top of page

கல்வி என்ன தருகிறது? - எழுத்தாளர் கமலாலயன்


நேர்காணல்: சுகன்யா ராமநாதன்


1. அறிவொளி இயக்கத்தின் அனுபவத்திலிருந்து பார்த்தால், இன்று அப்படி ஓர் இயக்கம் தேவைப்படுமா?


சரியாக இரண்டு நாள்களுக்கு முன்னால்தான் ‘உலக எழுத்தறிவு நாள்’ எனும் சிறப்புமிக்க நாளை உலகம் கொண்டாடியது. யுனெஸ்கோ, செப்டம்பர் 8-ஆம் நாளை உலக எழுத்தறிவு நாளாக 1966-ஆம் ஆண்டு அறிவித்தது. அதற்கு 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழ் இந்து திசை நாளிதழ் ஒரு சிறப்பான கட்டுரையை வெளியிட்டு, யுனெஸ்கோவின் பணிகளில் உலகமே போற்றிய கல்வியாளர், தமிழர் மால்கம் ஆதிசேஷய்யா அவர்களைப் பற்றியும், வயது வந்தோர் கல்வி முதல், இந்திய-உலக அளவில் ஆதிசேஷய்யா அறிவொளி இயக்கத்தின் அடிப்படைத் தூணாக அமைந்த ‘தேசிய எழுத்தறிவு இயக்கம்’ தொடங்கி, பாரத் க்யான் விக்யான் சமிதி, தமிழ்நாடு தொடர்கல்வி வாரியம், மாநில பள்ளி சாராக் கல்விக் கருவூலம்-வரை நமக்கு என்றும் நினைவிலிருக்க வேண்டிய வரலாற்று உண்மைகளை சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் சார்ந்த பதிப்பக உதவியாளர் திரு.ஆ.அறிவழகன் எழுதிய கட்டுரையில் இன்றைய தலைமுறைக்கு இவற்றையெல்லாம் நினைவுபடுத்தியுள்ளார்.      

மீண்டும் அந்த அறிவொளி இயக்கம் அதே வடிவில், அதே வேகத்தில் இனி வராது. வாய்ப்பும் இருக்காது; வேறு வடிவில், இன்றைய நவீன வடிவங்களில், காலத்திற்கு ஏற்ற முறையில் திட்டமிடலாம்! அதே சமயம், இன்னொரு கோணத்தில் பார்த்தால், இன்றைக்கும் இந்தியாவின் குறிப்பிட்ட சில பகுதிகளும், தமிழ்நாட்டிலேயே கூட இன்னமும் அதே போலப் பின்தங்கி இருக்கும் ஊரகப் பகுதிகளும், பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளும் எந்த நவீன வசதிகளையும் பெற்று விடவில்லையே என்பதைப் பார்க்கும் போது அதே வடிவில் அறிவொளி வந்தால், இன்றைக்கும் பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் இருக்கலாம் என்றும் தோன்றுகிறது.


2. கல்வி, குழந்தைத் தொழிலாளர் முறை இதற்கிடையில் இருக்கும் தொடர்பு பற்றிய உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்..


கல்வி-குழந்தைத் தொழிலாளர் முறை இரண்டுக்கும் இடையே இந்திய விடுதலைக்குப் பின் ஏதோ ஓர் இழை ஓடிக்கொண்டேதான் இருக்கிறது என்பது என் அனுபவம். ஆய்வுகளும் ஒரு பக்கம் சில உண்மைகளைக் கவனத்திற்குக் கொண்டு வரத்தான் செய்கின்றன. இந்தியா முழுவதிலும் பல்வேறு அடிப்படைத் தொழில்களுக்கான ஒரு வரையறைக்குட்பட்ட அளவு திறன்கள் என்பவை இருந்தால், அந்தந்தத் தொழில்களுக்கான குறுகிய காலப் பயிற்சி போதும் என்பது, அந்த நாள்களிலிருந்தே அரசாங்கத்தின் கொள்கை. ஒரு காலத்தில் அந்தந்தத் தொழில் நிறுவனங்களே அவரவர் தேவைகளுக் கேற்ப மிக வரையறைக்குட்பட்ட எண்ணிக்கையில் தமக்கான ஆண்-பெண் உழைப்பாளிகளை குறைந்தபட்சக் கல்வியோடு எடுத்துப் பணியமர்த்திக் கொண்டார்கள். கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பஞ்சாலை, ஜின்னிங், நூற்பாலைகள் என்று ஆயிரக்கணக்கில் இயங்கியது நானே பார்த்தவையே.

