புத்தகக் கொலு

வணக்கம் குழந்தைகளே..,
கோவில்பட்டியில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி பற்றி தான் உங்களுக்கு சொல்ல வந்தேன்.
எல்லாரும் தீபாவளி நல்லா கொண்டாடுனீங்க தானே! போன மாதம் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை எல்லாம் வந்ததே!
நவராத்திரியின் கடைசி மூன்று நாட்களில் தான் பெரும்பாலான மக்கள் தங்கள் தொழிலுக்கு நன்றி சொல்லும் விதமா ஆயுத பூஜை கொண்டாடுவாங்க.
எங்க தூத்துக்குடி மாவட்டத்தில இந்த நவராத்திரி நாட்கள்ல மக்கள் விதவிதமா வேடம் அணிந்து வந்து மக்களிடம் பணம் வசூல் செய்வார்கள். தூத்துக்குடி மாவட்டத்தோட மிகவும் புகழ் பெற்ற முத்தாரம்மன் கோவில் தசராவிற்காகத் தான் இந்த வேடங்கள்.
இப்படி மக்கள் தெய்வம் கண் திறந்து நமக்கு நல்லது செய்யுமா என யோசித்துக் கொண்டிருந்த போது, குழந்தைகளின் அறிவுக் கண்ணைத் திறக்க என்ன செய்யலாம் என யோசித்தார் எங்கள் ஊர் ஆசிரியர் மணிமொழிநங்கை.
அரசுப்பள்ளி ஆசிரியர் மணிமொழிநங்கை அவர்கள், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் கோவில்பட்டி கிளையின் தலைவர்.

