பச்சையும் பல வண்ணமுமாக வீட்டுக்கு ஓர் இயற்கை ஒளி!

வீட்டில் கிளி, குருவி, அணில் வளர்க்க ஆசைப்பட்டேன். அதற்காக எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அது மட்டும் இல்லாமல், என்னதான் தங்கக் கூண்டாகவே இருந்தாலும் அது பறவைகளுக்குச் சிறைதானே என்ற எண்ணமும் என்னைத் தடுத்தது. ஒருமுறை, பாதி சாப்பிட்ட கொய்யாப் பழத்தின் மறுபாதியைச் சன்னலுக்கு வெளியே போட்டேன். சில நாட்கள் கழித்துப் பார்த்தால் ஒரு செடி முளைத்திருந்தது –ஆமாம் கொய்யாச் செடியேதான்! நானே அதற்கு நாள்தோறும் காலையில் தண்ணீர் ஊற்றிவந்தேன். சில மாதங்களிலேயே சன்னல் வழியாகக் கையை நீட்டித் தொடக்கூடிய அளவுக்குப் பெரிய செடியாக வளர்ந்தது. ஒன்றரை ஆண்டுகளில் இளம் மரமாக ஓங்கியது. இன்னும் சில மாதங்களில் அது கனிகளைத் தரத் தொடங்கிவிடும் என்று பக்கத்து வீட்டார் பாராட்டினார்கள். செடிகள் விற்கும் கடை வைத்திருப்பவரான என் நண்பர், கொய்யாமரம் நன்றாக வளர்வதற்கு ஆலோசனைகளைக் கூறினார். கொய்யாக் கனிகள் கிடைப்பதை விட எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி எதிலே என்றால், முன்பு வீட்டில் வளர்க்க முடியாமல் போன கிளிகள் அந்த மரத்துக்கு நிறைய வருகின்றன! குருவிகளும் காக்கைகளும் காடைகளும் மைனாக்களும் நாரைகளும் வந்து ஓய்வெடுத்துச் செல்கின்றன! அணில்கள் தாவி விளையாடுகின்றன!
ஒருநாள் காலை நடைப்பயிற்சியாகச் சுற்றிவந்தபோது ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் முன்பக்கம் வைத்திருந்த தொட்டிகளில் இளஞ்சிவப்பும் மஞ்சளும் வெள்ளையுமாகப் பூக்கள் புன்சிரிப்போடு
ஆடிக்கொண்டிருந்தன. டேபிள் ரோஸ், சன் ரோஸ் என்று சொல்வோமே, அந்தப் பூக்கள்தான் அவை. அந்தப் பூக்கள் என்னைப் பார்த்து, “ஹாய், எப்படி இருக்கீங்க,” என்று
கேட்பது போல இருந்தது. பக்கத்தில் சென்று ரசித்துக்கொண்டிருந்தபோது, அந்த வீட்டுக்கு உள்ளேயிருந்து ஒரு அம்மையார் வெளியே வந்தார். “உங்களுக்கும் இந்தச் செடிகள் பிடிக்குமா? உங்க வீட்டிலேயே வளர்க்கலாமே… இந்தாங்க,” என்று சொன்னவர், ஒவ்வொரு செடியில் இருந்தும் ஒரு சாண் நீளத்துக்குக் கிள்ளிக் கொடுத்தார். “இந்தச் செடியை இப்படித் துண்டு துண்டாக ஊன்றினாலும் வேர்பிடிச்சு வளர்ந்துடும்,” என்றும் சொன்னார்.
வீட்டில் காலியாக இருந்த பெரிய பிளாஸ்டிக் பாட்டில்களில் மண்ணை நிரப்பினேன். ஒவ்வொரு பாட்டிலிலும் ஒரு கிளையை ஊன்றினேன். தண்ணீர் விட்டேன். செடிக்கடை நண்பர், “பாட்டில் அடிப்பக்கம் ஓரமா துளை போடுங்க. அப்ப, நிறைய தண்ணீர் தேங்காம வெளியேறிடும். வேர் அழுகிப் போகாம இருக்கும்,” என்று “டிப்ஸ்” கொடுத்தார். அந்தத் துண்டுக் கிளைகளில் மெதுவாக இலைகள் துளிர்த்தன. பிறகு வேகமாகப் புதிய கிளைகள் நீண்டு செடிகளாக உருவெடுத்தன.
மொட்டுகள் வந்தன, பூக்களாக மலர்ந்தன. இப்போது எங்கள் வீட்டின் வாசலில், மாடியில், படிகளில்,
மாடத்தில் (பால்கனி) – வீட்டுக்கு உள்ளேயே கூட – பல வகைச் செடிகள் குடியேறிவிட்டன.