ஆனால், இன்றைய மொபைல், எலெக்ட்ரிக்கல்கள், எலெக்ட்ரானிக்ஸ், இன்ன பிற பெருந்தொழில் நிறுவனங்களின் நிலைமைகளே வேறு. ஓர் எடுத்துக்காட்டிற்கு, நான் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் இந்தக் கிருஷ்ண கிரி மாவட்டத்தில் ஒரு தொழிற்சாலை மின்னல் வேகத்தில் வந்துவிடுகிறது. இரண்டு இலட்சம் பேர், ஓரளவு அடிப்படைப் படிப்போடும், திறன்களோடும் வந்தால் போதும்! அப்படி ஒரு தொழிற்சாலை இங்கு வந்து உருவாகி இயங்கவும் ஆரம்பித்து ஓரிரு வருடங்களோ, கூடுதலாகவோ இருக்கவும் கூடும். இப்போது இதற்குமுன் அந்த வட்டாரமே கண்டிராத, வட இந்தியர்களே பெரும்பாலும் நிரம்பிய, கிராமப் பகுதிகளாக ஒரு வட்டாரமே உருவாகி விட்டது! காலனிகள், ஷெட் குடியிருப்புகள். வாரக்கடைசியானால், ஒசூர் மார்க்கெட் முழுக்க வட இந்திய உழைப்பாளிகளே காய்கறிகள் உள்ளிட்ட ஒரு வார சமையல் தேவைகளோடு வீடுகளுக்கு/குடியிருப்புகளுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். இது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒரேயொரு தொழிற்சாலையினால் ஏற்பட்ட மாற்றம் மட்டுமே. இந்தியாவின் தென்னிந்திய மாநிலங்களில் தொழில் வளர்ச்சி மிக்க தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் எங்கு திரும்பினாலும் வட இந்திய உழைப்பாளி மக்கள் கூட்டம் கூட்டமாக இப்போது வாழும் நிலை! குழந்தைகளாகப் பெற்றோருடன் இங்கு வந்து வாழும் பிள்ளைகள், செங்கல் சூளைகள், சிறு சிறு தொழிற்பட்டறைகள் எனக் குழந்தைத்தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒரு புறம் கண்டும் காணாமலும் அதிகரித்துக் கொண்டு போகவும் வாய்ப்பு உண்டு. இல்லையெனினும் இவர்களைப் பள்ளிகளுக்குக் கொண்டு போய்ச் சேர்த்துக் ‘கல்வி’ கொடுப்பதற்கு நிர்வாகங்களோ அல்லது தமிழ்நாடு அரசோ என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. 


3. ‘கல்வியைத் தேடி...’ பேரா. லெனின் ஜவஹர்நேசன் எழுதிய ஆங்கில ஆய்வு நூலைத் தமிழில் மொழி பெயர்த்துத் தந்த அனுபவம் பற்றி... ?


கல்வி வளாக ஆய்வு –அக்கடமிக் பணி அவருக்கு. உயர்கல்வி நிலையங்கள், பல்கலைக் கழகங்கள் போன்றவற்றின் தோற்றம், உலகநாடுகளில், குறிப்பாக அமெரிக்காவிலும், இலண்டன், ஜெர்மன் உள்ளிட்ட உலக நாடுகளிலும் ஜவஹர் நேசன் பல்லாண்டுகள் அங்கேயே வாழ்ந்து பணிகளில் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் ஆராய்ந்து நமது நாட்டிற்கென மாற்றுத்திட்டம் ஒன்றை உருவாக்கித் தந்திருக்கிறார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள்- அதிலும்    கொரானா ஊரடங்குக் காலம்- பேராசிரியர் என்னுடைய முழு மொழிபெயர்ப்பு வரைவையும் இரண்டு முறை வரிவரியாக வாசித்துத் திருத்தி இறுதிப்படுத்தினோம்.

