சிறுவர் நாடகம் : ஜாய்மணி யானை

கதாபாத்திரங்கள்:
கதை சொல்லி
யானைப் பாகன்
ஜாய்மணி (யானை)
கிழக்கரசன்
மேற்கரசன்
மந்திரி
ஜான்
சிறுவன்
அம்மா
குழந்தை
ஊழியர்கள்
கிராமவாசிகள்
பாடல் குழு:
யானை பெரிய யானை நான்
காட்டில் அலையும் யானை நான்
என் பாகன் அதோ வருகிறான்
காட்டின் காற்றையும் அறிந்தவன்
இனிப்பு கரும்பைத் தந்திடுவான்
பாசமான என் நண்பன்
கதை சொல்லி:
இது ஒரு அமைதியான காட்டு கிராமம். இங்கு சில மக்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர். சிலர் காட்டை நம்பி இருந்தார்கள். சிலர் ஆடு மாடு வளர்த்தார்கள். இவர்களது வாழ்வாதாரம் இதை நம்பித்தான் இருந்தது. இதுநாள் வரை ஒரு ராஜா இந்தக் கிராமத்தை ஆட்சி செய்தார். அவர் இந்த மக்களுக்கு நல்லது ஒன்றும் செய்யவில்லை. அதிகமாக வரி விதித்தார். மக்கள் இலவசமாக அவர் அரண்மனையில் வேலை பார்க்க வேண்டும். ஆனால் மக்கள் இப்போது அந்த ராஜா எவ்வளவோ பரவாயில்லை என்று பேசிக்கொண்டனர். ஏன் என்று யோசிக்கிறீர்களா? நீங்களே மக்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று கேளுங்கள்.
(கதை சொல்லி மேடையை விட்டு விலகினார்)
காட்சி: 1
காட்சி அமைப்பு: காட்டு கிராமம்.
மரம் வெட்டுபவர் 1: சேதி கேட்டியா... அரண்மனையில ரெண்டு
இளவரசனுங்களுக்கும் சண்டை நாறுகிறதாம்.
மரம் வெட்டுபவர் 2: ஆமா... ஆமா. அதான் ஊரே பேசுதே... பெரிய ராஜா
கொடுமையே தாங்க முடியாம கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கோம்... இதுல இவனுங்க என்ன பண்ணக் காத்திருக்காங்களோ...
(அப்போது யானையுடன் பாகான் வருகிறான்)
மரம் வெட்டுபவர் 2: அதோ ஜாய்மணி வருகிறானே பாகனுடன் சேர்ந்து.
யானை: பி.. ஈ ஈ (தும்பிக்கையைத் தூக்கி பிளிறியது)
மரம் வெட்டுபவர் 1: பாரு.. என்ன ஜம்பமா வருது.. ஊருன்னு பாக்குதா.. காடுன்னு பாக்குதா.. அதுக்கு எல்லாம் ஒன்னு தான்
மரம் வெட்டுபவர் 2: அட.. அரண்மனை தோட்டத்து கரும்பை ஒரு பிடிபிடித்து விட்டது..
மரம் வெட்டுபவர் 1: அதென்ன நம்மைப் போலவா? பயந்து அடிமை போல
வாழ்வதற்கு!
யானை பாகன்: என்ன அண்ணே ஒரே கவலையா இருக்கீங்க..
மரம் வெட்டுபவர் 1: வேறென்ன நம்ம நாட்டோட கதைத் தான்.
மரம் வெட்டுபவர் 2: ராஜா எப்படா சாவான்னு காத்திருந்தோம்... இப்போ அந்த
ராஜாவே இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்திருக்கலாமோனு தோணுது.
யானை பாகன்: நாளைக்குத் தெரியும் முழுச் சங்கதி.
(அனைவரும் மேடையை விட்டு வெளியேறினர்)
காட்சி 2:
(அரண்மனை; முக்கியமான விவாதம் நடக்கிறது)
கிழக்கரசன்: அதெல்லாம் முடியாது மந்திரியாரே. நீங்க அவன் பக்கம்தான் பேசுவீங்க. நான் ஒத்துக்க மாட்டேன்.
மந்திரி: அப்படியென்றால், அரச புலவரை அழைத்து வேலையை முடிக்கச்
சொல்லுவோமா?
