top of page

நம்மைச் சுற்றி உயிருலகம்

9 hours ago
2 min read

28 ஆகஸ்ட் 2026, மாலை 5 மணி அளவில், ‘நம்மைச் சுற்றி உயிருலகம்’ எனும்

தலைப்பில் குழந்தைகளுடன் உரையாட, இந்து தமிழ் திசையின் ஆசிரியரும்,

குழந்தைகள், சிறார் மற்றும் அறிவியல் எழுத்தாளரும், குறிப்பாகச் சூழலியல்

எழுத்தாளருமான திருமிகு. ஆதி வள்ளியப்பன் அவர்கள் நமது மாண்டிசோரிக்கு

வந்திருந்தார்.


மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நமது மாண்டிசோரியில் தொடக்கக் கல்வியை முடித்து

வெளியேறிய குழந்தைகளின் முதல் வாசிப்பு நூலான (படித்துப் படித்துக்

கிழிந்துபோன) ‘கும்பிடுப்பூச்சியின் பயங்கர பசி’ எனும் நூலின் ஆசிரியர் வருவதால்,

அந்நூல் மட்டுமின்றி, பல தலைப்புகளில் அவர் எழுதிய நூல்களையும் நம்முடைய

நூலகத்திலிருந்து அவர் வருகைக்காகக் காட்சிப்படுத்தியிருந்தோம்.


கூடவே, நமது காலைநேர வகுப்பில் உள்ள குழந்தைகள் சேகரித்த பலதரப்பட்ட

இலைகளின் வடிவங்கள், மாலைநேர வகுப்பு மாணவர்கள் தாங்கள் செல்லும்

இடங்களில் எல்லாம் சேகரித்த மாதிரி மண்கள், பூச்சிகள், உயிரிகளின்

எலும்புக்கூடுகள், சிற்பிகள், சங்குகள் எனப் பலவற்றையும் அவருக்காகக்

காட்சிப்படுத்தியிருந்தனர்.



ஆதி வள்ளியப்பன் அவர்கள் ஒரு கதையை குழந்தைகளுக்குப் பொறுமையாக,

அவர்களின் மொழியில் கூறி, அதன் மூலம் நம் சுற்றுப்புறத்தைத் தொடர்ந்து

கவனித்தல், நம்மில் எத்தகைய தாக்கத்தை உருவாக்கும் என்பதைப் பயிற்றுவித்தார்.

அதன் பிறகு, தன் வாழ்விடப் பகுதியில் அவர் கண்ட பலவிதமான பறவைகள் மற்றும்

பூச்சி இனங்களின் படங்களைக் காட்டி, அவற்றின் சிறப்புகள், தேவைகள், உணவுச்

சங்கிலியின் இயல்பு ஆகியவற்றை எடுத்துரைக்கும் வகையில் கலந்துரையாடினார்.

புகைப்படங்கள் திரையில் தோன்றத் தோன்ற, நமது காலைநேர வகுப்புக் குழந்தைகள்

போட்டி போட்டுக்கொண்டு பறவைகளின் பெயர்களைக் கூறி, அவர் உள்பட

அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தனர்.


மாலைநேர வகுப்புக் குழந்தைகளிடம் பறவைகளின் பாலின வேறுபாட்டைக்

கண்டறிதல், அவற்றின் உருவம் மற்றும் நிறத்தில் காணப்படும் மாறுபாடுகளின்

அவசியம், தேவை போன்றவற்றை எடுத்துரைத்தார். அதிலிருந்து எழுந்த சந்தேகங்கள்,

அவற்றின் குரல், ஒலி போன்றவை பற்றியும் கலந்துரையாடினார்.


முடிவாக, குழந்தைகள் அனைவரும் அவருக்கு நூல் பரிசளிக்க, எப்பொழுதும்போல்

குழந்தைகளுக்கு அவரும் சில நூல்களைப் பரிசளித்தார்.

நம் அழைப்புக்கேற்ப, குழந்தைகளின் பெற்றோர்கள் மட்டுமின்றி, அவர்களது

பெற்றோர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.


நம் குழந்தைகளைக் காணும் பொருட்டு மிகுந்த சிரமங்களுக்கிடையிலும் பயணம்

செய்து, கடும் மழையிலும் குழந்தைகளுடன் உரையாடி மகிழ்ந்து, தொடர்ந்து

பயணிப்போம் என அன்பைப் பகிர்ந்த திருமிகு. ஆதி வள்ளியப்பன் அவர்களுக்கும்,

பங்கேற்ற அனைவருக்கும் மிக்க நன்றி கூறி, நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.



ஆனந்த்


அன்பும் அறனும் மாண்டிசோரி – அறிவியல்பூர்வமான மாற்றுக் கல்விமுறையை

அனைவருக்குமான கல்வியாகக் கொண்டு செல்லும் ஒரு முயற்சி.

இங்கு சாமானியர்களின் குழந்தைகள் தரமான வாழ்க்கை முறைக்குத் தங்களைத் தயார்படுத்திக்கொண்டு வருகிறார்கள். 3 முதல் 6 வயது வரையிலான குழந்தைகள் பகல்நேரத்திலும், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகள் மாலைநேரத்திலும், தங்கள் வழக்கமான பள்ளி நேரத்திற்குப் பிறகு தினமும் இரண்டு மணி நேரம் மாண்டிசோரி முறையில் பயின்று வருகிறார்கள்.

தனது இணையர் திருமிகு. மேகலா அவர்களுடன் இணைந்து, கடந்த நான்கு

ஆண்டுகளுக்கும் மேலாக இப்பள்ளியை நடத்தி வருகிறார்.

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page