'பறவைகளின் எச்சத்தில் பூக்கும் ஒரு காடு' - சூழலியல் எழுத்தாளர் கோவை சதாசிவம்
- செல்வ ஸ்ரீராம். பா

- 17 hours ago
- 10 min read
Updated: 2 hours ago

சந்திப்பு : பா.செல்வ ஸ்ரீராம்
கவிஞரும் சூழலியல் செயல்பாட்டாளருமான கோவை சதாசிவம், சுற்றுச்சூழல் குறித்து இதுவரை 25-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 'காடறிதல்' என்ற பயண வழிக் கற்றல் நிகழ்வுகளை நடத்தி வருகிறார். சூழலியல் அழிவிற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கிறார்.
கொரோனா காலகட்டத்தில் பறவைகளின் மீது எனக்குள் ஏற்பட்ட ஈர்ப்பு, மெல்ல மெல்ல அவற்றைப் பார்க்கவும், கவனிக்கவும், பதிவு செய்யவும் என்னைத் தூண்டியது. அந்தப் பயணம் என் வாசிப்பையும் பசுமை இலக்கியம் நோக்கி நகர்த்தியது.
அந்த வாசிப்பில் எனக்கு மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியது எழுத்தாளர் கோவை சதாசிவம் தாத்தா அவர்களின் ஊர்ப்புறத்துப் பறவைகள் நூல். என்னைச் சுற்றி வாழும் பறவைகளைப் புதிதாகப் பார்க்கவும், அவற்றைக் கவனித்து பதிவு செய்யவும் அந்த நூல் என்னைத் தூண்டியது. அவருடைய நூல்களோடு, பல்வேறு சூழலியல் எழுத்தாளர்களின் படைப்புகளையும் தொடர்ந்து வாசித்ததன் மூலம் பறவைகளைப் பற்றிய அறிவோடு, நாம் வாழும் சூழலின் பல்வேறு பரிமாணங்களையும் புரிந்துகொள்ள முடிந்தது.
எந்தச் சந்தேகம் என்றாலும் எளிமையாகத் தொடர்புகொண்டு கேட்கக்கூடிய அளவுக்கு இயல்பான மனிதர் கோவை சதாசிவம் தாத்தா. அவருடன் இந்த நேர்காணல் மூலம் உரையாடக் கிடைத்த வாய்ப்பு மகிழ்ச்சி தருகிறது.
ஸ்ரீராம் :
வணக்கம் தாத்தா.. கவிஞராகத் தொடங்கிய உங்கள் பயணம் எப்போது பசுமை இலக்கியம் நோக்கித் திரும்பியது? அந்தத் திருப்பத்தைப் பற்றி சொல்லுங்களேன்.
கோவை சதாசிவம் :-
ஒருவர் கவிஞராகவே இருந்து காலத்தைக் கழிக்க வேண்டிய அவசியம் இல்லை. படைப்பாளியின் பயணத்தில் ஒரு படிநிலை வளர்ச்சி என்பது எல்லோருக்கும் எப்போதும் பொதுவானதுதான். கவிதையில் தொடங்கிய ஒருவர் சிறுகதையை நோக்கி நகர்வதும், சிறுகதைகளில் ஓரளவு தேர்ச்சி பெற்ற பிறகு நாவலை நோக்கிப் பயணிப்பதும், படைப்பின் வெவ்வேறு தளங்களைத் தேடிச் செல்வதும் அந்தப் படிநிலை வளர்ச்சியின் அடையாளங்கள்தான்.
நானும் கவிஞனாகத்தான் இருந்தேன். மக்களின் அவலங்களையும் துயரங்களையும் என் கவிதைகளுக்குள் வடித்துக் கொண்டிருந்த எனக்கு, அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர வேண்டிய ஒரு தேவை ஏற்பட்டது. குறிப்பாக, திருப்பூரில் வாழ்ந்த எனக்கு, அங்கு நிலவிய சுற்றுச்சூழல் சீர்கேடு என்பது என்னைத் தொடர்ந்து சிந்திக்க வைத்த ஒரு முக்கியமான களமாக இருந்தது.
சூழலியலில் மிக மோசமான ஒரு களத்திற்குள் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அந்தச் சூழலியலைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் ஒரு படைப்பாளிக்குள் இயல்பாகவே உருவாகிறது. அது வெளியில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தல்ல; தான் வாழும் நிலம், தான் பார்க்கும் மனிதர்கள், தான் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஆகியவை படைப்பாளியின் உள்ளுக்குள் உருவாக்கும் இயல்பான மனவோட்டம். அந்த மனவோட்டத்தின் அடிப்படையில்தான் நான் பசுமை இலக்கியத்தை நோக்கி நகர்ந்தேன்.
பசுமை இலக்கியம் என்பது எனக்கு வெறுமனே கவிதைக்கான இன்னொரு களம் அல்ல. அதற்குள் கவிதையோடு மட்டும் நின்றுவிடாமல், கட்டுரைகள், பாடல்கள், நாடகங்கள் என்று பல்வேறு வடிவங்களில் இயங்கத் தொடங்கினேன். இன்னும் சொல்லப்போனால், தோல்பாவைக் கூத்து, அதாவது நிழல் பாவைக் கூத்து போன்ற கலை வடிவங்களைக்கூட சூழலியல் சார்ந்த கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான ஊடகங்களாகப் பயன்படுத்தி வருகிறேன்.
ஏனென்றால், சூழல் குறித்த ஒரு கருத்து எழுதப்பட்ட பக்கங்களுக்குள் மட்டும் சிக்கிக் கிடக்கக் கூடாது. அது மக்களிடம் எளிமையாகச் சென்றடைய வேண்டும்; குழந்தைகள் அதைத் தங்களுக்கான மொழியில் புரிந்துகொள்ள வேண்டும்; நாம் வாழும் நிலத்தோடும், நீரோடும், காற்றோடும், பறவைகளோடும், மரங்களோடும் அவர்களுக்கு ஓர் உறவு உருவாக வேண்டும். அதற்காகத்தான் பன்முகத்தன்மையோடு இன்றைக்கும் செயல்பட்டு வருகிறேன்.
