சூரியனை நோக்கி சூரியகாந்திச் ‘செடி’ திரும்புகிறதா ? ‘பூ’ திரும்புகிறதா ?

சூரியன் வரும் திசையை நோக்கி, சூரியகாந்திப் பூ திரும்பும் என்று கேள்விப்பட்டிருப்போம்.
இது உண்மைதானா? உண்மைதான் என்றால் ஏன் திரும்புகிறது? எந்தப் பக்கம் சூரியன்
இருக்கிறது என்று, சூரியகாந்திக்கு எப்படித் தெரியும்? சூரியகாந்திக்கு யார் சொல்லிக்
கொடுக்கிறார்கள்?
எது உண்மை?
உண்மையில், முழுமையாக மலர்ந்த சூரியகாந்திப் பூ நாள் முழுவதும் சூரியனைப்
பின்தொடர்வதில்லை. ‘இளம்’ சூரியகாந்திச் செடியின் மொட்டும், அதனைத் தாங்கும்
தண்டும்தான் சூரியனின் திசைக்கு ஏற்ப திரும்புகின்றன.
சூரியகாந்திச் செடிக்குள் நாம் பயன்படுத்தும் கடிகாரம் இல்லை. நமக்குப் பகல்
நேரத்தில் தூக்கம் வராமல், இரவில் மட்டும் நீண்ட நேரம் தூங்க முடிகிறது, அல்லவா?
ஏனெனில், ஒவ்வொரு நேரத்தைப் பொறுத்தும் நம்முடைய உடலில் அதற்கேற்ற
ஹார்மோன்கள் சுரக்கும்.
அதேபோல, சூரியகாந்திச் செடியில், காலையிலும், மாலையிலும் வெவ்வேறு
நொதிகள் சுரக்கும்.
அப்படியானால், செடி எவ்வாறு திரும்புகிறது?
தண்டின் இரு பக்கங்களும் ஒரே வேகத்தில் வளர்வதில்லை. காலையில் தண்டின்
மேற்குப் பக்கம் சற்றே வேகமாக வளரும்போது, தண்டு கிழக்கு நோக்கி வளைகிறது.
பகலில் கிழக்குப் பக்கம் வேகமாக வளர்வதால், அது மேற்கு நோக்கி நகர்கிறது.
எனவே பூ தனியாகத் தலையைத் திருப்புவதில்லை; தண்டின் சீரற்ற வளர்ச்சியே
மொட்டின் திசையை மாற்றுகிறது.
சூரியனைச் சார்ந்து நிகழும் இந்த இயக்கத்திற்குச் சூரியத் திருப்பம் (heliotropism)
என்று பெயர். ‘helio’ என்றால் சூரியன், ‘tropism’ என்றால் நகர்வு என்று அர்த்தம்.
மேலும், சூரியகாந்தி மொட்டாக இருக்கும் காலத்தில், அந்த மொட்டு, பெரிய பூவாக
வளர வேண்டும் என்பதற்காக, சூரியகாந்திச் செடி சூரியனை நோக்கி நகரும்.
இதுவே, சூரியகாந்தி மலர்ந்து, பெரிய பூவானதும், இந்தச் சூரியத் திருப்பம்
முடிந்துவிடும்!
ஆனால் இந்த இயக்கம் நிகழும் துல்லியமான செயல்முறை இன்னும் முழுமையாகப்
புரிந்துகொள்ளப்படாத ஒன்றாகவே உள்ளது. முதிர்ந்த இலைகளுக்கும்,
தாவரத்திற்குள் நடைபெறும் நீரின் இயக்கத்துக்கும் தொடர்பிருக்கலாம் என்று
கருதப்படுகிறது.
இந்த ஆய்வின் மூலம், பிற தாவரங்களுக்கும் சீரிய முறையில் அதன் வளர்ச்சியை
எளிதாக்கலாம் என்பதால், ஆய்வாளர்கள் சூரியகாந்தியைத் தொடர்ந்து
கவனிக்கிறார்கள்.
ஒரு சூரியகாந்திச் செடியை நட்டுவைத்து, நீங்களே இந்த ஆய்வைத் தொடர்ந்தால்
என்ன?

இவர் சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் “உலோகவியல் மற்றும் பொருட்கள் பொறியியல் துறையில்” உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தமிழில் அறிவியல் கட்டுரைகள், கதைகள், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் உள்ளிட்டவற்றை எழுதி வருகிறார். இவருடைய முதல் நூல், கரோனா வைரஸ் பெருந்தோற்று குறித்த “இதுதான் வைரல்: அறிவியல் பார்வையில் கரோனா”. சிறார்களுக்காக இவர் எழுதிய “அறிவுக்கு ஆயிரம் கண்கள்” நூல் பரவலான வாசகர்களைச் சென்றடைந்து பாராட்டைப் பெற்றது. இவர் பல்வேறு தளங்களில் பொதுமக்களிடையே அறிவியல் பரப்புரையும் செய்து வருகிறார்.
தொடர்புக்கு: hemazephyrs@gmail.com






Comments