top of page

எளிமையான மொழிநடையில் எழுதுவது இலக்கியத்தைக் கொன்றுவிடுமா?

- சிறார், சுற்றுச்சூழல் எழுத்தாளர் ஆதி வள்ளியப்பன்



1. நீங்கள் குழந்தையாக இருந்த போது உங்களுக்கு வாசிப்பு எப்படி அறிமுகமானது?


என் தாய்மொழி தமிழாக இருந்தபோதும், ஐந்தாம் வகுப்புவரை வெவ்வேறு பள்ளிகளில் படித்ததால் தமிழை சரியாக வாசிக்கவோ, எழுதவோ தெரியாமல் இருந்தேன். அப்போது தமிழை எளிதாகப் பழகிக்கொள்ள சிறார் இதழ்கள் படித்தால் உதவியாக இருக்கும் என எனது அத்தை பரிந்துரை செய்தார். 80களின் பிற்பாதியில் அம்புலிமாமா, பாலமித்ரா, ரத்னபாலா, பூந்தளிர், கோகுலம் உள்ளிட்ட இதழ்கள் வெளியாகிவந்தன. 


இவற்றில் பூந்தளிரே எனக்குப் பிடித்திருந்தது. காரணம், அதில் இருந்த படக்கதைகள். மும்பையில் இருந்து வெளியாகும் அனந்த் பை ஆசிரியராக இருந்த டிங்கிள் இதழில் வெளியான படக்கதைகளை தமிழாக்கி பூந்தளிர் வெளியிட்டது. பூந்தளிரின் ஆசிரியர் வாண்டுமாமா. அறிவியல், வரலாறு, பொது அறிவு எனப் பல்வேறு விஷயங்கள் சார்ந்தும் எளிய மொழிநடையில் சுவாரசியமாக எழுதுவதற்காகப் பெயர் பெற்றவர். என் வாசிப்பு ஆர்வத்தை பூந்தளிர் வளர்த்தது.


ஐந்தாம் வகுப்புவரை தமிழை வாசிக்கத் தடுமாறிக்கொண்டிருந்த நான், 8ஆம் வகுப்பு வருவதற்குள்ளாகவே தினமணி, குமுதம் போன்றவற்றை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். எட்டாம் வகுப்புக் கோடை விடுமுறையில் திருச்சி மத்திய நூலகத்தில் தினசரி நூல்களை எடுத்துவந்து படித்தேன். இதற்குக் காரணம் தமிழை வாசிப்பதில் பூந்தளிர் ஏற்படுத்தியிருந்த நம்பிக்கையும் சிறார் நூல்களில் இருந்த சுவாரசியமும். பிழையில்லாமல் தமிழில் வாசிக்கவும் எழுதவும் சொல்லித் தந்தது பூந்தளிரும் வாண்டுமாமாவும்தான். பிற்காலத்தில் இதழியல் துறையில் நான் கால் பதித்தபோது, இந்த அடித்தளம் எனக்குப் பெரிதும் உதவியது.


2. சுற்றுச்சூழல் பற்றிய ஆர்வம் எப்படி வந்தது?


