அறமதியின் கதை - 10 : சட்டங்களும் நம் வாழ்வும்

“நாம் யாரை, எப்படித் தேர்ந்தெடுக்கிறோம் என்பது புரிகிறது. ஆனால் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு என்ன செய்கிறார்கள்?” என்றாள் அன்பினி.
“நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் மக்கள் நேரடியாக ஓட்டுப் போட்டுத்
தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், லோக் சபாவில் அதாவது மக்களவையில்
உறுப்பினராகிறார்கள் (Member of Parliament)” என்றாள் அறமதி.
“அதேபோல, மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் (member of Legislative Assembly) ஆகிறார்கள். சரியா?” என்றாள் அன்பினி.
“மிகவும் சரி” என்றாள் அறமதி.
“அப்போ யாரு ராஜ்ய சபா MP ஆகிறார்கள்?” என்று கேட்டாள் அன்பினி.
“மாநிலங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள், மாநிலங்களவை, அதாவது ராஜ்ய சபா உறுப்பினர்கள் ஆகிறார்கள்.”
“ராஜ்ய சபா எம்பிகளின் பதவி காலம் ஆறு ஆண்டுகள் என்றும், மூன்றில் ஒரு பங்கு பேர் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளில் வெளியேறுவார்கள் என்றும் சிவிக்ஸ் புக்கில் படித்தேன். ஆனால் சில விஷயங்கள் முழுமையாக புரியாமலேயே தேர்வு நேரத்தில் மனப்பாடம் செய்து படித்துவிடுகிறேன்.
இப்போ நீ சொன்ன பிறகு தான் இன்னும் தெளிவாக புரிகிறது.” என்றாள் அன்பினி.
சரியாகத் தான் நினைவு வைத்திருக்கிறாய். ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெற்று புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்கிறார்கள். மேலும், கலை,இலக்கியம், அறிவியல், சமூக சேவை போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் 12 பேரை மாநிலங்களவை எம்பிக்களாகக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.” என்றாள் அறமதி.
“அப்படி என்றால் மக்களவை போல அல்லாமல் மாநிலங்களவையில் எப்போதும் உறுப்பினர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள். இல்லையா?” என்றாள் அன்பினி.
“ஆமாம். அதனால் தான் அதை நிரந்தர அவை என்றும் சொல்கிறோம்” என்றாள் அறமதி.
“நாடாளுமன்றம்.. சட்டமன்றம் .. இங்க தான் எல்லா சட்டங்களும்
இயற்றப்படுகிறதா?” என்றாள் அன்பினி.
“ஆமா. இந்திய ஒன்றியத்தின் சட்டங்கள் நாடாளுமன்றத்திலும், அந்தந்த மாநிலத்தின் சட்டங்கள் சட்டமன்றத்திலும் இயற்றப்படுகிறது.” என்றாள் அறமதி.
“சட்டம் எப்படி இயற்றப்படுகிறது? அதைப் பற்றி கொஞ்சம் சொல்லேன்.” என
கேட்டாள் அன்பினி.
“பொதுவாக, ஒரு மசோதா முதலில் ஏதேனும் ஓர் அவையில் தாக்கல் செய்யப்படும். அங்கு விவாதிக்கப்பட்டு, பெரும்பான்மை வாக்குகள் பெற்றபின், நிறைவேற்றப்பட்டு, மற்றோர் அவைக்கு அனுப்பப்படும். அந்த அவையும் அதை நிறைவேற்ற வேண்டும்.
பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றதும் அது சட்டமாகிறது. இதுவே மாநிலத்தில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலைப் பெற்ற பின் சட்டமாகிறது ” என்று விளக்கினாள் அறமதி.
அது வரை உற்சாகமாக இருந்த அன்பினி, சட்டென அமைதியானாள். எதையோ நினைத்தபடி சொன்னாள்,
“இந்த சட்டங்கள் தான் நம்ம வாழ்க்கையைத் திருப்பிக் கூடப் போட்டு விடுகிறது...”.
அன்பினி முகத்தில் சோகம் அப்பியது. கண்களில் கண்ணீர் திரண்டது.
அறமதிக்கு அந்தக் கண்ணீரில் எல்லாம் தெரிந்தது.
அன்பினியின் டைரியில் ஒரு கடிதம் இருந்தது.
அன்புள்ள Dr. அனிதா அக்காவிற்கு,
நான் அன்பினி எழுதுகிறேன்.
நான் இன்று டெல்லி வந்திருக்கேன்.
நீங்க அன்று ஆரம்பித்து வைத்த நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம், இப்போ பெரிசாகி இருக்கு. நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி இருக்கு. மாணவர்கள் கொந்தளிச்சு போயிருக்காங்க. இப்போ அது ஒரு மக்கள் போராட்டமாக மாறி இருக்கு.
தமிழ் நாடு SJSF மாணவர்கள் எல்லோரும் டெல்லி ஜந்தார் மந்தர் போயிருந்தோம்.
