எங்கள் வீட்டின் காலை விருந்தாளிகள்!
- அ.குமரேசன்

- Apr 15
- 4 min read

குருவிகளும் புறாக்களும் காக்கைகளும் எவ்விப் பறந்து வானத்தில் ஏறுவதைப் பார்த்தால் எல்லோருக்குமே கொஞ்சம் ஏக்கம் பிறக்கும். நம்மாலும் அப்படிப் பறக்க முடியவில்லையே! எனக்கோ, அதே பறவைகள் எங்கள் பக்கத்து வீட்டு மாடித் தரையில் இறங்குவதைப் பார்த்தாலே கூட ஏக்கம் ஏற்படும். நம்ம மாடிக்கு அந்தப் பறவைகள் வரவில்லையே!
அந்த வீட்டில் குடியிருப்பவர் ஒவ்வொரு நாளும் காலையில் மாடிக்கு வருவார். மடியில் முடிந்து வைத்திருக்கும் ஒரு பொட்டலத்தை எடுத்துப் பிரிப்பார். அதிலே இருக்கிற ஏதோ ஒரு பொருளைக் கையில் அள்ளியெடுத்துத் தரையில் தூவுவார். இங்கேயிருந்து பார்க்கிறபோது அது என்ன என்று தெரிவதில்லை. சில நொடிகளில் எங்கிருந்தோ புறாக் கூட்டம் வரிசையாக வந்து இறங்கும். தரையில் சுற்றிவந்து கீழே கிடப்பதை முழுதாகக் கொத்தித் தின்ற பிறகு திரும்பிப் பறந்துவிடும். புறாக்களோடு கொஞ்சம் காக்கைகளும் சேர்ந்துகொள்ள, அந்தக் காட்சியை விட்டுக் கண்களை விலக்குவதே எனக்குக் கடினமாக இருக்கும்.
"அவங்க இங்கேயும் வந்துட்டுப் போனா நல்லா இருக்குமே!" இந்த எண்ணம் என் மனசுக்குள் சிறகடிக்கும். ஒருநாள் அவரிடம் கேட்டேன்: “பறவைகளுக்கு என்ன தீவனம் போடுகிறீர்கள்? அரிசியா, நெல்லா அல்லது வேற ஏதாச்சும் தானியமா?”
அவர் சொன்ன பதிலைக் கேட்டு எனக்கு வியப்பும் குழப்பமும் கலந்த உணர்வு ஏற்பட்டது. “காரச்சேவு வாங்கி வைத்திருக்கிறேன். அதைத்தான் சின்னச் சின்னத் துண்டுகளாக உடைத்துக் கொண்டுவந்து போடுகிறேன்,” என்றார் அவர். பறவைகளுக்கு இப்படி எண்ணெயில் பொரித்த, உப்பும் காரமும் மிகுந்த உணவுகளைத் தீவனமாகக் கொடுக்கலாமா? கூடாது என்று முன்பு விலங்குகள் நல ஆர்வலர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வந்தது. பறவைகளின் செரிமான மண்டலம் மனிதர்களுக்கு இருப்பதைப் போன்றதல்ல; உப்பு, எண்ணெய் வகையறா உணவுகள் அவற்றின் சிறுநீரகத்தையே கூட பாதித்துவிடும். நம் கண்ணில் படாத இடத்தில் இருந்துகொண்டு அவதிப்பட்டுக்கொண்டிருக்கும்.
பறவைகளை வரவழைக்கும் ஆர்வம் தொடர்ந்தது. காலை நடைப்பயிற்சிக்குப் போகும்போது, வழியில் இன்னொரு வீட்டு மாடிக்கும் பறவைகள் ஏதோ சொந்தக்காரர்கள் போலக் கூட்டம் கூட்டமாக வந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன். கூச்சத்தை ஒதுக்கிவைத்தேன், அந்த வீட்டின் முன் நின்று பறவைகளைக் கவனித்துக்கொண்டிருந்த பெண்மணியிடம் கேட்டேன். அவர் சரியான வழியைக் காட்டினார்.
"அய்யா, பறவைகளுக்குக் கோதுமை, சோளம், கம்பு இன்னும் அது போல இயற்கையான தானியங்களைத்தான் தரணும். அதுதான் அவங்களோட ஆரோக்கியத்திற்கு நல்லது. நான் அப்பப்ப கீரைத் தண்டுகளையும் துண்டு துண்டா நறுக்கிப் போடுவேன்," என்றார். என்னைப் போலவே அவரும் பறவைகளை “அவங்க” என்று குறிப்பிட்டதைப் பாராட்டிவிட்டு விடைபெற்றேன்.