பின்னே, அவரது ஆர்வத்திற்கு காரணம் இல்லாமல் இருக்குமா என்ன! அவர் மனதில் உதித்த யோசனை என்ன தெரியுமா? குழந்தைகளுக்காக கொலு வைக்கலாம் என்பது தான். என்ன கொலு தெரியுமா?
முதலில் கொலு என்றால் என்ன!
நிறைய மக்கள், நவராத்திரிக்காக கொலு வைப்பார்கள். ஆமாம் கொலு! அதில்
விதவிதமா பொம்மைகளை வரிசையாக படிகளில் அடுக்கி வைத்து வழிபடுவார்கள்.
அவரவர் கற்பனைக்கு ஏற்ப ஏதாவது ஒரு கருத்தோடு கொலு வைப்பவர்கள் உண்டு. உதாரணமாக விவசாயம் சார்ந்த பொம்மைகளை மட்டுமே அடுக்கி வைத்து கொலு வைக்கலாம். வாகனங்கள் சார்பான பொம்மைகளை மட்டும் அடுக்கி வைத்து கொலு வைக்கலாம்.
அப்படி மணிமொழி ஆசிரியர் அவர்கள், புத்தகக் கொலு வைக்கலாம் என முடிவு செய்தார்கள்.
தன்னிடமிருந்த குழந்தைகளுக்கான நூல்களை எல்லாம் எடுத்து அழகாக அடுக்கி வைத்தார்கள்.
அவரது யோசனை பிடித்து, ஆசிரியர் பிரபு அவர்கள் அவரது இல்லத்தில் கொலு வைத்தார்.
இப்படி தசிஎகச சார்பில் கோவில்பட்டியில் இரண்டு இடங்களில் கொலு
வைக்கப்பட்டது.
நானும் பிரபு மாமாவும் மணிமொழி அத்தை வீட்டிற்கு சென்றோம்.
”ராஜிமா, என்னப்பா யாரையும் காணோம்! பிள்ளைகள் யாரும் வரமாட்டார்களோ?”என சந்தேகமாகக் கேட்டார் மணிமொழி அத்தை.
”வருவாங்க வருவாங்க”என எங்களுக்கு நாங்களே ஆறுதல் சொல்லிக் கொண்டு வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தோம்
முதலில் ஒரு சிறுமியை அவரது தாய் அழைத்து வந்தார். கொஞ்சமாக நிமிர்ந்து அமர்ந்தோம்.
சிறிது நேரத்திலேயே அந்தப் பகுதியில் இருக்கும் சிறுவர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள்.
தசிஎகச-வின் மாநிலத் தலைவரும் சாகித்ய பால புரஸ்கார் எழுத்தாளருமான தோழர் உதயசங்கர் அவர்கள் வந்தார்கள்.
ஆசிரியர் முருகேசன் அவர்களும் வந்தார்கள்.
வந்த குழந்தைகள் ஒவ்வொரு புத்தகமாக தொட்டுப் பார்த்தார்கள். கைகளில் எடுத்துப் பார்த்தார்கள். தோழர் உதயசங்கர் அவர்கள் புத்தக் கொலுவின் நோக்கம் பற்றியும் வாசிப்பின் அவசியம் பற்றியும் எடுத்துச் சொன்னார்கள்.
அதன் பின் நான் ஒரு சிரிக்க வைக்கும் அழகான கதை சொன்னேன்.
அதன் பின் மணிமொழி அத்தையும் பிரபு மாமாவும் பாட்டுப் பாடினார்கள்.
குழந்தைகளிடம் புத்தகம் தேர்ந்தெடுப்பது பற்றியும் வாசிப்பது பற்றியும்
கலந்துரையாடினோம்.
ஒரு அப்பா, தயங்கியபடி வந்து தன் குட்டி மகளை உள்ளே அனுப்பி வைத்தார். குட்டி பாப்பா வந்து கடலைமிட்டாயை வாங்கிக் கொண்டு அப்பாவிடம் ஓடி விட்டாள்!
இப்படியாக முதல் நாள் கொலு வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
புத்தகக் கொலு பற்றிய செய்தி நாளிதழ்களிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் வெளியானது.
அடுத்த நாளும் பிள்ளைகள் ஆர்வத்தோடு கலந்து கொண்டார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு குழந்தைகளிடம்
உரையாடினார்கள்.
மையம் ஓவியப் பள்ளியின் பிள்ளைகள் ஒரு நாள் வந்து, புத்தகங்களின் அட்டைப் படங்களை ஓவியமாக வரைந்தார்கள்.
ஒன்பது நாட்கள் நவராத்திரி, ஒன்பது நாட்கள் புத்தகக் கொலு அதன் பின் அவ்வளவு தான்! என்றா நினைத்தீர்கள்.
அது தான் இல்லை.
பத்தாவது நாளும் குழந்தைகள் வந்தார்கள்.
பதினோராம் நாளும் குழந்தைகள் வந்தார்கள்.
நேற்றும் இன்றும் வந்தார்கள்.
நாளையும் வருவார்கள்.
புத்தகக் கொலுவின் நோக்கம் குழந்தைகளை வாசிப்பை நோக்கி ஈர்ப்பது.
தினமும் மணிமொழி அத்தை வீட்டிற்கு படையெடுக்கும் சிறார்கள் எங்கள் நோக்கம் நிறைவேறியது என சொல்லாமல் சொல்கிறார்கள்.
மீண்டும் இன்னொரு நிகழ்வோடு சந்திப்போம் குட்டீஸ்.

ராஜலட்சுமி சிறார் எழுத்தாளர், நாவலாசிரியர், கதை சொல்லி. சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் அப்பையநாயக்கன்பட்டி. கோவில்பட்டியில் வசிக்கிறார்.
பூஞ்சிட்டு சிறார் மின்னிதழின் ஆசிரியர்களுள் ஒருவர். கதை சொல்லு கதை கேளு புலனக்குழு மூலமாக குழந்தைகளுக்கு கதைகள் சொல்கிறார்.
இதுவரை 6 நாவல்கள் வெளிவந்துள்ளன. இவரது நாவல்களும் சிறுகதைகளும் பல்வேறு போட்டிகளில் பரிசுகள் வென்றுள்ளன. நீர்க்குமிழி சோப், மாயவனத்தில் ஒரு மந்திரப் பயணம், கடோத்கஜன் ஆகிய சிறார் நூல்கள் பாரதி பதிப்பகத்தில் வெளிவந்துள்ளன. கதைப் புத்தகத்தின் கதை மற்றும் கனலின் பயணம் ஆகிய சிறார் நூல்கள் ஹெர்ஸ்டோரிஸ் பதிப்பகத்தில் வெளிவந்துள்ளன. 'கனலின் பயணம்' நூல் 2025ம் ஆண்டுக்கான பெண்ணெழுத்துப் போட்டியில் முதல் பரிசு வென்றது. கேட்-பீட் என்ற சிறார் நூல் வாசிப்பு இயக்க நூலாக புக்ஸ் பார் சில்ரனால் வெளியிடப்பட்டுள்ளது.






Comments