top of page

குழந்தைகளின் உளவியலைக் கட்டமைக்கும் புத்தகங்கள்

மூ.அப்பணசாமி, ஆலோசகர், தமிழ்நாடு பாடநூல் கழகம்.



நேர்காணல் - சாலை செல்வம்


  1. 1.தங்கள் பொறுப்பில் செயல்பட்டுவரும் இளம்தளிர் இலக்கியத்திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து....

கொரோனா பெரு முடக்கம் உலகம் முழுவதும் மழலையர் வகுப்பு குழந்தைகளில் இருந்து மேனிலை மாணாக்கர் வரை குழந்தைகளிடம் உளவியல் சிக்கல்களை ஏற்படுத்தின. இதனால் உருவான கற்றல் இடைவெளியால் குழந்தைகளை மீண்டும் வகுப்பறைக்குள் கொண்டு வருவது சவாலாக இருந்தது. ஏற்கனவே, பாடத்திட்டம் கடந்த வாசிப்பு மற்றும் கலை முயற்சிகள் மாணாக்கர் இடையே குறைந்து வருகிறது. கடந்த 20 -30 ஆண்டுகளில் வாசிப்பு தொடர்பாக எதிர்மறை தலைமுறை இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனால், குழந்தைகளை மீண்டும் கற்றல் செயல்பாடுகளுக்குள் கொண்டுவருதலையும் குழந்தைகளின் படைப்பாற்றலை ஊக்குவித்தலையும் இணைக்கும்  வகையிலும் அரசு அறிவித்த திட்டம் இளந்தளிர் இலக்கியத் திட்டம். கடந்த நான்காண்டுகளாக செயபடுத்தி வருகிறோம்.


சிறார் மனதை கதைகளாலும் பாடல்களாலும், நாடகங்களாலும் காமிக்ஸ்களாலும் வண்ணங்களைக் கொண்டு  அழகூட்டும் முயற்சியே

இத் திட்டம்.


சிறார்களின் படைப்பூக்கத்தினையும் சமூகத் திறன்களையும் ஊக்கப்படுத்தும் 

முயற்சியாக  சிறார்களுக்கான  நூல்களை ஒரு கதை – ஒரு புத்தகம் என்ற அளவில் தமிழ்நாட்டின்  தலை சிறந்த சிறார் படைப்பாளிகளைக் கொண்டு எழுதச் செய்து சிறந்த ஓவியர்களின் கலை வண்ணத்தில் அனைத்தும் வண்ணங்களாக வெளியிடப்படுகின்றன. 


ஒரு அரசு இதுபோன்று பாடத்திட்டம், மதிப்பெண் போன்ற இலக்குகளோடு சிறார்களின்  படைப்பாற்றலையும் வாசித்தலையும் கவனப்படுத்துகிறது என்ற வகையில் இது ஒரு முன்னோடித் திட்டம் ஆகும். ஏனெனில் இதுபோன்ற பணிகள் வேறு மாநிலங்களில் அரசால் மேற்கொள்ளபடுகிறதா என்று தெரியவில்லை.  


  1. இளம்தளிர் இலக்கியத்திட்டத்தில் எந்த மாதிரியான சிறார் புத்தகங்கள்  கொண்டுவரப்படுகின்றன. 


5-8, 9 -11- 12 -14, பதின் பருவத்தினர் ஆகிய நான்கு வயதுப் பிரிவுகளாகப் பிரித்து அக்குழந்தைகளுக்குப் பொருத்தமான கதைகளும் ஓவியங்களும் தீட்டப்படுகின்றன. அறிந்ததில் இருந்து அறியாததை நோக்கி என்ற அடிப்படையில் கதைக்கருக்கள் உருவாக்கப்பட்டு பன்மையம், சமூக நீதி, சமத்துவம், சுற்றுச்சூழல் தூய்மை ஆகிய விழுமியங்களில் சரியான தகவல்கள் உறுதிப்படுத்தப்படுகிறது. 


  1. இளம்தளிர் இலக்கியத்திட்டத்தின் கீழ் சிறார் புத்தகங்களின் பயன்பாடு குறித்து...


ஒரு கதைக்கு அதிகபட்சம் 500 – 600 சொற்கள்; 25 - 40 விழுக்காட்டுக்குள் எழுத்து; 60 – 75 விழுக்காடு வண்ண ஓவியங்கள் என வடிவமைக்கப்பட்டன.


எழுத்தாளர்களுக்கு மட்டுமல்லாமல் ஓவியர்களுக்கும் பயிலரங்கம் ஏற்பாடு 

செய்யப்பட்டு படைப்பாளிகளும் ஓவியர்களும் இணைந்து 

இளஞ்சிறார்களுக்கான படைப்புகளை உருவாக்கினர். 

அரசுப்பள்ளி மாணவர்களின் ஆளுமை மேம்பாடு, சிக்கல்களைத் தீர்த்தல், பற்றுதலை உருவாக்குதல்,தாமாகவே கதைசொல்லக்கற்றல் 

கதை சொல்லியாதல்,கற்றல் திறன் மேம்பாடு போன்ற திறன்கள் மேம்பட்டால் 

மகிழ்வோம். 


  1. இளம்தளிர் இலக்கியத்திட்டத்தின் கீழ் வெளியாகும் புத்தகங்களுக்கும்

     மற்ற புத்தகங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? 