மறுநாளே எங்கள் வீட்டு மாடித் தரையின் ஒரு பகுதியைப் பெருக்கித் தூய்மைப்படுத்தினேன். வீட்டிலிருந்த கோதுமையைக் கைப்பிடி அளவு எடுத்து வந்து தூவினேன். சாப்பிட்ட பிறகு தாகம் எடுக்குமே? இதற்கென்றே முதல் நாள் மாலையில் வாங்கி வந்திருந்த ஓரடிக்கு ஓரடி சதுர வடிவ, நான்கு அங்குல உயரமுள்ள மண் சட்டியில் தண்ணீர் ஊற்றி ஓர் ஓரமாக வைத்தேன். ஒரு புறாவும் வரவில்லை. காரச்சேவு சுவைக்குப் பழகிவிட்டார்கள் போலும் என்று நினைத்துக்கொண்டேன்.
அடுத்த நாள் காலை நடைப் பயிற்சி நேரத்தில், அந்த வீட்டின் முன்பாக நின்றேன். என்னைக் கவனித்துவிட்டவராக அந்தப் பெண் உள்ளிருந்து வந்தார். “நீங்க சொன்ன மாதிரிதான் செஞ்சேன். ஆனா புறா வரலையேம்மா,” என்று கேட்டேன்.
அவர் புன்னகைத்தார். “உடனே வந்துட மாட்டாங்கய்யா. தினமும் அங்கே இரை கிடைக்கும்னு உறுதிப்படுத்திட்டு வருவாங்க. நாலைஞ்சு நாள் கூட ஆகும். பொறுமையா காத்திருங்க, ஆனா தினமும் புதுசா தானியம் வைக்கணும். தண்ணீர் மாத்தணும். அப்புறம், தானியம் வைச்சுட்டு அங்கேயே நின்னுக்கிட்டு இருக்கக்கூடாது… தள்ளிப் போயிடணும்,” என்று கூறினார்.
இந்த ஆலோசனையைப் பின்பற்றினேன். சில நாட்களில் அருமையான அந்த மாற்றம் நடந்தது! முதலில் மூன்று புறாவினர் வந்தார்கள். சில நிமிடங்களில் மேலும் மேலும் பலர் வந்தார்கள். சாம்பல் வண்ணமும் வெள்ளையுமாக இருந்த புறாக்களோடு காக்கைகள் சேர்ந்தபோது ஏதோ ஒரு நவீன ஓவியம் தீட்டப்பட்ட திரை போல இருந்தது. இப்படியே சில நாட்கள் போன பிறகு, மைனாக்கள் இணைந்தார்கள்.
இவற்றைத் தொடர்ந்து சிட்டுக்குருவிகள் வந்து இறங்கினார்கள். ‘அட, நகரத்திலே சிட்டுக்குருவிகள் குறைந்துபோய்விட்ட நிலைமையில் இவர்கள் நம் இடத்திற்கு வந்திருக்கிறார்களே,’ என்ற பரவசத்தை அவர்கள் மனதில் இறக்கினார்கள்! அவர்கள் தானியங்களைக் கொறித்துவிட்டுப் போய்விடுவதில்லை, குட்டிக் குளம் போன்ற அந்த மண் சட்டியில் இறங்கி உல்லாசமாகக் குளியல் போட்டுச் செல்கிறார்கள்! சிறகுகளைப் படபடவென அடித்துக்கொண்டும் தலையை நீரில் மூழ்கியெடுத்துச் சிலுப்பிக்கொண்டும் அவர்கள் ஆட்டம் போடுவதைப் பார்ப்பது நமக்கே ஒரு புத்துணர்ச்சிதான்!
