சிறுவர் நாடகம் : வியனின் கொட்டாவி
- சுகன்யா ராமநாதன்

- 16 hours ago
- 6 min read

கதாபாத்திரங்கள்:
கதைசொல்லி
வியன் (முதன்மைக் குழந்தை)
குமார் & ரமா (வியனின் நண்பர்கள்)
அறிவியல் ஆசிரியர், கணக்கு ஆசிரியர், வரலாறு ஆசிரியர், தமிழ் ஆசிரியர்
தலைமையாசிரியர்
பட்டாம்பூச்சி, கம்பளிப்பூச்சி, கூட்டுப்புழு, தவளை அண்ணன்
பார்வையாளர்கள் (நாடக அரங்கிலுள்ள குழந்தைகள்)
காட்சி 1: பள்ளி வகுப்பறை
( கதைசொல்லி ஆடிக் கொண்டே மேடைக்கு வருகிறார்.)
கதைசொல்லி: நம்ம எல்லாரையும் போலவே பள்ளிக்கு போகும் ஒரு சின்னப் பையன் தான் வியன். ஆனால் அவனுக்கு அவன் ஸ்கூல் பிடிக்கும், வகுப்பறை பிடிக்காது. அறிவியல் பிடிக்கும், ஆசிரியர் பிடிக்காது. விளையாடப் பிடிக்கும், பிடி (PT) பீரியட் பிடிக்காது. அதனால் என்ன ஆகுதுன்னு நீங்களே பாருங்கள்!
(கதைசொல்லி ஆடிக் கொண்டே ஓரமாய் ஒதுங்குகிறார். மேடை வகுப்பறைக் காட்சியாக மாறுகிறது. வியன், குமார், ரமா மற்றும் மற்ற மாணவர்கள் பென்ச்சுகளில் அமர்ந்திருக்கிறார்கள். அறிவியல் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்.)
அறிவியல் ஆசிரியர்: இன்னைக்கு நம்ம வகுப்புல உயிர்களின் உருமாற்றம் பற்றி பார்க்கப் போகிறோம்.
வியன்: ஹா... (ஒரு பெரிய கொட்டாவி விடுகிறான்)
அறிவியல் ஆசிரியர்: கரப்பான் பூச்சிகள், தவளைகள், பட்டாம்பூச்சிகள்...
வியன்: ஹா... வ் (சத்தத்தோடு இன்னும் ஒரு பெரிய கொட்டாவி)
அறிவியல் ஆசிரியர்: நான் பூச்சியைப் பத்தி சொல்லிகிட்டு இருந்தா... இவன் வாயில ஈ போயிடும் போலயே...! (என்று கோபமாகச் சொல்லி, ஒரு சாக்பீஸ் துண்டை அவனை நோக்கி எறிகிறார்)
வியன்: (டக் என்று அலர்ட் ஆகி நேராக நிமிர்கிறான்)
அறிவியல் ஆசிரியர்: வியன் எப்பாப் பாரு தூங்கி வழி...!
வியன்: (திருதிருவென முழிக்கிறான்)
ரமா: (பக்கத்தில் உட்கார்ந்திருந்தபடி ரகசியமாகக் கேட்கிறாள்) ஏண்டா தூங்குற... நானும் எவ்வளோ தான் உன்னை எழுப்புறது?
வியன்: ஏன்னே தெரியலப்பா... கிளாசுக்கு வந்தாலே தூக்கமா வருது.
அறிவியல் ஆசிரியர்: புழுக்கள், கூட்டுப்புழுக்களாகி பிறகு பட்டாம்பூச்சிகளாக முழு உருமாற்றம் அடையுது... அதன் வளர்ச்சி..நிலைகள்...
(இப்போது வியன் சௌகரியமாக பென்ச்சில் படுத்துத் தூங்கியே விடுகிறான்.)
அறிவியல் ஆசிரியர்: இன்னைக்கு இவனைச் சும்மா விடுறது இல்ல...! (ஒரு பிரம்புக் குச்சியை ஓங்கிக்கொண்டு வியனை நோக்கி வருகிறார்)
(ரமா பயந்துபோய் வியனை அவசரமாக எழுப்ப முயற்சிக்கிறாள். லேசாக கண்விழித்த வியனுக்கு ஒரு பிரம்மாண்டமான கொட்டாவி முட்டிக்கொண்டு வருகிறது.)
