங்கள் குழந்தைகளை விலை உயர்ந்த பள்ளிகளில் சேர்க்க முடியாது. அவ்வாறிருக்க, தங்கள் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்கள், அறிவியல் புரிதல், ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் - இவை அனைத்தையும் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். இந்த ஆர்வமே துளிருக்கும் துளிர் இல்லத்திற்கும் ஒரு பெரும் ஆதரவாக மாறியது. இவர்களின் குழந்தைகள்தான் துளிர் இதழை ஆர்வமாக வாங்கிப் படித்தனர்; துளிர் இல்லங்களில் பங்கேற்றனர். நேர்மையாகச் சொல்வதானால், இந்தக் கீழ்-நடுத்தர வர்க்கப் பிரிவு இல்லையென்றால், துளிர் இவ்வளவு காலம் நிலைத்து நின்றிருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இவர்களே துளிரின் உயிர்நாடி ஆவர்.


கேள்வி 7:

குழந்தைமை (childhood) குறித்த பார்வை காலப்போக்கில் எவ்வாறு மாறியது? இந்த மாற்றத்தில் துளிரின் பங்கு என்ன? 


பதில்:

அரவிந்தர் போன்றோர் குழந்தைகளை 'மலர்மொட்டுகள்' என்று அழைத்தனர். அவை தாமாகவே விரியும்; ஒவ்வொரு மலரும் தனித்த நிறமும், தனித்த மனமும் கொண்டிருப்பது போல, ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மையுடன் மலரும் என்ற கருத்தை அவர்கள் முன்வைத்தனர். எனினும் அறுபது, எழுபதுகளில் குழந்தைகளைப் பற்றிய பார்வை மிகவும் மாறுபட்டதாக இருந்தது. ஒரு கட்டத்தில், "குழந்தைகளை அடக்கி ஒடுக்கி வளர்க்க வேண்டும்; அப்பொழுதுதான் அவர்கள் ஒழுங்காக இருப்பார்கள்" என்ற ஒரு நம்பிக்கை நிலவியது. ஆனால் 1990களுக்குள், குறிப்பாகச் சிறுகுடும்ப முறை பரவலான பின்னர், இந்தப் பார்வை மெதுவாக மாறத் தொடங்கியது. இத்தகைய பார்வைகள் மக்களிடையே பேசப்படவும், ஏற்கப்படவும் தொடங்கின.


இந்த மாற்றத்திற்காக நாங்கள் நிறைய உழைத்துள்ளோம். துளிர் அதன் ஒவ்வொரு இதழிலும், ஒவ்வொரு கட்டுரையிலும், குழந்தைகளை மதிக்க வேண்டும், அவர்களின் கேள்விகளை ஊக்குவிக்க வேண்டும், அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்க வேண்டும் - இந்தச் செய்திகளையே முன்னிறுத்தியது. துளிர் இல்லச் செயல்பாடுகள், குழந்தைகளை மையமாகக் கொண்டு இயங்கின. இத்தகைய சூழலில், 'குழந்தைகளை அறைந்து வளர்க்க வேண்டும்' என்ற பார்வை மெல்ல மெல்ல ஓரங்கட்டப்பட்டது. இதில் துளிருக்கு ஒரு முக்கியமான பங்கு உள்ளது என்று நான் கருதுகிறேன்.


கேள்வி 8:

இன்று துளிரும் துளிர் இல்லமும் என்னென்ன முக்கியமான பங்குகளைச் செய்திருக்கின்றன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?


பதில்:

மொத்தத்தில், நான்கு முக்கியமான விஷயங்களுக்கு நாங்கள் உதவியிருக்கிறோம் என்று நினைக்கிறேன்.


முதலாவது, குழந்தைமை பற்றிய பார்வையையே மாற்றியிருக்கிறோம். குழந்தைகளை 'திருத்த வேண்டியவர்கள்' என்று பார்த்த அந்தக் கால மனநிலையிலிருந்து, அவர்களையும் மதித்து, அவர்களின் கேள்விகளை ஊக்குவிக்கும் ஒரு பார்வைக்கு மாற்றம் ஏற்பட இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கும்.