அந்தப் பெண்மணி தன் குடும்பத்தாருடன் ஒருநாள் எங்கள் வீட்டு வழியாகச் சென்றபோது என்னைப் பார்த்துக் கையசைத்தார். நான் அவர்களை உள்ளே அழைத்து, எல்லோருக்கும் இனிப்பு–காரம்–தேநீர் கொடுத்துவிட்டு, பறவை விருந்தினர்கள் வருகை பற்றி உற்சாகத்தோடு சொன்னேன். அவர்கள் மேலும் சில முக்கியமான குறிப்புகளைக் கொடுத்தார்கள். பறவைகள் மீது அவர்கள் எல்லோருக்குமே அன்பும் அக்கறையும் இருப்பதைத் தெரிந்துகொண்டேன். அவர்கள் தெரிவித்த தகவல்களையும், ஆலோசனைகளையும் இங்கே தொகுத்துச் சொல்கிறேன்:
பொதுவாகப் பறவைகள் காலை 6 மணியிலிருந்து 11 மணி வரை இரை தேடும். மாலை நேரத்திலும் சில பறவைகள் இரை தேடிச் செல்லும் என்றாலும் காலையில் மட்டும் நாம் தீவனம் வைப்பதே போதுமானது. மாலையிலும் உணவிட விரும்பினால் அளவு குறைவாக வைக்கலாம்.
பறவைகளுக்கு ஒரு நினைவாற்றல் உண்டு. பாதுகாப்பான நிலைமை இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டார்கள் என்றால் அவர்கள் நாள்தோறும் நம்மை நாடித் தவறாமல் வருவார்கள்.
சிட்டுக்குருவிகள் பொதுவாகக் கூட்டமாக வந்து குளிப்பதைப் பார்த்து ரசிக்கலாம். அமைதிச் சின்னம் என்று நாம் சொல்கிற புறாக்கள் தங்களுக்குள் அவ்வப்போது சண்டையிட்டுக் கொள்ளத்தான் செய்யும். அதைப் பார்த்துக் கவலைப்பட வேண்டியதில்லை. விரைவில் சமாதானமாகிவிடும். காக்கைகள் உணவை உண்பதோடு தொண்டையில் சேகரித்து வைத்துக் குஞ்சுகளுக்காக எடுத்துக்கொண்டும் போவார்கள். பெரும்பாலான பறவைகளும் அப்படித்தானே…
உணவை விட பறவைகளுக்குத் தண்ணீர் முக்கியம். அதுவும் நகரச் சூழலில் அந்த வசதியை நாம் ஏற்படுத்திக்கொடுப்பது பறவைகளுக்குப் பேருதவியாக இருக்கும். பிளாஸ்டிக் பாத்திரங்களில் அல்லாமல் மண் சட்டியில் தண்ணீர் ஊற்றி வைப்பது நல்லது. அது தண்ணீரைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். நம்மைப் போலவே பறவைகளுக்கும் அந்த இயற்கையான குளிர்ந்த நீர் மிகவும் பிடிக்கும். அதற்கு ஏற்ற வகையில், தண்ணீர்ச் சட்டியை, வெயில் படாத நிழலான இடத்தில் வைக்க வேண்டும். தண்ணீர் மாற்றும் வேலையை மாலை நேரத்தில் செய்யலாம். பறவைகளிடம் பாசம் காட்டலாம், ஆனால் சட்டியில் படியும் பாசத்தை அவ்வப்போது கழுவித் துடைத்து பளிச்சென வைத்திருக்க வேண்டும்.
நாம் போடும் கோதுமை, சோளம், கம்பு ஆகிய மூன்றும் புறாக்களுக்குத் தேவையான கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச் சத்தையும், ஆற்றலையும் வழங்கக்கூடிய சிறந்த தானியங்களாகும். இருப்பினும், சரிவிகித உணவிற்காக வாரத்தில் ஓரிருமுறை சிறிதளவு பச்சைப் பயறு அல்லது உளுந்து கலந்து கொடுக்கலாம். இது பறவையினரின் தசை வளர்ச்சிக்கும் இறக்கை வலிமைக்கும் துணையாகும். ஒரு நாள் ஒரு தானியம் என்று சிலர் வைக்கிறார்கள். அப்படியில்லாமல் ஒவ்வொரு முறையும் இந்த தானியங்களைக் கலவையாக வைப்பதே நல்லது.
பறவையாருக்குப் பற்கள் கிடையாது என்பதால், தானியங்களை வயிற்றுக்குள்ளேதான் அரைக்க வேண்டும். அதற்குச் சிறிய கற்கள் தேவைப்படும். உணவுக்கு அருகிலேயே பெரு மணல், சிறு கற்கள், செங்கல் பொடி, முட்டை ஓடு என வைப்பது செரிமானத்திற்கு உதவும்.
