காலப் பயணம் - பாறை ஓவியம்

வணக்கம் குழந்தைகளா..,
வாருங்கள், கால எந்திரத்தில் ஏறி கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகைக்குப் போகலாம்!
என்ன! கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடத்திற்கு எப்படிப் போக முடியும்? என்றா கேட்கிறீர்கள்..
நாங்கள் சென்றோமே!! புரியவில்லையா?
கோவில்பட்டியில் பாறை ஓவியப் பயிற்சி வகுப்பு நடந்தது தெரியுமா? அங்கே தான் பழங்கற்கால மனிதர்களுக்கு அருகிலேயே போய் வந்தோம்.
கற்கால மனிதர்கள் எப்படி குகைகளில் ஓவியம் வரைந்தார்கள் என்பதை அறிந்து கொண்டோம்..
அது மட்டுமா! அந்த ஓவியங்களை நாங்களும் வரைந்து பார்த்தோமே!
செப்டம்பர் 26 அன்று, எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நினைவரங்கம்,
கோவில்பட்டியில், குழந்தைகளுக்கான "பாறை ஓவியப் பயிற்சி வகுப்பு நடந்தது.
நிகழ்ச்சியை தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தினர், இலயன்ஸ் கிளப் - கோவில்பட்டி கிளையுடன் இணைந்து ஒருங்கிணைத்திருந்தனர்.
கலை இயக்குநர், ஓவியர் திரு. இ. அப்பாவு லெனின் அவர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பாறை ஓவியம் பற்றிய அறிமுகமும் பயிற்சியும் அளித்தார்.
காலை, 9.30 மணிக்கு நிகழ்வு துவங்கும் என சொல்லப் பட்டிருந்தது.
ஆனால், காலை 9 மணி முதலே குழந்தைகள் கி.ரா நினைவரங்கில் கூடத் துவங்கி விட்டார்கள்.
பாறை ஓவியம் வரையத் தேவையாக பொருட்களை சில குழந்தைகள் கொண்டு வந்திருந்தார்கள்.
நான் உள்ளே செல்லும் போது, நகர்ந்து நடக்க இயலாத அளவிற்கு கி.ரா நினைவரங்க வளாகம் பிள்ளைகளால் நிரம்பி இருந்தது.
உள்ளே சென்றதும் ஒரு கதை சொல்லட்டுமா எனக் கேட்டேன். ‘சொல்லுங்க..
சொல்லுங்க’ என ஒருமித்த குரலில் உற்சாகமாகக் கூச்சலிட்டார்கள் குழந்தைகள்.
அதன் பின் கதை சொல்லி அதில் அவ்வப்போது கேள்வி கேட்டு என மகிழ்ச்சியாக இருந்தது.
தோழர் முருகேசன் அவர்கள் ஒரு பாடல் பாட, குழந்தைகள் உற்சாகமாக உடன் பாடினார்கள்.
தோழர் மணிமொழி நங்கை குழந்தைகளுக்காக பாடல் பாடினார்.
பின், சாகித்ய பாலபுரஸ்கார் விருதாளர், தோழர் உதயசங்கர் அவர்கள் ஒரு பாடல் பாடினார். பிள்ளைகள் உடன் சேர்ந்து பாடினார்கள்.

அதன் பின், ஆர்வம் அதிகமாகி ஒவ்வொருவராக நான் பாடுறேன் , நான் கதை
சொல்றேன், நான் பாடுறேன் என முன்வந்தார்கள்.
குழந்தைகளுக்குத் தேவை இதை செய் அதை செய் எனும் கட்டளைகள் அல்ல. நாம் ஆர்வத்தோடு ஒன்றைச் செய்தால், அவர்கள் அதே ஆர்வத்தை இருமடங்காக மாற்றி, நம்மை விட உற்சாகமாக செய்வார்கள்.
பாடல்களும், கதைகளும் குழந்தைகளோடு வரிசை கட்டி நின்றன.
அதன் பின் தோழர் அப்பாவு லெனின் அவர்கள் கற்கால மனிதர்கள் நெருப்பில்
கற்களைச் சூடேற்றி எப்படி குகைகளுக்குள் ஓவியங்கள் வரைந்தார்கள் என்பதை விளக்கினார்.
பின், குழந்தைகளுக்கு பிஸ்கட் உள்ளிட்ட சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன.
