top of page

AI தொழில்நுட்பமும் தமிழ் சிறார் இலக்கியமும்: எதார்த்தமும் எதிர்காலமும்


(கேள்விகள்: சுகன்யா ராமநாதன்)



1.“AI தொழில்நுட்பம் சிறார் இலக்கியத்தில் ஏற்படுத்தவிருக்கும் தாக்கத்தைப் பற்றி உங்கள் பார்வை என்ன?”


AI தொழில்நுட்பம் சிறார் இலக்கியத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. உலக அளவில் இலக்கியத்தையே அது மாற்றத் தொடங்கிவிட்டது. ஆனால் முதலில் ஒரு கசப்பான உண்மையைச் சொல்ல விரும்புகிறேன். தமிழ் சிறார் இலக்கியச் சூழல் மட்டுமல்ல, பொதுவான தமிழ் இலக்கியச் சூழலும்கூட AI புரட்சியை எதிர்கொள்ளத் தயாராக இல்லை. சொல்லப்போனால், AI பற்றி உரையாடுவதற்கான அடிப்படைத் தயாரிப்பைக்கூட நாம் இன்னும் செய்துகொள்ளவில்லை; உரையாடல்களையே தொடங்கவில்லை. தங்களுடைய இடத்தையும் இருப்பையும் அது அசைத்துவிடுமோ என்ற அச்சத்துடனேயே பலர் அதை அணுகுகின்றனர். AI படைப்பாற்றலுக்கு எதிரானது, AI என்பது மற்றவர்களின் சிந்தனைதானே, AI என்ன சொன்னாலும் செயற்கையானது தானே என்று சொல்லி அதை வீட்டிற்கு வெளியே நிறுத்த முயல்கிறோம். ஆனால் அது வீட்டிற்குள் எப்போதோ வந்துவிட்டது.


அதன் தாக்கத்தையும் பயன்பாட்டையும் தவிர்க்க முடியாது; தவிர்க்க முயன்றால் இழப்பு நமக்குத்தான். மின்சாரம் வந்தபோது, இல்லை, நான் அகல்விளக்கில்தான் வாசிப்பேன் என்று பிடிவாதமாக இருந்திருந்தால், பல புதிய வாய்ப்புகளை இழந்திருப்போம். புதிய தொழில்நுட்பத்தை மறுப்பது என்பது அதனால் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளையும் மறுப்பதுதான்.

மேலோட்டமான விவாதங்களும் விடுபட்ட கேள்விகளும்

உலகம் AI மூலம் இலக்கியம் எப்படி மாறப்போகிறது என்று விவாதித்துக்கொண்டிருக்கிறது.


நாம் இன்னும் AI மூலம் கதை எழுதலாமா, ஓவியம் வரையலாமா என்று மட்டுமே விவாதித்துக்கொண்டிருக்கிறோம். இது மிகவும் மேலோட்டமான அணுகுமுறை. வாசகர் அனுபவத்தின் எல்லாத் தளங்களிலும் இதன் தாக்கம் வந்துவிட்டது. நூல் பரிந்துரை, உள்ளடக்கம், வடிவமைப்பு, சந்தைப்படுத்தல், தயாரிப்பு, விமர்சனம், விளம்பரம், ஓவியங்கள், பிழை திருத்தம், எழுதுவதற்கான உதவி, பதிப்பாசிரியர் பணி என அனைத்திலும் AI நுழைந்துவிட்டது.


முதலில் நம்மை நோக்கியே சில கேள்விகளை எழுப்ப விரும்புகிறேன்.

தமிழில் எத்தனை சிறார் எழுத்தாளர்களும் கலைஞர்களும் AI குறித்த அடிப்படை அறிவைப் பெற்றிருக்கிறார்கள்? எத்தனை ஓவியர்கள் AI தொழில்நுட்பத்தின் தாக்கத்தைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்? எத்தனை பதிப்பகங்கள் இதற்கான கொள்கைகளை உருவாக்கியிருக்கின்றன? AI உருவாக்கும் உள்ளடக்கத்தின் உண்மைத்தன்மை, பதிப்புரிமை, மொழித்தரம், பாரபட்சம் ஆகியவற்றைப் பரிசோதிக்க நம்மிடம் என்ன கட்டமைப்பு இருக்கிறது? உண்மையில், டிஜிட்டல் கல்வியறிவிலேயே நாம் இன்னும் பின்தங்கித்தான் இருக்கிறோம். AI கல்வியறிவு (AI Literacy) காலத்தின் கட்டாயமாகிவிட்டது.