மேற்கரசன்: அவனா... ஒரு 10 பொற்காசுகள் கொடுத்தால் அவன் நான்தான் கடவுள் என்று கூடப் பாட்டு எழுதுவான். அவன் வேண்டாம்.
மந்திரி: நம் அறிவன் இருக்கிறானே... அவன்தானே போன வருட வறட்சியின் போது மேகங்களை மோதவைத்து மழை பெய்ய வைத்தான். அவனையே அழைப்போம்.
கிழக்கரசன்: அவனுக்கு அறிவிருக்கிறது என்று ஆணவம் அதிகம். சரிப்படமாட்டான்.
மந்திரி: (முணுமுணுத்தார்) அறிவிற்கும் நமக்கும் தான் ஆகாதே!
கிழக்கரசன்: என்ன முணுமுணுக்கிறீர்கள்..
மந்திரி: ஒன்றும் இல்லை இளவரசே.. காலையிலிருந்து நானும் நம்ம ஊரில் இருக்கும் எல்லாப் பெருமக்களின் பெயர்களையும் சொல்லிவிட்டேன். அனைவரையும் வேண்டாம் என்கிறீர்கள். என்னதான் செய்யலாம்? நீங்களே சொல்லுங்கள்.
மேற்கரசன்: உன்னை மந்திரியாக்கி, சம்பளமும் கொடுத்து உட்கார வைத்தால்,
எங்களை யோசிக்கவா சொல்கிறாய்? தலை இருக்கணுமா வேண்டாமா?
மந்திரி: (பயத்துடன் யோசிக்கிறார்) மன்னியுங்கள் இளவரசர்களே. மக்கள்
பிரச்சனைகளைப் பேசும் மாறன் இருக்கிறானே... அவனையே அழைப்போம்.
மேற்கரசன்: அவன் வேண்டாம். கருப்பா இருக்கிறவனை நம்ப முடியாது.
மந்திரி: (ஒரு வினாடி சோர்ந்து, உடனே உற்சாகமாகிறார்) பேசாமல் தூர
தேசத்திலிருந்து வெள்ளையன் ஜானை அழைக்கலாம்.
கிழக்கரசன்: பலே பலே! நல்ல யோசனை.
மேற்கரசன்: ஆம். அவர்தான் நம் ஊரைப் பிரித்து இரண்டு நாடுகளாக்கச் சரியானவர்.
மந்திரி: (பெருமூச்சு விடுகிறார்.)
கதை சொல்லி: அப்பா ராஜா இறந்ததும், இரண்டு பேருக்கும் ராஜாவாக ஆசை.
உள்ளூர் ஆட்கள் யாரையும் நம்பாமல், இந்த ஊரை உலக மேப்பில் கூடப் பார்க்காத அந்த ஜானைக் கூப்பிடப் போகிறார்களா? இது எங்கே போய் முடியப்போகுதோ தெரியவில்லையே!
காட்சி: 3
அரண்மனை
ஜான்: (ஒரு பையிலிருந்து ஒரு சின்ன பேனாவை எடுத்தான்.) ஆரம்பிக்கலாமா?
மேற்கரசன்: ஜான் சார், பேனா ரொம்ப சின்னதா இருக்கே? கையாளுவது கடினம்.
ஜான்: அதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. அதையெல்லாம் சரியா
செய்திடுவேன். எனக்குச் சம்பளம் மட்டும் 1000 பொற்காசுகள் சரியா கொடுத்துடுங்க.
மந்திரி: அதெல்லாம் சரியா கொடுத்திடுவாங்க...
ஜான்: பாருங்க .. உங்களுக்கு என் மேல நம்பிக்கை இருக்கு என்று எனக்கு தெரியும். ஆனாலும் நாளைபின்ன யாரும் எதுவும் என் நேர்மையை குறை சொல்லிவிடக்கூடாது இல்லையா.. அதனால் தான் இந்த ஏற்பாடு.. Mr மந்திரி இந்த கருப்பு துணியை என் கண்ணுல கட்டுங்க..
(எல்லோரும் திகைத்துப் போகிறார்கள்)
மேற்கரசன்: அருமை.. இந்த நேர்மை இந்த நாட்டில் யாரிடமாவது இருக்கா?