பன்முகத்தன்மை என்பது எனக்குப் புதிதான ஒன்றல்ல; அது ஒரு படைப்பாளியின் இயல்பான பயணம்தான். ஒருவர் ஒரே இலக்கிய வடிவத்திற்குள்ளேயே தேங்கி நின்றுவிடாமல், இலக்கியத்தின் பல்வேறு பரிணாமங்களையும் அதன் சாத்தியங்களையும் தேடிப் பார்ப்பதுதான் படைப்பு மனதின் வெற்றி என்று நான் கருதுகிறேன்.
ஒரு படைப்பாளி தான் வாழும் காலத்தையும், தான் வாழும் நிலத்தையும், அந்த நிலத்தின் வலியையும் உணர்ந்து, அதற்கேற்ற புதிய மொழிகளையும் புதிய வடிவங்களையும் தேடிச் செல்வதே அவனுடைய படைப்புப் பயணத்தின் அடுத்த கட்டம். அந்த வகையில், கவிதையிலிருந்து பசுமை இலக்கியத்தை நோக்கிய எனது பயணம் என்பது ஒரு திடீர் திருப்பமல்ல; நான் வாழ்ந்த நிலமும், நான் கண்ட மனிதர்களும், நான் எதிர்கொண்ட சூழலியல் நெருக்கடிகளும் என்னை இயல்பாக அழைத்துச் சென்ற அடுத்த படிநிலை.
ஸ்ரீராம்:
அருமை தாத்தா. என்னைப் போன்ற குழந்தைகளை இயற்கையின் பால் திருப்ப வேண்டுமானால், முதலில் அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியது புத்தகங்களையா, மரங்களையா, பறவைகளையா?
கோவை சதாசிவம்:
குழந்தைகளுக்கு புத்தகங்களைக் கொடுத்து இயற்கையைப் புரிய வைப்பதைக் காட்டிலும், மரங்களை நடச் சொல்லி அல்லது மரங்களைப் பற்றிப் பேசி மரங்களின் பால், இயற்கையின் பக்கம் அவர்களை ஈர்ப்பதற்கும், பறவைகளைக் காட்டி அவர்களை ஈர்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.
ஒரு குழந்தையை இயற்கையின் பக்கம் திருப்ப வேண்டுமானால், முதலில் அவர்களுக்குக் காட்ட வேண்டியது பறவைகளாக இருக்க வேண்டும். பாரதி சொல்வான், “வண்ணப் பறவைகளைக் கண்டு, நீ மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா” என்று. அதனால் குழந்தைகள் பறவைகளின் மீது எப்போதும் ஒரு பிரியத்தோடு இருப்பார்கள்.
பல வண்ணங்களில் அவர்கள் கண்ணெதிரே பறந்து போகிற பறவையின் மீது அவர்களுக்கு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படும். முதலில் பறவைகளில் தொடங்கினால், அவர்கள் அந்தப் பறவையைப் பார்க்கத் தொடங்குவார்கள். பிறகு, அந்தப் பறவைக்கு என்ன பெயர் என்பார்கள். அந்தப் பறவை என்ன சாப்பிடுகிறது என்பார்கள். கூடு கட்டுகிறதா? எங்கே குஞ்சு பொரிக்கிறது? எதைச் சாப்பிடுகிறது? என்று கேட்கத் தொடங்குவார்கள்.
ஒரு பறவையின் வாழ்க்கையைத் தெரிந்துகொள்ள ஒரு குழந்தை முனையும்போதுதான் அவர்களுக்குள் இயல்பாகவே இயற்கையின் மீதான தேடல் தொடங்கும் என்பேன்.
ஆக, நான் குழந்தைகளுக்கு பறவைகளை முதலில் காட்டி, பறவைகளின் பழக்கத்தைச் சொல்லி, அவற்றின் பழக்க வழக்கங்களைச் சொல்லி, அது கூடு வைக்கும் முறை, அது எப்படி கத்தும், ஏன் கத்தும் என்று பறவையைப் பற்றி சொல்கிறபோதுதான் ஒவ்வொரு குழந்தையும் ஈர்க்கப்படும்.
ஆக, பறவைகளைப் பற்றிச் சொல்வதுதான் புத்தகங்களைக் காட்டிலும், மரங்களைக் காட்டிலும், பறவைகளைக் காட்டித்தான் குழந்தைகளை வெகுவாக நாம் ஈர்க்க முடியும் என்பது என் கருத்து.
ஸ்ரீராம்:
அருமையான பதில்.
தாத்தா, நீங்கள் பார்த்த பறவைகளில், மனிதர்களுக்கு ஆசானாக இருக்கக்கூடிய பறவை என்று எதைச் சொல்வீர்கள்? ஏன்?
கோவை சதாசிவம்:
நான் பார்த்த பறவைகளில் எல்லாப் பறவைகளுமே நமக்கு ஆசான்கள் தான். எல்லாப் பறவைகளிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. ஒவ்வொரு பறவையும் தன்னுடைய வாழ்க்கைத் தேடலில், வாழ்க்கை ஓட்டத்தில் பல்வேறு செய்திகளை நமக்கு வைத்திருக்கிறது. ஒவ்வொன்றும் தன்னுடைய வாழ்க்கை முறையிலே, மாறுபட்ட வாழ்க்கைப் போக்கைக் கொண்டிருக்கிறது.
நாம் ஒவ்வொரு பறவையிடத்திலும் கற்றுக்கொள்ள ஏராளம் உண்டு. குறிப்பாக அதன் ஒற்றுமை, அதன் உழைப்பு. தூக்கணாங்குருவிக் கூட்டில் இருந்து நுட்பமான ஒரு உழைப்பை நாம் கற்றுக்கொள்ளலாம். இருவாச்சிப் பறவையிலிருந்து நல்ல காதலைக் கற்றுக்கொள்ளலாம்.