இன்னொரு விஷயத்தையும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். தமிழ் சிறார் இலக்கிய உலகம் தன்னுடைய அடிப்படைப் பிரச்சினைகளையே  இன்னும் முழுமையாக எதிர்கொள்ளவில்லை.


குழந்தைகள் என்ன வாசிக்கிறார்கள் என்பது குறித்துப் போதுமான ஆய்வுகள் இல்லை. எந்த வயதுக் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான புத்தகங்கள் தேவை என்பது குறித்த தரவுகள் இல்லை. சிறார் இலக்கியத்திற்கான  ஆழமான விமர்சன மரபு பலவீனமாக இருக்கிறது. ஓவியர்களின் படைப்புரிமை, அவர்களின் உழைப்புக்கான மதிப்பு குறித்த விவாதங்கள்கூட போதுமான அளவில் இல்லை. இந்த நிலையில் AI வந்து நம்மைத் தட்டிக்கேட்கிறது.


சிறார் இலக்கியத்தின் மையம் கதை சொல்லலும் குழந்தையின் வாசிப்பு அனுபவமும்தான். ஒரு நூல் குழந்தையின் கைக்குச் சென்றடைவதற்கு ஓவியம், வடிவமைப்பு, விலை நிர்ணயம், சந்தைப்படுத்தல், விமர்சனம், பதிப்பாசிரியர் பணி எனப் பல அடுக்குகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. இவை அனைத்திலும் AI ஏற்படுத்தப்போகும் மாற்றங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.


சிறார் இலக்கியம் குறித்த அடிப்படை உரையாடலே நம்மிடம் போதுமான அளவில் இல்லை. நிறைய நூல்கள் வெளிவருகின்றன; அது நம்பிக்கையளிக்கும் சூழல். ஆனால் மனம் திறந்த உரையாடல்கள் இங்கே போதுமான அளவில் நடக்கின்றனவா என்றால் மௌனமே பதில். இந்நிலையில் AI குறித்த உரையாடலை எப்படித் தொடங்கப்போகிறோம்?

AI காலத்தில் எழுத்தாளரின் தனித்துவம் என்னைப் பொறுத்தவரை , AI எழுத்தாளர்களின் வேலையைப் பறிக்குமா என்ற விவாதம் மிகவும் சலிப்பானது. அந்தக் கேள்வியைவிட முக்கியமான கேள்வி ஒன்றிருக்கிறது.


AI வந்த பிறகும் நாம் எழுதும் கதைகளை ஒரு குழந்தை ஏன் வாசிக்க வேண்டும்?


இந்தக் கேள்வியை ஒவ்வொரு எழுத்தாளரும் தனக்குத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும்.


AI சில நொடிகளில் ஒரு கதையை எழுதிவிடுகிறது. சில நிமிடங்களில் ஓர் ஓவியத்தை உருவாக்கிவிடுகிறது. ஒரு கதையை வேறு மொழிக்கு மொழிபெயர்த்துவிடுகிறது. குழந்தையின் வயதுக்கு ஏற்ப ஒரு கதையின் மொழியையும் மாற்றிவிடுகிறது. இவை எல்லாம் இப்போது சாத்தியமாகிவிட்டன.


ஆனால் ஒரு கதையை உருவாக்குவதற்கும், ஒரு குழந்தையின் மனதில் நீண்ட காலம் நிலைத்து நிற்கக்கூடிய கதையை உருவாக்குவதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.


