top of page

ஓரிகாமி கலைஞர் - அ . அமலராஜன்


1.   ஓரிகாமி கலை மீது உங்களுக்கு ஈர்ப்பு ஏற்பட என்ன காரணமாக இருந்தது?


இக்கலையின் மீது ஆர்வம் ஏற்படுவதற்கு காரணமானவர் ஆசிரியரும் சிறந்த கலைஞருமான  எனது தந்தையே. என் சிறுவயதிலேயே, அவர் காகிதத்தில் செய்யும் பலவிதமானஉருவங்களைப்பார்த்து வியந்ததுண்டு. அவரைப் போலவே நானும் மாற வேண்டும் என்று எண்ணியதும் உண்டு.

ஆசிரியப் பட்டயப் படிப்பின் போதும், அறிவொளி இயக்கத்தில் பணியாற்றிய போதும், களத்தில் சந்திக்கும் குழந்தைகளை உற்சாகப்படுத்துவதற்கான ஒரு கருவியாக இக்கலையை நான் தேர்வு செய்தேன்.

 

ஓரிகாமி காகிதக்கலையின் மூலம் வெட்டாமல்,ஒட்டாமல் பல்வேறு முறைகளில் மடிப்பதன் மூலம் அழகான வடிவங்களை உருவாக்குவதே இதன் சிறப்பம்சமாகும். ஒரு காகிதம் பறவையாகவும்,  விலங்காகவும்,  பூவாகவும், படகாகவும் பல்வேறு அலங்கார பொருள்களாகவும் குறிப்பாக வகுப்பறையில் கற்றல் - கற்பித்தல் உபகரணங்களாகவும் மாறுவதைப் பார்க்கும் போது எனக்குள் இன்னும் ஈர்ப்பு அதிகமானது.


தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் இணைந்தவுடன் கிடைத்த ஓரிகாமி பயிற்சி எனக்குமேலும் உற்சாகமளித்தது. நிறைய புத்தகங்களைப் பழைய புத்தகக் கடைகளில் வாங்கி கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.

 

ஓரிகாமி  எனக்கு பொழுதுபோக்கு கலையாக மட்டுமல்லாமல், நான் சந்திக்கும் குழந்தைகளின் படைப்பாற்றலை வளர்க்கக்கூடிய கல்விசார் கருவியாகவும், ஆசிரியர்களுக்கு புதிய கற்றல் - கற்பித்தல் வாய்ப்புகளை வழங்கக்கூடிய ஒரு கலையாகவும் விளங்குவதால், இக்கலையின் மீது எனக்கு மிகப்பெரிய ஈர்ப்பு ஏற்பட்டது.


1992 இல் துவங்கியகலைப் பயணம் இன்று வரை தொடர்கிறது.

 

2. நீங்கள் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பதால், பள்ளிக் கல்வியில் ஓரிகாமி போன்ற கலைகளைப் பயன்படுத்தும்போது குழந்தைகளிடம் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்று கருதுகிறீர்கள்?


பாடப்புத்தக கல்வியுடன் ஓரிகாமி மற்றும் பொம்மலாட்டக் கலை போன்ற செயல்முறை சார்ந்த கலைக் கல்விக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறேன்.

 ஏனென்றால் எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியாக கற்றுக் கொள்வதில்லை. சிலர் செய்து பார்த்து, உணர்ந்து அனுபவத்தின் மூலம் கற்கின்றனர். இந்த வேறுபாடுகளை கருத்தில் கொண்டு கற்பித்தல் முறைகளை மாற்றி அமைப்பது அவசியம் என கருதுகிறேன்.

பள்ளிக்கல்வியில் ஓரிகாமி கலையைப் பயன்படுத்தும் போது, குழந்தைகளிடம் படைப்பாற்றல் வளர்ச்சி, கணித திறன் வளர்ச்சி ,அறிவியல் புரிதல் திறன், நுண்ணிய இயக்கத்திறன்,சமூக திறன், சுயமாக சிந்திக்கும் திறன், பொறுமை, கவனிக்கும் திறன், நினைவாற்றல் போன்ற திறன்கள் மேம்படுவதை காணமுடிகிறது.