கொரானா காலத்திலேயே தமிழில் என் மொழிபெயர்ப்பில் நூல் வந்தது. ‘ஹிந்து’ என்.ராம், ஆன்லைனில் நூலை வெளியிட்டார். ஜவஹர் நேசன் உள்ளிட்ட முக்கிய ஆளுமைகள் ஆன்லைனில் ஆய்வுரைகளை முன் வைத்தனர். எதிர்பாராத அளவு பார்வையாளர்கள், பங்கேற்பாளர்களாக வந்தனர். 2500 பேர் வந்தது, ஓர் ஆச்சரியம். தமிழ்நாட்டில் அவர் முன்வைத்த இந்த முக்கிய ஆய்வு நூல் பற்றிப் பல்கலைக்கழக வட்டாரங்கள், ஆய்வாளர்கள் விவாதித்திருக்க வேண்டும்! அப்படி ஏதும் முயற்சி நடந்ததாகத் தெரியவில்லை. என் மொழிபெயர்ப்பு அனுபவங்களில், இது எனக்கு மிகவும் முக்கியமானது; எனக்கொரு நல்ல ‘மொழிபெயர்ப்பியல் கல்வி’ப்படிப்பு இது!


4. கல்வி மற்றும் கல்வி சார்ந்த பணிகளில் உங்கள் வாழ்வின் பெரும் பகுதி நேரத்தைச் செலவழித்திருக்கிறீர்கள். அந்தப்பணிகளின் வழியே நீங்கள் கற்றலிலிருந்து ‘கல்வி’ என்றால் என்ன?


ஓரிரு சிறிய மாற்றங்களை உங்கள் கேள்வியுடன் நானே சேர்த்துக் கொண்டால் நல்லது என்று நினைக்கிறேன். கல்வி சார்ந்த பணிகளில் ஏற்கெனவே தங்களின் வாழ்க்கையைப் பெரும் பகுதி காலங்களைச் செலவு செய்து வந்திருந்த முன்னோடிகளைப் பின்பற்றி நானும் அவர்களோடு இணந்தும், உதவியாகவும், ஆர்வலராகவும் இருந்து வந்தேன் என்றால் சரியாக இருக்கும்!

இந்தியா விடுதலை பெற்ற 1947-ஆம் ஆண்டில் தொடங்கி இப்போது 2026- ஆம் ஆண்டு வரை எவ்வளவு நீண்ட காலம்! நான் பிறந்ததே 1955-ஆம் ஆண்டில் தான். எனக்கு ஆரம்பக்கல்வி, உயர்நிலைப்பள்ளி- இவை ஐந்து+ஆறு ஆண்டுகள் அப்போதைய (பழைய) பதினோராம் வகுப்பு முடிந்ததும் மூன்றாண்டு காலம் டூல் அண்ட் டை மேக்கிங் என்ற அப்போதைய சான்றிதழ் (இப்போது டிப்ளோமா) பெற்றவன். சுமார் இருபது ஆண்டுகள் நான் தொழிலாளி. அந்தக்காலகட்டம், எனக்குப் பிந்தைய, இப்போது நாம் பேசிக் கொண்டிருக்கும் காலப்பணிகளுக்கான ஒரு தயாரிப்புக் காலம் எனலாம். ஆக, சுமார் 65 ஆண்டு காலம் நேரடியாக என்னளவில் ஒரு சிறு பகுதி அனுபவம், உலகளாவிய கல்வி, கல்வியாளர்களின் அனுபவப் பதிவு நூல்கள், இந்தியக் கல்வி முறை பற்றிய ஏராளமான நூல்கள் ஆங்கிலம்-தமிழ் மூலம் வாசித்துப்   பெற்ற விரிவான அனுபவக்களஞ்சியம்- இவை எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் மிகுந்த அடக்கத்துடன் இதைச்சொல்கிறேன்:

கல்வி என்றால் என்ன என்ற உங்கள் கேள்விக்கு, உண்மையிலேயே என்ன மறுமொழி சொல்வது என்று மிகப் பெரிய கேள்வி இப்போது என்னுள். முறை சார்ந்த, முறைசாராத இரு வகைகளிலும் உலகம் முழுக்க சாதாரண ஏழை மக்கள் ‘ஏதோ’ படித்து, தொழிற்பயிற்சி அல்லது கல்லூரி-பல்கலைக்கழகக் கல்வி பெற்று வாழ்ந்து வருகிறார்கள். பணக்காரர்கள் மட்டும் ஒரு மிகச்சிறிய பகுதியினர், உலகம் முழுக்கச்சேரத்துப் பார்த்தாலும் கூட, சில இலட்சம் பேர் இருக்கலாம். அவர்களுக்கான ஒரு நிறுவன அமைப்பு உண்டு. அதன் மதிப்பு, அதற்காகச்செலவாகும் தொகைகள் நம்மில் யாரும் செய்திருக்கிறோமா என்பதை விட்டுவிடுவோம். நான் பேசுவது, இந்த ஒட்டு மொத்த சாதாரண, ஏழை-நடுத்தர-ஓரளவுக்கு மேல் நடுத்தரம் வரை மட்டுமே.   இவர்களுக்கான ஒரு மிகப்பெரிய நிறுவன அமைப்பு உண்டு. அரசாங்கம் (Government), அரசு(the state), நிர்வாக இயந்திரம், காவல்துறை, நீதித்துறை, இன்ன பிற மிகப்பெரிய பட்டியல் உண்டு. தேர்வுகளை எழுதி விட்டு, ஏதோ தேர்வு முடிவுகளை வாங்கிக்கொண்டு ஏதோ வேலைக்குப் போனால் போதும் என்றுதானே நம்மில் மிகப்பெரும் எண்ணிக்கையினர் இருக்கிறோம்?ஆனால், தேர்வில் ஏதோ தவறு, கேள்வித்தாள் லீக் ஆகிவிட்டது, இதற்கு நீதி வேண்டும் என்று இவர்களில் கொஞ்சம் பேர் போக முடியாமல் டெல்லி ஜந்தர் மந்தர், சென்னை இன்னும் சில நகரங்களுக்குப் போனவுடன் என்ன நடந்தது, தொடர்ந்து நடக்கிறது என்று செய்தித்தாள்களைப் படித்துப்பாருங்கள். ஒட்டு மொத்த நிர்வாக, காவல், இராணுவம்தான் இந்தக் கல்வி, கேள்வித்தாள்  பற்றிய ‘நீதி’களை வழங்குகிறது. பெற்றோர்களுக்கு என்னவாவது புரிகிறதா? இது ஓர் எடுத்துக்காட்டுதான். நமக்கும் என்ன புரிகிறது? ஆசிரியர்களுக்கோ, உயர்கல்வித்துறை அதிகாரிகளுக்கோ இந்த மாதிரியான பிரச்னைகளில் என்னவாவது ரோல் உண்டா? மாநில, ஒன்றிய கல்வி அமைச்சர்களுக்காவது தெரியுமா? இதுதான் கல்வியின் நிலை, கல்வியாளர்களின் நிலை; இது ஒரு புறம்; பெற்றோர் எந்த விஷயத்திலும் எவ்வளவு சிக்கல்கள் வந்து கொண்டிருந்தாலும் அவர்கள் அன்றாட வாழ்க்கைப்பாட்டுக்காக ஓடிக் கொண்டே இருந்தால்தான் வீட்டில் சோறு, மற்ற எல்லாமே!