எல்லாப் பறவைகளும் ஏதோ ஒரு வகையில் மனிதனுடைய மனதை மேம்படுத்துவதற்கும், மனிதனின் வாழ்வைப் பண்படுத்துவதற்கும் நிச்சயமாக உறுதுணையாக இருக்கும்.
எங்கோ 15,000 மைல்களுக்கு அப்பால் இருந்து பறந்து வரும் பறவைகளைக்கூட நாம் இங்கு பார்க்க முடியும். இப்படி உலகம் முழுவதும் வலம் வருகின்ற பறவைகளிடத்தில் நாம் கற்றுக்கொள்வதற்கு ஏராளம் இருக்கிறது. அதற்கெல்லாம் ஓர் ஆயுள்தான் போதாது.
ஆக, நாம் பார்க்கிற ஒவ்வொரு பறவையும் — சிட்டுக்குருவியாகட்டும், காகமாகட்டும், நாகணவாயாகட்டும் — நம்மைச் சுற்றி வாழ்கிற ஒவ்வொரு பறவையும் நமக்கு நல்ல ஆசான்கள்தான். அவைகளிடத்தில் நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. நமக்கு நல்ல ஆசான்கள் பறவைகள்தான்.
ஸ்ரீராம்:
ஆமாம் தாத்தா. அந்த சின்னஞ்சிறு உயிர்கள் நமக்கு மிகப்பெரிய ஆசான்கள்.
தாத்தா, கைபேசியையே பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு குழந்தை வானத்தைப் பார்க்கத் தொடங்கினால் என்ன நடக்கும்? வானத்தில் பறந்து செல்லும் பறவைகளை அது கவனிக்கத் தொடங்கும்போது, அந்தக் குழந்தைக்குள் என்ன மாற்றம் ஏற்படும்?
கோவை சதாசிவம்:
நிச்சயமாக மாற்றம் ஏற்படும். கைபேசியின் திரையில் சிக்கிக்கொண்டிருக்கும் குழந்தையின் கவனம், வானத்தை நோக்கித் திரும்பும்போது அது தன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தைப் பார்க்கத் தொடங்குகிறது. குறிப்பாக, பறந்து செல்லும் ஒரு பறவையைப் பார்க்கும்போது, அந்தப் பறவை எங்கே போகிறது, என்ன பறவை, எங்கிருந்து வந்தது, என்ன செய்கிறது என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் குழந்தைக்குள் இயல்பாகவே உருவாகும். அந்த ஆர்வம்தான் குழந்தையை இயற்கையின் பக்கம் அழைத்துச் செல்லும்.
குழந்தைகளுக்கு காட்சியாக ஏதாவது ஒன்று வேண்டும். குழந்தைகள் இன்றைக்கு செல்பேசியைக் கேட்டு வாங்குகிறார்கள். பெரியவர்களிடம் கொஞ்சம்கூடத் தயக்கம் இல்லாமல் ஒரு குழந்தை செல்போனைக் கேட்டு வாங்கிக்கொள்கிறது. அதில் திரையில் ஏதேனும் ஒரு காட்சியைப் பார்த்துக்கொண்டே இருப்பதற்குக் காரணம், குழந்தைகளுக்குக் காட்சியைப் பார்க்கப் பிடிக்கும். அது என்ன காட்சி என்றாலும்கூட, ஏதாவது ஒரு காட்சியைப் பார்க்கப் பிடிக்கும். அதனால்தான் செல்போன்கள் வெற்றி பெற்றிருக்கின்றன.
“சொல் பேச்சு கேட்காத குழந்தைகள்கூட செல் பேச்சு கேட்கிறார்கள்” என்று கவிதை எழுதும் அளவுக்கு, செல்போனும் குழந்தைகளும் பிரிக்க முடியாத சக்திகளாக மாறியிருக்கிறார்கள்.
ஆனால், செல்போனில் வருகின்ற எந்த ஒரு காட்சியும் குழந்தைக்கு அறிவைத் தராது; அந்தக் குழந்தையைச் சிந்திக்கவும் வைக்காது. அதற்கு மாற்றாக நாம் ஒரு பைனாக்குலரை வாங்கித் தரலாம். தமிழில் அதற்கு “இருகண் நோக்கி” என்று சொல்வார்கள்.
அந்த இருகண் நோக்கியை வைத்து முதலில் அவர்கள் வானத்தைப் பார்க்க வைக்க வேண்டும். வானத்தில் தவழும் மேகங்களைப் பார்ப்பார்கள். பறவைகளைப் பார்ப்பார்கள். இந்த விரிந்த வானம் அவர்களுக்கு மிகப்பெரிய காட்சிப் பிம்பத்தை ஏற்படுத்தும்.
ஒரு காட்சி வேண்டுமென்றால் அவர்கள் வானத்தைப் பார்க்க வேண்டும்; பைனாக்குலரில் பார்க்க வேண்டும்; பறக்கின்ற பறவைகளைப் பார்க்க வேண்டும். எவ்வளவு தூரத்தில் ஒரு பறவை பறக்கிறது, பறக்கிற பறவை என்ன பறவை என்றும் தெரிந்துகொள்கின்ற அளவிற்கு அவர்களுக்குக் கவனம் ஏற்படும்.
குழந்தைகளுக்குக் காட்சி முக்கியம். எந்தக் காட்சியைக் காட்ட வேண்டும் என்பதை முடிவெடுப்பது பெற்றோர்களின் கடமை. பெற்றோர்கள் நல்ல காட்சியைக் காட்ட வேண்டுமானால், செல்போனைப் பிடுங்கிவிட்டு அந்தக் குழந்தைகளின் கைகளில் பைனாக்குலரைத் தர வேண்டும்.