வகுப்பறையில் கவனம் செலுத்தாத மாணவர்களைக்கூட, இக்கலை கவனத்துடன் செயல்பட வைக்கிறது என்பது பல நண்பர்களின் அனுபவம். மேலும், குழுவாகக் கற்பதன் மூலம் ஒத்துழைப்பு மனப்பான்மையும் தன்னம்பிக்கையும் வளர்கின்றன.


தற்போது பள்ளிப் பாடங்களில் ஆங்காங்கே இடம்பெறும் காகிதம் மடிப்புகலைப் பயிற்சிகள் இன்னும் கூடுதலாக அளிக்கப்பட வேண்டும் என்பதே எனது ஆசை.


இவ்வாறு செயல்படுத்தும் போது கல்வி என்பது மனப்பாடம் செய்வது மட்டுமல்லாமல் அனுபவித்து அறிதல், சிந்தித்தல், உருவாக்குதல், பகிர்ந்து கொள்ளுதல் என்பதை குழந்தைகள் உணர்வதற்கு வாய்ப்பாக அமையும்.

 

3. இன்றைய காலத்தில் பெரும்பாலான குழந்தைகள் திரைகளில் (Screens) மூழ்கிக் கிடக்கிறார்கள். அதற்கு இத்தகைய கலைகள் ஒரு நல்ல மாற்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?


ஆம். நிச்சயமாக இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் தொலைக் காட்சி, கணினி, கைபேசி மற்றும் மின்னணு சாதனங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் முக்கியமான இடத்தை பெற்றுள்ளன. கல்வி கற்பதற்கும் தகவல்களை பெறுவதற்கும் தொழில்நுட்பம் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.


அதே நேரத்தில், இத்தகைய செயல்பாடுகளில் அதிக நேரத்தை செலவிடும் போது குழந்தைகளின் நேரடியான விளையாட்டு, உடல் இயக்கம், கைவினை செயல்பாடுகள் குறைவதோடு குடும்பத்தாரோடு உரையாடும் வாய்ப்பும் குறைகிறது.


இத்தகைய சூழலில் ஓரிகாமி போன்ற கலைகள் குழந்தைகளுக்கு ஒரு பயனுள்ள மாற்று செயல்பாடாக அமைகிறது. காகிதத்தை கைகளால் மடித்து பறவையாக மாற்றும்போது, குழந்தை ஒவ்வொரு மடிப்பையும் நன்கு கவனிக்கிறது. அடுத்த மடிப்பு என்னவாக இருக்கும் என்று சிந்திக்கிறது. இறுதியில் ஒர்உருவத்தை உருவாக்கும் போது மகிழ்ச்சியோடு, சாதனை உணர்வையும் குழந்தை பெறுகிறது.

இக்கலையை தனியாக செய்வதோடு நிறுத்தி விடாமல் நண்பர்களுடன் சேர்ந்து படைப்புகளை உருவாக்கும் போது, குழந்தைகள் பல்வேறு திறன்களை வளர்த்துக்கொள்ளமுடியும். குழந்தைகளை தாங்கள் உருவாக்கிய உருவங்களைப் பற்றிய செய்முறை விளக்கம் பகிர்ந்துகொள்ளுதலோடு மட்டுமல்லாது, கதைகளையும் உருவாக்கச் சொல்லலாம்.


காகித பொம்மைகளை செய்வதன் மூலம் குழந்தைகளின் உரையாடல் திறன், கற்பனைத் திறன் மற்றும் சமூக உணர்வையும் மேம்படுத்த முடியும்.

குழந்தை பருவத்தில் தொழில்நுட்பத்தை முற்றிலுமாக தவிர்ப்பதே தீர்வு என்று நான் கருதவில்லை.

மாறாக, திரையில் ஒரு வடிவத்தைப் பார்த்து, அதைப் போலவே காகிதத்தில் உருவாக்கும்போது, தொழில்நுட்பத்தின் வாயிலாகப் பெறும் கற்றலும் நேரடி அனுபவத்தின் வாயிலாகப் பெறும் கற்றலும் ஒன்றையொன்று முழுமையடையச் செய்கின்றன.

