அம்ரிதா தேவி (Kejaarli Massacre)
மரங்களை காப்பாற்றிய பெண்

உயிரைக் காக்கும் மரமென்று
உரக்கக் கூவிடும் மனிதர்களே,
மரங்களைக் காக்க உயிர் துறந்த
மனிதர்கள் கதையிது கேளுங்கள்!
பாலை சூழ்ந்தது இராஜஸ்தான் - மிக
பவித்திரமானது கெஜ்ரி மரம்!
பிஸ்னாய் இனத்தின் மக்களங்கே
போற்றிடுவார் அதை கடவுளென!
அழகிய கெஜார்லி கிராமத்தில்
அம்ரிதா தேவி வாழ்ந்திருந்தாள்.
அசு,ரத்னி,பாகு என
அழகு மகள்கள் மூவருண்டு!
அரசன் அபய்சிங் ஜோத்பூரில்
அரண்மனை கட்ட ஆசைப்பட்டான்.
அடர்ந்த கெஜ்ரி மரம் வெட்ட
ஆட்படை விரைந்தது கெஜார்லிக்கு!
மரங்களை வெட்ட வேண்டாமே
மன்றாடிக் கேட்டாள் அம்ரிதாவும்
மரத்துப் போன மனத்தோரோ
மறுத்து எடுத்தார் கோடரியை!
வீழும் மரத்தைக் காட்டிலுமே
விலை உயர்ந்தது எனதுயிரோ?
வெட்டடா எனையே என்றவளும்
கட்டிப்பிடித்தாள் மரத்தினையே!
உயிரைத் தந்து வனம் காக்க
உடனே வந்தனர் மகள்களுமே!
ஒவ்வொரு மரத்தையும் அணைத்தபடி
ஒன்று திரண்டனர் பிஸ்னாய்கள்!
வெட்டுக் கோடரி இறங்கிடவே
வீழ்ந்தன உயிர்கள் ஒவ்வொன்றாய்!
முந்நூற்று அறுபத்து மூவரங்கே
மூச்சிழந்திட மலைத்து நின்றார்!
மரங்களைக் காக்க உயிர் துறந்த
மக்களை காண மன்னன் வந்தான்
மன்னிப்புக் கேட்டு மண்டியிட்டான்!
மாபெரும் சரித்திர நிகழ்விதுவே!
சூழல் ஆர்வலர் போற்றிடவும்
'சிப்கோ' இயக்கம் வளர்ந்திடவும்
சீர் மிகுந்த ஆலயமும்
சிறப்பாய் எழுந்தது கெஜார்லியில்!

சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள குருங்குளம்
பூந்தோட்டம் ஸ்ரீ லலிதாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர்.
இவரது முதல் நூல் 'பாட்டும் பாடமும்' தொடந்து பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.
காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம் " (எதிர் வெளியீடு) 2024
கொ மா கோதண்டம் நினைவு த மு எ க ச வின் சிறார் இலக்கிய விருது பெற்றுள்ளது
தனது சில பாடல்களை youtube : Muthu Raja Teacher இல் இசையுடன் காணொளியாக வெளியிட்டுள்ளார்.






Comments