top of page

அறிவோம் ஏஐ!


பகுதி 1: ரோபோக்களுக்கு மூளை இருக்கா?


வணக்கம் சுட்டீஸ்!


இன்று உங்ககிட்ட ஒரு ஜாலியான கேள்வி!


உங்க வீட்டுல பொம்மை கார் இருக்கா? அதை ஓட வைக்க நீங்க ரிமோட் அழுத்தணும், இல்லையா?


ஆனா உங்க வீட்டுல இருக்கும் மொபைல் போன்கிட்ட, "ஒரு பாடல் போடு!"அல்லது "நாளைக்கு வானிலை எப்படி?" ன்னு கேட்டா பதில் சொல்லுது! அது எப்படி?


அதுக்குப் பின்னாடி ஒளிஞ்சிருக்கிற மாயம்தான் ஏஐ!


ஏஐன்னா என்ன?


நமக்கு மூளை இருக்கு.


அதனால நாம யோசிக்கிறோம், கற்றுக்கொள்கிறோம், நினைவில் வைத்துக்கொள்கிறோம்,முடிவு எடுக்கிறோம். கம்ப்யூட்டருக்கு நம்ம மாதிரி மூளை கிடையாது.


ஆனா மனிதர்கள் அதை சில விஷயங்களைக் கற்றுக்கொள்ளும்படி உருவாக்கியிருக்காங்க. அதுக்குப் பேர்தான் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI)


ஒரு சின்ன உதாரணம்!


நீங்க ஒரு பூனையைப் பார்த்தா "இது பூனை!" ன்னு உடனே சொல்லிடுவீங்க.

ஏன்னா ஏற்கனவே நிறைய பூனைகளைப் பார்த்திருக்கீங்க.


அதே மாதிரி, ஆயிரக்கணக்கான பூனைப் படங்களைக் காட்டிக் கற்றுக்கொடுத்தா, கம்ப்யூட்டரும், "இது பூனை போல இருக்கு!" ன்னு சொல்ல ஆரம்பிக்கும்.


இதுதான் ஏஐ கற்றுக்கொள்வது.


உங்க வீட்டுக்குள்ளேயே இருக்கும் ஏஐ!


முகத்தைப் பார்த்தே போன் திறப்பது


அம்மா போனை முகத்துக்கு நேரா காட்டுறாங்க. உடனே திறந்துக்குது!

ஆனா நீங்க காட்டினா? திறக்காது!


ஏன்னா அந்த போன் அம்மாவின் முகத்தை அடையாளம் காண கற்றுக்கொண்டிருக்கு.


சிரி மற்றும் அலெக்ஸ


"ஒரு கத சொல்லு ! "


"ஒரு பாட்டு போடு!"ன்னு சொன்ன உடனே பதில் சொல்லுது.

நீங்க பேசுறதைப் புரிஞ்சுக்க உதவுறது ஏஐ தான்.


யூடியூப்பின் ரகசியம்


நீங்க ஒரு கார்ட்டூன் பார்த்தீங்க. அடுத்து? இன்னொரு கார்ட்டூன்!

அதுக்கு அடுத்து? மறுபடியும் கார்ட்டூன்!


உங்களுக்குப் பிடிச்ச விஷயங்களை யூகிக்க முயற்சி செய்வது ஏஐ.


டிரைவர் இல்லாத கார்கள்


சில கார்கள் சாலையைப் பார்க்கும்,சிக்னலை கவனிக்கும்,முன்பக்கம் வண்டி இருக்கான்னு கண்டுபிடிக்கும்,இதற்கெல்லாம் ஏஐ உதவுகிறது.ஒரு முக்கியமான விஷயம்!


ஏஐ ரொம்ப புத்திசாலி. ஆனா அது மனிதன் இல்ல.


அதுக்குப் பசி எடுக்காது. தூக்கம் வராது. கோபம் வராது. சந்தோஷமும் தெரியாது. நாம் கற்றுக்கொடுத்த வேலைகளை மட்டும் அது செய்யும்.


சுட்டீஸ் சவால்!


இணையத்தில் Quick, Draw! என்று தேடுங்கள்.


அதில் நீங்க ஒரு படம் வரையணும்.


நீங்க வரையுற படம் என்னன்னு ஏஐ கண்டுபிடிக்க முயற்சி செய்யும்.


அது சரியா கண்டுபிடிக்குதான்னு பாருங்க!


உங்களுக்கு தெரியுமா?


உலகத்துலே மிகவும் அற்புதமான "சூப்பர் கம்ப்யூட்டர்" எது தெரியுமா?

அது... உங்க மூளைதான்!


அடுத்த பகுதியில்...

"ஏஐ யாரு கண்டுபிடிச்சாங்க?"

"கம்ப்யூட்டர் எப்படி புத்திசாலி ஆச்சு?" என்ற கதையைப் பார்க்கலாம்!


நன்றி சுட்டீஸ்!


(அறிதல் தொடரும்)


பிரியா ஜெயகாந்த்
பிரியா ஜெயகாந்த்

தமுஎகச அறம் கிளை செயற்குழு உறுப்பினர். சென்னையில் வசித்து வருகிறார். ஐ டி துறையில் மேலாளராக பணி புரிகிறார். இசைவு எனும் குறுநாவல், ஐரோப்பாவுக்கு ஓர் அழகிய பயணம் என்ற பயணக்கட்டுரை நூல்கள் எழுதியுள்ளார். ஜீபூம்பாவும் பட்டாம்பூச்சி தோட்டமும் மற்றும் மஞ்சள் முட்டை என்ற இரண்டு சிறார் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page