ஸ்ரீராம்:
தாத்தா, பறவைகளைப் பார்க்கத் தொடங்கிய குழந்தைகள், மெல்ல மெல்ல இயற்கையைப் பற்றியும் சூழலைப் பற்றியும் தெரிந்துகொள்ள ஆரம்பிப்பார்கள் அல்லவா? அப்படியிருக்கும்போது, சுற்றுச்சூழலைப் பற்றி குழந்தைகளிடம் எப்படிச் சொல்வது? அவர்களைப் பயமுறுத்தாமல், எளிமையாக ஒரு கதை போல அவர்களுக்குப் புரிய வைக்க முடியுமா?
கோவை சதாசிவம்:
சுற்றுச்சூழலைக் குழந்தைகளுக்கு முதலில் சொல்லும்போதெல்லாம், நாம் பெரியவர்களிடம் சொல்வதைப் போலவே சுற்றுச்சூழலைப் பற்றி சொல்லிவிட முடியாது. குழந்தைக்கு இப்போது தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லாத விஷயங்களை, பெரியவர்களுக்குச் சொல்வது போல குழந்தைகளிடம் சொன்னால் அவர்களுக்குப் புரியாது.
குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் என்பது, அவர்களைச் சுற்றி வாழும் உயிர்களை அடையாளப்படுத்துவதுதான். சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வது என்பதும் சுற்றுச்சூழலின் அடிப்படை விதிதான். ஒழுங்காக நடந்துகொள்வதுகூட சுற்றுச்சூழலின் ஓர் அடிப்படை விதிதான்.
ஆக, குழந்தைகளுக்கு நாம் கதையாகச் சொல்லும்போது, அது குழந்தைகளுக்குப் புரிந்த உலகமாக இருக்க வேண்டும். குழந்தைகள் பேசுகின்ற சொல்லாடலாக இருக்க வேண்டும். அந்தச் சொல்லாடலில்தான் அவர்களைச் சுற்றி வாழ்கின்ற உயிரினங்களைப் பற்றிய அறிமுகத்தை நாம் தொடங்க வேண்டும். இதுதான் சுற்றுச்சூழலின் தொடக்கமாக இருக்க வேண்டும்.
பிறகு அதன் அழிவு என்ன என்பதைப் பற்றி சொல்லலாம். முதலில் ஆக்கங்களை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இயற்கையின் படைப்பு நுட்பங்களை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்குப் பிறகுதான் அதை நாம் ஏன் அழிக்கிறோம், அதன் விளைவுகள் என்ன, அதனால் ஏற்படுகிற சுற்றுச்சூழல் பாதிப்புகள் என்ன என்பதையெல்லாம் சொல்லித் தரலாம்.
குழந்தைகளுக்குச் சொல்லும் கதைகள் எளிமையாக இருக்க வேண்டும். அவர்களுடைய சொல்லாடல்களாக இருக்க வேண்டும். அவர்கள் பார்க்கிற காட்சியாக இருக்க வேண்டும். இதுதான் குழந்தைகளுக்கு சுற்றுச்சூழலை அறிமுகப்படுத்துவதற்கான அடிப்படை விதி .
ஸ்ரீராம்:
தாத்தா, மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் பற்றி வாசிக்கும்போதெல்லாம் எனக்கு மிகப்பெரிய பிரமிப்பு ஏற்படுகிறது. ஒருவேளை மேற்குத் தொடர்ச்சி மலைகள் நமக்கு இல்லாமல் போயிருந்தால், தமிழகம் எப்படி இருந்திருக்கும்?
கோவை சதாசிவம்:
மேற்குத் தொடர்ச்சி மலைகள் இல்லாமல் போயிருந்தால் தமிழகம் எப்படி இருந்திருக்கும் என்ற இந்தக் கேள்வி மிகவும் முதன்மையான கேள்வி. நான் உள்ளபடியே ஸ்ரீராமைப் பாராட்டுகிறேன். காரணம், மேற்குத் தொடர்ச்சி மலைகளை நாம் பெரும்பாலும் மரங்களையும், மலைகளையும் கொண்ட ஒரு பகுதியாகவோ, சுற்றுலா சென்று திரும்பும் இடமாகவோதான் நினைத்துக்கொள்கிறோம்.
ஆனால், நமக்கு மட்டும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் இல்லாமல் போயிருந்தால், தமிழ்நாடு மட்டுமல்ல, தென்னகமே ஒரு பெரும் பாலைவனமாக மாறியிருக்கும்.
ஒரு பெரும் பாலைவனமாக மாறியிருக்க வேண்டிய நிலப்பரப்பை, இன்றைக்கு அற்புதமான நிலப்பரப்பாகவும், பயிர்கள் விளைகிற, உயிர்கள் வாழ்கிற நிலப்பரப்பாகவும் மாற்றியிருப்பதற்குக் காரணம் மேற்குத் தொடர்ச்சி மலைகள்தான்.
அங்கிருந்துதான் நமக்கு ஏறத்தாழ 25 கோடி மக்களின் நீராதாரம் கிடைக்கிறது. அதுபோக, உயிர்க்காற்றும் நமக்குக் கிடைக்கிறது. பருவமழையைத் திசைதிருப்பாமல் கொண்டு வந்து சேர்ப்பதும், கீழே ஓடுகின்ற எல்லா நதிகளையும் நிரப்பி, அவற்றை வங்கக் கடலுக்கும் அரபிக் கடலுக்கும் கொண்டு போய்ச் சேர்ப்பதும்கூட மேற்குத் தொடர்ச்சி மலையின் வேலைதான்.
ஆக, மேற்குத் தொடர்ச்சி மலை என்பது வெறும் பெரும் பாறைகளோ, மரங்களோ அல்ல. அது நம் தண்ணீர்த் தொட்டி; நம் உயிர்மூச்சு.
இதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலையின் மீது தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிற மேம்பாட்டுத் திட்டங்களாக இருந்தாலும் சரி, அதற்காக மேற்கொள்ளப்படும் சுரங்கப் பணிகளாக இருந்தாலும் சரி, கனிம வளங்களுக்காக மேற்குத் தொடர்ச்சி மலை சிதைக்கப்பட்டால், தென்னகம் ஒரு பாலைவனமாக மாறும்.
இந்த உண்மையைப் பல்வேறு வடிவங்களில் அடுத்த தலைமுறைக்குச் சொல்லித் தர வேண்டிய கடமை உணர்வோடு நாம் இருக்க வேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாப்பது என்பது மலையைப் பாதுகாப்பது மட்டுமல்ல; நம்முடைய தண்ணீரையும், காற்றையும், நதிகளையும், உயிர்களையும், எதிர்காலத்தையும் பாதுகாப்பது.
ஸ்ரீராம்:
அருமை தாத்தா. மேற்குத் தொடர்ச்சி மலையின் அருமையைப் புரிந்துகொண்டால், அதை காக்க வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக ஏற்படும். தாத்தா, இயற்கையைப் பார்க்கும்போது அதை புகைப்படம் எடுப்பதுதான் முக்கியமா, இல்லை அதை அமைதியாகக் கவனிப்பதுதான் முக்கியமா?
கோவை சதாசிவம்:
இயற்கைக் காட்சிகளைப் படம் பிடிப்பது என்பது வேறு; இயற்கையைப் புரிந்துகொள்வது என்பது வேறு.
நாம் ஒரு புகைப்படம் எடுக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். குறிப்பாக விலங்குகளையோ, பறவைகளையோ, பூச்சிகளையோ, ஏதாவது உயிரினங்களையோ படம் பிடிக்கும்போது, நம்முடைய கவனம் முழுவதும் படம் எடுப்பதில் போய்விடுகிறது. அதனால், அந்த உயிரினத்தின் நகர்வையும், அதன் நடத்தையையும் புரிந்துகொள்வதை விட்டுவிடுகிறோம். அல்லது அதை நெருக்கமாகப் புரிந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பை நாமே நழுவவிட்டுவிடுகிறோம்.
அதனால், புகைப்படம் எடுப்பதைவிடச் சற்று தள்ளி நின்று அவற்றின் நடத்தையைக் கவனிக்க வேண்டும். அது பறவையாக இருந்தாலும், விலங்காக இருந்தாலும், பூச்சியாக இருந்தாலும், அவை என்ன செய்கின்றன என்பதைப் பார்க்க வேண்டும்.
குறிப்பாக, பூச்சிகள் எங்கெங்கு தாவுகின்றன? என்ன செய்கின்றன? அவை வேறு பூச்சிகளைச் சாப்பிடுகின்றனவா? மகரந்தங்களை எடுத்துக்கொள்கின்றனவா? என்பதைப் பார்க்க வேண்டும். ஒரு பறவை தனியாக இருக்கிறதா, இரண்டு பறவைகளாக இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். விலங்குகள் ஒற்றையாகத் திரிகின்றனவா, மந்தையாகத் திரிகின்றனவா என்பதையும் கவனிக்க வேண்டும்.
இப்படிக் கவனிப்பதன் மூலம்தான் அந்த உயிரினத்தின் வாழ்க்கையை நாம் புரிந்துகொள்ளத் தொடங்குகிறோம்.
புகைப்படங்கள் என்பது நாம் பார்த்ததற்கான ஒரு சாட்சியாக இருக்கலாம்; ஆனால் அது நமக்கான அறிவுக் களமாகிவிடாது. புகைப்படத்தை எடுத்துவிட்டோம் என்பதற்காக அந்த உயிரினத்தை நாம் புரிந்துகொண்டுவிட்டோம் என்று சொல்ல முடியாது.
புகைப்படம் எடுப்பதைவிட, புகைப்படம் எடுப்பதற்கு முன்னால் நம் கண்களுக்கு விரியும் அந்தக் காட்சியை ரசிப்பதும், அதை உணர்வதும், அதன் இயக்கத்தைப் புரிந்துகொள்வதும்தான் நம் அறிவை மேம்படுத்தும்.இயற்கையைப் பார்ப்பது என்பது வெறுமனே பார்ப்பது அல்ல; அதை உற்றுநோக்குவது, உணர்வது, புரிந்துகொள்வது. அந்த அனுபவம்தான் இயற்கையோடு நமக்கான உண்மையான உறவை உருவாக்கும்.
ஸ்ரீராம்:
தாத்தா, பறவைகளுக்கும் பசுமைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? குறிப்பாக, பறவைகளுக்கும் காடுகளுக்கும் இடையே இருக்கும் அந்த உயிருள்ள உறவைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.
கோவை சதாசிவம்:
நான் “பறவைகளின் எச்சத்தில் பூக்கும் ஒரு காடு” என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். பறவைகளுக்கும் இந்தப் பசுமைப் பரப்பிற்கும் நிறைய தொப்புள்கொடி உறவு இருக்கிறது.
காரணம், பல மரங்களும் தாவரங்களும் தங்களுடைய விதைகள் பறவையின் எச்சத்தின் வழியாகத்தான் பரவ வேண்டும் என்ற இயற்கையின் விதியை வைத்திருக்கின்றன. ஒரு விதை பறவையின் உடலுக்குள் சென்று, அங்கு நொதிக்கப்பட்டு, பிறகு எச்சத்தின் வழியாக வேறொரு நிலத்தில் விழுந்தால்தான் அது முளைக்கும். அதனால்தான் நான் பறவையை பசுமை பரப்பாளன் என்று சொல்கிறோம்.
ஓரிடத்தில் இருக்கும் ஒரு விதையை இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்லும் மிகப்பெரிய பணியைப் பறவைகள் செய்கின்றன. ஒரு பறவை ஒரு நாளில் பல கிலோமீட்டர் தூரம் பறந்து, இரை தேடிக் கூடு திரும்புகிறது. அது சாப்பிடுகின்ற பழங்களின் விதைகள், அது கழிக்கும் எச்சத்தின் வழியாகப் பல்வேறு இடங்களுக்குச் சென்று விழுகின்றன. அப்படி ஒரு பறவை பறந்து பறந்து, ஒரு பெரிய நிலப்பரப்பின் பசுமையை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது.