குழந்தைகள் தாமாகப் புதிய சொற்பிரயேகங்களைப் பயன்படுத்துதல், மாற்றி யோசிக்கும் திறன், பகுத்தாய்வை வளர்த்தல், உணர்ச்சிகர சூழலைத் தாமே கையாளுதல்; நினைவுகளை மீட்டுதல், கற்பனையைப் படைப்பாக்குதல்; அறம் வளர்த்தல்; பண்பாட்டை அறிதல்; உணர்ச்சிகளைக் கையாளுதல், எப்போதும் பற்றுணர்வை உருவாக்குதல்; நகைச்சுவை, பகடி ஆற்றலை வளர்த்தல். 


இதற்காக சமத்துவம், பன்மையம், சிறார் உரிமைகள், பால் பாகுபாடு அகற்றல், உடலியல் மாற்றங்கள், சமூக நீதி, சுற்றுச்சூழல், அறிவியல் மனப்பான்மை, ஜனநாயகம்,உள்ளூர் வரலாறு என பல்வேறு பொருண்மைகள் முடிவு 

செய்யப்பட்டன. 


பொதுவாக நமது சிறார்களுக்கு அறிமுகமாகும் கதைகள், ஓவியங்கள் ஒன்று ஐரோப்பிய முகங்களும் பண்பாடும் சூழலும் கொண்டதாக இருக்கிறது. அல்லது இந்திய பெருங்கதையாடலை ஒட்டியதாக அமைகிறது. நமது குழந்தைகளுக்கான கதைகளோ ஓவியங்களோ தமிழ் பண்பாட்டையோ சூழலையோ காண்பிக்கிறதா என்பது கேள்விதான். மேலும், ஒரு குடும்பம் என்றால் Stereotype ஆக அப்பா, அண்ணன்கள் புத்தகம் படிப்பார்கள், கணினியில் அமர்ந்திருப்பார்கள். அம்மா, அக்கா, அத்தை, பாட்டி யாராக இருந்தாலும் பெண் என்றால் வீட்டு வேலைகளில் தான் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். அதேபோல, சாதி மறுப்பு, மத மறுப்பு திருமணம் செய்து கொண்ட பெற்றோர்கள், ஒற்றைப் பெற்றோரின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், மாற்றுப் பாலினத்தவர்கள், சிறுபான்மையினர் இணைந்ததுதான் சமூகம், பள்ளி, பொது வெளிகள். இதுபோன்ற பன்மைத்துவம் எங்களது படைப்புகளில் மிளிர்கின்றன.


இந்த பொருண்மைகளை முன்பே தீர்மானம் செய்து அதைப்படைப்பாக்க எழுத்தாளர்களுக்கு அனைத்து சுதந்தரமும் காலமும் அளிக்கப்படுவதால் இது சாத்தியம் ஆகிறது. படைப்புச் சுதந்தரமும் பயிற்சியும் இங்கு அபூர்வமாக இசைவு (Fusion)  பெறுகிறது. 


  1. இளம்தளிர் இலக்கியத்திட்டத்தின் வருங்கால திட்டங்கள் குறித்து… 


கடந்த 4 ஆண்டுகளில் 200க்கும் அதிகமான சிறார் நூல்கள் வெளியாகியுள்ளன.  இந்த அனைத்து நூல்களும் தமிழ்நாட்டின் அனைத்து அரசுப் பள்ளி 

நூலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 

ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொறு புத்தகமாகப் பார்க்கையில்.. 

நான்காண்டுகள் தொடர்ந்து மாராத்தான் பயிலரங்குகள்..

புது முயற்சியாக பொருண்மை அடிப்படையில் தலைப்புகள் கொடுத்து 

அதில் விருப்பமான பொருண்மைகளைத் தேர்வு செய்து ஈடுபட்டனர்.


படைப்பாளியின் சுதந்திரத்தில் தலையிடுவது போல தெரிந்தாலும் காலத்தின் 

தேவை கருதி படைப்புகளை எழுத மூத்த எழுத்தாளர்கள் முதல் முதல் முறை 

எழுத்தாளர் வரை சுமார் 50  எழுத்தாளர்கள் பங்கேற்றனர். எழுத்து தெரியாத குழந்தையில் இருந்து  உயர்நிலை  மாணாக்கர்  வரை  படைப்புகள் உருவாக்கப்பட்டன. 


இது ஒரு அபூர்வமான Fusion ஆகும். 


இன்னும் பல நூறு புத்தகங்கள் வெளியாக உள்ளன. ஆண்டுக்கு 100 சிறார்  நூல்களகவது  உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

குறிப்பாக, தமிழ்ப்பண்பாட்டின் வரலாற்றினை சிறார்கள் அறியச்செய்யும் வகையிலான காமிக்ஸ் தொடர் நூல்கள் புது முயற்சியாக அமையும், மேலும். உலக கிளாசிக்ஸ் நாவல்களின் குழந்தைகளுக்கான தமிழ் பதிப்பு, மாங்கா காமிக்ஸ் போன்ற புகழ்பெற்ற சிறார் காமிக்ஸ் தமிழாக்கம், ஈரான், துருக்கி சிறார் கதைகள் தமிழாக்கம், 5 வயதுக்குக் கீழான மழலைகளுக்கான படப் புத்தகங்கள் இவற்றில் உள்ளடக்கம்.


சாலை செல்வம்
சாலை செல்வம்

பெண்ணியலாளர், கல்வியியலாளர்,

30 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி உரிமை, மாற்றுக்கல்வி குறித்து பல நூல்களை எழுதியிருக்கிறார்.

புனைவு, மொழிபெயர்ப்பு, கட்டுரை, குறித்து ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page