top of page

X Y Z தலைமுறைகளும்... நம்முடைய புரிதலும்...


நாம் ஆசிரியர்களாகவோ, பெற்றோர்களாகவோ இருந்து குழந்தைகளோடு போராடுகிறோம் என்று நினைக்கிறோம். ஆனால் ஆழமாக ஆராய்ந்தால், உண்மை வேறாக இருக்கிறது.


எனக்கு இப்போது 45 வயது ஆகிறது. நான் இன்னும் இளமையாக இருப்பதாகவே உணர்கிறேன். ஆனால் உண்மையில் தலைமுறை இடைவெளி (generation gap) எவ்வளவு பெரியது என்பதை கவனித்தால், நாம் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவு அதிகம் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.


Generation X தலைமுறையில் ஆரம்பித்து,

Millennials (Generation Y) (1981௭1996),

Generation Z (1997௭2012),

Generation Alpha (2013௭2024) வரை நாம் பார்த்தால்,

இன்று நாம் எத்தனை தலைமுறைகள் பின்தங்கியிருக்கிறோம் என்பதை நாமே உணரலாம்.

இப்போது நாம் நினைப்பது என்னவென்றால் ௮ “இன்றைய குழந்தைகள் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார்கள், பொறுப்பில்லாமல் வாழ்கிறார்கள்” என்பதே. ஆனால் இந்த மாற்றம் இன்றுதான் தோன்றியதல்ல. Millennials (Generation Y) தலைமுறையிலிருந்தே இந்த மாற்றம் ஆரம்பித்தது.

முன்பு பெரியவர்களின் பேச்சை மட்டுமே கேட்டு வளர்ந்த குழந்தைகள், 1980க்கு பிறகு தங்களது விருப்பங்களையும் தேவைகளையும் சிந்திக்கத் தொடங்கினர். “நட்பு தேவையில்லை” என்ற நிலைமையிலிருந்து “நண்பர்கள் முக்கியம்” என்ற நிலைக்கு மாறியது இந்த தலைமுறைதான்.

இந்த மாற்றத்தின் தொடர்ச்சியாக Generation Z தலைமுறை உருவானது. இவர்களின் காலத்தில் மொபைல், சமூக வலைத்தளம், விளையாட்டு பயன்பாடுகள் போன்றவை எளிதாக அவர்களின் கைகளில் கிடைத்தன. நமக்கு கடினமாக இருக்கும் பல விஷயங்களை அவர்கள் எளிதாக கற்றுக்கொண்டு பயன்படுத்துகிறார்கள்.


“பணம் முக்கியம்” என்ற எண்ணத்தில் ஓடிய உலகில், “என் ஆர்வம் (passion) முக்கியம்” என்று எண்ணி வாழத் தொடங்கிய தலைமுறை இதுதான். மேலும், “ஏன்?” என்று கேள்வி கேட்கத் தொடங்கிய தலைமுறையும் இதுவே. இதனால் மூடநம்பிக்கைகள் குறைந்து, ஆராயும் மனப்பாங்கு அதிகரித்தது.


அடுத்ததாக Generation Alpha தலைமுறை வருகிறது. இவர்கள் பிறந்த காலத்திலிருந்தே டிஜிட்டல் உலகில் வளர்கிறார்கள். காட்சி (visual) மூலம் அதிகமாக கற்றுக்கொள்கிறார்கள். தகவல்கள் அனைத்தும் கண நேரத்தில் கிடைக்கின்றன. அதனால், நம்மை விட அதிகமான அறிவுச்செறிவுடன் வளர்கிறார்கள் என்று கூட சொல்லலாம்.


அடுத்து உருவாகும் Generation Beta தலைமுறை ௮ 2025க்கு பிறகு பிறக்கும் குழந்தைகள். இவர்களின் உலகம் இன்னும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் இருக்கும். ரோபோடிக்ஸ், அனிமேஷன், செயற்கை நுண்ணறிவு போன்றவை இவர்களின் நாளந்தோறும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும்.


இப்படியான சூழலில், “நாங்கள் அந்த காலத்தில் எப்படி வளர்ந்தோம் தெரியுமா?” என்று நாம் சொன்னால், அது அவர்களுக்கு சிரிப்பாகவே தோன்றும்.


ஆசிரியர்களாகவும் பெற்றோர்களாகவும் இருப்பவர்கள், குழந்தைகளை மாற்ற வேண்டும் என்று நினைப்பதற்குப் பதிலாக, நாம் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். குறிப்பாக எதிர்கால தலைமுறையுடன் பழகுவதற்கு அதிக பொறுமையும் புரிதலும் அவசியம்.

“அடியாத மாடு படியாது”, “ஒப்பீடு செய்தால் முன்னேற்றம் வரும்” போன்ற பழைய எண்ணங்கள் இன்றைய குழந்தைகளிடம் செயல்படாது. அவர்களை ஒப்பிடுவது, கண்டிப்பது ஆகியவை அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.


இன்றைய குழந்தைகள், ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் பயப்பட வேண்டுமென்று நினைப்பதில்லை. அவர்கள் நம்மை நண்பர்களாகவே காண விரும்புகிறார்கள். எனவே, “அவர்களை மாற்ற வேண்டும்” என்பதற்குப் பதிலாக, “நாம் அவர்களுக்கு பொருத்தமானவர்களாக மாற வேண்டும்” என்பதே சரியான அணுகுமுறை.


குழந்தைகளுக்கு நாம் எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் அவர்கள் விழாமல் இருக்கவும், விழுந்தால் எழுந்திருக்கவும் நாம் அருகில் இருப்பது போதுமானது.

பெற்றெடுத்தோரும் கற்றுக்கொடுப்போரும் கற்றுக் கொள்கிறோமா?


சுதா பழனிச்சாமி
சுதா பழனிச்சாமி

எழுத்தாளர்,

 கதைசொல்லி.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், சிவகாசி கிளை நிர்வாகிகளில் இருவர். புக் டே, சிவகாசி ரைட்டர்ஸ் போன்ற சமூக வலைதளக் குழுவில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார்.


2 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
gsampath78
23 minutes ago
Rated 5 out of 5 stars.

நேர்மறையான கண்ணோட்டத்தில் இன்றைய காலக் குழந்தைகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. இதோடு கூடுதலாக இன்றைய தலைமுறையினர் முந்தைய தலைமுறையினரிடமிருந்தும் கற்றுக் கொள்ள வேண்டிய தேவை இருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கலாம். அதில் கவனப்படுத்தும் முயற்சியில்தான் பெரியவர்கள் அவர்களிடம் தோற்றுப் போகிறோம்.

Like

Avadaiammal
4 hours ago
Rated 5 out of 5 stars.

அருமை தோழி🤩

Like
bottom of page