கிழக்கரசன்: என்ன அறிவு கூர்மை.. என்ன அறிவு கூர்மை.. இது இங்கே யாரிடமாவது இருக்கா?
மந்திரி: (முகபாவனையில் நையாண்டி) யாரிடமும் இல்லை .. இவ்வளவு அறிவு யாரிடமும் நிச்சயமாக இல்லை
(முகம் கோணல் மாணல் ஆக.. அதை மறைக்க அபத்தமாக சிரிக்கிறார்.. பின், மந்திரி கருப்பு துணியை ஜான் கண்களில் கட்டுகிறார்.)
ஜான்: நான் இப்போது இந்த நாட்டின் அசையாச் சொத்துக்களை பிரிக்கப்
போகிறேன். அதை இந்த அரண்மனையிலிருந்தே ஆரம்பிக்க போறேன்.. இந்த வண்டி.. இனி, எந்தத் தடை வந்தாலும் நிக்காது.. போலாம்.. ரைட்.. (ஒரு முறை ஜான் தனது ஆட்களைப் பார்த்து சைகை செய்கிறார்.)
(ஜான் இருந்த இடத்திலேயே குனிந்துகொண்டு ஒரு கோடு போட்டுக்கொண்டு ஓட ஆரம்பிக்கிறார்.. அவரது ஆட்கள் அவருக்கு முன்னும் பின்னும் கூடவே ஓடுகிறார்கள். முன்னால் சென்ற ஆட்கள் ஏதாவது தடை இருந்தால் தூக்கி வீசுகிறார்கள்.. ஆட்களை தள்ளிவிடுகிறார்கள்.. பின்னால் சென்ற ஆட்கள் ஒரு பெரிய சுத்தியலால், ஆணியை ஜான் கோடு போட்ட இடத்தில் சொருகுகிறார்கள். பின்னாலேயே இன்னொருவர் ஒரு அடர்த்தியான கயிற்றை, அதன் மேல் கட்டி, ஒரு தடுப்பு போல பிரித்துக் கொண்டே போகிறார்கள். இந்த கூட்டம் முதலில் இரண்டு இளவரசர்களுக்கு இடையிலும் பிரிவினை செய்தது. பின் அரண்மனைப் பகுதியைப் பிரித்தார்கள்.)
கிழக்கரசன்: நல்ல வேளை கோட்டை நம்ம ரெண்டு பேருக்கு இடையே போட்டான்.. (பெருமூச்சு விட்டார்)
மேற்கரசன்: (கோணலாக முக பாவனை செய்து பெருமூச்சு விட்டார்..) அப்பாடா ..
காட்சி: 4
கிராமம்
(ஒரு கழிப்பறை கதவுக்கு முன்பும், உள்ளேயுமாக)
நபர் 1: சீக்கிரம் வெளியே வாடா.. வயிறு களக்குது .. (வயிற்றை பிடித்துக்கொண்டு
நெளிந்து கொண்டு)
நபர் 2: இருடா.. நானே இப்போ தானே உள்ள வந்தேன்.. இந்த நாட்டுல நான்
கொஞ்சம் நிம்மதியா இருக்குறதே இங்க தான்.. இங்கேயும் உயிர எடுகக்காத.. (பாடல் பாடுகிறார்) ஆஹா.. என்ன சுகம்.. கழிப்பதில் என்ன சுகம்.. சுகம்.. சுகம்.. உண்பதில் மட்டுமா சுகம்.. கழிப்பதில் கூடுதல் சுகம்.. )
நபர் 1: எனக்கு கோவம் தலைக்கு ஏறுது .. ஒழுங்கா வெளிலே வந்திடு..
(அப்போது அவர்கள் ஊருக்குள் நுழைகிறார்கள்.. ஜான் குனிந்த தலை
நிமிரவேயில்லை. கோடு கழிவறை வாசலில் மின்னல் வேகத்தில் போட்டுவிட்டு சென்றார் ஜான். பின்னால் வந்தவர்கள் ஆணி ஊன்றி கயிற்றை காட்டினார்கள்.. )
நபர் 1: யோவ்.. என்ன பண்ணுறீங்க..
ஊழியர் 1: பாத்தா தெரியல.. நாட்ட பிரிக்கிறோம்..
நபர் 1: என்னய்யா உளறுறே.. என் வீட்டுக்குள்ள வந்து நின்னுகிட்டு நாட்டை
பிரிக்கிறேங்குறா..