மழைக் காலத்திலும் குளிர் காலத்திலும் சிறிதளவு கருப்பு எள், கடுகு சேர்த்துக் கொள்ளலாம். இவற்றின் துணையோடு பறவையன்பர்கள் தங்களின் உடல் வெப்பநிலையைப் பராமரித்துக்கொள்வார்கள்.
தானியங்களையும் பயறுகளையும் சிலர் ஊறவைத்து இடுகிறார்கள். பறவைகள் இயற்கையாக உலர்ந்த தானியங்களையே சாப்பிட்டுப் பழகியிருக்கின்றன. ஊறவைத்துப் பரிமாறுகிறபோது, நொதித்தல் விளைவுகள் ஏற்பட்டுப் பறவைகளின் வயிற்றில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக குஞ்சுகள் மிகவும் சிரமப்படும். ஆகவே உலர்ந்த தானியங்களைப் பரிமாறுவதே ஏற்றது.
இந்த வழிகாட்டல்களை எங்கள் குடும்பத்தில் பெரியவர்கள் குழந்தைகள் எல்லோருமே போட்டிபோட்டுக்கொண்டு செயல்படுத்துகிறோம். புறாக்களும் காக்கைகளும் குருவிகளும் மைனாக்களும் எங்களை வாஞ்சையோடு பார்ப்பது போல உணர்கிறோம். முக்கியமாக ஒன்றைச் சொல்ல வேண்டும். கூண்டில் அடைத்து வைத்து, வேளாவேளைக்கு இரையும் தண்ணீரும் வைத்து அன்பாகப் பராமரிப்பதாக நினைத்துக்கொள்கிறோம். உண்மையில் பறவைகளின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தவே செய்கிறோம். அந்தக் கொடுமையை நாங்கள் செய்யவில்லை என்பதால் காலை நேர மாடி நண்பர்கள் கூடுதல் அன்புடன் வந்து செல்கிறார்கள்.
விரைவில் இந்த இறக்கை விருந்தாளிகளுடன் பச்சைக் கிளிகளும், வீட்டின் பின்னால் உள்ள மரத்தில் அமர்ந்து செல்லும் பெயர் தெரியாத வேறு சில வண்ணப் பறவைகளும் சேர்ந்துகொள்வார்கள் என்று நம்புகிறோம். வரவேற்கக் காத்திருக்கிறோம்.
இப்போதெல்லாம் மாடியில் உணவை வைத்த பிறகு, நான் அந்த வழியாக அவசரமாகச் செல்ல வேண்டியிருந்தாலும் பறவை நண்பர்கள் பதறிப் பறப்பதில்லை. "நம்ம ஆள்தான்" என்று இயல்பாகத் தானியங்களைக் கொத்தி எடுத்துக்கொள்கிறார்கள். தானியக் கலவையைத் தாம்பாளம் போன்ற ஒரு அகலமான மரத்தட்டில் வைக்கிறோம். இன்னொரு சுவையான செய்தி –பக்கத்து வீட்டு நண்பரும் தானிய விருந்தளிக்கத் தொடங்கிவிட்டார்.
“காக்கை குருவி எங்கள் ஜாதி” – இது நம் மகாகவி பாரதி பாட்டு. அவருடைய அனுமதியோடு எனது மாற்று: “காக்கை குருவிகளின் ஜாதி நான்.”

பத்திரிகையாளர் பணியில் நாற்பதாண்டுகளாகப் பயணம். தற்போது ‘செம்மலர்’ இதழின் துணையாசிரியர். நேரடிப் புத்தகங்களும் மொழிபெயர்ப்புகளுமாக 42 புத்தகங்கள். சிறாருக்கென எழுதிய ‘எதிர்ப்பதம்’, ‘வனவிலங்கு உடலில் வரி வந்தது எப்படி’ ஆகிய கதைப் புத்தகங்கள் 2, ‘சாரி பெஸ்ட் ஃபிரெண்ட்’, ‘உலகைச் சுற்றி 80 நாட்கள்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்புகள் 6. கட்டுரையாக்கங்களில் கூடுதல் ஈடுபாடு. உரை நிகழ்த்துவதிலும், குழந்தைகளோடு உரையாடுவதில் இரட்டிப்பாகவும் ஆர்வம்.





Comments