சுற்றுச்சூழல் சார்ந்த ஆர்வம் பிற்காலத்தில்தான் எனக்கு ஏற்பட்டது. காட்டுயிர் ஆவணப்பட ஒளிப்பதிவுக்காக அமெரிக்காவின் எம்மி விருது பெற்ற சென்னையைச் சேர்ந்த அல்போன்ஸ் ராயை ஒரு முறை பேட்டி எடுத்தேன். தமிழ்நாட்டின் இயற்கை, காட்டுயிர் சார்ந்து பணிபுரியும் பலரையும் எனக்கு அவர் அறிமுகப்படுத்தி, அவர்களைப் பற்றியும் எழுதத் தூண்டினார். கல்லூரி இளங்கலைப் படிப்பு முடித்த 90களின் கடைசியில், திண்டுக்கல்லில் இருந்து வெளியாகிக் கொண்டிருந்த இதழான 'சுற்றுச்சூழல் புதிய கல்வி' இதழில் எழுதத் தொடங்கியிருந்தேன். சுற்றுச்சூழல் துறை சார்ந்து எனக்கு அறிமுகப்படுத்திய வேளாண் வல்லுநர் பாமயனும் பின்னர் எழுத்தாளர் அசுரனும் அதற்குப் பொறுப்பாசிரியர்களாக இருந்தார்கள். தமிழ்நாடு அறிவியல் இயக்க இதழான துளிரிலும் 2001 முதல் சுற்றுச்சூழல் குறித்து எழுதத் தொடங்கியிருந்தேன். கல்விப்புலம் வழியாக சுற்றுச்சூழலை கற்றிருக்கவில்லை என்கிறபோதும், நூல்கள், துறைசார் நிபுணர்கள் வழியாக சுற்றுச்சூழல் துறையைப் பற்றித் தொடர்ந்து கற்றுவருகிறேன்.


3. சுற்றுச்சூழல் குறித்துக் குழந்தைகளுக்கு ஏன் சொல்ல வேண்டும்? 


நாம் வாழும் புவி மட்டுமே சூரியக் குடும்பத்தில் மட்டுமல்லாமல், இந்தப் பால்வெளி மண்டலத்திலேயே உயிரைக் கொண்டுள்ளது. இதற்குக் காரணம் தாவரங்கள், உயிரினங்கள் புவியை வளப்படுத்துவதுதான். நாகரிக வளர்ச்சியின் ஒருபகுதியாகப் படிப்படியாக அறிவியல் அறிவை வளர்த்துக்கொண்ட மனித இனம், தொழிற்புரட்சிக்குப் பிறகு புவியை கட்டுமீறிச் சுரண்டிவருகிறது. தொழிற்சாலைகள், பெருநிறுவனங்களே இதைச் செய்தாலும், இந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை நுகர்வோராக நாம் அனைவரும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். இந்தச் செயல்பாடுகளால் தாவரங்கள், உயிரினங்கள் நேரடியாக அழிகின்றன. மற்றொருபுறம் காலநிலை நெருக்கடி, புவி வெப்பமடைதல், கட்டுப்பாடற்ற பிளாஸ்டிக் பயன்பாடு, ஊரெங்கும் குப்பை, நீர்த் தட்டுப்பாடு எனப் பல்வேறு பிரச்சினைகளுக்குள் நாம் சிக்கித் தவிக்கிறோம். எந்த அறிவியல் அறிவால் நமக்குத் தேவையான வசதிகளை உருவாக்கிக்கொண்டோமோ, அதே அறிவைப் பயன்படுத்தி நம்மை மட்டுமல்லாமல் இந்தப் புவி, இங்கு வாழும் உயிர் அம்சங்களான தாவரங்கள், உயிரினங்கள், தண்ணீர், நிலம், காற்று ஆகியவற்றை மீட்டெடுக்க வேண்டும். இந்த அறிவியலை குழந்தைகளுக்குக் கற்றுத்தரவும் உணர்த்தவும் வேண்டும்.


4. நம்மைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் பற்றி நீங்கள் நிறைய எழுதுகிறீர்கள். இதன் முக்கியத்துவம் என்ன?  


சுற்றுச்சூழல் குறித்த தேசிய அளவிலான, பன்னாட்டு அளவிலான துறைசார் நிபுணர்கள் பலர் தமிழர்கள். ஆனால், அவர்களில் பெரும்பாலோர் தங்கள் தாய்மொழியில் எழுதுவது, பேசுவது போன்றவற்றை பரவலாக முன்னெடுக்கவில்லை. இதனால், என்னைப் போன்று ஆர்வம் கொண்டவர்கள் வெளியில் இருந்து இந்தப் பணியை இயன்ற அளவில் முன்னெடுக்கிறோம். சுற்றுச்சூழலையும் குழந்தைகளையும் பாதுகாத்தால்தான் இந்தப் புவிக்கு எதிர்காலம் என்கிற ஒன்று இருக்கும். இந்தப் பின்னணியில் நேரடியாகவும் மொழிபெயர்ப்பாகவும் சுற்றுச்சூழல் சார்ந்து எழுதிவருகிறேன். மிக முக்கியமாக, சுற்றுச்சூழல் என்பது ஓர் அறிவியல் துறை. வழக்கமான அறிவியல் துறைகளைவிட இதற்குக் கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டும்.


