அறமதியின் கதை -2
- சுகன்யா ராமநாதன்

- 19 hours ago
- 3 min read

வீஷ் என்று பறந்தது அந்த மாயக் கம்பளம். "அறமதி" யார் என்ற குழப்பம் இப்போது அன்பினிக்குத் தீர்ந்தது. தன் வரலாற்று ஆசிரியர் சொன்னது நினைவுக்கு வந்தது: "உலகிலேயே நீளமான அரசியல் அமைப்புச் சட்டம் நம்ம நாட்டோடதுதான். ஒரு பள்ளிக்கூடத்துக்கு எப்படி விதிகள் இருக்கோ, அதே மாதிரி ஒரு நாட்டுக்கான பெரிய ரூல்ஸ் புக் தான் இந்த அரசியல் அமைப்புச் சட்டம்."
ஆசிரியர் மேஜையில் இருந்த வண்ணத் தாள்களைக் காண்பித்தார். "ஒவ்வொரு பக்கத்தையும் கையாலேயே எழுதி, அழகான ஓவியங்கள் வரைஞ்சிருக்காங்க. இது நம்ம நாடாளுமன்ற நூலகத்துல பத்திரமா இருக்கு."
"டீச்சர், இதுல இருக்குற பெரிய வார்த்தைங்களை பார்த்தாலே பயமா இருக்கே! எங்கள மாதிரி குழந்தைங்க இத எப்படிப் புரிஞ்சுக்க முடியும்?" என்று கேட்டான் குமார்.
"நமக்கு பயன் தர்ற புது டெக்னாலஜியை எப்படி ஆர்வமா கத்துக்குறோமோ, அதே மாதிரிதான் நம்மள பாதுகாப்பா வச்சிருக்குற சட்டத்தையும் தெரிஞ்சுக்கணும். இது ஒண்ணும் கடினம் இல்லை," என்றார் ஆசிரியர்.
அன்பினி 'முகப்புரை' என்று வாசித்தாள். ஆசிரியர் விளக்கினார், "ஒரு பெரிய கட்டிடம் அஸ்திவாரத்துல நிக்குற மாதிரி, அரசியல் அமைப்புச் சட்டத்தோட அஸ்திவாரம்தான் இந்த முகப்புரை."
அன்று முதல் அன்பினியின் குறிப்பேடு முழுவதும் முகப்புரையில் இருந்த ஓவியங்களால் நிறைந்திருந்தது.
அறமதியைப் பார்த்த அன்பினி, "நீ அரசியல் அமைப்புச் சட்டம் தானே?" என்று கேட்டாள்.
"ஆமா, உன் கனவுல வர்ற நான் உனக்குத் தெரிஞ்சவளாத்தானே இருக்கணும்?" என்று சிரித்தாள் அறமதி.
அப்போது மேகங்கள் மேல் நேரு தாத்தாவைக் கண்டாள் அன்பினி. "ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பதே நமது நோக்கம்," என்று அவர் பேசிக்கொண்டிருந்தார்.
"பிரிட்டிஷ் கிட்ட இருந்து விடுதலை கிடைச்சப்போ அவர் பேசினது தானே இது. நான் இந்த வீடியோவ பாத்திருக்கேன். சுதந்திரம் கிடைச்சப்போ ஏன் அவர் சோகமா பேசுறாரு?" என்று கேட்டாள் அன்பினி.
"சுதந்திரம் கிடைச்சப்போ பசி, வறுமை, படிப்பு அறிவு இல்லாதது, பாகிஸ்தான் பிரிவினைன்னு நிறைய பிரச்சனைகள் இருந்தது. அதனாலதான், சுதந்திரம் என்பது வெறும் கொண்டாட்டம் இல்ல, அது ஒரு பெரிய பொறுப்புன்னு நேரு சொன்னாரு," என்றாள் அறமதி.
அப்போது அறமதியின் சிந்தாமணி வீசிய காற்றில் விலகியது. அன்பினி அதைச் சரி செய்ய உதவினாள். அவள் கை பட்டதும் அதில் ‘இறையாண்மை’ என்று மின்னியது.
அந்த வெளிச்சத்தில் பிரிட்டிஷ் கொடி கீழே இறக்கப்பட்டது தெரிந்தது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிக்கொண்டிருந்தார்.
“இறையாண்மைன்னா வேற ஒரு நாடோ, ஒரு ராஜாவோ நம்ம நாட்டை ஆட்சி செய்ய முடியாது, இல்லையா?” அன்பினி கேட்டாள்.