அந்தச் செடிகளும் பூக்களும் புன்னகையோடு எல்லோரையும் வரவேற்கின்றன. இப்படி வீட்டில் செடிகள் வளர்ப்பது பற்றி எங்களுக்குக் கிடைத்த வழிகாட்டல்களைத்தான் உங்களோடு இங்கே பகிர்கிறேன். இடம் இல்லாவிட்டாலும் இன்று சில வீடுகளில்தான் தோட்டம் வைப்பதற்கான இடம் இருக்கும். மற்ற வீடுகளில் காலியிடம் இருப்பதில்லை. அதிலும் மேல்தள வீடுகளிலும் அடுக்கக வீடுகளிலும் உள்ள மாடங்களில்தான் செடிகளை வைக்க முடியும். அப்படிப்பட்ட இடங்களில் தொட்டிகளில்தான் செடிகளை வளர்க்க வேண்டும். தொங்கும் தொட்டிகளிலும் வளர்க்கலாம்.
களிமண் தொட்டிகளில் நம் கண்ணுக்குத் தெரியாத மிக நுண்ணிய துளைகள் ஏராளமாக இருக்கின்றன. அதன் காரணமாக மண்ணுக்குக் காற்றோட்டம் கிடைக்கும். வெப்பம் வெளியேறும். வேர்களுக்கு அது மிகவும் உதவியாக இருக்கும். அழகான பல வண்ணங்களில், சிறியது முதல் பெரியது வரை உறுதியான பீங்கான் தொட்டிகளும் பிளாஸ்டிக் தொட்டிகளும் கிடைக்கின்றன. ஆகவே களிமண் தொட்டிகள் கிடைக்காத நிலையில் இந்தத் தொட்டிகளைப் பயன்படுத்தலாம். கனமான தொட்டிகளை வைக்க இயலாதபோது, “குரோ பேக்” எனப்படும் செடி வளர்ப்புப் பைகளைப் பயன்படுத்தலாம். பழைய பெயின்ட் டப்பா, கைப்பிடி உடைந்த கோப்பை ஆகியவற்றையும் செடிகளின் குடிசைகளாக மாற்றலாம். மாடம் சிறிதாக இருக்குமானால், அந்த இடத்திற்குள் கூடுதலான செடிகளை வைத்து வளர்க்க ஏற்ற வகையில் உயரமான நிலைச்சட்டங்கள் (ஸ்டாண்டு) கிடைக்கின்றன.
களிமண் தொட்டிகளையும், பீங்கான் தொட்டிகளையும், பிளாஸ்டிக் தொட்டிகளையும், வளர்ப்புப் பைகளையும் தயாரிப்பவர்கள் அவற்றில் தண்ணீர் வெளியேறுவதற்குத் துளையிட்டிருப்பார்கள். துளை இல்லாத பிளாஸ்டிக் தொட்டிகளில் நாமே குத்தூசியால் துளையிட்டுக்கொள்ளலாம்.
பிளாஸ்டிக் தொட்டியில் குத்தூசியை இறக்குவது கடினமாக இருக்கக்கூடும். அப்போது, குத்தூசியின் முனையை விளக்குச் சுடரில் காட்டி நன்றாகச் சூடாக்கிவிட்டு பிளாஸ்டிக்கில் செருகினால் எளிதாகத் துளை ஏற்பட்டுவிடும்.
பயன் தரும் பசுமை செடிகள் வீட்டுக்கு அழகைத் தருவது மட்டும் போதாது; வசிப்போருக்குப் பயன்படவும் வேண்டும் அல்லவா? இதோ அதற்கேற்ற சில அருமையான செடிகள்–
சமையலுக்குப் பயன்படுத்திய பின் எஞ்சியிருக்கும் புதினாத் தண்டுகளைத் தொட்டிமண்ணில் ஊன்றலாம். சில நாட்களிலேயே புதுப் பச்சை இலைகள் துளிர்க்கும். நன்கு வளர்ந்த புதினாச்
செடிகளைப் பறித்துத் துவையல் செய்தால் அதன் சுவையே தனி! சமையலறையில் இருக்கும் மல்லிவிதைளைத் தொட்டி மண்ணில் போட்டு, மேலாக மண் தூவி வைக்க வேண்டும். சில நாட்களில் கொத்தமல்லிச் செடிகள் தழைத்து வளரும். குழம்பில், ரசத்தில், சட்டினியில் சேர்த்தால் கூடுதல் வாசம் சேரும். இவற்றை வளர்ப்பதற்கு ஏற்ற அகலமான தொட்டிகளும் கிடைக்கின்றன.