5. தமிழ் சிறார் இலக்கியத்தில் சூழலியல் சார்ந்த படைப்புகளை எப்படி பார்க்கிறீர்கள்?

என்ன மாதிரி படைப்புகள், குழந்தைகளுக்கு  தவறான புரிதலை தரக்கூடியவை.


இந்தக் கேள்வியை சுற்றுச்சூழல், அறிவியல் படைப்புகள் என்று எடுத்துக்கொள்கிறேன். அறிவியல் சார்ந்து தமிழில் ஓரளவுக்குத்தான் எழுதப்படுகிறது. பெருமளவு அறிவியல் எழுத்து மொழிபெயர்ப்பாக இருக்கிறது. துறைசார்ந்த சொற்கள், அறிவியல் தமிழ் முறையாக வளர்த்தெடுக்கப்படாததால், குழந்தைகளுக்குத் தமிழில் அறிவியலைச் சொல்வதில் சிக்கல் நிலவுகிறது. குழந்தைகளின் நிலைக்கு ஏற்ப அறிவியல் தமிழ் மொழிநடை உருவாக்கப்படவில்லை. மற்றொன்று துறைக்கு வெளியில் இருந்து வரும் பலரும் அறிவியலை சரியாக உள்வாங்கிப் புரிந்துகொள்ளாமல் அறிவியல் நூல்கள், கட்டுரைகளை எழுதுகிறார்கள். இந்த நூல்கள் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்கும் வகையில் இல்லை. கற்பனைத்திறன் என்கிற பெயரில் அறிவியலுக்கு எதிரான தன்மையையே பல நூல்கள் கொண்டுள்ளன. இந்த இடத்தில் கடந்த தலைமுறையில் அறிவியல் சார்ந்து எழுதிய பெ.நா.அப்புசாமி, 'கல்வி' கோபாலகிருஷ்ணன், ரேவதி எஸ். ஹரிஹரன், வாண்டுமாமா போன்றோரின் மொழிநடை, எழுதிய முறையை இந்தத் தலைமுறை அவசியம் வாசிக்க வேண்டும்.


சுற்றுச்சூழல் சார்ந்து எழுதும் ஆர்வம் சிறார் எழுத்தாளர்களிடையே தற்போது அதிகரித்துவருகிறது. அதேநேரம், சுற்றுச்சூழல் உண்மைகளை, பின்னணியைக் கற்காமலேயே நூல்களை எழுதுகிறார்கள். எந்த ஒரு துறை சார்ந்து எழுதுவதற்கு முன்பும், அந்தத் துறையின் அடிப்படைகளை ஆழமாக உள்வாங்கவும் கற்கவும் வேண்டும். மாறாக, நுனிப்புல் மேயும் ஆர்வத்துடன் நூல்கள் எழுதப்படுகின்றன. இதுபோன்ற நூல்களால் நூலாசிரியரின் எழுத்துப் பட்டியல் நீளுமே தவிர, வாசகருக்குப் பெரிய பயன் இல்லை. இந்த அம்சங்களைச் சுட்டிக்காட்டினால் பல எழுத்தாளர்கள் ஏற்பதற்குத் தயாராக இல்லை.


கடந்த தலைமுறையில் சுற்றுச்சூழல் சார்ந்து எழுதப்பட்ட சிறார் நூல்களிலுமே இந்தப் பிரச்சினை உள்ளது. காட்டை நேரில் கண்டிராத, அறிவியல்பூர்வமாக காட்டை உள்வாங்கிக்கொள்ளாத பல சுற்றுச்சூழல் படைப்புகள் கடந்த தலைமுறையிலும் வெளியாகி உள்ளன; சிறந்த படைப்புகள் எனச் சிலாகிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இனிமேலும் இது தொடரக் கூடாது. 