 

4. ஜப்பான் நாட்டின் ஓரிகாமி கலை உலகம் முழுவதும் புகழ்பெற்று, இந்தியா போன்ற நாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதற்கு என்ன காரணம்?


ஓரிகாமிகலை ஜப்பானியப் பண்பாட்டு மரபுகளுடன் நெருங்கிய தொடர்புடையது. எளிய காகிதத்தைப் பயன்படுத்தி அழகான வடிவங்களை உருவாக்கும் இந்தக் கலை காலப்போக்கில் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் இது ஒரு பாரம்பரியக்கலையாக மட்டுமல்லாமல் கல்வி, கைவினை, பொழுதுபோக்கு ஆகியதுறைகளில் படைப்பாற்றலை வளர்க்க உதவும் செயல்பாடாக விளங்குகிறது.


இக்கலை உலக அளவில் மிகுந்த வரவேற்பை பெறுவதற்கு முக்கியமான காரணம், அதன் எளிமை ஆகும். இக்கலையைக்கற்றுக்கொள்ள அதிகச்செலவுதேவையில்லை. சாதாரணமான காகிதத்தைக் கொண்டே அடிப்படை வடிவங்களை உருவாக்க முடியும். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் தங்களுடைய திறனுக்கு ஏற்ற ஏராளமான வடிவங்களை கற்றுக்கொள்ள முடியும்.


ஓரிகாமியைப் பயன்படுத்தி வகுப்பறை அலங்காரங்கள், வாழ்த்து அட்டைகள், விழா அலங்காரங்கள் மற்றும் கற்றல் உபகரணங்களை உருவாக்க முடிகிறது.


இன்றைய காலகட்டத்தில் என்னைப் போன்ற நபர்கள் அளித்து வரும் நேரடி மற்றும் இணைய வழி பயிற்சிகள் மூலம் இக்கலையை எளிதாக பலரும் கற்றுக் கொள்ள முடிகிறது. இதுவும் இக்கலை பரவுவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.


கடந்த ஓராண்டில் மட்டும் 125 கருத்தாளர்கள் இணையவழி பயிற்சிகள் மூலம் உருவாக்கப்பட்டிருக்கின்றனர். வகுப்பறைகளிலும், குழந்தைகள் மத்தியிலும் இந்த கலையை எடுத்துச் செல்லும் தூதுவர்களாக செயல்படுகின்றனர்.

இப்படியாக, ஓரிகாமி ஜப்பானின்பாரம்பரிய கலையாகத் தொடங்கி இன்று உலக அளவில் பகிர்ந்து கொள்ளக்கூடிய படைப்பாற்றல் மொழியாக வளர்ந்துள்ளது என்று கூறலாம்.

 

5. நீங்கள் கைப்பாவைக் கதைசொல்லியாகவும் (Puppeteer) இருக்கிறீர்கள். இந்த முறை கதைசொல்லல் குழந்தைகளை எந்த அளவுக்கு ஈர்க்கிறது? இந்தக் கலை வடிவத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?


கைப்பாவை(PUPPET) கதை சொல்லல் என்பது குழந்தைகளை கவரக்கூடிய ஒரு சிறந்த கலை வடிவம் ஆகும். கதைகளை வெறுமனே சொல்வதற்கு பதிலாக, கதாபாத்திரங்களுக்கு காட்சி வடிவம் கொடுத்து அவற்றை அசைத்து குரல் மாற்றங்களுடன் உரையாடச் செய்வதன் மூலம் கதையை உயிரோட்டமுள்ளதாக மாற்ற முடியும்.


குழந்தைகள் இயல்பாகவே வண்ணமயமான பொருட்கள்,  அசைவுகள், வேடிக்கையான குரல்கள் மற்றும் சுவாரசியமான நிகழ்வுகளால் ஈர்க்கப்படுகிறார்கள்.


கைப்பாவை கதை சொல்லலில் இவை அனைத்தும் ஒருங்கிணைகின்றன.