வியன்: ஹா.......வ்! (என்று கொட்டாவி விடுகிறான்)
( புயலைப் போல பெரும் சத்தம் கேட்கிறது. அது சுனாமியாக மாறி அறிவியல் ஆசிரியரை உள்ளே இழுக்கிறது. ஆசிரியர் முதலில் காற்றின் வேகத்தால் பின்னே சென்று, பின் ஓடி வந்து வியனின் வாய்க்குள் போவதாகச் செய்கை செய்து, சட்டென்று ஸ்டேஜின் வெளியே ஓடி மறைகிறார். வியன் மீண்டும் பென்ச்சில் படுத்துத் தூங்கி விடுகிறான். வகுப்பறையில் ஒரே அமளித்துமளி. திரை விழுகிறது.)
காட்சி 2
இடம் : தலைமையாசிரியர் அலுவலகம்
( மேடையில் தலைமையாசிரியர் அலுவலகம். பெரிய மரங்கள் போல ஆசிரியர்கள் வியனைச் சூழ்ந்து சுற்றி நிற்கிறார்கள். வியன் அவர்களுக்கு மத்தியில் ஒரு குட்டிப் பூ போலப் பாவமாக நிற்கிறான். )
கணக்கு ஆசிரியர்: டேய் வியன்... என்ன நடந்தது? ஒழுங்கா சொல்லுடா... எங்க தேடியும் அறிவியல் சாரைக் காணோம்!
வரலாறு ஆசிரியர்: சார், இவன் எப்போதுமே கிளாசுக்கு வந்தாலே தூங்குவான்... நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன்.
தமிழ் ஆசிரியர்: தூங்கினதுக்காக அறிவியல் ஆசிரியர் திட்டினா தப்பா... அவரை என்னடா பண்ணுன?
(மேடையின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த கதைசொல்லி..பார்வையாளர்களிடம்)
கதைசொல்லி: பெரிய மரங்கள் போல நிற்கும் ஆசிரியர்கள் மத்தியில் வியன் குட்டியாக ஒரு குட்டிப் பூ மாதிரி நின்று கொண்டிருக்கிறான். பாக்குற எனக்கே அவனைப் பார்த்தா பாவமா இருக்கு. உங்களுக்கு எப்படி? நம்ம மனசு வச்சா அவனைக் காப்பாற்ற முடியும். நீங்க சொல்லுங்க, அவனைக் காப்பாற்றுவோமா... வேண்டாமா?
கூட்டம் (பார்வையாளர்கள்): காப்பாற்றுவோம்... காப்பாற்றுவோம்!
கதைசொல்லி: அப்போ... எல்லாரும்... 'ஹா...' என்று வாயைத் திறந்து கொட்டாவி விடுங்கள்... விடுங்கள்... விட்டுத் தான் பாருங்களேன்...!
(கதைசொல்லி 'ஹா வ் ‘ என்று கொட்டாவி விடுவது போல ஓசையோடு செய்கை செய்கிறார். அரங்கில் உள்ள கூட்டமும் 'ஹா' என்று கொட்டாவி விடுகிறார்கள். உடனே மேடையில் வியனும் பெரிய கொட்டாவி விடுகிறான்.)
வியன்: ஹா...வ்....!
(மீண்டும் அவன் வாயிலிருந்து ஒரு பெரும் புயல் கிளம்புகிறது. அது அங்கிருக்கும் எல்லா ஆசிரியர்களையும் பின்னால் தள்ளுகிறது. பின் ஒரு சுனாமி போல மாறி, அப்படியே ஒவ்வொரு ஆசிரியராக, தலைமையாசிரியர் உட்பட அனைவரையும் வியன் வாய்க்குள் இழுத்துக் கொள்கிறது. ஆசிரியர்கள் அனைவரும் வியன் வாய்க்குள் விழுந்து மேடையை விட்டு மறைகிறார்கள்.)
காட்சி 3:
வகுப்பறை & பட்டாம்பூச்சியின் வருகை
(காட்சி மீண்டும் வகுப்பறைக்கு மாறுகிறது. எல்லா குழந்தைகளும் ஒரே ஆரவாரம் செய்கிறார்கள். இப்போது அந்தப் பள்ளியில் ஒரு ஆசிரியரும் இல்லை. அப்போது வகுப்பிற்குள் ஒரு பட்டாம்பூச்சி நுழைகிறது. அது முகத்தில் கண்ணாடியும், கையில் ஒரு குச்சியும், தோளில் ஒரு பையும் மாட்டியிருக்கிறது.)