அப்படியானால் எழுத்தாளரின் தனித்துவம் எங்கே இருக்கிறது? வாழ்க்கையைப் பார்க்கும் பார்வையில் இருக்கிறதா? குழந்தைகளைப் புரிந்துகொள்வதில் இருக்கிறதா? மொழியின் நுணுக்கத்தில் இருக்கிறதா? கதையில் இருக்கும் புதிய சிந்தனையில் இருக்கிறதா? ஏற்கெனவே வாசித்தவற்றின் தாக்கத்திலிருந்து வெளியேறி, புதிய களங்களையும் புதிய சிந்தனைகளையும் நோக்கி நகர்வதில் இருக்கிறதா? இவற்றில் எதுவும் இல்லாமல் பழக்கப்பட்ட கதைக்களங்களையும் நீதிகளையும் மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டிருந்தால் AI-யுடன் போட்டியிட முடியாது. உண்மையில் போட்டியிட வேண்டிய அவசியமுமில்லை.


படைப்பாற்றலின் பலவீனங்களை அம்பலப்படுத்தும் AI


AI நம்முடைய படைப்பாற்றலை அழிக்கப்போவதில்லை. ஆனால் அதன் பலவீனங்களை அம்பலப்படுத்தப்போகிறது. தங்களுடைய படைப்புகளையும் பணிகளையும் மேம்படுத்திக்கொள்ள எழுத்தாளர்களும் ஓவியர்களும் பதிப்பகங்களும் AI-யைக் கறாரான விமர்சனக் கருவியாகப் பயன்படுத்தலாம். ஒரு நாவலைக் கடுமையாக விமர்சிக்கச் சொன்னால், அதன் கதை அமைப்பு, கதாபாத்திர வளர்ச்சி, மொழி, தர்க்கம், தொடர்ச்சியின்மை எனப் பல கூறுகளில் நாம் கவனிக்கத் தவறியிருக்கக்கூடிய விஷயங்களை அது சுட்டிக்காட்டும். ஆனால் AI வழங்கும் விமர்சனத்தையும் நாம் பரிசோதிக்க வேண்டும். ஏனெனில் AI சில நேரங்களில் நுட்பமான குறைகளைக் கண்டுபிடிக்கும்; சில நேரங்களில் இல்லாத குறைகளையும் உருவாக்கும்.


AI தொழில்நுட்பத்தின் திறன்கள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. இன்று நாம் காணும் திறன்களே சில மாதங்களில் மாறியிருக்கும். இதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.


ஓவியர்கள் மற்றும் பதிப்பகங்களின் சவால்கள் சிறார் இலக்கிய  ஓவியர்களிடமும் இதே கேள்வியைக் கேட்க வேண்டும். AI ஓவியம் வரைகிறது என்பதற்காக ஓவியர்கள் தேவையற்றவர்களாகிவிட மாட்டார்கள். ஆனால் ஒரு ஓவியரின் தனித்துவமான கற்பனை, காட்சிமொழி, குழந்தைகளின் உலகத்தைப் புரிந்துகொள்ளும் திறன் ஆகியவைதான் அவருடைய உண்மையான பலம். வெறும் அலங்கார ஓவியங்களை உருவாக்குவதற்காக மட்டுமே ஒருவர் தன்னுடைய திறனைச் சுருக்கிக்கொண்டால் சிக்கல் அவருக்குத்தான்.


பதிப்பகங்களுக்கும் ஒரு கேள்வி இருக்கிறது. AI மூலம் மிகக் குறைந்த செலவில் நூற்றுக்கணக்கான புத்தகங்களை உருவாக்க முடியும் என்பதற்காக அதைச் செய்யத் தொடங்கினால், சிறார் இலக்கியத்தின் தரம் என்னவாகும்? ஏற்கெனவே நூல்களின் எண்ணிக்கை, கொள்முதல், தரம் ஆகியவற்றைச் சுற்றிப் பல கேள்விகள் இருக்கின்றன; AI அவற்றை இன்னும் தீவிரமாக்குகிறது. இனி புத்தகங்களின் எண்ணிக்கையை மட்டுமல்ல, அவற்றின் தரம், தனித்துவம், உண்மைத்தன்மை ஆகியவற்றையும் பேச வேண்டியிருக்கிறது.