ஊழியர் 1: உன் வீடு எங்க இருக்கு.. இந்த நாட்டுல தானே இருக்கு.. என்ன வானத்துல.. அந்தரத்திலேயா இருக்கு..
நபர் 1: இது என்னய்யா பைத்தியக்காரத்தனமா இருக்கு,,,
(அப்போது கதவு திறக்கிறது.. வயிற்றை தடவிக்கொண்டு வெளியே வர நபர் 2
முயற்சிக்கிறார்.)
ஊழியர் 2: இரு.. இரு.. எங்க போற.. நில்லு..
நபர் 2: என் வீட்டுக்குள்ள தான்
ஊழியர் 1: உனக்கு வேற தனியா சொல்லனுமா.. என்ன வேற நாட்டுலையா இருந்த, நான் சொல்லும் போது.. (தலையை சொறிந்த வாறே) ஆமா.. வேற நாட்டுல தான் இருந்த.. சரி அத விடு.. நீ இனிமே இந்த பக்கம் வர முடியாது.. நீ உன் நாட்டுல தான் இருக்கணும்..
நபர் 2: என்ன சொல்லுற.. கழிப்பறையில எப்படி வாழுறது..
நபர் 1: எனக்கு வயிறு கலக்குது.. நீ மொதல்ல வெளிய வா.. நான் போய்ட்டு வந்து
பேசிக்கலாம்..
(ஊழியர்கள் தடுக்கிறார்கள்)
ஊழியர் 1: அதெல்லாம் அப்படி பாஸ்போர்ட் விசா இல்லாம போக முடியாது பா..
நபர் 1: கக்கூஸ் போக எதுக்குப் பா பாஸ்போர்ட் விசா..?
ஊழியர் 2: ஒழுங்கா சொல்லுரத கேக்குறியா.. இல்ல ஜெயிலுக்கு போறியா?
நபர் 2: நான் வெளில வந்துக்குறேன்..
ஊழியர் 1: நீ ஒரு தடவ சொன்ன கேக்க மாட்டியா .. உசுர எடுக்குறாங்க.. காலையில இருந்து ஒருத்தனும் சொல்லுறத கேக்க மாட்டேங்குறாங்க..
(நபர் 1 முண்டியடித்து உள்ளே போக முயற்சிக்கிறார்.. ஒருவரை ஒருவர் தள்ள
முயற்சிக்கிறார்கள்.. நபர் 2ஐ உள்ளே தள்ளி, ஊழியர் 1 கதவைச் சாத்தி.. ஒரு பெரிய பூட்டை பூட்கிறார் . ஊழியர் 2, நபர் 1ஐ, தள்ளி கீழே விழுத்தாட்டிவிடுகிறார்.)
ஊழியர் 2: ஒழுங்கா இருங்க.. இல்லன ஜெயில் தான்.
(மேடை இப்போது வயல் காடு. ஒரு பக்கம் ஆடுகள் மேய்கின்றன.. ஒரு மரத்தில் குழந்தை தொட்டிலில் தூங்குகிறது. இன்னொரு புறம் வயல் வேலை பாரக்கிறார்கள்.)
ஆடு மேய்க்கும் சிறுவன்: எக்கா.. கொழந்தை அழுவுது
(பெண்கள் பாட்டு பாடிக்கொண்டிருப்பதால்.. யாருக்கும் கேட்கவில்லை..)
பாடல்:
தங்க நிலம் பூத்திருக்கு.. எலே லே..
தங்க சம்பா பூத்திருக்கு.. எலே லே
பூத்ததிலே பாதியத்தான்.. எலே லே
பண்ணையாரு தின்னுடுவான்.. எலே லே
அடுத்த பங்கு தங்க சம்பா எலே லே
பெருச்சாளி வியாபாரி எலே லே
வயித்துக்குள்ளே போயிடுமே எலே லே
வரி போடும் ராஜாவுக்கு எலே லே
கால் பங்கு கொடுக்கணுமே எலே லே
மிச்சம் சொச்சம் இருந்தாக்கா எலே லே
ஏழைகளின் கால்வயிறு நனைந்திடுமே.. எலே லே
ஆடு மேய்க்கும் சிறுவன்: (கொஞ்சம் நடந்து அந்த வயல் பக்கம் போனான்..) எக்கா கொழந்தை அழுவுது. வா அக்கா..