ஒட்டுமொத்த இந்தியாவின் கல்வி என்னவாக இருக்கிறது என்பதுவும், நமது மக்களுக்கு, பிள்ளைகளுக்கு,பெற்றோருக்கு அந்தக் கல்வி என்ன தருகிறது என்பதுவும் எனக்கே இப்போது ஒரு மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது என்பதை மட்டும் இப்போதைக்கு என்னுடைய பதிலாக வைத்துக் கொள்ளலாம்!     5. தமிழ்நாட்டில் கல்வியை ஒரு வேலை வாங்கும் கருவியாக,வேலைவாய்ப் பகமாகக் கருதுகிறீர்களோ? அதன் விளைவாக வாசிப்பு என்பது ஒரு பண்பாடாக இல்லாமல் இருக்கிறது என்பதாக நீங்கள் கருதுகிறீர்களோ? 


இல்லை; இந்திய வரலாற்றில், தமிழ்நாட்டில்தான் நூலகத்தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதன் போன்றவர்கள் தொடங்கி, விடுதலைக்கு முன்பிருந்தே எண்ணற்ற நூலகவியல்,கல்வியியல் அறிஞர்கள் இங்கு பொதுவான வாசிப்பு என்பதை ஒரு பண்பாடாகவே வளர்த்தெடுதிருந்தார்கள்! நானும்,நீங்களும், நாமும் தலை நிமிர்ந்து சொல்லலாம்! சொல்வேன்! இதை முதலில் சொல்லி விட்டுப் பின் உங்கள் கேள்விக்குப் போகிறேன்.

நடைமுறையில்,இந்தியா உள்ளிட்ட உலகளாவிய,வளர்ந்து வரும் நாடுகளில், தமிழ்நாட்டின் மாநகரங்கள் உள்ளிட்டு,எந்த ஒரு தேர்வு முறையிலும் அதன் முடிவில் ஒரு வேலை கிடைத்தால்தான் நல்லது என்று எண்ணும்,எதிர் பார்க்கும் இயல்பு மிகப் பொதுவானதாகவும், மிக வலுவனதாகவும் உள்ளது. நானும் ஒரு பொது மனிதன், எனக்கு என்று பெரிய கல்வித்தகுதி, வேலை வாய்ப்போ இல்லாத ஒரு சாதாரண மனிதன் எனும் நிலையிலிருந்து இந்த இயல்பு இருக்கிறது; இருக்கும்! மிக நியாயமான எதிர்பார்ப்பு அது! அதைக் குறைவென்று சொல்வது சரியும் அல்ல. தமிழ்நாடு இன்று இந்திய அளவிலேயே, ஒன்றிய அரசின் மதிப்பீடுகள் படியே பல அம்சங்களில் முதல் மூன்று இடங்களுக்குள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதில் என்ன ஐயம்? அந்தளவில், இது நல்லதுதானே!

வாசிப்பு பற்றிப் பார்ப்போம்: இது பண்பாடாக, இன்று இருக்கிறதா? அதற்காக நான் முன்பு சிறப்பித்துத் தலைநிமிர்ந்து வணங்கிக் குறிப்பிட்ட பல முன்னோடிகளின் அந்த ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சியின் கண்ணி அதேயளவு வலுவாக இன்று இல்லை,உண்மைதான்!  


அத்தகைய முன்னோடிகளின் ஆர்வம், வழி காட்டல், தொடர்ச்சி அறுபட்டுப் போய்க்கிடக்கிறது. முழுக்கத் திரைப்படங்கள், யூ-டியூப் சானல்கள், பிக்-பாஸ் போன்ற நட்சத்திர நேர்காணல்கள், ஆடல்-பாடல்கள், சமையல் கோமாளித்தனங்கள்-இத்தகைய ஓட்டுமொத்தப் பண்பாட்டுச் சிக்கல்களுக்குள் 90 சதவிகிதம் பேர் மூழ்கிக் கிடக்கிற நிலை.