பட்டாம்பூச்சி: ஹாய் குழந்தைகளா...!
குழந்தைகள்: ஹாய்...!
(பட்டாம்பூச்சி தன்னுடைய கண்ணாடியை எடுத்துத் துடைத்து மீண்டும் அணிந்து கொள்கிறது.)
குமார்: நீ ஏன் கண்ணாடி போட்டிருக்க?
பட்டாம்பூச்சி: அதுவா... ஆசிரியர் அப்படின்னா கண்ணாடி, ஒரு குச்சி கையில, புக் இதெல்லாம் இருந்தா... ஒரு கெத்தா இருக்குமேனு... சரி விடு... இதெல்லாம் நமக்கு ஒத்தே வரல!
(பட்டாம்பூச்சி கண்ணாடியைக் கழற்றி எறிகிறது. தோளில் போட்டிருந்த பையைக் கழற்றும் போது, அதனுடைய சிறகுகளில் ஒன்று கழன்று விடுகிறது. பட்டாம்பூச்சி நகைச்சுவையாகத் தன் உடலை அசைத்து, காற்றில் பறக்கிற அந்தச் சிறகைத் தாவிப் பிடிக்கிறது.)
பட்டாம்பூச்சி: அய்யோ... சிறகுகள் ரொம்ப முக்கியம்பா... தேவை இல்லாததெல்லாம் போடுறதுனால பாருங்க... முக்கியமான சிறகே கழன்றுடுச்சு!
குமார்: நீ தான் எங்க புது டீச்சரா?
பட்டாம்பூச்சி: ஆமா.. வேற வழி... இந்த வியன் பையன், இருந்த எல்லா ஆசிரியர்களையும் முழுங்கிட்டான்... சிலபஸ் கவர் பண்ணனும்... ஒரே டென்ஷனா இருக்கு பா... இனிமே நாங்க தான் உங்களுக்கு ஆசிரியர்கள்!
ரமா: நீங்கன்னா... இன்னும் வேற யாரெல்லாம் இருக்காங்க?
பட்டாம்பூச்சி: அதோ நிக்கிறாங்களே... கரப்பான் பூச்சி, தவளை அண்ணன் அறிவியல் ஆசிரியர்கள். அப்புறம் நம்ம சிந்துசமவெளி நடன மங்கை (Indus dancing girl), டைனோசர் எலும்புக்கூடு, பானை ஓடு எல்லாரும் மியூசியத்துல இருந்து வந்துகிட்டு இருக்காங்க... வரலாறு பாடம் எடுக்க...!
வியன்: ஐ... சூப்பர்... நான் கிளாசில் தூங்கும் போது இவங்க தான் என் கனவுல வருவாங்க...
(குழந்தைகள் அனைவரும் ஒரே ஆரவாரம் செய்கிறார்கள்.)
பட்டாம்பூச்சி: சரி வாங்க வகுப்புக்கு போவோம்!
ரமா: ஏற்கனவே கிளாசில் தானே இருக்கோம்?
பட்டாம்பூச்சி: இதுவா.. சீ சீ... இதில எப்டி பாடம் நடத்துறது? இன்னும் கொஞ்ச நேரம் இங்கே இருந்தா... எனக்கே எல்லா பாடமும் மறந்திடும் போலையே!
(பட்டாம்பூச்சிக்குக் கொஞ்சம் மயக்கம் வர மாதிரி ஆகிறது... மூச்சு அடைக்கிற மாதிரி செய்கிறது... பிறகு ஒரு பெரிய கொட்டாவியை விடுகிறது.)
(பட்டாம்பூச்சியின் வாயிலிருந்து வரும் கொட்டாவிப் புயல் காற்றில் குழந்தைகள் எல்லோரும் பின்னாடி தள்ளப்படுகிறார்கள். பின் ஒரு சுனாமி காற்று வீசுகிறது. அதில் எல்லோரும் ஒவ்வொருவராய்ப் பட்டாம்பூச்சியின் வாய்க்குள் போய்விடுகிறார்கள். இப்போது பட்டாம்பூச்சி தன் சிறகுகளை விரித்துப் பறந்து வெளியே போகிறது. மேடை ஒரு அழகான காடாக மாறுகிறது.)
காட்சி 4:
மாயாஜாலக் காடு
(குழந்தைகள் ஒரு பெரிய இலையின் மீது இருந்த பட்டாம்பூச்சியின் முட்டைகளைப் பார்க்கின்றனர். அதிலிருந்து ஒரு குதி குதித்து ஒரு கம்பளிப்பூச்சி வெளியே வருகிறது.)