பெண் : (பதற்றத்துடன்) இந்த வாரேன் தம்பி.. ஏன் புள்ள தான்..
(அப்போது ஜான் கோட்டை கிழித்துக்கொண்டு போகிறான்.. குழந்தையும் ஆடுகளும் ஒரு பக்கம், பையனும் விவசாயிகளும் இன்னொரு பக்கம். கயிறு கட்டப்படுகிறது)
பெண்: அய்யா.. நான் போவனும்.. என் பிள்ளை அழுவுது..
ஊழியர் 1: யார் பா .. அங்கே..
ஊழியர் 3: (கையில் ஒரு பெரிய புத்தகம்) சொல்லுங்க சார்
ஊழியர் 1: இதுக்கு என்ன ரூல்ஸ் பாருப்பா..
(குழந்தை அம்மா.. அம்மா. என்று அழுகிறது.. ஆடுகள் மே மே என்று கத்துகின்றன)
ஆடு மேய்க்கும் சிறுவன்: என் ஆடுங்க.. நான் அந்த பக்கம் போகணும்..
ஊழியர் 2: அதெல்லாம் முடியாது.. நாட்டை பிரிச்சாச்சு .. நீ அந்த பக்கம் போக
முடியாது..
ஆடு மேய்க்கும் சிறுவன்: அப்போ நான் என் ஆடுகள இந்த பக்கம் கூட்டிக்கிறேன்..
ஊழியர் 1: அதெல்லாம் முடியாது.. அது இப்போ மேற்கரசன் சொத்து.. நீ கிழக்கரசன் நாட்டுக் காரேன் .. நீ எப்படி இலவசமா ஆடுகள ஓட்டிக்கிட்டு போவ.. ?
பெண்: அய்யா.. என் குழந்தையைக் குடுங்க அய்யா..
ஊழியர் 1: யோவ் நீ இன்னும் பாத்து முடிக்கலையா..
ஊழியர் 3: அதைத் தான் தேடிக்கிட்டு இருக்கிறேன் சார்.. அ – அங்குசம், ஆ - ஆடு, இ– இங்க் குப்பிகள் இப்படி எல்லா பொருளும் விலங்குகளும் .. ஏன் மரங்கள் கூட இதுல தெளிவா இருக்கு.. அட மாட்டைப் பத்தி மூணு பக்கத்துக்கு எழுதியிருக்கு.. ஆனா மனிதர்களைப் பற்றி ஒண்ணும் இல்ல.. யாரு யாரு எங்க இருக்காங்களோ அங்கேயே இருக்கனும் அப்படினு மட்டும் தான் இருக்கு..
ஊழியர் 1: நீ என்ன பண்ணுற அந்த குழந்தைய எடுத்துக்கிட்டு.. அரண்மனைக்கு
போய் விடு,..
ஊழியர் 3 : (அழும் குழந்தையை எடுத்துக்கொண்டு போகிறார்
பெண்: அழுது கொண்டே.. என் கொழந்தை..
ஊழியர் 1: நீ அறிவிப்பு வந்ததும் அரண்மனை வந்துரு. அங்க சொல்லுவாங்க.. என்ன வழின்னு
கதை சொல்லி:
என்ன கொடுமை பாத்தீங்களா! இப்படியே கண்ணு மண்ணு தெரியாம
ஊரை கூறு போட்டுட்டாங்க.. கிணறு ஒரு பக்கம் போயிருச்சு.. வயல் இன்னொரு பக்கம். வண்டி ஒரு பக்கம். மாடு இன்னொரு பக்கம். கடை ஒருபக்கம். கடைக்காரர் ஒரு பக்கம். மக்கள் அல்லோல் பட்டுகிட்டு இருக்கும் போது, அந்த இளவரசர்கள் என்ன செய்தார்கள் என்று வாங்க, பார்க்கலாம்.
காட்சி 5
அரண்மனை
(ஜான் நடுவில் அமர்ந்திருக்கிறார். பெரிய நோட்டு புத்தகத்தில் கணக்கு எழுதுகிறார்.)