பதிப்புரிமையும்... நெறிமுறைகளும்...


இன்னொரு முக்கியமான கேள்வி பதிப்புரிமை தொடர்பானது. எழுத்தாளர்களின் படைப்புகளையும் ஓவியர்களின் கலைப்படைப்புகளையும் AI பயிற்சிக்குப் பயன்படுத்தும்போது அவர்களுடைய உரிமைகள் என்னவாகின்றன? AI உதவியுடன் உருவாக்கப்படும் நூல்களில் எழுத்தாளர், ஓவியர், பதிப்பகம் ஆகியோரின் பங்களிப்பு எவ்வாறு வெளிப்படுத்தப்பட வேண்டும்? AI மூலம் உருவாக்கப்படும் இலக்கியத்திற்கும், AI-யின் உதவியுடன் மனிதர்கள் உருவாக்கும் இலக்கியத்திற்கும் இடையிலான வேறுபாட்டை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த வேறுபாடு குறித்த உரையாடல் நம்மிடம் அவசியம் தேவை.

குழந்தைகளின் உலகமும் ஆபத்துகளும் இன்னொரு பெரிய கவலை இருக்கிறது. AI காலத்தில் குழந்தைகள் வாசகர்களாக மட்டுமல்ல, உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களாகவும் மாறுவார்கள். தங்களுக்கான கதைகளை உருவாக்குவார்கள்.


தங்களுக்குப் பிடித்த கதாபாத்திரங்களுடன் உரையாடுவார்கள். தங்களுடைய கற்பனை உலகங்களை உருவாக்குவார்கள். இது மிகப்பெரிய வாய்ப்பு.

ஆனால், எல்லாவற்றுக்கும் AI-யிடம் பதில் கேட்கும் குழந்தைகளாக அவர்கள் மாறிவிட்டால் என்ன செய்வது? ஒரு கேள்வியைத் தாங்களாக உருவாக்கும் திறன் குறைந்துவிட்டால் என்ன செய்வது? தங்களுடைய மொழியில் சிந்திப்பதற்குப் பதிலாக AI கொடுக்கும் மொழியிலேயே சிந்திக்கத் தொடங்கினால் என்ன செய்வது?


உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் ஒருசில AI அமைப்புகள் உருவாக்கும் கதைகளையும் கற்பனை உலகங்களையும் தொடர்ந்து பயன்படுத்தினால், அவர்களுடைய கற்பனையும் மொழியும் ஒரே மாதிரியாகிவிடும் அபாயம் இருக்கிறது. குழந்தைகளின் உள்ளூர் அனுபவங்களும், வட்டார மொழிகளும், பண்பாட்டுத் தனித்துவங்களும் அதில் காணாமல் போகக்கூடும். குறிப்பாகத் தமிழ் போன்ற மொழிகளின் தனித்துவமான வெளிப்பாடுகள், வாழ்வியல் அனுபவங்கள், கதை சொல்லும் மரபுகள் ஆகியவை இந்தச் சூழலில் பாதுகாக்கப்பட வேண்டியவை.


இதற்கான பொறுப்பு பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் மட்டுமல்ல; சிறார் எழுத்தாளர்களுக்கும் இருக்கிறது.


தற்காப்பு நடவடிக்கைகளும் கூட்டுச் செயல்திட்டமும்

நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். AI-ஐத் தடை செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை; அதைக் கண்மூடித்தனமாகக் கொண்டாடவும் வேண்டாம். அதைப் புரிந்துகொண்டு பயன்படுத்த வேண்டும்.


குழந்தைகளுக்கு AI-யின் திறன்களையும் வரம்புகளையும் கற்றுக்கொடுக்க வேண்டும். AI தவறான தகவல்களையும் தரக்கூடும் என்பதை உணர்த்த வேண்டும். அதன் பதில்களைச் சரிபார்க்கக் கற்றுக்கொடுக்க வேண்டும். தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க வேண்டும். AI கொடுக்கும் பதிலுக்கு அப்பாலும் சிந்திக்கப் பழக்க வேண்டும்.