ரமா: ஐ... கம்பளிப்பூச்சி!
(கம்பளிப்பூச்சி ரமாவை ஒரு முறை முறைத்துவிட்டு இலைகளை வேகமாகச் சாப்பிட ஆரம்பிக்கிறது. சாப்பிட்டு முடித்த பிறகு...)
கம்பளிப்பூச்சி: அப்பாடா... என்னா பசி.... ஏவ்! (பெரிய ஏப்பம் விடுகிறது)
ரமா: என்னா தீனி திங்குற நீ?
கம்பளிப்பூச்சி: அப்புறம் உன்ன மாதிரி கொரிப்பாங்களாக்கும்...
(ரமா கோபமாக முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள். இன்னொரு பக்கம் ஒரு கூட்டுப்புழு தன் தோலைக் கிழித்துக் கொண்டு வெளியே வர முயல்கிறது.)
குமார்: (அதைத் தொடப் போகிறான்)
கூட்டுப்புழு: ஏய்... போடா அங்கிட்டு... தொடாதே...!
குமார்: ஏன் கோபப்படுற... நான் உனக்கு உதவி செய்யலாம்னு தானே வந்தேன்.
கூட்டுப்புழு: யாரு... நீயா? தட்டான் வாலுல கயிறைக் கட்டினவன் தானே நீ?
குமார்: (ஈ என்று இளித்துக்கொண்டே) அது அப்போ... இப்போ நான் நெஜமாவே உனக்கு ஹெல்ப் பண்ணத்தான் வந்தேன்...
(கூட்டுப்புழு இன்னும் கொஞ்சம் தோலைக் கிழித்துக் கொண்டு வெளியே வருகிறது.)
கூட்டுப்புழு: நீ சும்மா இருந்தாலே பெரிய ஹெல்ப் தான்... நான் வெளியே வந்ததும் என் ரெண்டு சிறகையும் எடுத்து உன்னை கும்பிடுறேன் பா... கொஞ்சம் தள்ளி நில்லு!
(குழந்தைகள் அனைவரும் சிரிக்கிறார்கள்.)
ரமா: டேய்... உன்னைப் பத்தி நல்லா தெரிஞ்சு வச்சிருக்குடா!
குமார்: நீ மட்டும் என்ன... அந்த கம்பளிப்பூச்சிகிட்ட மொக்கை வாங்கினதை நானும் பாத்தேன்... வவ்! (கிண்டலாகப் பாவனை செய்கிறான்)
(பதிலுக்கு ரமாவும் 'வவ்' என்று பாவனை செய்கிறாள். அப்போது அங்கே தவளை அண்ணன் ‘கொர்ர கொர்ர’ என்று சத்தம் போட்டுக்கொண்டே, குதித்து வருகிறார்.)
தவளை அண்ணன்: வாங்க, அடுத்து நம்ம குளத்துக்குப் போவோம்...
வியன்: குளத்துல நாங்க எப்படி வர்றது? மூழ்கிட மாட்டோமா?
தவளை அண்ணன்: அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல... என்ன மாதிரியே தாவி தாவி வந்தா, அல்லிக் குளத்துல ஒரு இலையில இருந்து இன்னொரு இலைக்கு நீங்களும் தாவி தாவி போயிடலாம்... கமான் ஸ்டார்ட்!
(தவளை தாவித் தாவிப் போக... பின்னாடியே வியன், ரமா, குமார் என எல்லோரும் தவளையைப் போலவே தாவித் தாவிப் பின்செல்கிறார்கள்.)
காட்சி 5:
அல்லிக் குளம்
(கதைசொல்லி மேடையின் ஒரு பக்கமாக வந்து பார்வையாளர்களை நோக்கிப் பேசுகிறார்.)
கதைசொல்லி: அடுத்ததா அவங்க எல்லோரும் குளத்துல போய் தவளை அண்ணனின் வாழ்க்கையைப் பார்த்தாங்க. உங்களுக்குப் பார்க்கணும்னா ரொம்ப ஈசி... நீங்களும் தவளை மாதிரி தாவி தாவிப் போனா, அவரை மாதிரியே அல்லி இலை மேல நிக்க முடியும். ஐயோ... மறந்தே போயிட்டேன்... நம்ம இங்க இந்த நாடகக் கொட்டகையிலேயே மாட்டிக்கிட்டு இருக்கிறோம்... முதல்ல நாம அவங்க இருக்குற குளத்துக்குப் போகணும். எல்லாரும் ஒரு தடவை கொர்ர கொர்ர’ன்னு அடித் தொண்டையில இருந்து கத்துங்க...