துளசி, கற்பூரவல்லி ஆகிய இரண்டும் நம் வீட்டின் ‘குட்டி மருந்தகம்’ என்றே சொல்லலாம்! நாள்தோறும் ஒரு துளசியையோ கற்பூரவல்லி இலையையோ சாப்பிட்டால் சளி, இருமல் நெருங்காது.
துளசியைச் செடியாகக் கொண்டுவந்து ஊன்ற வேண்டும். கற்பூரவல்லியைத் தண்டாகவும் ஊன்றலாம்.
திறந்தவெளிகளில் காணக்கூடிய கற்றாழைச் செடியை வீட்டின் வரவேற்பாளராக்கலாம்! வாரத்தில் இரண்டு முறை தண்ணீர் ஊற்றினாலே போதும். வீட்டின் கூடத்தில் மையமாகவோ, சன்னலோரமாகவோ, மூலையிலோ வைத்து வளர்க்கிறபோது அறை அழகாக இருக்கும். அத்துடன் இது வீட்டிற்குள் காற்றைத் தூய்மையாக்கும். சிலவகைக் கற்றாழை இலையின் “சோறு” நம்
தோலுக்கு மிகவும் நல்லது.
அதே போல, ஜீஜீ என்ற செடியும் வீட்டுக்குள், குறைந்த அளவு நீரையும் ஒளியையும் ஏற்றுக்கொண்டு, அழகைச் சேர்க்கும் காற்றைத் தூய்மையாக்கும். ஒரு தக்காளியை எடுத்துத் தொட்டியில் பிளிந்துவிட்டால் விதைகள் சில வாரங்களில் செடிகளாக வளர்ந்து, பச்சைத்
தக்காளிகள் தோன்றுவதையும், பின்னர் சிவப்பாக மாறுவதையும் பார்ப்பதே அழகு! தக்காளிச்
சட்டினியும் சாம்பாரும் உங்களுக்குப் பிடித்தமானதுதானே? வெண்டை, மணத்தக்காளிக் கீரை, கத்தரி, கறிவேப்பிலை, சுரண்டை ஆகியவற்றையும் வேறு பல காய்கறிச் செடிகளையும் வளர்க்கலாம். மாடத்தில் வானவில் வீட்டுக்கு விருந்தினர்களாக வண்ணத்துப் பூச்சிகள் வந்தால்
எவ்வளவு நன்றாக இருக்கும்! அதற்கென்று சில பூச்செடிகளை வளர்க்கலாம். முதலில் பார்த்த டேபிள் ரோஸ், சன் ரோஸ், பாதையோரத்திற்கான பார்டர் ரோஸ், நித்திய கல்யாணி, சாமந்தி,
கல்வாழை, குரோட்டன்ஸ் ஆகிய செடிகள் குறைந்த பராமரிப்பிலேயே தினமும் அழகழகாகப் பூத்துக் குலுங்கும். மயில் மாணிக்கம் கொடி ஒரு வரவேற்பு வளைவு போல வளர்ந்து அழகிய
பூக்களால் வணக்கம் சொல்லும்.
மணி பிளாண்ட் செடியின் கிளையை பழைய கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் ஊற்றிப் போட்டு வைத்தாலே, சன்னல் ஓரத்தில் அழகாகப் படரும். தொட்டி மண்ணில் ஊன்றினால் மேலும் எழிலாகப் பரவும். ஆனால் ஒன்று – மணி பிளான்ட்டை வளர்ப்பவருக்கே தெரியாமல் “ஆட்டையைப் போட்டு” எடுத்து வந்து வைத்தால்தான் நன்றாக வளரும் என்று சிலர் சொல்வார்கள். அதையெல்லாம் நம்பக்கூடாது, நம் நேர்மையிலிருந்து விலகக்கூடாது. சரியா?
அதே போல, கண்ணாடிக் கிண்ணங்களில் அரையடி உயரத்திற்குள் இருக்கிற மூங்கில் செடிகளைக் கடைகளில் வைத்திருப்பார்கள்.
அதற்கு “லக்கி பாம்பூ” என்று பெயர் சூட்டி, அது இருந்தால் குடும்பத்தில் நல்லது நடக்கும் என்று சொல்லி விற்பார்கள். நாம் லக்கை நம்புகிறவர்கள் அல்ல, நம் உழைப்பையே நம்புகிறோம்
என்று சொல்லிவிட்டு, வீட்டு மேசையில் வைப்பதற்காக வாங்கி வரலாம்.