பறவை பசுமையை மட்டும் பரப்புவதில்லை; பூச்சிகளின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்துகிறது. இயற்கையின் சமநிலையைப் பாதுகாப்பதில் ஒரு பறவையின் பங்கு அளப்பரியது; மகத்தானது.
அது இந்த இயற்கையைச் செழுமையாக வைத்திருப்பதற்காகத் தன் வாழ்நாள் முழுவதும் வானத்தை அளக்கிறது. பறந்து பறந்து பசுமைப் பரப்பின் பெரும் பரவலுக்கு காரணமாகிறது.
ஆக, பறவையையும் பசுமையையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்காமல், பசுமையும் பறவையும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த உயிர் உறவாகப் பார்க்க நாம் பழகிக்கொள்ள வேண்டும். பறவை இல்லாமல் பசுமையின் பயணத்தைப் புரிந்துகொள்ள முடியாது; பசுமை இல்லாமல் பறவையின் வாழ்க்கையையும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.
ஸ்ரீராம்:
தாத்தா, பனைமரம் நிலத்தடி நீரை உயர்த்துவதில் எப்படி உதவுகிறது? பனைமரங்கள் குறைந்ததால்தான் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது என்று சொல்கிறார்களே... அதைப் பற்றி கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன் தாத்தா.
கோவை சதாசிவம்:
வெப்பமண்டலப் பகுதியில் நிறைந்திருக்க வேண்டிய தாவரங்களில் பனையும் ஒன்று. பனை என்பது மரம் அல்ல; பனை என்பது ஒரு புல். அவ்வளவுதான்.
இந்தப் பனையின் வேர்களைப் பாருங்கள். குறிப்பாக, வெப்பமண்டலப் பகுதி முழுவதும் பரவி இருக்கிற பனையின் வேர்கள் குழாய் குழாயாக இருக்கும். மழை பெய்யும்போது, அந்த வேர்களின் வழியே மழைநீரை அடி ஆழத்திற்குக் கொண்டு சென்று, நிலத்தடி நீரை முதலில் செறிவூட்டுகிறது; பிறகு அதை மேலே கொண்டு வருகிறது.
முக்கியமாக, பனைமரத்திற்கு அதிகமாகத் தண்ணீர் தேவையில்லை. அது வறட்சியைத் தாங்கி வாழக்கூடிய ஒரு தாவரம். தனக்காக அதிகத் தண்ணீரை எடுத்துக்கொள்ளாமல், பெய்யும் மழைநீரை நிலத்தடிக்குக் கொண்டு போய் நீர் சேகரிப்பு வேலையைச் செய்கிறது.
பனை என்பது ஓர் அற்புதமான தாவரம். அதற்கு அதிகம் நீர் தேவையில்லை; ஆனால் அது நமக்கு நிறையத் தருகிறது. பனையின் அத்தனை பகுதிகளையும் நாம் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்கிறோம்.
இன்றைக்கு பனைமரம் தமிழ்நாட்டில் அருகிப்போயிருக்கிறது. வறட்சியை எதிர்கொண்டு வளரக்கூடிய இந்த மரங்கள் பெருக வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டில் இருக்கிற இந்த உள்ளூர் நீராதாரத்தையும், வானம் பார்த்த பூமிகளில் வாழும் மக்களுக்கான குடிநீரையாவது நாம் பாதுகாக்க முடியும்.
ஆக, பனை வளர்ப்பது என்பது தமிழ் நிலத்தின் நிலத்தடி நீரைச் செறிவூட்டுவதற்கு ஒப்பானது. பனைமரங்கள் நிறையப் பெருக வேண்டும்.
ஒரு காலத்தில் ஐந்து கோடிக்கும் மேற்பட்ட பனைமரங்கள் இருந்ததாகச் சொல்வார்கள். இன்றைக்கு சில லட்சங்கள்தான் இருக்கின்றன. இதிலிருந்தே நாம் எத்தனை பனைமரங்களை இழந்திருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ள முடியும்.
அதனால், நிறைய பனைமரங்களை நட்டு வளர்க்க வேண்டும். பனையை வளர்ப்பது என்பது ஒரு மரத்தை வளர்ப்பது மட்டுமல்ல; நம் நிலத்தடி நீரையும், நம் நிலத்தையும், நம் எதிர்காலத்தையும் பாதுகாப்பதாகும்.
ஸ்ரீராம்:
தாத்தா, யானை–மனித மோதல் என்று நாம் பொதுவாகச் சொல்கிறோம். ஆனால், நீங்கள் இதை “யானை–மனித எதிர்கொள்ளல்” என்று சொல்கிறீர்கள். ஏன் தாத்தா? இந்த எதிர்கொள்ளல் ஏன் தொடர்ந்து நடக்கிறது? இதை யானைகளுக்கும் மனிதர்களுக்கும் பாதிப்பு இல்லாமல் தவிர்க்க முடியுமா?
கோவை சதாசிவம்:
யானை–மனித மோதல் என்பது சரியான சொல்லாடல் அல்ல. “யானை–மனித எதிர்கொள்ளல்” என்பதுதான் சரியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். காரணம், யானை நம்மோடு மோத வேண்டிய எந்த அவசியமும் இல்லை. யானைகளுக்கும் நமக்கும் சொத்துப் பத்து தகராறு கிடையாது; பாகப்பிரிவினையும் கிடையாது. ஆனால், இன்று யானைகள் வாழ்ந்துகொண்டிருக்கிற காடுகள் துண்டு துண்டாகச் சிதறடிக்கப்பட்டிருக்கின்றன.