(நாடக அரங்கில் உள்ள பார்வையாளர்கள்/குழந்தைகள் அனைவரும் கொர்ர கொர்ரன்னு' சத்தமாகக் கத்துகிறார்கள். மேடையில் கதைசொல்லி ஒரு பக்கமாக ஒதுங்கிக்கொள்ள, அல்லி இலைகளின் மீது குமார், ரமா, வியன் மற்றும் தவளை அண்ணன் நின்றிருக்கிறார்கள்.)
கதைசொல்லி: அட... பார்த்தீங்களா.... நம்ம குளத்துக்கு வந்துட்டோம். தாவுங்க... தாவுங்க... எல்லாரும் மூழ்கிடுவோம்!
(அப்படிச் சொல்லிக்கொண்டே கதைசொல்லி தாவித் தாவி மேடையை விட்டு வெளியேறுகிறார்.)
குமார்: அண்ணன், நீங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க... மீன் மாதிரி நீந்தவும் செய்றீங்க... எங்கள மாதிரி நிலத்திலேயும் நடக்குறீங்க...
தவளை அண்ணன்: என்ன இருந்து என்ன பண்ண... இந்த வாயால கெடுறேனே... (என்று தனக்குள்ளேயே முணுமுணுப்பது போலச் சொல்கிறது)
ரமா: என்ன சொன்னீங்க?
தவளை அண்ணன்: அது ஒண்ணுமில்ல... தவளைகள் வாழ்க அப்படின்னு சொன்னேன்!
வியன்: அண்ணன்... அதோ பாம்பு...!
தவளை அண்ணன்: அய்யோ...! (பயந்து தடுமாறி கீழே விழுகிறது)
(எல்லாரும் சிரிக்கிறார்கள்.)
தவளை அண்ணன்: அட போப்பா... சும்மா பயமுறுத்திக்கிட்டு! எல்லாரும் கிளம்புங்க... கிளாஸ் (Class) முடிஞ்சது!
குமார்: சரி... கோச்சுக்காதீங்க.
தவளை அண்ணன்: சரி... சரி... கோவம் எல்லாம் இல்ல.. நீங்க எல்லாம் நல்ல பிள்ளைங்க.. சரி நாளைக்கு பார்ப்போம்.
வியன்: என்னது கிளாஸ் முடிஞ்சதா... அப்போ எங்க ஆசிரியர்கள்...?
தவளை அண்ணன்: அட.. கிளாஸ் அவங்களுக்குத் தான்...!
ரமா: என்ன சொல்லுற... புரியலையே?
தவளை அண்ணன்: நீங்க வந்தீங்க, பார்த்தீங்க, கேள்விகள் கேட்டீங்க... நாங்க அதுக்கு பதில் சொன்னோம்... அவ்வளவு தான்... நீங்களே கத்துக்கிட்டீங்க!
குழந்தைகள்: ஆமா..!
தவளை அண்ணன்: (அரங்கிலுள்ள பார்வையாளர்களைப் பார்த்து) ஆனா, உங்க ஆசிரியர்கள் நீங்க கேள்வி கேட்டா என்ன செய்தாங்க... நீங்க சொல்லுங்க?
பார்வையாளர்கள் (குழந்தைகள்): திட்டுவாங்க... அடிப்பாங்க... வாயை மூட சொல்லுவாங்க...!
தவளை அண்ணன்: இப்போ புரியுதா.. இந்த கிளாஸ் யாருக்குன்னு?
வியன்: ஆனா எங்க ஆசிரியர்கள் பாவம்... அவங்களைக் காப்பாத்து... ப்ளீஸ்!
தவளை அண்ணன்: அட நான் ஒன்னும் பண்ணலப்பா... உங்க ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்துல இருக்காங்க... (தரையைப் பார்த்து) கேக்குதா...?
ரமா: என்ன பண்ணனும் சொல்லு... அவங்க எங்க இருக்காங்க?
தவளை அண்ணன்: அவங்களும் இங்க தான்.. இந்த குளத்துல தான் இருக்காங்க... (மீண்டும் பார்வையாளர்களைப் பார்த்து) நீங்களே சொல்லுங்க... நம்ம எப்படி குளத்துக்கு வந்தோம்? குதிச்சு குதிச்சு... தாவி தாவி...!