இரண்டாவது, 'செய்து பார்த்துக் கற்பது' என்னும் கல்வி முறை இப்பொழுது பள்ளிப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. நாங்கள் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்திய 'செய்துபார்' பகுதி இப்பொழுது கல்விப் பாடமாக மாறியுள்ளது. அதற்கு ஓரளவிற்கு அறிவியல் இயக்கமும், அதன் ஒரு பகுதியான துளிரும் காரணம் என்று நினைக்கிறேன்.


மூன்றாவது, அறிவியல் என்பது வெறும் தகவல் சேகரிப்பு அல்ல, அது ஒரு உலகப்பார்வை - சமூக மாற்றத்திற்கான ஒரு கருவி - இந்தக் கருத்தினை முன்னிறுத்தியதில் நாங்கள் முக்கியமான பங்கு வகித்துள்ளோம்.


நான்காவது, தமிழில் எதுவும் முடியும், சிறார்களுக்கான அறிவியலைத் தமிழில் எழுதலாம் - இதற்கு ஓர் உதாரணமாகத் துளிர் இருந்துள்ளது.


இன்னும் நிறையச் செய்ய வேண்டும், ஆனால் துளிர் வேர்விட்டிருக்கிறது, இனியும் வளரும். இந்தப் பயணத்தில் பங்கு பெற்றிருப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது.

கேள்வி 9: துளிரில் வரும் கட்டுரைகள் மேலும் சிறார் இலக்கிய நயத்தோடும் மொழியோடும் வர வேண்டும் எனப் பலரும் விருப்பம் தெரிவிக்கிறார்களே? இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?


பதில்: அறிவியல் இயக்கத்துக்காக நான் பேசுவது முறையாக இருக்காது என்றாலும், என் கருத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். ஆம், இது உண்மைதான். எங்களுக்கும் அதே ஆவல் உண்டு. ஆயினும் மூன்று செய்திகளை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.


முதலாவது, இன்று தமிழகத்தில் சிறார் இலக்கியத் துறையில் மிளிரும் பலரும் துளிரில் எழுதி வளர்ந்தவர்கள்தாம். எல்லோருமல்லை; ஆனால் கணிசமான நபர்கள் துளிரில் எழுதத் தொடங்கி வளர்ந்தவர்கள்.


இரண்டாவது, துளிர் ஒரு இயக்கம், வெறும் பத்திரிகை அல்ல. இதழ் என்றால் வாசகர்களின் தேவையைப் பூர்த்தி செய்வது. வணிக இதழ் என்றால் இலாபம் பார்ப்பது அல்லது குறைந்த பட்சம் நஷ்டம் இல்லாமல் பார்த்துக்கொள்வதுதான் முதல் இலக்காக இருக்கும். ஆனால் அறிவியல் பார்வையும் சமூக நீதி மனநிலையும் உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோள் கொண்டு இயங்கும் இயக்கம் என்பதால், துளிருக்குச் சிறார் வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்பது மட்டுமல்ல, அமைப்பு ரீதியாக இப்போன்ற விருப்பம் உள்ளவர்களைத் திரட்ட வேண்டும் என்கிற பொறுப்பும் இருக்கிறது. பிறக்கும்போதே யாருக்கும் தெளிவான செய்தித் தொடர்புத் திறன்கள் இருக்கப் போவதில்லை; இவற்றைக் கற்கும் இடமாகத் துளிர் செயல்படுகிறது.


சிலர், துளிர் இதழைத் தொழில்முறை சார்ந்த இதழியலாளர்கள் கொண்டு நடத்த வேண்டும் - துளிரை அமைப்பாக மாற்ற வேண்டும் என்றும் கூறுவதுண்டு. எனக்கு உடன்பாடு இல்லை. துளிரின் ஒரு முக்கியப் பணி, சிறார் உலகத்தைக் குறித்து கவலை கொண்டவர்களைத் திரட்டி அமைப்பாக இயங்கச் செய்வதும் ஆகும்.


ஆயினும், நிச்சயமாக முன்னேற்றம் காண மேலும் சிறப்பாக வடிவமைக்கவும் எழுதவும் நாங்கள் அனைவரும் முயல வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.


சாலை செல்வம் 
சாலை செல்வம் 

பெண்ணியலாளர், கல்வியியலாளர்,

30 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி உரிமை, மாற்றுக்கல்வி குறித்து பல நூல்களை எழுதியிருக்கிறார்.

புனைவு, மொழிபெயர்ப்பு, கட்டுரை, குறித்து ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page