அவர் முன்பே சொல்லி வைத்தது போல, தயார் செய்து வைத்திருந்த பசையில், அவர் கொண்டு வந்த மண்பானை செய்யும் மண்ணை கலந்து ஓவியம் வரைவதற்கான மண்கலவை தயார் செய்யப்பட்டது.
வந்திருந்த ஆசிரியர்களும் பெற்றோரும் குழந்தைகள் கொண்டு வந்த கோப்பைகளை வாங்கி மண் கலவையை நிரப்பிக் கொடுத்தார்கள்.
ஓவியர் அப்பாவு லெனின் அவர்கள் வழிகாட்ட, அவர் சொல்லித் தருவதை உள்வாங்கி குழந்தைகள் செய்யத் துவங்கினார்கள்.
தங்கள் கைகளால் சார்ட் அட்டையில் மண்கலவையை பூசித் தங்களுக்குப் பிடித்தது போன்ற உருவங்களை குச்சியால் வரைந்தார்கள்..
இறுதியில் பிள்ளைகள் ஒவ்வொருவரும் வரைந்த ஒவ்வொரு ஓவியமும் ஒரு கற்கால மனிதனின் கலைவண்ணம் போன்ற தோற்ற மயக்கத்தைத் தந்தது.
பிள்ளைகள் ஆர்வத்தோடு அவர்கள் வரைந்த ஓவியங்களை எங்களிடம் காட்டி மகிழ்ந்தார்கள்.
சூரியன் உதித்தது, யானைகள் நடந்தன, படகுகள் மிதந்தன, மனிதர்கள் ஆடினார்கள், பெரிய பறவைகள் இறக்கை விரித்துப் பறந்தன.
ஓவியங்கள் வரைந்து முடித்த பின், அவற்றை நிழலில் உலர வைத்து விட்டு
குழந்தைகள் கொண்டு வந்த உணவை உண்டார்கள்.
மதியம் மீண்டும் ஓவியர் குழந்தைகளோடு கலந்துரையாடினார். பிள்ளைகள் தாமாக முன்வந்து பாட்டு பாடினார்கள். கதை சொன்னார்கள்.
நான் நடுநடுவே குழந்தைகளிடம் கதை சொல்லிக் கொண்டிருந்தேன். வினாடி வினா நடத்தினேன்.
குழந்தைகள் உற்சாகமாக ‘நான்’ ‘நான்’ என பதில் சொன்னார்கள்.
“என் மகன் என் மடியை விட்டே இறங்க மாட்டான். ஆனால் அன்று தானாக இறங்கிஓவியம் வரைந்தான். அவனே முன் வந்து கதை சொன்னான். இதுவே எனக்கு மிகப் பெரிய வெற்றியாகத் தெரிகிறது" என்றார் நான்கு வயது சிறுவனின் தாயார் சங்கீதா.
இப்படி எல்லாம் குழந்தைகளுக்காக நிகழ்ச்சிகள் நடக்கும் என எங்களுக்குத்
தெரியாது. மிகச் சிறப்பாக இருந்தது. நாங்கள் தொடர்ந்து எங்கள் குழந்தைகளை அழைத்து வருவோம். வாய்ப்புகளைத் தவறவிட மாட்டோம் என சரவணபுரத்தில் இருந்து வந்திருந்த பெற்றோர் தேவி தெரிவித்தார்.
இந்த ஓவியப் பயிற்சி வகுப்பு எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. குறிப்பாக, பாறை ஓவியங்களின் வரலாறு, அவை எவ்வாறு உருவானது, அதன் பின்னணி போன்ற விஷயங்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்திய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது.
வகுப்பைத் தொடங்கிய விதமும், குழந்தைகளின் சொந்த கற்பனை மற்றும்
படைப்பாற்றலை ஊக்குவித்த விதமும் மிகவும் நன்றாக இருந்தது. வந்திருந்த
ஆசிரியர்கள் அனைவருமே மிகவும் நட்பாகவும், குழந்தைகளுடன் இயல்பாகப்
பழகியும், முழு சூழ்நிலையையும் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும்
வைத்திருந்தார்கள். அதோடு கதைகள், பாடல்கள் போன்றவற்றைச் சேர்த்தது
குழந்தைகளுக்கு வகுப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தியது. இவை அனைத்தும் எங்களுக்கு மிகவும் பிடித்திருந என பெற்றோர் மணிச்செல்வி தெரிவித்தார்.