இதற்காகத் தமிழ் சிறார் இலக்கிய உலகில் உடனடியாக ஒரு மாற்றம் தேவை.

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் இதற்கான விவாதங்களைத் தொடங்க வேண்டும்.


எழுத்தாளர்களுக்கும் ஓவியர்களுக்கும் AI கல்வியறிவுப் பயிற்சிகள் நடத்த வேண்டும். பதிப்பகங்கள் AI பயன்பாடு, வெளிப்படைத்தன்மை, பதிப்புரிமை ஆகியவற்றுக்கான வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும்.


 குழந்தைகளுக்கான AI சார்ந்த புதிய இலக்கிய வடிவங்களைப் பரிசோதிக்க வேண்டும். AI காலத்தில் குழந்தைகளின் வாசிப்பு, மொழி, கற்பனை ஆகியவை எப்படிப் பரிணமிக்கின்றன என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

படைப்புரிமையைப் பாதுகாப்பதற்கான நெறிமுறைகளையும், AI உதவியுடன் உருவாக்கப்படும் நூல்களுக்கான வெளிப்படைத்தன்மை விதிகளையும் உருவாக்க வேண்டும். பயிற்சிகள் நடத்துவதோடு நின்றுவிடாமல், இந்த மாற்றங்களை எதிர்கொள்வதற்கான ஒரு கூட்டுச் செயல்திட்டத்தையும் வகுக்க வேண்டும்.


எதிர்காலத்தை எதிர்கொள்ளும் பொறுப்பு எல்லாவற்றுக்கும் மேலாக, நாம் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.


AI வந்துவிட்டது. ஆனால் நம்முடைய சிறார் இலக்கிய உலகம் இன்னும் நேற்றைய உலகத்திலேயே விவாதித்துக்கொண்டிருக்கிறது.

சிலர் AI வந்தால் இலக்கியம் அழிந்துவிடும் என்கிறார்கள். சிலர் AI வந்துவிட்டதால் இனி எல்லோரும் எழுத்தாளர்களாகிவிடலாம் என்கிறார்கள்.


இரண்டு கருத்துகளுமே மிகையானவை. தொழில்நுட்பம் மாறும்போது இலக்கியமும் மாறும். ஆனால் நல்ல இலக்கியத்திற்கான அடிப்படை மாறாது. நல்ல இலக்கியம் மனித வாழ்க்கையை ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். வாசகரிடம் புதிய சிந்தனையை உருவாக்க வேண்டும்.


நாம் குழந்தைகளுக்காக எழுதுகிறோமா? அல்லது குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ, அப்படிப்பட்ட குழந்தைகளுக்காக எழுதிக்கொண்டிருக்கிறோமா?


குழந்தைகளின் இன்றைய உலகத்தை நாம் புரிந்துகொள்ளவில்லை என்றால், அவர்களுடைய நாளைய உலகத்தைப் பற்றியும் எழுத முடியாது. AI அந்த இடைவெளியை இன்னும் பெரிதாக்கும்.


என்னுடைய நிலைப்பாடு மிக எளிமையானது.


AI-யால் ஒரு கதையை எழுத முடியும். ஆனால் அந்தக் கதையை ஏன் எழுத வேண்டும் என்ற கேள்வியை எழுத்தாளர்தான் எழுப்ப வேண்டும். AI ஓவியம் வரைய முடியும். ஆனால் அந்த ஓவியம் ஒரு குழந்தையின் மனதில் என்ன உணர்வை உருவாக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது படைப்பாளியின் பொறுப்பு.


இறுதியாக, நான் சொல்ல விரும்புவது இதுதான்:


தமிழ் சிறார் இலக்கிய உலகம் AI-ஐப் பற்றிப் பேசத் தொடங்க வேண்டும். ஆனால் அதற்கு முன்பு, தன்னைப் பற்றியே சில கடினமான கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.