மந்திரி: ஜான் அவர்களே.. நீங்கள் மிகவும் சிறப்பாக நாட்டை இரண்டாகப்
பிரித்துவிட்டீர்கள்.. இப்போது அதேபோல அசையும் சொத்துக்களையும் பிரித்து
தந்துவிடுங்கள்..
ஜான்: பிரமாதமாக செய்துவிடுகிறேன்..
மந்திரி: இந்த தங்க அரச கிரீடம்.. ரத்தினங்களும் முத்துக்களும் பதித்தது. ஒன்றே
ஒன்று தான் இருக்கிறது. இது இந்த நாட்டின் அடையாளம். பெருமை.
ஜான்: அப்படியா.. சரி இளவரசர்களே.. யாராவது ஒருவர் மற்றவருக்கு
விட்டுக்கொடுத்துவிடுங்களேன்..
கிழக்கரசன்: அதெல்லாம் முடியாது.. எனக்கு என் பங்கு வேண்டும்.
மேற்கரசன்: எனக்கும் என்னுடைய பங்கு வேண்டும்..
ஜான்: சரி.. உங்கள் விருப்பம். (முட்டிக் காலை உயர்த்தி, கிரீடத்தை மடார் என்று
மோதினார்.. இரண்டாக பிளந்தது...) இந்தாங்க.. ஆளுக்கொரு பாகம்.. மகிழ்ச்சி?
கிழக்கரசன்: ஈ.. ஈ.. மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கரசன்: மகிழ்ச்சி மகிழ்ச்சி
மந்திரி: அடுத்ததாக வாகனங்கள்..
ஜான்: மொத்தம் 13 வாகனங்கள் இருக்கின்றன. ஆளுக்கு 6. ஒன்றை குறித்து
வையுங்கள்.. கடைசியில் பார்ப்போம்.
மந்திரி: நல்ல வேளை .. அதையும் மடார் என்று உடைக்கவில்லை.. (முணுமுணுத்தார்)
ஜான்: அடுத்து
மந்திரி: இந்த புத்தகங்களை என்ன செய்வது..
ஜான்: ஹா.. ஹா.. மிகச் சுலபம்.. ஒவ்வொரு புத்தகத்தையும் சரியாக நட்டநடுவில்
கிழித்து எடுங்கள். முதல் பாதி கிழக்கரசனுக்கு கடைசி பாதி மேற்கரசனுக்கு.
மந்திரி: தங்கம் வெள்ளி நகைகள்..? பாத்திரங்கள்..?
ஜான்: எடைக்கு எடை..
மந்திரி: ஜானே.. ஜான்.. என்ன ஒரு துல்லியம் .. என்ன ஒரு நேர்மை.. அடடா..!
(ஒரு பெரிய தராசு கொண்டுவரப்பட்டது. தங்கம் வெள்ளி இதர பொருட்கள்
ஒவ்வொன்றாக எடைக்கு நிகர் எடை போடப்பட்டு கிழக்கரசனுக்கும் மேற்கரசனுக்கும் பிரிக்கப்பட்டது. அப்போது ஊழியர் 1, குழந்தையோடு ஊழியர் 2, பெண், யானை பாகன் மற்றும் சிறுவன் உள் நுழைகிறார்கள்.)
மந்திரி: யோவ்.. யோவ்.. யாரு உங்களையெல்லாம் உள்ளே விட்டது.. காவலாளி
காவலாளி.. இவர்களை வெளியே அனுப்பு.
.
ஊழியர் 1: அய்யா.. இவர்கள் தொல்லை தாங்க முடியவில்லை.. இங்கே
உடமைகளைப் பிரிக்கும் முக்கியமான பணி நடைபெறுகிறது என்று எவ்வளவோ சொன்னேன்.. கேட்க மறுக்கிறார்கள்..
ஊழியர் 2: இந்த குழந்தை வேறு சதா அழுதுகொண்டே இருக்கிறது..
மந்திரி: சரி வந்து தொலைந்து விட்டீர்கள்.. இங்கேயே அமைதியாக இருங்கள்..
அங்கே போய் ஓரமாக உட்காருங்கள்..
ஜான்: மந்திரி.. வந்து பாருங்கள்.. எல்லாம் சரியாக பிரித்துவிட்டேன்.. இரண்டு
இளவரசர்களுக்கும் மகிழ்ச்சி ..
மந்திரி: அரண்மனை கிணறு பாக்கி இருக்கிறது..