இக்கலை வடிவத்தை தேர்ந்தெடுப்பதற்கானமுக்கிய காரணம்,  வகுப்பறையில் குழந்தைகளிடம் எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் கருத்துக்களை கொண்டு சேர்க்க முடிவதே.

 

குழந்தைகள் கதையின் மீது அதிக கவனம் செலுத்துவதுடன் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் காரணங்களையும் புரிந்து கொள்ள தொடங்குகிறார்கள்.


ஒரு வகுப்பறையில் ஆசிரியர் ஒரு கருத்தை நேரடியாக விளக்கும்போது சில குழந்தைகள் கவனத்தை இழக்கலாம்.ஆனால் அதே கருத்தை கைப்பாவைகளின் உரையாடல் மூலம் வழங்கும்போது அவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வாய்ப்பு அதிகரிக்கிறது.

.

கதை வழியாக நாம் சொல்ல வருகிற கருத்தை வழங்கும்போது கற்றல் அனுபவம் குழந்தைகளுக்கு நினைவில் நிற்கக் கூடியதாக அமைகிறது.

 மேலும், அவர்களே உருவாக்கிய கைப்பாவைகளைக் கொண்டு கதை சொல்லும் போது பல்வேறு படைப்பாற்றல் திறன்கள்வளர்கின்றன.

இவ்வாறு செயல்படுவதன் மூலம் ஆசிரியரின் கற்பனை திறனும் வளர்கிறது. குழந்தைகளின் கற்பனை மற்றும் மொழித் திறனும் மேம்படுகின்றன.


என்னைப்பொறுத்தவரையில்கைப்பாவைகதைசொல்லல், ஒரு மேடை நிகழ்ச்சி மட்டுமல்ல; அதுகுழந்தைகளின் மனதில் நல்ல கருத்துக்களை விதைக்கவும், அவர்களுடைய கற்றலை மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றவும் உதவும் ஒரு வலிமையான கருவியாகவே நான் பார்க்கிறேன், வகுப்பறை மட்டுமல்லாமல் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் பயன்படுத்துகிறேன்.


ஏராளமான சுற்றுச்சூழல் சார்ந்த கருத்துகளும் கதை சொல்லல் நிகழ்வுகளும் நடத்தியிருக்கிறேன்.

 

6. கைப்பாவைக் கதைசொல்லலில் என்ன மாதிரியான கதாபாத்திரங்களை குழந்தைகள் மிகவும் விரும்புகிறார்கள்?


பொதுவாகவே குழந்தைகள் தங்களுக்கு சுவாரசியமான மற்றும் நகைச்சுவையான கதாபாத்திரங்களையே விரும்புகின்றனர். குறிப்பாக விலங்குகள், பறவைகள் மற்றும் அவர்கள் அன்றாடம் வாழ்க்கையில் சந்திக்கும் நபர்களைக் கொண்ட கதாபாத்திரங்கள் குழந்தைகளை எளிதில் ஈர்க்கிறன.


 கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கும் போது குழந்தைகளின் வயதையும் அவர்கள் புரிந்து கொள்ளும் திறனையும் கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. கதாபாத்திரங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சில பாத்திரங்கள் நகைச்சுவையாக பேசலாம் .சில பாத்திரங்கள் கேள்வி கேட்கலாம்.வேறு சில, தவறு செய்து அதில் இருந்து கற்றுக் கொள்ளலாம். இதனால் கதை இயல்பாகவும் சுவாரசியமாகவும் அமையும்.


குறிப்பாக பிரச்சனைகளுக்கான தீர்வை காண்பதற்கு ஏற்ற கதாபாத்திரங்களை உருவாக்குவதன் மூலம்,குழந்தைகளே தீர்வுகளை உணர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.


கதாபாத்திரங்கள் வெறுமனே வந்து செல்வதோடு மட்டுமல்லாமல் குழந்தைகளையும் உரையாடச் செய்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒரு கைப்பாவை, “இன்றைய சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு யார் காரணம்?” என்ற கேள்வியை பார்வையாளர்களிடம் கேட்பதன் மூலம் அவர்களை பேச வைக்க இயலும்.