6. குழந்தைகள் புனைவு, அபுனைவு ஆகியவற்றில் எதை விரும்பி வாசிக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? இதில் மாற்றம் தேவையா?


எல்லாருக்கும் கதை பிடிக்கும். அது அதிகம் வெளியாவது இயல்புதான். அதேநேரம், கதை என்கிற பெயரில் மேம்போக்கான படைப்புகள் அதிகரித்துவருகின்றன. சிறாருக்கான இந்திய ஆங்கில இலக்கியத்திலோ, உலக ஆங்கில இலக்கியத்திலோ அபுனைவு நூல்கள் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளன. சிறார் எழுத்தாளர்களிடையே புனைவு-அபுனைவு என்கிற வேறுபாடு அங்கு பெரிதாகப் பார்க்கப்படுவதில்லை. 80களில் வெளியான கோகுலம், பூந்தளிர் இதழ்களில் கதைகளுக்கு இணையாக அபுனைவில் கவனம் செலுத்தப்பட்டது. குழந்தைகளுக்குக் கதைதான் பிடிக்கும். அதேநேரம் அபுனைவு நூல்களையும் படைப்பூக்கத்துடன் கதைபோல எழுத முயலலாம்.


7. இன்றைய தமிழ் சிறார் இலக்கியச் சூழலில் குழந்தைகளின் வாசிப்பு அனுபவம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறதா? எழுத்தாளர்கள் இதை கணக்கில் எடுத்துக்கொண்டு, அடுத்தடுத்த  படைப்புகளை உருவாக்குகிறார்களா?


குழந்தைகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் நேரடித் தொடர்பில்லை. குழந்தைகளின் வாசிப்பு அனுபவம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றே நான் நினைக்கிறேன். நான் உள்பட பல எழுத்தாளர்கள் இந்த இடைவெளியுடன்தான் எழுதிக்கொண்டிருக்கிறோம். இதழியலில் பின்பற்றப்படும் சில தரப்படுத்தல் அடிப்படையில் ஓரளவுக்கு மொழிநடை, வாசிப்பு நிலை போன்றவற்றை முடிவுசெய்யலாம். அதேநேரம் இன்றைக்குப் பெரும்பாலான குழந்தைகளில் தாய்மொழியில் வாசிக்கவே தடுமாறுகிறார்கள். அவர்களை நாம் கணக்கில் கொள்வதில்லை. வாசிக்கத் தடுமாறும் தலைமுறையை வளர்த்தெடுப்பதற்கு மாறாக, எளிமையான மொழிநடையில் எழுதுவது இலக்கியத்தைக் கொன்றுவிடும் என்று பேசிக்கொண்டிருக்கிறோம். இலக்கியம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல பரவலான வாசிப்பும் மிக முக்கியம். அதற்கு மொழிநடை எளிமையாக இருக்க வேண்டும். வாசிக்கவே தெரியாத தலைமுறையை வைத்துக்கொண்டு, யாருக்காக நாம் இலக்கியம் படைக்கப் போகிறோம்? இது பெரும்பணி என்பதில் சந்தேகமில்லை. அதேநேரம் அது சார்ந்து சிறார் எழுத்தாளர்கள் இன்னும் தீவிரமாக கவனம் செலுத்தத் தொடங்கவில்லை.


(சந்திப்பு : சுகன்யா ராமநாதன்)


சுகன்யா ராமநாதன்
சுகன்யா ராமநாதன்

எழுத்தாளர், கதைசொல்லி.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறம் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட முகிழ் சிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தற்போது துபாயில் வசிக்கிறார்.


1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Muthu Raja
3 days ago
Rated 4 out of 5 stars.

பயனுடையதாக இருக்கிறது.

Like
bottom of page