ஜான்: (மேலே கூரையைப் பார்த்து முணுமுணுத்தான்.. ‘எப்படியும் இருவரும்
விட்டுத்தர மாட்டார்கள்’..) பேசாமல் கிணற்றை கல்லைப் போட்டு மூடிவிடுங்கள்..
இல்லையென்றால் தண்ணீர் ஊரிக் கொண்டே இருக்கும்.. நாளை இரு
நாடுகளுக்கிடையே இதுவே பெரிய சண்டையாகக் கூடும்.. எதுக்கு வம்பு.. என்ன நான் சொல்வது..
கிழக்கரசன், மேற்கரசன்: ஆமா.. ஆமாம்.. அதுவே சரி..
மந்திரி: தண்ணீர் இறைக்கும் வாளி, பாத்திரங்களோடு சேர்ந்து பிரிக்கப்
பட்டுவிட்டது.. இந்த ஒற்றை கயிறு மட்டும் பாக்கி இருக்கு..
கிழக்கரசன்: அதையும் பிரித்துவிடுங்கள்..
மேற்கரசன்: ஆமாம்.. பிரித்துவிடுங்கள்
(மேடையின் பக்கவாட்டில்.. பாடல் குழு)
வீடு ஒரு பக்கம்
வாசல் ஒரு பக்கம்
கிணறு ஒரு பக்கம்
தண்ணீர் ஒரு பக்கம்...
அம்மா ஒரு பக்கம்
பிள்ளை ஒரு பக்கம்
யானை ஒரு பக்கம்
அங்குசம் ஒரு பக்கம்...
பிரித்தார்கள் பிரித்தார்கள்
பிரித்தால் யாருக்கு என்ன பயன்
ஆடு மேய்க்கும் சிறுவன்: அய்யா.. பிரித்தால் யாருக்கும் பலன் தராது.. சிறிய கயிறு எந்த வேலைக்கும் பயன்படாது .. யாராவது ஒருவரிடம் இருந்தால் பயன்படுத்தலாமே..
கிழக்கரசன்: யாரு இந்த பொடிப் பயலை உள்ளே விட்டது..
மந்திரி: (சிறுவனை நோக்கி) வாயை மூடு.. .. இளவரசே.. அது வேறு ஒரு பிரச்சனை.. இன்னொரு சொத்து.. அடுத்து கொண்டு வருகிறேன்.. (எப்படியோ சமாளித்து விட்டோம்) கொண்டுவாருங்கள் அந்த யானையை..
(ஒரு யானை மேடைக்குள் நுழைந்தது) பிளீர்..
ஜான்: அய்யோ.. (ஒரு குதி.. நாற்காலியின் மேல் கால்களை கட்டிக்கொண்டு
அமர்ந்தான். பயந்து நடுங்கினான்)
மந்திரி: ஒண்ணும் பயப்படத் தேவையில்லை.. பாகனும் இங்கே தான் இருக்கிறான்.. டேய் .. போடா.. யானையைப் பார்த்து அழைத்துக்கொண்டு வாடா..
(யானை நடு மேடைக்கு வந்தது)
மந்திரி: பாருங்க ஜான்.. குதிரைகள், யானைகள், கழுதைகள் என்று எல்லா
விலங்குகளையும் பிரித்துவிட்டோம்.. இந்த ஒரு யானை மட்டும் மிச்சம் இருக்கிறது..
ஜான்: மேலும் கீழும் கணக்கு நோட்டைப் பார்த்தான். ஒரு வாகனம் இருந்ததே..
அதையும் கொண்டுவாருங்கள்..
கிழக்கரசன்: கயிறு இன்னும் பிரிக்கவில்லை.. ஈ .. இல்லை மறந்துவிடக்கூடாது
இல்லயா ஈ ஈ
மேற்கரசன்: ஆமா.. ஆமா.. கயிறு முக்கியம் மந்திரியாரே..
ஜான்: ஏற்றுங்கள்.. யானையையும் வாகனத்தையும்.. தராசின் இருபக்கங்களிலும்..
(பாகான் யானையை ஏற்றினான்.. இன்னொரு பக்கம் வாகனத்தை ஏற்றினார்கள். யானை கீழே இறங்க.. மீண்டும் ஏற்றினான் பாகன். )
ஜான்: ஹ் ம்ம்.. ஒரு 2 கிலோ குறைவாக இருக்கிறது வாகன எடை.. என்ன
செய்யலாம்..