கூடுதலாக, கதைகளில் வரும் ஒலிகள் குழந்தைகளுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கும்.எடுத்துக்காட்டாக” டமால்” என விழுந்தது. “டமாரென” சத்தம் கேட்டது போன்ற ஒலிகள் குழந்தைகளை மிகவும் ஈர்க்கக்கூடிய ஒன்றாகும்.

 

7. உங்களுடைய கைப்பாவைகளை நீங்களே தயாரிக்கிறீர்களா? எந்த மாதிரியான பொருட்களைக் கொண்டு அவற்றை உருவாக்குகிறீர்கள்?


ஆம். காகிதத்தில் உருவாக்கக்கூடிய பலவிதமான கைப்பாவைகளை, நான் உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் கற்றுத் தருகிறேன்.

பள்ளிகளில் மற்றும் புத்தகக் கண்காட்சி மையங்களில் ‘பேசும் பொம்மைகள்’ என்ற தலைப்பில் பலவிதமான உருவங்களை காகிதத்தில் செய்து குழந்தைகளுடன் இயங்கி வருகிறேன்.


பயன்படுத்திய காலுறைகளைக் கொண்டு கைப்பாவைகளை உருவாக்கலாம். பெரிய அளவிலான பேசும் பொம்மைகளை உருவாக்கி, அவற்றுடன் உரையாடும் விதத்தில் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறேன்.


காகிதப் பைகளைக் கொண்டு சிறிய விலங்கு, மனித உருவங்களை உருவாக்க முடியும். பழைய துணிகளைப் பயன்படுத்தி விரல் பொம்மைகளையும் கைப்பாவைகளையும் தயாரிப்பதோடு அவற்றை குச்சிகளில் இணைப்பதன் மூலம் குச்சி கைப்பாவை நிகழ்ச்சியாகவும் மாற்ற முடியும்.

 

இவ்வாறு, கைப்பாவைகளை எளிய பொருட்களைக் கொண்டு உருவாக்குவதன் மூலம் எல்லோரும் கற்றுக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கி வருகிறேன். புதிய பொருட்களை மட்டுமே பயன்படுத்தாமல், மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்களைக் கொண்டு இத்தகைய கலைப்பொருட்களை உருவாக்குவது, குழந்தைகளிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வளர்க்கவும் உதவுகிறது.


என்னைப் பொறுத்தவரையில் கைப்பாவை என்பது ஒரு பொம்மை மட்டுமல்ல. அது ஒரு கதையை சொல்லக்கூடிய கருவி. ஒரு கருத்தை எடுத்துரைக்கக்கூடிய ஒரு ஊடகம்; குழந்தைகளுடன் உரையாடலை தொடங்கக்கூடிய ஒரு பாலம்.


எனவே, ஒவ்வொரு ஆசிரியரும் தாங்களே கைப்பாவைகளை உருவாக்க கற்றுக் கொண்டால் தங்கள் பாடங்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்றவாறு புதிய கற்றல் உபகரணங்களை உருவாக்கி குழந்தைகள் மத்தியில் கொண்டு செல்வதன் வாயிலாக அவர்களின் பல்வேறு திறன்களை வளர்க்க முடியும்.

தொடர்ந்து அதற்கான பயிற்சிகளையும் சேலம் மாவட்டஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின்மூலமாக இணைய வழியில் வழங்கி வருகிறேன்.


காகித மடிப்பு கலையின் மூலமாக வகுப்பறைகளில் கற்றல் - கற்பித்தல் உபகரணங்களாக பேசும் பொம்மைகளை உருவாக்குவதற்கான பயிற்சி  தொடர்ந்து வழங்கப்பட்டு 90 வது நிகழ்வை எட்டியுள்ளது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

 

8. புதிதாகக் கதை சொல்ல வருபவர்கள், கைப்பாவைகளைப் பயன்படுத்திச் சிறப்பாகக் கதை சொல்வதற்கான சில வழிகாட்டுதல்களை வழங்க முடியுமா?