பூக்கள் பூக்காத, சிறுசிறு முக்கோண இலைகளும் நீண்டு தொங்கும் கிளைகளுமாக உள்ள கிரீப்பிங் ஃபிக் என்ற செடியைத் தொங்கு தொட்டியில் அல்லது மாடத்துச் சுவரில் வைக்கலாம். அழகு கூடும்.
ரோஜா, மல்லிகை, கனகாம்பரம், செம்பருத்தி ஆகியவற்றையும் வளர்க்கலாம். தோட்டத்து மண்ணில் வளர்ப்பதற்கும் தொட்டி மண்ணில் வளர்ப்பதற்கும் வேறுபாடு உண்டுதான். ஆனால், இந்தச் செடிகளின் பூக்கள் காலையில் மலர்ந்து நம் மனதுக்கு உற்சாகம் அளிப்பதில் மாறுபாடே காட்டுவதில்லை.
விதிகள் மூன்று பேத்திகளும் பேரன்களும் குட்டித் தோட்டக்காரர்களாக மாறத் தயாராகிவிட்டீர்கள்தானே? இதோ நீங்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டிய மூன்று விதிகள்:
தண்ணீர் அளவு: செடிகளுக்கு மிகவும் தேவைப்படுவது தண்ணீர்தான். ஆனால், அளவுக்கு மிஞ்சி ஊற்றினால் வேர் அழுகிவிடும். மண்ணை விரலால் தொட்டுப் பாருங்கள். அது ஈரப்பதம் வற்றிக் காய்ந்திருந்தால் மட்டும் தண்ணீர் ஊற்றுங்கள்.
கதிரொளி: செடிகள் உணவைத் தயாரிக்கச் சூரிய ஒளி தேவை. ஒவ்வொரு நாளும் சில மணி நேரமாவது மிதமான வெயில் படும் இடத்தில் தொட்டிகள் இருக்க வேண்டும். ஊட்டச் சத்து: அவசரத்துக்கு வேதிப்பொருள் உரங்களை எப்போதாவது பயன்படுத்தலாம். மற்றபடி இயற்கை உரம்தான் உண்மையான ஊட்டம். வீட்டில் மிஞ்சும் காய்கறிக் கழிவுகள், டீ தூள், அரிசி கழுவிய தண்ணீர் ஆகியவற்றைச் செடிகளுக்குப் பரிமாறலாம். வீட்டுத் தோட்டங்களுக்கான சிறு மண்வெட்டி, கத்தரிக்கோல் ஆகியவற்றை வைத்திருப்பதும் உதவியாக இருக்கும். உங்களுக்கு
நிச்சயமாக மேலும் பல வினாக்கள் எழும். பள்ளி ஆசிரியரிடமோ, செடி விற்பனையாளரிடமோ, பக்கத்திலேயே விவசாயிகள் இருப்பார்களானால் அவர்களிடமோ கேட்டு விடைகளைத்
தெரிந்துகொள்ளுங்கள்.
ஒரு சின்ன விதையை மண்ணில் விதைத்து, தண்ணீர் ஊற்றி, அது முளைத்து வளர்வதைப் பார்ப்பது நம்மை எப்போதும் ஊக்கத்தோடு வைத்திருக்கும் சுட்டிகளே. வரும் விடுமுறையிலேயே பெற்றோருடன் சேர்ந்து வீட்டுச் செடி வளர்ப்புப் பயணத்தைத் தொடங்குங்கள். அந்தப் பயணம், உலகம் முழுதும் மனிதர்களுக்கு உணவிடும் உழவர்கள் மீது பெரும் மரியாதையை உண்டாக்கும். பூமியின் காற்றில் உயிர்வளி (ஆக்சிஜன்) சேர்ப்பதில் நாமும் பங்களிக்கிறோம் என்ற பெருமிதம் உண்டாகும்.
பத்திரிகையாளர் பணியில் நாற்பதாண்டுகளாகப் பயணம். தற்போது ‘செம்மலர்’ இதழின் துணையாசிரியர். நேரடிப் புத்தகங்களும் மொழிபெயர்ப்புகளுமாக 42 புத்தகங்கள். சிறாருக்கென எழுதிய ‘எதிர்ப்பதம்’, ‘வனவிலங்கு உடலில் வரி வந்தது எப்படி’ ஆகிய கதைப் புத்தகங்கள் 2, ‘சாரி பெஸ்ட் ஃபிரெண்ட்’, ‘உலகைச் சுற்றி 80 நாட்கள்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்புகள் 6. கட்டுரையாக்கங்களில் கூடுதல் ஈடுபாடு. உரை நிகழ்த்துவதிலும், குழந்தைகளோடு உரையாடுவதில் இரட்டிப்பாகவும் ஆர்வம்.







Comments