மாறாக, நான் ஆரம்பத்தில் பெருமிதம் பொங்கச்சொன்னது போல, தமிழ்நாட்டில் ஒரு வலுவான நூலாக-வாசிப்பியக்கப் பயன்பாடு நூற்றாண்டுகள் காலங்களாக இங்கு நிலைத்திருந்தது. பொங்கல், ’தைப்புரட்சி’ என்று ஆய்வாளர் டி. தர்மராஜ் சமீபத்தில் சிறப்புமிக்க தனது ‘ஜல்லிக்கட்டு’ நூலில் கொண்டாடும் தமிழ்ப்பண்பாட்டுப் பேரியக்கங்களில், அதுவும் இந்தத் ‘தைப்புரட்சி’ எனும் முழக்கத்தையும் சேர்த்துக் கொள்கிறார். அதை, உலகளாவிய முழக்கங்களில் சிலவான அரபி வசந்தம், ஷ்பானிஷ் எதிர்ப்புகள், ’வால் ஸ்ட்ரீட்’டைக் கைப்பற்றுதல் போன்ற முழக்கங்களுடன் சேர்க்கிறார். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, கல்வியாளர் மால்கம் ஆதிசேஷய்யா போன்றவர்களின் எழுத்தறிவு இயக்கம் போன்றவையும், தமிழ்நாட்டு நூலக இயக்கம் உடன் சேர்ந்து வர, ஒரு மறு எழுச்சியும் வளர்ந்தெழுந்தது. உலகளவில் பெரும் புத்தக வாசிப்புப் பண்பாட்டு இயக்கமாகி விட்ட சென்னைப் புத்தகக் கண்காட்சி, அடுத்த சமீப வளர்ச்சியாகத் தொடங்கியுள்ள சர்வதேசப் புத்தகக் கண்காட்சி-சர்வதேச பன்மொழி பெயர்ப்புப் பரிமாற்றங்கள் போன்றவற்றையும் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஆதரவோடு அரசாங்கமே ஒரு புதிய விரிவாக்கத்தைத்தொடங்கியது. இன்னொரு புறம், கடந்த ஐம்பதாண்டு காலமாகத் த மு எ க சங்கம், சமீப ஆண்டுகளில் தமிழ் சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், நீலம் பண்பாட்டுப் பேரியக்கம், கடந்த ஒரு நூற்றாண்டுத் திராவிட-பெரியாரிய அடித்தளமான ஒரு ஆலமரத்தின் நிழலில் வளர்ந்தவை என்பதிலும் ஓர் ஒப்புமை உண்டு. கடந்த 75 ஆண்டுகால என் சி பி ஹெச் பதிப்பகம், கடந்த முப்பதாண்டுகளில் பாரதி புத்தகாலயம், அடுத்த அணியில் இன்னும் பல பதிப்பகங்கள், மகளிரின் பேராற்றலை நிரூபித்து விசுவரூபம் எடுத்துள்ள ஹெர் ஸ்டோரீஸ் போன்ற பெண்கள் பதிப்பகங்கள் – எவ்வளவு நம்பிக்கையளிக்கும் அடையாளங்கள்! இவற்றின் விளைவுகள் வருங்காலங்களில் மிக நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் நாம் பணிகளைத் தொடர்வோம்!


6 . நீங்கள் ஒரு நூலகப்பிரியர். கல்விக்கூடங்களில் நூலகங்களின் பணிகள் என்னென்ன? இளமைக்கால வாசிப்பு ஏன் அவசியம்? தற்போது இருக்கும் கல்விச்சுமைக்கிடையில் குழந்தைகள் வாசிக்க முடியுமா? இதற்குத் தீர்வு என்ன?