கைப்பாவை கதை சொல்லல் என்பது தொடர்ந்து பயிற்சி பெறுவதன் மூலமாக மேம்படுத்திக் கொள்ள வேண்டிய ஒரு கலையாகும். துவக்கத்தில் பெரிய மேடை அமைப்போ, அதிக கைப்பாவைகளோ தேவையில்லை.  எளிமையான ஒரு கதையை இரண்டு கைப்பாவைகளைக் கொண்டே சுவைபட சொல்ல முடியும். இதில் முக்கியமானது, நாம் சொல்லக்கூடிய கருத்து குழந்தைகளைச் சென்றடைய வேண்டும் என்பதே.


அவ்வாறுகுழந்தைகளுக்குச்சுவைபடக்கதைசொல்லவிரும்புவோர்கடைப் பிடிக்க வேண்டிய சில வழிமுறைகள்


1. முதலில் கதையை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். கதையின் கருத்தையும் அதன் நோக்கத்தையும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.


2. கதைகளில் வரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் குழந்தைகளை ஈர்க்கும் வண்ணமயமான கைப்பாவைகளை உருவாக்க வேண்டும்.


3. உருவாக்கப்படும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்றவாறு குரலை மாற்றிப் பேசி பயிற்சி பெற வேண்டும்.


4. கைப்பாவைகளின் அசைவுகள் இயல்பாகவும் கதைக்கு ஏற்றவாறும் இருக்க வேண்டும்.அதற்குப் பயிற்சி செய்ய வேண்டும்.


5. கதை சொல்லும்போது குழந்தைகளிடம் இடையிடையே கேள்விகள் கேட்டு அவர்களையும் கதையில் பங்கேற்கச் செய்தல் வேண்டும்.


6. குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப கதையின் நீளம் அமைய வேண்டும்.


7. சிறிய குழந்தைகளுக்கு கதை சொல்லும் போது ஒலிநயம் (படார், டு புக், டமால், கீச்,....)மிகவும் முக்கியமான ஒன்றாகும். இவை கதைகளில் இடம்பெறும்போது குழந்தைகளிடம் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தும்.


8. கண்ணாடி முன்பு அல்லது நண்பர்களின் முன்பு நின்று பயிற்சி செய்து தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தங்கு தடையின்றி கதை சொல்ல இயலும்.


எல்லாவற்றிற்கும் மேலாக கைப்பாவை கதை சொல்லல் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல.குழந்தைகளின்கற்பனை, மொழித் திறன்,  சிந்தனை மற்றும் நல்லொழுக்க வளர்ச்சிக்கு உதவக்கூடிய சிறந்த கல்வி கருவியாகவும் விளங்குகிறது. ஒருவர் மகிழ்ச்சியுடன் கதை சொல்லும்போது குழந்தைகளின் மனதில் அதன் கருத்துக்கள் ஆழமாக பதிய தொடங்கும்.

இவற்றைக் கருத்தில் கொண்டு புதிதாக கதை சொல்ல வருபவர்கள் தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம், தாங்கள் சொல்ல விரும்பும் கருத்தைக்கொண்டு சேர்க்கவும்,கேட்போரின் மனதைய வெகுவாக ஈர்க்கவும் முடியும்.

2 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Ramesh Kumar Arulraj
9 hours ago
Rated 5 out of 5 stars.

வெகு சிறப்பு வாய்ந்த நேர்காணல். ஒரிகாமி உலகத்தின் பல பேரரசர்களுள்... நம் ஒரிகாமிகலைஞர் திருமிகு.அமலராஜன் ஒருவரே. கல்வியுடன் சமூகச் சிந்தனையையும் ஒருங்கிணைத்து , எதிர்கால சமூக இளைஞர்களுக்கு வழிகாட்டும் இவரது சேவை மென்மேலும் வளர்ந்து சிறக்க எம் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! பாராட்டுகள்!!!

Like

Balakrishnan
12 hours ago
Rated 3 out of 5 stars.

சிறப்பு.. வாழ்த்துக்கள்..

Like
bottom of page