top of page

வாண்டுகளின் நூலகம்



அன்னைத் தமிழே - என் 

ஆவி கலந்தவளே

என்னை வளர்ப்பவளே

என்னில் வளர்பவளே


எனத் துவங்கும் நான்காம் வகுப்புப் பாடலை ஏற்ற இறக்கத்துடன் சத்தமாக வாசித்தாள் செம்மொழி.


வாசித்து முடித்ததும் தமிழம்மா முதலில் கைத்தட்டினார். அடுத்த நொடி வகுப்பில் அனைவரும் கைத் தட்டினார்கள். மொழியின் முகத்தில் பெருமிதம் மிளிர்ந்தது. 


அன்றோடு கல்வியாண்டு முடிவடையப் போகிறது. மூன்றாம் வகுப்பு பரிட்சை அன்று காலையில் தான் முடிந்தது. பள்ளி கடைசி மணியடிக்க அரை மணி நேரம் தான் இருந்தது.


அந்த நேரத்தில் வகுப்புக்குள் வந்தார் தமிழம்மா. அவருடைய கையில் நான்காம் வகுப்பு தமிழ் புத்தகம்.


அது ஆங்கில வழிக் கல்வி நிறுவனம் என்பதால் பிள்ளைகள் எல்லோரும் ஆங்கிலத்தில் சடுகுடு விளையாடுவார்கள்.  ஆனால் தமிழ் தத்துப்பித்து என தந்தியடிக்கும்.


அதனால் பிள்ளைகளுக்கு தமிழம்மாவைப் பார்த்தாலே உடல் கொஞ்சமாக நடுங்கும்.


அனைவரும் திருதிருவென விழித்துக் கொண்டு தங்களுக்குள் முனுமுனுத்தனர். 


தமிழம்மா அழகாக சிரித்தார். "பிள்ளைகளா அடுத்த வருசம் நாலாம் வகுப்பு போறீங்க. எப்படி தமிழ் வாசிக்கிறீங்க பார்க்கலாமா? ஒவ்வொருத்தரா எந்திரிச்சு வாசிக்கனும். வரிசையா வாசிங்க" என்றார். 


முதல் இருக்கையில் இருந்து துவங்கியது. யாருமே சரியாக வாசிக்கவில்லை. ஒவ்வொருவரின் குரலிலும் தயக்கம்.


 செம்மொழி மூன்றாவது வரிசையில் இரண்டாவதாக அமர்ந்திருந்தாள்.


அவள் முறை வந்தபோது, கொஞ்சமும் திக்காமல் ஏற்ற இறக்கத்தோடு அழகாக இசை போல வாசித்தாள்.


அவளது தோழி லிசாவும் நண்பன் சம்ஸும் கூட திணறித் திணறி வாசித்தனர். 


வகுப்பு முடிந்ததும் மூவரும் பள்ளி வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்


"மொழி நீ மட்டும் எப்படி திணறாம தமிழ் வாசிக்கிற?" எனக் கேட்டான் சம்ஸ்.


"ஆமா? எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா? அதுவும் இந்த செய்யுள் பாட்டெல்லாம் வாயிலயே வரல" என்றாள் லிசா.


"நான் வீட்டில நிறைய வாசிப்பேன், அதனால இருக்கலாம்" என்றாள் செம்மொழி.


விடுமுறையில் ஒரு நாள் செம்மொழி வீட்டிற்கு வந்தான் சம்ஸ். 

அவன் கண்கள் வியப்பால் பெரிதானது.

சுவற்றை நிரப்பிய அலமாரிகளில் நூல்கள்… நூல்கள்… நூல்கள்…


அவள் அவ்வளவு சரளமாக தமிழ் வாசிக்க என்ன காரணம் என்பது அவனுக்குப் புரிந்தது.


 அவன் வீட்டில் அந்த அலமாரிகளில் எல்லாம் அலங்காரப் பொருட்கள் தான் இருக்கும்.


"ஏ என்ன மொழி, இவ்ளோ புக்ஸ் இருக்கு?" என ஆச்சர்யமாக கேட்டான் சம்ஸ். 


"எங்க அம்மா நிறைய வாசிப்பாங்க. எங்களுக்கும் நிறைய புத்தகங்கள் வாங்கித் தருவாங்க. கதைகள் சொல்வாங்க" என்றாள் மொழி.


"உனக்கு கதை புத்தகங்கள் இல்லையா சம்ஸ்" எனக் கேட்டார் மொழியின் அம்மா தமிழ்.


"இல்ல ஆண்டி. எனக்கு நிறைய Toys இருக்கு" என்றான் சம்ஸ்.


"“அத்தைனு சொல்லு… நீ தினமும் இங்க வா… மொழியோட சேர்ந்து வாசிக்கலாம்,” என்றார் அன்புடன்.


மொழிக்கு இந்த யோசனை  பிடித்திருந்தது. ஒரு சிறு பொறி அவளுக்குள் உருவானது. 


"அம்மா என் நண்பர்கள் நிறைய பேருக்கு தமிழ் சரியாவே வாசிக்க வரலம்மா. நாம எல்லாரையும் கூப்பிடலாமா? நீங்க கதை சொல்லுங்க. எல்லாரையும் வாசிக்க வைக்கலாம்" என்றாள் கண்கள் மிளிர.


