top of page

மருந்துச் சீட்டில் இடம்பெறும் “Rx”

23 hours ago
1 min read

மருத்துவர் ஒருவர் மருந்துச் சீட்டு எழுதும்போது, அதன் தொடக்கத்தில் “Rx” அல்லது “℞” என்ற குறியீடு இடம்பெறுவதை நாம் பார்த்திருப்போம். இன்று இது ஒரு மருத்துவரின் மருந்துப் பரிந்துரையைக் குறிக்கும் பொதுவான அடையாளமாக உள்ளது. ஆனால், இந்தச் சிறிய குறியீட்டுக்குப் பின்னால் பல நூற்றாண்டுகள் பழமையான வரலாறு உள்ளது.


“Rx” என்பது லத்தீன் மொழியின் “Recipe” என்ற சொல்லுடன் தொடர்புடையது. Recipe என்றால் “எடுத்துக்கொள்” அல்லது “Take” என்று பொருள். பண்டைய மருத்துவ நடைமுறையில், மருத்துவர் ஒரு மருந்தைத் தயாரிக்க வேண்டிய பொருட்கள், அவற்றின் அளவு மற்றும் தயாரிக்கும் முறையை எழுதத் தொடங்கும்போது, “Recipe” என்று குறிப்பிடுவது வழக்கமாக இருந்தது. அதன் முதல் எழுத்தான R, காலப்போக்கில் ஒரு சிறப்பு குறியீட்டு வடிவமாக ℞  என மாறியது.


இக்குறியீடு வெறும் “மருந்து” என்ற பொருளை மட்டும் கொண்டிருக்கவில்லை. வரலாற்று ரீதியாக, “இந்த மருந்துப் பொருட்களை எடுத்துக்கொண்டு, மருத்துவர் கூறியபடி தயாரி” என்ற கட்டளையின் தொடக்கத்தை இக்குறியீடு குறித்தது. மருந்து தயாரிக்கும் நபருக்கு மருத்துவரின் அறிவுறுத்தலைத் தெரிவிக்கும் வகையில் இது பயன்படுத்தப்பட்டது.


காலப்போக்கில் மருத்துவம் மேலும் முறையான துறையாக வளர்ந்தபோது, மருந்துச் சீட்டுகளில் ℞ என்ற குறியீடு தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது. பின்னர் கையெழுத்தில் எழுதுவதற்கு எளிதாகவும், அச்சிடுவதற்கும் வசதியாகவும் அது “Rx” என்ற வடிவில் பரவலாக எழுதப்படத் தொடங்கியது.


Rx என்பதற்கு “prescription” என்பதே நேரடி விரிவாக்கம் என்று கூறுவதற்கில்லை. மாறாக, அது லத்தீன் Recipe என்ற சொல்லிலிருந்து உருவான வரலாற்றுச் சுருக்கக் குறியீடாகும்.


இன்று மருந்தகத்தில் மருத்துவரின் பரிந்துரையைப் பார்த்தவுடன் “Rx” என்ற குறியீடு, “இது மருத்துவரின் பரிந்துரைப்படி வழங்கப்படும் மருந்து” என்ற பொருளைத் தருகிறது. ஒரு சில எழுத்துகளைக் கொண்ட இந்தச் சிறிய குறியீடு, பண்டைய லத்தீன் மருத்துவ மரபிலிருந்து நவீன மருத்துவம் வரை தொடரும் ஒரு வரலாற்றுச் சின்னமாக விளங்குகிறது. 


ஹரீஷ்
ஹரீஷ்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் விஞ்ஞானத் துளிர் - சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழின் இணையாசிரியர்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page