ஞானச் செருக்கு
- கோவி.பால.முருகு

- 19 hours ago
- 1 min read

ஞானச் செருக்குடை பாரதி-எழு
ஞாயிறாம் விடுதலைச் சாரதி!
வானம் அளந்திடும் மாருதி-அவன்
வடித்ததோ இன்ப வாரிதி!
தேனைச் சொரிந்திடும் தமிழ்க்கவி-அவன்
தேடிய விடுதலைப் படைக்கவி!
கானகம் மலைகளின் குடைக்கவி-அதைக்
கவிதை வடித்த கலைக்கவி!
கண்ணன் பாட்டைப் பாடினான்-அவன்
கண்ணம் மாவுடன் ஆடினான்!
வண்ணக் கவிதைப் பாடினான்-அதில்
வாழ விடுதலைத் தேடினான்!
பாஞ்சாலி சபதம் பாடினான்-அதில்
பாரதத் தாயை நாடினான்
வாஞ்சை விடுதலைத் தேடினான்-கவி
வடித்தே வீரத்தில் கூடினான்!
எண்ணரும் மொழிகளை அறிந்தவன்-அதில்
ஏற்றம் தமிழெனப் புரிந்தவன்!
பண்ணருங் கலைகளில் உயர்ந்திட-அவன்
பாடினான் உலகோர் அயர்ந்திட!
பாரதித் தேரை இழுத்திடு-அவன்
பாக்களைப் புகழில் உயர்த்திடு!
பாரதிர நீயும் உரைத்திடு-பாரதிப்
பாடலில் நாட்டைக் கரைத்திடு!

இயற்பெயர் பால.முருகுவரதராசன்
தமிழாசிரியர், தலைமையாசிரியர்(பணிநிறைவு)
15 நூல்கள் எழுதியுள்ள இவர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தீக்கதிர் வண்ணக்கதிர் பாலர் பூங்காவில் எழுதி வருகிறார்.
பத்துக்கு மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.





Comments