சிறிது யோசித்த அம்மா, "சரி, ஆனால் குழந்தைகளுக்கான நூலகத்தை நீ தான் உருவாக்கனும். நூல்களின் பட்டியல் தயாரிக்கனும். அழகா அடுக்கி வைக்கனும்" என்றார்.


"நானும் உதவுறேன்" என்றான் சம்ஸ். 


மறுநாள் லிசாவும் வந்து விட்டாள்.


மூவரும் இணைந்து வேலை செய்தனர்.


மொழி சிறார் நூல்களை எல்லாம் பிரித்து எடுத்தாள். லிசா அவற்றை வரிசைப்படுத்தி அடுக்கினாள். சம்ஸ் நூல்களின் பட்டியல் தயாரித்தான்.


வீட்டின் முன்னறையில் ஒரு குட்டி நூலகம் தயாரானது.


"நம்ம நூலகத்திற்கு என்ன பெயர் வைக்கலாம்?" என யோசித்தார்கள் மூவரும்.


வாண்டுமாமா அப்டின்னு ஒருத்தர் குழந்தைகளுக்காக நிறைய எழுதி இருக்கார். அவர் நினைவா வாண்டுகளின் நூலகம் வைக்கலாமா? என்றார் அம்மா.


"வாண்டுகளின் நூலகம்" என்ற பெயரை அழகாக எழுதி வண்ணமிட்டு ஒட்டினார்கள்.


அந்தப் பெயரை வண்ணமிட்டு ஒட்டியபோது, அது பெயர் மட்டும் இல்லை… அது ஒரு கனவின் கதவு.


மூவரும் தங்கள் நண்பர்களை எல்லாம் அழைத்தார்கள்.


மொழியின் அம்மா தமிழ் தினமும் குழந்தைகளுக்கு ஒரு கதை சொன்னார். 


அதன் பின் ஒவ்வொருவராக நூல் எடுத்து சத்தமாக வாசிக்க வேண்டும்.


முதலில் வழக்கம் போல யாருக்கும் சரியாக வாசிக்க வரவில்லை. குரல்கள் நடுங்கின.வார்த்தைகள் தடுமாறின.


தமிழ் மிகவும் பொறுமையாக சொல்லிக் கொடுத்தார். "தவறாக சொன்னாலும் பரவாயில்லை. தயங்காமல் சத்தமாக வாசிப்பது முக்கியம்" என்றார். 


நடு நடுவே சின்னச் சின்ன விளையாட்டுகள் வைத்தார். அதனால் பிள்ளைகள் அனைவரும் உற்சாகமாகவே வந்தார்கள்.


கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்கக் கற்றுக் கொண்டார்கள். அவர்களது தயக்கம் காணாமல் போனது. வாசிப்பு பயம் மறைந்தது.


லிசா கூட செய்யுளை சரளமாக வாசிக்கும் அளவுக்கு முன்னேறி விட்டாள். 


விடுமுறை முடிந்து பள்ளி திறந்தது. தமிழ் பாட வேளை எப்போது வரும் என பிள்ளைகள் ஆவலோடு காத்திருந்தார்கள்.


தமிழம்மா வந்ததும் ஒவ்வொருவராக எழுந்து வாசிக்க சொன்னார்.


முதல் மாணவியே செய்யுளை சிறப்பாக வாசித்தாள். 


தமிழம்மா வியந்து போய் பாராட்டினார். அடுத்த மாணவியை அடுத்த பக்கத்தை வாசிக்க சொன்னார். 


அனைவரும் சிறப்பாக வாசித்தார்கள். 


"“ஒரே விடுமுறையில எப்படி இவ்வளவு மாறிட்டீங்க?" எனக் கேட்டார் தமிழம்மா.


"வாண்டுமாமா மேஜிக்" என சொல்லிச் சிரித்தாள் செம்மொழி.


ராஜலட்சுமி நாராயணசாமி
ராஜலட்சுமி நாராயணசாமி

ராஜலட்சுமி சிறார் எழுத்தாளர், நாவலாசிரியர், கதை சொல்லி. சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் அப்பையநாயக்கன்பட்டி. கோவில்பட்டியில் வசிக்கிறார்.

பூஞ்சிட்டு சிறார் மின்னிதழின் ஆசிரியர்களுள் ஒருவர். கதை சொல்லு கதை கேளு புலனக்குழு மூலமாக குழந்தைகளுக்கு கதைகள் சொல்கிறார்.

இதுவரை 6 நாவல்கள் வெளிவந்துள்ளன. இவரது நாவல்களும் சிறுகதைகளும் பல்வேறு போட்டிகளில் பரிசுகள் வென்றுள்ளன. நீர்க்குமிழி சோப், மாயவனத்தில் ஒரு மந்திரப் பயணம், கடோத்கஜன் ஆகிய சிறார் நூல்கள் பாரதி பதிப்பகத்தில் வெளிவந்துள்ளன. கதைப் புத்தகத்தின் கதை மற்றும் கனலின் பயணம் ஆகிய சிறார் நூல்கள் ஹெர்ஸ்டோரிஸ் பதிப்பகத்தில் வெளிவந்துள்ளன. 'கனலின் பயணம்' நூல் 2025ம் ஆண்டுக்கான பெண்ணெழுத்துப் போட்டியில் முதல் பரிசு வென்றது. கேட்-பீட் என்ற சிறார் நூல் வாசிப்பு இயக்க நூலாக புக்ஸ் பார் சில்ரனால் வெளியிடப்பட்டுள்ளது.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page