AI நம்முடைய எதிர்காலத்தை மாற்றப்போகிறது. ஆனால் அந்த எதிர்காலத்தில் குழந்தைகளுக்கான இலக்கியத்தை உருவாக்கும் பொறுப்பை நாம் தொடர்ந்து ஏற்கப்போகிறோமா என்பதுதான் இப்போது நம்முன் இருக்கும் உண்மையான கேள்வி.


2. தமிழில் குழந்தைகளுக்காக எழுதப்பட்ட முதல் AI literacy நூல்: 'வினயாவும் மினியும்'. இந்த நூலின் முக்கியத்துவம் என்ன? இது யாரைச் சென்றடைய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?


'வினயாவும் மினியும்' நூலைத் தமிழில் குழந்தைகளுக்கான முதல் AI Literacy நூலாகக் கொண்டுவருவதில் எனக்கு மகிழ்ச்சி. இது AI தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் புத்தகம் மட்டுமல்ல; AI காலத்தில் குழந்தைகள் எப்படிச் சிந்திக்க வேண்டும், கேள்வி கேட்க வேண்டும், எதை நம்ப வேண்டும், எதைச் சரிபார்க்க வேண்டும் என்பதைப் பேசும் புத்தகம்.


இன்று குழந்தைகள் ChatGPT, Gemini போன்ற AI கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். பாடங்களுக்கான விடைகளைத் தேடுகிறார்கள்; படங்களை உருவாக்குகிறார்கள்; சந்தேகங்களைக் கேட்கிறார்கள். ஆனால் AI சொல்லும் எல்லாமே உண்மையல்ல என்பதை அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறோமா? அதன் தவறுகள், பாரபட்சங்கள், தனிப்பட்ட தகவல்கள் தொடர்பான ஆபத்துகள், போலிப் படங்கள், குரல்கள் பற்றிய புரிதலை உருவாக்குகிறோமா? பெற்றோர்களுக்கே இவற்றில் போதுமான தெளிவு இல்லை என்பதுதான் எதார்த்தம்.


AI கருவிகளை இயக்கத் தெரிந்திருப்பது மட்டுமே AI Literacy அல்ல. அதன் திறன்களையும் வரம்புகளையும் புரிந்துகொள்வதும், பதில்களைச் சரிபார்ப்பதும், பொறுப்புடன் பயன்படுத்துவதும்தான் முக்கியம்.


இவற்றைப் பாடமாகச் சொல்லாமல், கதையாகச் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் வினயாவையும் மினியையும் உருவாக்கினேன். வினயா ஆர்வமும் பிடிவாதமும் கொண்ட ஒரு சாதாரணப் பதின்பருவச் சிறுமி. மினி அவளுடைய AI தோழி. மினிக்குப் பல விஷயங்கள் தெரியும்; ஆனால் எல்லாம் தெரியாது. அதுவும் தவறு செய்யும். இந்த இருவரின் உரையாடல்கள் வழியாக AI-யின் பயன்பாடுகள், தரவுகள், பிழைகள், பாரபட்சம், Deepfake, Prompts, தனியுரிமை எனப் பலவற்றைக் கதையோடு பேசியுள்ளேன். தாத்தாவின் உடல்நலப் பிரச்சினை வழியாக, மனித அனுபவத்துக்கும் தொழில்நுட்பத்துக்கும் இடையிலான வேறுபாட்டையும் வினயா புரிந்துகொள்கிறாள்.


இந்த நூல் முதலில் 10–14 வயதுக் குழந்தைகளை, குறிப்பாக ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களைச் சென்றடைய வேண்டும். அதேபோல் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நூலகர்களும் வாசிக்க வேண்டும். அவர்களுக்கும் இந்த AI Literacy தேவை.


AI காலத்திலும் சுயமாகச் சிந்திக்கக்கூடிய குழந்தைகளை உருவாக்குவதற்கான ஒரு சிறிய முயற்சிதான் இந்த நூல். இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் புக்ஸ் ஃபார் சில்ரனுக்கு என் நன்றி. (தொடரும்..)



எழுத்தாளர், கதைசொல்லி.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறம் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட முகிழ் சிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தற்போது துபாயில் வசிக்கிறார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page