எல்லா வகைக் காடுகளுக்குள்ளும் இன்றைக்கு தோட்டங்கள், பயிர்கள், பழத்தோட்டங்கள், பங்களாக்கள், சாலைகள் என்று வந்துவிட்டன. காடுகள் நகரங்களாகவும், ஊர்களாகவும் மாறியிருக்கின்றன. ஒரு தொடர்ச்சியான காடுகளை மேற்குத் தொடர்ச்சி மலையில் பார்ப்பதே இன்றைக்கு அரிதாகிவிட்டது.
எல்லா காடுகளுக்குள்ளும் சாலைகள் ஊடுருவிச் செல்கின்றன. அங்கே ஒரு ஊர் இருக்கலாம்; அந்த ஊரின் பெரும் தொழிலாக தேயிலைத் தொழில் இருக்கலாம்; அல்லது பல்வேறு பணப்பயிர்கள் பயிரிடப்பட்டிருக்கலாம்.
இப்படியாக யானைகளின் பூமி என்பது, மனிதர்களுக்கு வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் தருகின்ற இடமாக மாறிய பிறகு, யானை உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் அடிவாரம் வரை நடக்க வேண்டியதாகிறது. அதனால்தான் யானைகள் எளிதாக மனிதர்களைச் சந்திக்க வேண்டிய ஒரு சூழல் உருவாகிறது.
இந்தச் சூழல்தான் யானையை மனிதனோடு எதிர்கொள்ள வைக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் நாம் உருவாக்கியிருக்கிற இந்தச் சூழல், இதுகாறும் பாதுகாக்கப்பட்டு வந்த காட்டின் ஆதாரத்தையே சிதைத்து, யானைகளை அழிவை நோக்கி நகர்த்திக்கொண்டிருக்கிறது என்பதுதான் அதன் எண்ணிக்கையில் தெரிகிறது.
ஒரு ஆண்டுக்கு ஒருமுறை எடுக்கப்படும் யானைக் கணக்கெடுப்பில் அதன் எண்ணிக்கை குறைந்து வருவதற்கும் இதுதான் காரணம். நீருக்கும் சோற்றுக்கும் சாலைக்கு வந்து, சாலையில் அடிபட்டு சாகிறது. யானைகளின் வாழ்விடத்திற்குள் நாம் தொடர்ந்து நுழைந்துகொண்டே இருக்கிறோம்.
மனிதர்களுக்கு வருகின்ற நோய்கள்கூட இன்று யானைகளுக்கு வருவதாக கால்நடை மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆக, யானை–மனித எதிர்கொள்ளல் என்பது எதிர்காலத்தில் ஒரு பெரிய சிக்கலை உருவாக்கி, மேற்குத் தொடர்ச்சி மலையில் யானைகள் அற்றுப்போகும் சூழ்நிலையை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.
என்னைப் பொறுத்தவரை, “யானைகளைப் பார்க்கிற கடைசித் தலைமுறையாகத்தான் நீங்கள் இருப்பீர்களோ?” என்ற கேள்வி எனக்குள் எழுந்துகொண்டிருக்கிறது.
அந்தக் கேள்விக்கு நீங்கள் விடை சொல்ல வேண்டிய தலைமுறையாகவும் இருக்கிறீர்கள். யானைகள் வாழும் காட்டை நாம் காப்பாற்றினால்தான் யானைகளையும் காப்பாற்ற முடியும். யானைகளைக் காப்பது என்பது ஒரு விலங்கைக் காப்பது மட்டுமல்ல; அது வாழும் காடையும், அந்தக் காட்டைச் சார்ந்து வாழும் ஒட்டுமொத்த உயிர்ச்சூழலையும் காப்பதுதான்.
ஸ்ரீராம்:
தாத்தா, மேகதாது அணை கட்டப்பட்டால் அங்குள்ள காடுகளுக்கும் வன உயிரினங்களுக்கும் என்ன ஆகும்? அந்த அணையால் அவற்றின் வாழிடம் பாதிக்கப்படுமா? அணை கட்டும்போது இயற்கையையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டாமா?
கோவை சதாசிவம்:
மேகதாது அணை கட்டுவதால் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வராது என்ற குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், ஒவ்வொரு அணை கட்டப்படும்போதும் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு பெரும் பகுதியை, ஒரு பெரிய பள்ளத்தாக்கை, ஒரு பெரிய பீடபூமியை நீருக்குள் மூழ்கடிக்கிறோம் என்ற கவலை இதுவரை நமக்கு வந்ததே இல்லை.
அணை கட்டுவதால் தண்ணீரைத் தேக்குகிறோம் என்று மட்டுமே நாம் பார்க்கிறோம். ஆனால், அந்தத் தண்ணீருக்குள் ஒரு காடு மூழ்குகிறது; அதனோடு சேர்ந்து எத்தனையோ மரங்கள், தாவரங்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் வாழ்ந்த வாழிடங்கள் அழிகின்றன என்பதை நாம் சிந்திப்பதில்லை.நீரை வைத்து அரசியல் செய்கிற மனிதர்கள், ஒரு நீரால் ஒரு காடு எப்படி அழிகிறது என்பதைப் புரிந்துகொள்ளவில்லை.
நீரை இயல்பாக ஓடவிடாமல் தடுத்து நிறுத்துவது இயற்கைக்கு நாம் செய்யும் ஒரு பெரும் சீரழிவு. இயற்கையாக உருவாகிற தண்ணீருக்கு, அது எங்கு போய்ச் சேர வேண்டும் என்பது தெரியும். காரணம், இந்தத் தண்ணீரை உற்பத்தி செய்வது மனிதன் அல்ல. மனிதனால் ஒருபோதும் தண்ணீரை உற்பத்தி செய்ய முடியாது.
இயற்கையால் உருவாக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்ட தண்ணீர் எங்கு உற்பத்தியாக வேண்டும், எங்கு முடிய வேண்டும், எப்படிப் பயணிக்க வேண்டும் என்பதற்கெல்லாம் இயற்கை தன்னுடைய வழியை வைத்திருக்கிறது. பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக இந்த நீர் தன்னுடைய பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது.