"அழகா சொன்ன! நம்ம நாட்டுக்கான முடிவுகளை நாமே எடுக்குற உயர்ந்த அதிகாரம்தான் இறையாண்மை. அது மட்டுமல்ல, யாரும் எந்த வித த்திலும் தலையிட முடியாது. சுதந்திரமான முடிவுகளை எடுக்க வழிவகை செய்யும்.. உலக அரங்கில் மற்ற நாடுகளோட வியாபாரம் செய்யவும், வேண்டாதப்போ அதைத் தவிர்க்கவும் நமக்கு முழு உரிமை இருக்கு. அதோட, உலக அமைதி மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் இந்தியா மத்த நாடுகளோட நட்பு ரீதியான ஒப்பந்தங்களைச் செய்யவும்,. இந்திய மக்கள் கையிலதான் அந்த அதிகாரம் இருக்கு. அதை பாதுகாக்குற கடமையும் அவுங்களுக்கு இருக்கு” என்று சொல்லி முடித்தாள் அறமதி.
“அதனாலதான் முகப்புரை 'இந்திய மக்களாகிய நாம்' அப்படின்னு ஆரம்பிக்குதா” என்றாள் அன்பினி
“கரெக்ட். யாரெல்லாம் இந்தியா மக்கள்? உன்ன மாதிரி குழந்தைகளையும் சேர்த்துன்னு நினைக்கிறியா?”
“நிச்சயமா! என்னைப் போல இருக்குற குழந்தைகளையும் சேர்த்து, காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை... குஜராத்திலிருந்து அருணாச்சலப் பிரதேசம் வரை.. எல்லாரும் இந்தியா மக்கள் தான்.”
“ஆமா. 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் எல்லாம் ஒண்ணு சேர்ந்தது தான் இந்திய ஒன்றியம். அதுல இருக்குற 140 கோடி மக்களும் தான் இந்த நாட்டின் மன்னர்கள்."
"அறமதி, நீ எப்படி தமிழ் பேசுற? உனக்கு இங்கிலீஷ் ஹிந்தி மட்டும் தான் தெரியுமுன்னு நான் நெனச்சேன்" என்று அன்பினி வியந்தாள்.
"எல்லா இந்தியர்களும் என்கூடப் பேசனும், நான் சொல்லுறத புரிஞ்சுக்கனும் இல்லையா. அதனால தான் 22 மொழிகள் அதிகாரப் பூர்வ மொழிகளா இருக்கு”
“அப்போ ஹிந்தி நம்ம நாட்டோட தேசிய மொழி இல்லையா?”
“இல்ல, நம்ம நாட்டோட பன்முகத்தன்மையைப் பாதுகாக்கவும், எல்லா மொழிகளுக்கும் ஒரே மரியாதையைக் கொடுத்தாங்க. இந்த மாதிரி ஒவ்வொரு விஷயத்தையும் 299 பேர் இருந்த குழு விவாதிச்சாங்க. பல மதங்கள், பல கொள்கைகள் கொண்ட பல பிரதிநிதிகள் இருந்தாங்க. அதுல 15 பெண்கள் இருந்தது சிறப்பு. அம்பேத்கர் தன் புத்தி கூர்மையால எல்லா சந்தேகங்களுக்கும் பதில் சொன்னாரு.”
“அடேங்கப்பா! இவளோ பேர் இருந்தா ஒரே சத்தமா இருந்திருக்குமே. இப்படி தான் நம்ம தேசிய சின்னம், விலங்கு, பறவை, தேசிய கீதம் எல்லாத்தையும் முடிவு பண்ணுனாங்களா?”
“ஆமா. மதச்சார்பற்ற சின்னங்களையும், வேற்றுமையில் ஒற்றுமையை உணர்த்துற 'ஜன கண மன' பாடலைத் தேசியகீதமாவும் பாத்து பாத்து தேர்வு பண்ணுனாங்க."
அப்போது, சுதந்திரம் கிடைத்த நாளில், தலைவர்கள் உணர்ச்சி பொங்க தேசிய கீதத்தைப் பாடுவதையும், மக்கள் கொண்டாடுவதையும் அன்பினி கண்டாள்.
திடீரென அந்தக் காட்சிகள் மறைய, அன்பினியின் இதயம் படபடவென அடித்தது. தைரியமான அன்பினி இப்போது ஏதோ ஒன்றைக் கண்டு நடுங்கத் தொடங்கினாள்.
அன்பினி ஏன் நடுங்கினாள்?
அப்படி என்ன நடந்தது?
( அறிவோம் தெளிவோம் )...

எழுத்தாளர்,
கதைசொல்லி.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறம் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட முகிழ் சிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தற்போது துபாயில் வசிக்கிறார்.



Comments