இந்தக்கேள்வியுடன் நாம் தற்காலிகமாக நமது உரையாடலை நிறுத்திக் கொண்டு இங்கு விவாதித்திருக்கும் விஷயங்களை ஆழமாகவும், அகன்று விரிவாகவும் விவாத்தித்து ஆராய்வது மிக முக்கியம். நாம் பொதுவாகக் கல்விக்கூடங்கள் என்பனவற்றைத் தனித்தனியான கட்டடங்களாக, நிறுவமைப்புகளாகவே பார்த்துப் பழகி விட்டோம். அவற்றில், நூலகங்கள் என்பவை இன்று கிட்டத்தட்ட மறக்கப்பட்டு வருகிற,ஒரு வகையில் கை விடப்பட்டு வருகிற கல்விக்கூடப் பழம்பொருள்களாக ஆகிவருகின்றன. ஆனால், இவற்றின் மீது ஒரு மீளக்கவனம் கொள்வோம். மேலே குறிப்பிட்டுள்ள எத்தனை நம்பிக்கையளிக்கும் விஷயங்கள் உள்ளன? அவ்வளவு ஏன், தமிழ்நாடு உள்ளிட்ட (கேரளம் தவிர்த்த) தென் மாநிலங்கள் ஒரு சமயத்தில் வட இந்தியாவே திகைக்கும் அளவுக்கு ‘நீட்’ தேர்வு தேவையில்லை என்று நிமிர்ந்து நிற்கவில்லையா, மறந்து விட்டோமா? அரசியல் சூழ்ச்சித் தந்திரங்களில் கை தேர்ந்த ஒன்றிய அரசும், உடன் சேர்ந்த உயர் சாதி அதிகார வர்க்கப் பிரதிநிதிகளும் சேர்ந்து, நீட் தேர்வை நாம் அனைவரின் தலைகளிலும் கட்டி விட்ட பிறகு, ஆரம்ப காலத்தயக்கங்களைப் எல்லாம் உதறியெறிந்து விட்டு இன்று இந்தியா அனைத்துக்கும் சவால் விடும் பகுதியாகத் தமிழ்நாடு ஆகிவிடவில்லையா? இது தமிழகத்தின் இயல்பு!

இன்று தமிழ்நாட்டில் அறிவு வளாகங்களாக உள்ளவை நூலகங்களே, ஆனால், புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளன. நமது கவனங்கள் பூரா முன்பு குறிப்பிட்ட ஊடகங்கள் மீதே குவிந்து போய்க் கிடக்கின்றனவே! உண்மையில்,கல்வி நிலையங்கள் நூலக வளாகங்களுக்கு உள்ளேயே ஒரு பிரிவாகத்தான் அமைக்கப்பட வேண்டும்! தமிழ்நாட்டின் அறிவு வளாகங்களாகப் பெரும் எழுச்சி கொண்டு வளர்ந்து வரும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், எம் ஐ டி எஸ் என்ற சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனம், தமிழ்நாடு தொடர்கல்வி வாரியம், தேசிய எழுத்தறிவு இயக்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பி ஜி வி எஸ் –இன்னும் எத்தனை ஆலமரங்கள் எண்ணற்ற வேர்களோடும்,விழுதுகளோடும் பரந்து விரிந்து வளர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.  

நினைவுபடுத்திக் கொள்வோம்: மறைந்த தமிழகக் கல்வியாளர் மால்கம் ஆதி சேஷய்யா ஒரு தனிநபராகத் தமிழ்நாட்டின், தமிழர்களின் குரலாகவும், பிரதிநிதியாகவும் மிகத் தொடக்க காலத்திலேயே உயர்ந்தெழுந்து நின்றவர்;  யுனெஸ்கோவிலேயே 23 ஆண்டுகள் நேரடியாகப் பணியாற்றியவர்! தமிழ்நாட்டு அறிவொளி,உலக வயது வந்தோர் கல்வி எல்லாவற்றுக்கும் அவரே ஆதி பிதாமகன்! ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர்-எட்டு என்ற நாளை எழுத்தறிவு நாளாகக் கொண்டாடுவதன் மூலமே அவரை நினைவில் இருத்தி வணங்கி, உத்வேகமடைந்து வருகிறோம்!



எழுத்தாளர், கதைசொல்லி.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறம் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட முகிழ் சிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தற்போது துபாயில் வசிக்கிறார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page