ஆனால், இதையே மனிதன் அணை கட்டி, அணை கட்டி, அணை கட்டி, தண்ணீரை மறித்து, இன்றைக்கும் அரசியல் செய்துகொண்டு, பல்வேறு மாநிலங்களின் பகையையும் சம்பாதித்துக்கொண்டிருக்கிறான்.
நீர் தன்னுடைய பாதையில், தன் இயல்பான போக்கில் நகர முடியாமல் சிறைப்பட்டுக் கிடக்கிறது. ஆசைப்பட்டு நீரைச் சிறைபிடித்த இடமெல்லாம் அணையாகத்தான் மாறுகிறது.
அதனால், ஒரு அணையைப் பற்றி பேசும்போது எவ்வளவு தண்ணீரைத் தேக்க முடியும் என்று மட்டும் பார்க்கக்கூடாது. அந்தத் தண்ணீருக்குள் எவ்வளவு காடு போகிறது, எத்தனை உயிர்களின் வாழிடம் அழிகிறது, ஒரு நதியின் இயல்பான ஓட்டம் எவ்வளவு பாதிக்கப்படுகிறது என்பதையும் சேர்த்துத்தான் நாம் சிந்திக்க வேண்டும்.
இயற்கையைத் தவிர்த்துவிட்டு எந்த நீர்த் திட்டத்தையும் நாம் முழுமையான வளர்ச்சித் திட்டம் என்று சொல்ல முடியாது.
ஸ்ரீராம்:
தாத்தா, பருவநிலை பிறழ்வு பற்றி இன்று நிறைய பேசுகிறோம். ஆனால், அதன் உண்மையான ஆபத்தை மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்களா? குறிப்பாக, இதைப் பற்றி குழந்தைகளுக்கும் மக்களுக்கும் எப்படி எளிமையாகப் புரிய வைக்கலாம்?
கோவை சதாசிவம்:
பருவநிலை என்பது இன்றைக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. கடந்த காலத்தில் “பருவநிலை மாற்றம்” என்று சொல்லிக்கொண்டிருந்தோம். இன்றைக்கு “பருவநிலை பிறழ்வு” என்று பேசிக்கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு நாம் நம்மைச் சுற்றியிருக்கும் இயற்கையை மாற்றியிருக்கிறோம்.
இதைப் பற்றி குழந்தைகளுக்குச் சொல்லியாக வேண்டியிருக்கிறது. காரணம், பருவநிலை மாற்றத்தால் ஏற்படுகிற நிலநடுக்கங்கள் இன்றைக்கு அதிகரித்திருக்கின்றன; மின்னல்கள் அதிகரித்திருக்கின்றன; எரிமலைகள் அதிகரித்திருக்கின்றன; நிலச்சரிவுகள் அதிகரித்திருக்கின்றன; கடல் சீற்றம் அதிகரித்திருக்கிறது; சூறாவளிகள் அதிகரித்திருக்கின்றன.
இப்படி இயற்கை நம்மைச் சுற்றி ஒரு சீற்றத்தோடும் பேரழிவோடும் நம்மை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இன்றைக்கு நிலநடுக்கமும் நிலச்சரிவும் நடக்காத நாளே இல்லை என்கிற அளவுக்கு உலகத்தின் நிலைமை இருக்கிறது.
குழந்தைகள் அச்சத்தோடு பிறக்கிறார்கள் என்று இன்றைக்கு மருத்துவர்கள் சொல்கிறார்கள். காரணம், “இந்தப் பூமியில் நாம் எப்படி வாழப்போகிறோம்? இந்தப் பூமியின் இயற்கைச் சீற்றங்களையும், இயற்கை இடர்பாடுகளையும் எதிர்கொண்டு எப்படி வாழப்போகிறோம்?” என்ற ஒரு கவலை அவர்களுக்குள் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
இத்தனை மாற்றங்களுக்கும் மனிதர்களே பலமுறை காரணமாக இருக்கிறோம். ஆக, இதை குழந்தைகளுக்குத் தெரியாமல் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. குழந்தைகளும் இதைப் புரிந்துகொள்வார்கள்.
அவர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற இந்த உலகம், உண்மையில் அவர்களுக்கான உலகமாக இல்லை. அவர்களுக்காக இருந்திருக்க வேண்டிய உலகத்தை நாம் வெகுவாகச் சீர்குலைத்திருக்கிறோம்.
இந்த உண்மையை குற்ற உணர்வோடும், பொறுப்புணர்வோடும் குழந்தைகளிடம் பகிர்ந்துகொள்ளும் மனம் நமக்கு வேண்டும். அவர்களைப் பயமுறுத்துவதற்காக அல்ல; அவர்களுக்கான உலகத்தை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்புணர்வை உருவாக்குவதற்காக.
ஸ்ரீராம்:
என்னுடைய கேள்விகளுக்கு ஆழமாகவும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் எளிமையாகவும் விளக்கம் அளித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் தாத்தா.

மடத்துக்குளம் ஜேஎஸ்ஆர் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். வாசிப்பும் , பறவை பார்த்தலும் அது சார்ந்த பயணங்களும் மிகப் பிடித்த விஷயங்கள். சதுரங்க விளையாட்டு, இறகு பந்து விளையாட்டில் ஆர்வம் அதிகம்.
8 ஆவது வயதில் இவருடைய முதல் புத்தகமான 'கரிச்சான் குஞ்சும் குயில் முட்டையும்' வெளிவந்தது. தன் தங்கை மதிவதனியுடன் இணைந்து 'என்ன சொன்னது லூசியானா? '
, 'அற்புத எறும்பு' என்ற இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.
சுற்றுச்சூழல் சார்ந்த கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம்.





Excellent interview..congrats sriram