மேற்கரசன்: மந்திரியாரே.. கயிறு .. மறந்துவிடாதீர்கள்..
மந்திரி: (எனக்கு பைத்தியமே பிடித்துவிடும் போல.. முணுமுணுத்தார்..) யாரப்பா
அங்கே.. தண்டமாக நின்றுகொண்டிருக்கிறீர்களே.. இந்த கயிற்றை இரண்டாக
அறுத்திடுங்கள்..
ஊழியர் 1: வா.. பா..
ஊழியர் 2: குழந்தையை என்ன செய்ய.. அம்மாவிடம் கொடுக்கட்டுமா?
ஊழியர் 1: அய்யோ வேண்டாம்.. வம்பாகிவிடும்.. நீ அந்த சிறுவனிடம் கொடு..
ஊழியர் 2: சிறுவனும் மேற்கு ஊரு தானே..?
ஊழியர் 1: ஆமா.. எனக்கே எல்லாம் ஒரே குழப்பமாக இருக்கிறது...
மந்திரி: என்ன குசுகுசு என்று பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.. வாங்கப் பா..
ஊழியர் 1: யோவ்.. யானை பாகா.. இங்கே வா பா.. இந்தா.. இந்தக் குழந்தையைப்
பிடி..
(யானைப் பாகன் குழந்தையை வாங்கிக்கொண்டான்)
(ஊழியர் 1 மற்றும் ஊழியர் 2
கயிற்றை ஒரே நேர் கோடாக பிடித்துக்கொண்டார்கள்.
மந்திரி ஒரு பெரிய கத்திரிக்கோல் கொண்டு அறுக்கிறார்.. அப்போது..)
ஜான்: யோசனை.. அந்த அங்குசத்தை தா..
(பாகன் அங்குசத்தைக் கொண்டுவந்து ஜானிடம் கொடுக்கிறார். ஜான் அதை வாகனம் இருக்கும் பக்கத்தில் வைக்கிறார். திடீரென்று யானை இருக்கும் பக்கம் மேலே உயர்கிறது. யானை மிரண்டு போகிறது.)
(பிளி ஈ ஈ .. என்று பிளிறிக்கொண்டு தும்பிக்கையை தூக்கி ஒரு முன்னங்காலை உயர்த்துகிறது..)
ஜான்: அய்யோ.. என் கதை முடிந்தது.. என்னை விட்டுவிடுங்கள்..
(ஒரே ஓட்டமாக ஜான் ஓடுகிறான்..
மந்திரி இன்னமும் மும்முரமாக கயிற்றை அறுக்கிறார்..
யானை தராசிலிருந்து கீழே இறங்கி .. பிரீ.. என்று மீண்டும் பிளிறியது.. பின் ஒரு பெரிய தும்மல் போட்டது,,, அந்த நொடி.. கயிறு இரண்டாகி இரண்டு ஊழியர்களும் தொபுக்கடீர் என்று கீழே விழுகிறார்கள்..
மேடை ஆட்டம் காண்கிறது.. இரண்டு இளவரசர்களும் சிம்மாசனத்திலிருந்து கீழே விழுகிறார்கள்.. குழந்தையை தூக்கி அம்மாவிடம் போடுகிறார் பாகான்..
யானை இன்னொரு தும்மல் போடுகிறது..அதில் கிளம்பிய காற்று ஜான் போட்ட கோடுகளை அழித்துவிடுகிறது. பாகனை ஏற்றிக்கொண்டு கிளம்புகிறது ஜாய்மணி யானை..
பாடல் குழு:
யானை பெரிய யானை நான்
காட்டில் அலையும் யானை நான்
கோடுகளை அழித்திடுவேன்
ஜம்பமாய் அலைந்திடுவேன்.
கரும்பை நானும் சுவைத்திடுவேன்
குழந்தைகளை சுமந்திடுவேன் ..
யானை பெரிய யானை நான்
யாவருக்கும் நண்பன் நான்.
(திரை விழுகிறது)

எழுத்தாளர், கதைசொல்லி.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறம் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட முகிழ் சிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தற்போது துபாயில் வசிக்கிறார்.





Comments