நாங்களும் நீட் தேர்வுக்கு எதிரா போராட்டம் செய்தோம்.
ஆளுக்கொரு போர்ட் பிடிச்சிருந்தோம். நான் என் கையில உங்க ட்டோவோட
‘நீட் வேண்டாம்’ என்று எழுதியிருந்ததைத் தான் பிடித்திருந்தேன்.
லட்சக்கணக்கில் நீட் தேர்வுக்கான கோசிங்க பீஸ் இருக்கு. அதை எப்படி சாதாரண ஏழை எளிய மாணவர்கள் கட்ட முடியும். நம்ம ஸ்டேட் போர்ட் சிலபஸ்ல படிக்கிறோம், ஆனா தேர்வு வேற சிலபஸ்ல வச்சா, அது எப்படி சரியாகும்?
அம்மு என் ஃப்ரெண்ட்.. என் சீனியர்.. இந்த தேர்வு தருகிற மன அழுத்தம் தாங்க
முடியாம தற்கொலை பண்ணிக்கிட்டா. நாங்க எல்லாம் அழுதோம். உங்களைப் போல, அம்முவைப் போல இனி யாரையும் இழக்கக் கூடாது.
உங்கள் தங்கை,
அன்பினி’
“இந்தக் கடிதம்.. நீ என் டைரியிலிருந்து எடுத்தாயா?” என்றாள் அன்பினி.
“ஆம். அதோடு நீ எழுதியிருந்த உன்னுடைய போராட்ட அனுபவங்களைப் பற்றியும் படித்தேன்.” என்றாள் அறமதி.
“ஜந்தர் மந்தர் போராட்டம்.. மாணவர்கள் போராட்டம். அது தான் நான் முதன் முதலில் கலந்து கொண்ட போராட்டம்.” என்றாள் அன்பினி.
“நீங்கள் முழக்கமிட்டது என் காதுகளில் இப்போதும் கேட்கிறதே..” என்றாள் அறமதி.
"நீட் வேண்டாம்... நீட் வேண்டாம்..."
"சமத்துவத்தை சிதைக்கும் நீட் வேண்டாம்"
"மாணவர்கள் உயிரைப் பறிக்கும் நீட் வேண்டாம்"
என்ற தொடர் முழக்கங்கள் எதிரொலிகளாக அவர்களைச் சுற்றிக் கேட்டன.
“அனிதா அக்காவின் அப்பா ஒரு சாதாரண கூலித் தொழிலாளி. அவுங்க அம்மா மருத்துவ வசதி இல்லாம இறந்துட்டாங்க. அது மாதிரி இனி யாரையும் இழக்கக் கூடாது என்று தான் அவுங்க டாக்டர் ஆக ஆசைப்பட்டாங்க. உனக்கு தெரியுமா அறமதி.. எனக்கு அனிதா அக்காவைப் பற்றி சொன்னதே அம்முதான்.. ஆனா...”
அன்பினி அழுதாள்.
“அழாதே அன்பினி. எனக்கு புரிகிறது. ஒரு தோழியின் இழப்பு கொடுமையானது.”
அறமதி அன்பினியை கட்டிப் பிடித்துக்கொண்டாள்.
“அம்முவும் டாக்டர் ஆக ஆசைப்பட்டாங்க. நீட் கோச்சிங், +2 தேர்வு தயாரிப்பு,
இதுக்கெல்லாம் இடையிலும் தொடர்ந்து SJSF பயிற்சிகளுக்கும் வருவாங்க. ஆனால் கடைசி 2 மாதம் வரவில்லை. ரொம்ப தீவிரமாக படிச்சாங்க...
நீட் தேர்வு நடந்த அன்று தான், நான் அவுங்கள கடைசியாக சந்தித்தேன். ‘ரொம்ப நல்லா எழுதியிருக்கேன்’ என்று சொன்னாங்க. ஆனால், தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு என்று அறிவிப்பு வந்தது.
அம்மு வீட்டில் ரொம்ப கஷ்டப்பட்டு தான் கோச்சிங் ஃபீஸ் எல்லாம் கட்டினாங்க..
அவுங்களும் ஏழை மக்களுக்கு சேவை செய்யணும் என்று தான் டாக்டர் ஆக
ஆசைப்பட்டாங்க. ஆனா.. அதெல்லாம் நடக்குறதுக்கு முன்னாடியே.. அவுங்க..” என்று மீண்டும் அழுதாள் அன்பினி.
அன்பினியைத் தேற்ற வழி தெரியாமல் அறமதி அமைதியாக இருந்தாள். சில
காயங்களுக்கு காலம் மருந்தாகிறது. ஆனால் சில காயங்களுக்கு சமூக மாற்றம் மட்டுமே மருந்தாகும் என்று நினைத்துக்கொண்டாள்.
(அறிவோம் தெளிவோம்)
எழுத்தாளர், கதைசொல்லி.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறம் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட முகிழ் சிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தற்போது துபாயில் வசிக்கிறார்.







Comments