வடக்கு திட்டங்குளம், சரவணபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும், பெற்றோர் தங்கள் குழந்தைகளோடு வந்து கலந்து கொண்டார்கள்.
காலையிலேயே வந்திருந்து நிகழ்வு முடியும் வரை காத்திருந்து பிள்ளைகள் புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்ள ஊக்குவித்தார்கள்.
மாலையில் குழந்தைகளுக்கு பூஸ்ட் கலந்த பால், முறுக்கு மற்றும் கடலைமிட்டாய் வழங்கப்பட்டது.
சிற்றுண்டிகள் வழங்கும் பொறுப்பை இலயன்ஸ் கிளப் கோவில்பட்டி நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியின் நிறைவாக தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், ஆசிரியர் கி.பிரபு அவர்கள் எழுதிய "ஏ குருவி , சிட்டுக்குருவி என்ற நூல் பரிசாக வழங்கப்பட்டது.
இலயன்ஸ் கிளப், கோவில்பட்டி சார்பில் பங்கேற்ற குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இப்பயிற்சியினை தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநிலத் தலைவர் பாலசாகித்ய அகாடமி விருதாளர், உதயசங்கர் மற்றும் லயன்ஸ் கிளப் ஆப் கோவில்பட்டி டெம்பிள் சிட்டி, தலைவர் லயன் மருத்துவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
தசிஎகச கோவில்பட்டி கிளைத் தலைவர், ஆசிரியர் மணிமொழிநங்கை தலைமை வகித்தார். லயன்ஸ் கிளப் ஆப் கோவில்பட்டி டெம்பிள் சிட்டி தலைவர் சக்தி என்டர்பிரைசஸ் லயன் முருகேஷ் முன்னிலை வகித்தார். தசிஎகச கிளைச்செயலாளர் லயன் பிரபு வரவேற்றார்.
தசிஎகச கிளைப் பொருளாளர் ஆசிரியர் கண்ணகி, வரகவி நல்லாசிரியர் முருகேசன், பொன்னராசு, இலக்கியச்சாரல் நிறுவனர் ஆசிரியர் தினகரன் ஆகியோர் தசிஎகச கோவில்பட்டி கிளையின் சார்பாக நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள்.
இலயன்ஸ் கிளப் கோவில்பட்டி கிளையில் இருந்து, கார்த்திக் ஸ்வீட்ஸ் லயன் கார்த்தி, முத்துவிலாஸ் ஹோட்டல் லயன் ராமச்சந்திரன், ஆனந்தம் ஏஜென்சிஸ் லயன் ஜெயபாஸ் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
முகா கடலைமிட்டாய் உரிமையாளர் லயன் கண்ணன் அவர்கள் மேடையில் நிகழ்ச்சி குறித்து கருத்துகள் தெரிவித்த பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் கடலைமிட்டாய் வழங்கி, நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

ராஜலட்சுமி சிறார் எழுத்தாளர், நாவலாசிரியர், கதை சொல்லி. சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் அப்பையநாயக்கன்பட்டி. கோவில்பட்டியில் வசிக்கிறார்.
பூஞ்சிட்டு சிறார் மின்னிதழின் ஆசிரியர்களுள் ஒருவர். கதை சொல்லு கதை கேளு புலனக்குழு மூலமாக குழந்தைகளுக்கு கதைகள் சொல்கிறார்.
இதுவரை 6 நாவல்கள் வெளிவந்துள்ளன. இவரது நாவல்களும் சிறுகதைகளும் பல்வேறு போட்டிகளில் பரிசுகள் வென்றுள்ளன. நீர்க்குமிழி சோப், மாயவனத்தில் ஒரு மந்திரப் பயணம், கடோத்கஜன் ஆகிய சிறார் நூல்கள் பாரதி பதிப்பகத்தில் வெளிவந்துள்ளன. கதைப் புத்தகத்தின் கதை மற்றும் கனலின் பயணம் ஆகிய சிறார் நூல்கள் ஹெர்ஸ்டோரிஸ் பதிப்பகத்தில் வெளிவந்துள்ளன. 'கனலின் பயணம்' நூல் 2025ம் ஆண்டுக்கான பெண்ணெழுத்துப் போட்டியில் முதல் பரிசு வென்றது. கேட்-பீட் என்ற சிறார் நூல் வாசிப்பு இயக்க நூலாக புக்ஸ் பார் சில்ரனால் வெளியிடப்பட்டுள்ளது.






Comments