தவளை அண்ணன்: ஆமா... சரியா சொன்னீங்க... அவங்களும் அப்படி குதிச்சு குதிச்சு மேல வரலாம் தானே... நீங்களாவது சொல்லிப் பாருங்க... அவங்க கேக்குறாங்களான்னு பாக்கலாம்!
குழந்தைகளும் பார்வையாளர்களும் இணைந்து: குதிச்சு வாங்க... தாவி வாங்க... தவளை மாதிரி பண்ணுங்க!
(மேடையின் பக்கங்களிலிருந்தும், தரையோடு தரையாக கீழே இருந்து மேலே எழுந்து வருவது போலவும்... குதித்துக் குதித்துத் தவளை வடிவில் வந்து மேடையில் சேருகிறார்கள் அனைத்துப் பள்ளி ஆசிரியர்களும் தலைமையாசிரியரும்.)
குழந்தைகள்: ஐ... யே...! (சந்தோஷமாகக் குதித்துச் சத்தம் போடுகிறார்கள்)
வியன்: எல்லாம் சரி, இப்போ நாங்க எப்படி எங்க உலகத்துக்குப் போறது?
தவளை அண்ணன்: எப்படி இங்க வந்தீங்க?
குழந்தைகள்: கொட்டாவி விட்டு!
தவளை அண்ணன்: இப்போ தூக்கம் கலைய கண் கசக்குங்க...
(குழந்தைகள் அனைவரும் கண்ணைக் கசக்குகிறார்கள்.)
தவளை அண்ணன்: (பார்வையாளர்களை நோக்கி) நீங்களும் கண்ணைக் கசக்குங்க... நீங்க வீட்டுக்கு போக வேணாமா?
கதைசொல்லி: (அவசரமாக மேடைக்கு ஓடிவந்து) எப்பா... என்னை விட்டுட்டுப் போயிடாதீங்க... (அவரும் கண்ணைக் கசக்குகிறார்)
தவளை அண்ணன்: போதும் போதும்... கண்ணு முழி வெளிய வந்துடப் போகுது... நிறுத்துங்க... இப்ப பாருங்க... நம்ம வந்துட்டோம்...
ரமா: என்ன விளையாடுறியா... நம்ம அங்கேயே தான் இருக்கோம்... எங்க உலகம் எங்க?
தவளை அண்ணன்: என்னது உங்க உலகமா? நாங்களும் அதே உலகத்துல தான் இருக்கோம்.. நாங்க மட்டும் என்ன வேற கோளிலிலிருந்தா வந்திருக்கிறோம்... இப்படி நேரா போய் ரைட் எடு... உங்க ஸ்கூல் (School) வந்துடும்... உங்க பள்ளிக்கூட த்துக்குப் பின்னாடி இருக்குற பார்க்ல (Park) தான் நம்ம இப்போ இருக்கோம்!
குழந்தைகள்: அட... அப்படியா... நாங்க பயந்தே போயிட்டோம்...!
ஆசிரியர்கள்: வாங்க போகலாம்...வியன்: சார் உங்க பிரம்பு.. (கையில் நீட்டிக்கொண்டே)அறிவியல் ஆசிரியர்: அது எதுக்கு டா இனிமே.. தூக்கி அங்கிட்டு போடு.. வியன் தோளில் அறிவியல் ஆசிரியர் கை போட்டுக்கொண்டார்.
(ஆசிரியர்கள் பழைய கோபங்கள் எல்லாம் மறந்து, தங்களின் இறுக்கமான உடல் மொழியை உடைத்து, அன்போடு குழந்தைகளை அணைத்துக் கொண்டும், தோளில் கைப் போட்டுக் கொண்டும் நெகிழ்ச்சியோடு மேடையை விட்டு வெளியேறுகிறார்கள்.)
கதைசொல்லி: ( பாடுவதைப் போல )
நாடகம் பார்த்த குழந்தைகளுக்கு நன்றி, வணக்கம்!
நாடகம் பார்த்த பெரியவர்களுக்கு நன்றி, வணக்கம்!
நாடகம் பார்த்த ஆசிரியர்களுக்கு நன்றி, வணக்கம்!
(திரை விழுகிறது)

எழுத்தாளர், கதைசொல்லி.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறம் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட முகிழ் சிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தற்போது துபாயில் வசிக்கிறார்.



Comments